83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: பகுதி 2

192 Views

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி
83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: பகுதி 2

இந்தியா கையாண்ட முறை

கேள்வி?
இந்தியத் தலையீட்டிற்கும் இந்த இனப் படுகொலை (Black July)தான்காரணமாக இருந்திருக்கின்றது. இந்த விடயத்தை இந்தியா கையாண்ட முறை குறித்து உங்களின்  பார்வை என்ன?

பதில்!

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்திஇந்த விடயத்தில் இந்தியா கையாண்ட முறை, ஒரு கவலைப்படக் கூடியதான  அணுகு முறையாகத் தான் நாம் பார்க்கின்றோம். இந்தியா தமிழ் மக்கள் மீதான ஒரு அக்கறையான முறையை கையாண்டது என்று கூறிவிட முடியாது. அதே காலகட்டத்தில் இந்தப் பனிப்போர் காரணமாக, ஜே.ஆர்.ஜெயவர்த்தன அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணி, அமெரிக்காவிற்கு இலங்கையில் ஒரு தளம் அமைத்துக் கொடுக்கின்ற ஒரு செயற்பாட்டை முன்னெடுத்தமை காரணமாகத்தான் இந்தியா இதைச் சாட்டாக வைத்து, தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியது. அவர்களுக்கு பின் தளப் பயிற்சியைக் கொடுத்தது. அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தது.

அவர்களின் நோக்கம் இலங்கை அரசை எப்படி யாவது பணிய வைப்பதென்பது தான். பணிய வைத்தால் தங்கள் அலுவல்கள் முடிந்தது என்று தான் நினைத்தார்கள். பணிய வைப்பதற்கான ஒரு அழுத்தம் தான் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பின்னிணைப்பான கடிதம். அதுதான் மிக முக்கியமானது. அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கிற விடயம் இந்தியாவிற்கு எதிரான கட்சிகள் இலங்கையில் காலூன்றுவதற்கு அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்க மாட்டோம் என்பது தான் முக்கியமான விடயம்.

இலங்கை – இந்திய உடன்படிக்கை

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி14
இலங்கை – இந்திய உடன்படிக்கை

இலங்கை – இந்திய உடன்படிக்கையுடன் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு பணிந்ததும், அவர்கள் தமிழ் மக்களை மெல்லக் கைவிட்ட நிலை தான் காணப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ்த் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதும் தமிழ் மக்களின் போராட்டத்தை சிதைக்க வைக்கின்ற ஒரு செயற்பாட்டைத் தான் உண்மையில் இந்திய அரசாங்கம் முன்னெடுத்தது. இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்பு சிங்கள, தமிழ் தரப்புத் தான்.

தமிழ் மக்கள் சார்பான உடன்படிக்கை என்றால், தமிழ்த் தரப்பும் சிங்களத் தரப்பும்தான் அதில் கைச்சாத்திட்டிருக்க வேண்டும். இந்தியா நடுநிலையாளராக இருந்திருக்க வேண்டும். மாறாக இந்தியா தமிழ் மக்கள் சார்பாக தானே அந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டது. பொறுப்பை எடுத்துக் கொண்டு, தானே இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால், ஒரு நம்பிக்கைப் பொறுப்பாளர் என்ற வகையில், அதனை ஒழுங்காக நிறைவேற்றியிருக்க  வேண்டும்.

ஆனால் அதனை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. 13ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை ஒவ்வொன்றாக பிடுங்கிய போது இந்தியா மௌனமாக இருந்தது, குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்றம் நீக்கம் செய்த போது, இந்தியா அதற்கெதிராக பெரிய குரல் எதனையும் எழுப்பவில்லை. இன்று இந்தியாவே தன்னுடைய இருப்பை சமாளிக்க முடியாமல் திணறுகின்ற ஒரு நிலைமையைத் தான் நாங்கள் பார்க்கின்றோம். ஆகவே இந்த இடத்தில் இந்தியா நடந்து கொண்டது சரியானது அல்லது நேர்மையானது என்று சொல்லிவிட முடியாது. தன்னுடைய நலனில் தான் கவனமாக இருந்ததே தவிர, தமிழ் மக்களின் நலன்களில் பெரிதாக கவனமாக இருக்கவில்லை.

கேள்வி?
இந்தியாவின் தலையீட்டை தமிழ்த் தரப்பினர் பயன்படுத்திய முறை குறித்த உங்களின் கருத்து என்ன?

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி11 83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: பகுதி 2பதில்!
பிராந்திய வல்லரசுகளைப் பொறுத்தவரையில், அதனைக் கையாளும் போது நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்த் தரப்பிலிருந்து ஒரு தரப்பு இந்தியாவிடம் எடுபிடியாய் போய் சேர்ந்தது. இன்னொரு தரப்பு இந்தியாவை எதிரியாக்கியது.  எங்களைப் பொறுத்தவரை எடுபிடியாகவும் இருக்கக் கூடாது. எதிரியாகவும் இருக்கக் கூடாது. இரண்டிற்கும் இடையில் இந்தியாவை கையாளுவதற்கான தந்திரோபாயங்கள் மூலோபாயங்களை வகுத்து நாங்கள் செயற்பட்டிருக்க வேண்டும். ராஜீவ் காந்தியின் கொலை போன்ற விடயங்கள் எல்லாம் இராஜதந்திர ரீதியாக பெரிய பின்னடைவைத் தந்திருக்கிறது. அத்தோடு தமிழ் நாட்டு மக்களுக்கு தேவையில்லாத சுமையையும், நெருக்கடியையும்

கொடுத்தது. அவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்திருக்க வேண்டும். கையாளும் முறைகளில் விட்ட தவறுகள் தான் தமிழ்த்தரப்பு விட்ட தவறுகளாக இருக்கிறது. இந்தியா பிராந்திய வல்லரசு. அதனுடைய நலன்களுக்காக இப்படித்தான் நடக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு, இதற்குள் இருக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி எவ்வாறு இந்த விடயங்களை  நாங்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் தான் கூடுதலான கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இந்தியாவை கையாள்வது தொடர்பாக சரியான மூலோபாயங்கள் – தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவதுதான் தமிழ் அரசியலுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இனவாத முகம்

கேள்வி?
இந்தக் கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதாயின், தமிழ்த் தரப்பினர் செய்ய வேண்டியது என்ன?

பதில்!
இன்றைக்கு தமிழ்த் தரப்பை – தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இரண்டு பெரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

ஒன்று இன்று ஆட்சியில் இருப்பது பெருந் தேசியவாதத்தினுடைய இனவாத முகம். இனவாத முகம் என்றால் பச்சையாக இனவழிப்பு நடவடிக்கைகளில் இறங்கும். அந்த இனவாத முகத்திற்கு முகம் கொடுக்க வேண்டும்.

இரண்டாவது முன்னரை விட இலங்கைத் தீவு சர்வதேச நிகழ்ச்சி நிரல்களோடு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நிகழ்ச்சி நிரல் போகும் இடமெல்லாம் இலங்கைத் தீவும் போக வேண்டும். ஆகவே தமிழ் மக்களும் அந்த சர்வதேச நிகழ்ச்சி நிரலுடன் போக வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது. அவ்வாறாயின் நாங்கள் சர்வதேச அரசியலைக் கையாள வேண்டும்.

மேற்கூறப்பட்ட இரண்டு விடயங்களைச் செய்ய வேண்டும் எனில், தமிழ்த் தரப்பு பலமாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு ஒருங்கிணைந்த அரசியல் தேவை. இந்த ஒருங்கிணைந்த அமைப்பு, அரசியல் கட்சிகளிடையேயும், மக்கள் அமைப்பு களிடையேயும் தேவை. இந்த ஒருங்கிணைந்த அரசியலில் நாங்கள் ஐக்கியமாக ஒரு குடையின் கீழ் இருக்கின்ற போது தான் இந்த விடயங்களுக்கு முகம் கொடுப்பது எங்களுக்கு இலகுவாக இருக்கும்.

இதைத் தான் நான் தொடர்ச்சியாகக் கூறிக் கொள்வது வழக்கம். இன்றைக்குத் தமிழ் மக்களுக்குத் தேவையானது தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் கையாளக்கூடிய ஒரு தேசிய அரசியல் இயக்கம்.  ஆகவே அந்த தேசிய அரசியல் இயக்கத்தை எப்படிக் கட்டியெழுப்புவது என்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்துவது தான் உண்மையில் ஆரோக்கியமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மரபு ரீதியாகவே 3 விடயங்கள் தோல்வியடைந்துள்ளன.

  1. மக்கள் பங்கேற்பு அரசியல் என்பது தோல்வி.

  2. ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவது என்பது தோல்வி.

  1. கிழக்கைக் கையாள்வது என்பது தோல்வி.

இவை மரபு ரீதியாகவே தோல்வியடைந்த விடயங்கள். மக்கள் பங்கேற்பு அரசியல் இல்லாதபடியால், எங்களால் ஒரு வலுவான சனநாயக அரசியல் இயக்கத்தை உருவாக்க முடியவில்லை. வலுவான சனநாயக அரசியல் இயக்கங்கள் இல்லாதபடியால், ஒரு வலுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க முடியவில்லை. ஆனால் தேசியஇனப் பிரச்சினைக்கு உண்மையாக ஐக்கிய முன்னணி மூலம் தான் முகம் கொடுக்க முடியும். இல்லையென்றால் முகம் கொடுக்க முடியாது. இது தமிழ் இனத்திற்கு புறத்தே இருந்து வருகின்ற ஒடுக்கு முறை.

தமிழ் இனத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கும். பல்வேறு அரசியல் இயக்கங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாது. அது எல்லாவற்றிற்கும் ஒரு பொது இலக்கின் அடிப்படையில் எல்லாம் ஐக்கியப்படுகின்ற சூழல் ஒன்று இருக்க வேண்டும். அதை உருவாக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக அதை எங்களால் உருவாக்க முடியவில்லை.

கிழக்கிலே தமிழ் – முஸ்லிம் பிரச்சினை

கிழக்கிலே தமிழ் – முஸ்லிம் பிரச்சினை இருக்கிறது. அதைக் கையாள்வதற்கான மூலோபாயங்கள் – தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்படாததால், அது ஒரு உச்ச நிலைக்குச் சென்று, இன்று கிழக்கு மக்கள் இரண்டாக இருக்கின்றதான ஒரு சூழல் தோற்றம் பெற்றிருக்கிறது. தமிழ்த் தேசியத்திற்கு எதிரான சக்திகள் எல்லாம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த நிலைமைகள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். நிலைமையை மாற்றுவதென்றால், ஒரு ஒருங்கிணைந்த அரசியலுக்கு வருவதுதான் உண்மையில் கூடுதலாக  பொருத்தமாக இருக்கும். ஒருங்கிணைந்த அரசியலுக்கு உடனடியாக வரா விட்டாலும் கூட விவகாரங்களின் அடிப்படையிலாவது ஒருங்கிணைந்த அரசியலுக்கு வருவதற்கு நாங்கள் வெளியிலிருந்து அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

குறிப்பாக பாராளுமன்றத்தைக் கையாளுகின்ற போதும், பெருந் தேசியவாதத்தின் இனவாத முகத்தைக் கையாளுகின்ற போதும், சர்வதேச பிராந்திய அரசியலைக் கையாளுகின்ற போதும் மட்டுமான ஒருங்கிணைந்த அரசியலைப் பின்பற்ற வேண்டும். அப்படிப் பின்பற்றுவதன் மூலம் தான் தமிழ் அரசியலை நாங்கள் முன்னோக்கி நகர்த்த முடியும். இல்லையென்று சொன்னால் தமிழ் அரசியல் பின்னோக்கிப் போவது அல்லது பின்தங்கிப் போவது தவிர்க்க முடியாத ஒன்றாகத் தான் இருக்கும். இது எங்களின் நிலைமையை மேலும் மோசமான அழிவை நோக்கித் தள்ளுவ தாகத் தான் இருக்கும். ஆகவே அரசியல் சக்திகள் சிவில் சமூகத்தினர் இதில் கவனம் செலுத்த வேண் டும் என்று நான் நினைக்கிறேன்.

அரசியல் கட்சிக்கு அப்பால் ஒரு சிவில் தமிழ்த் தேசியத் தளத்தை உருவாக்கி, அந்தத் தேசியத் தளத்தின் ஊடாக அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் இணைந்து ஒரு தேசிய அரசியல் இயக்கத்தை உருவாக்கலாமா என்பது பற்றி நாங்கள் யோசிப்பது தான் கூடப் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி?
அந்த வகையில் அண்மையில் மேற்கொள்ளப்படும் பல முயற்சிகள் குறித்து  ரெலோ அமைப்பினால் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.  அது எந்த வகையில் சாத்தியமானதாகவும், நடை முறையில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாமென நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்!
உண்மையில் ரெலோவின் முயற்சி என்பது ஒரு தேர்தலை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட முயற்சி தான். ரெலோ தொடக்கி அதனைச் செய்ய முடியாது. அதனால் இயலாது. அத்துடன் ஒரு ஐக்கிய முன்னணியைக் கட்ட வேண்டும் என்று சொன்னால், 3 விடயங்கள் முக் கியமானது.

  1. அரசியல் நிலைப்பாட்டில் ஒரு உடன்பாடு வரவேண்டும்.

  2. சம பங்காளர் என்ற அந்தஸ்து இருக்க வேண்டும்.

  3. அமைப்புப் பொறிமுறை இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் இருக்கின்ற போது தான் ஐக்கிய முன்னணி என்பது சிறப்பாக செயற்படக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும். ஆனால் அந்தச் சூழலை நோக்கி நகர்வதற்கான எந்தச் செயற்பாட்டையும் தமிழ் அரசியல் கட்சிகளோ, அவர்களோடு சேர்ந்திருக்கிறவர்களோ முன்னெடுக்க முயலவில்லை. இதனால் ஐக்கிய முன்னணி செயற்பாடுகள் எல்லாமே குழம்பிப்போன நிலைமை அல்லது சிதைந்து போன நிலைமையைத் தான் நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு ஐக்கிய முன்னணி எல்லாம் தோல்வி. 1972இல் உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி தோல்வி. 1985இல் இயக்கங்கள் உருவாக்கிய ஈழ தேசிய விடுதலை முன்னணி தோல்வி. அதன் பின்னர் 2000இல் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தோல்வி. கடைசியாக C.V விக்னேஸ்வரன் உருவாக்கிய ஐக்கிய முன்னணியும் தோல்வி.

ஆகவே இந்த ஐக்கிய முன்னணிகள் எல்லாம் ஏன் தோல்வியடைகின்றன என்பது தொடர்பாக நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இது தேர்தல் கூட்டாகத்தான் இருக்கின்றதே தவிர, கொள்கை ரீதியான கூட்டை நோக்கி நகர்வதற்கான எந்தச் செயற்பாடும் உண்மையில் முன்னெடுக்கப்படவில்லை.

எங்களிடம் உள்ள கட்சிகளை விட தமிழ் நாட்டில் உள்ள கட்சிகளிடையே ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. ஆனாலும் ஸ்டாலின் அதை முன் னெடுத்தபடியால் இன்று மேகதாது அணைக்கட்டுப் பிரச்சினையை எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் போய்ச் சந்திக்கின்றார்கள். எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை எடுத்து, தீர்மானத்தின் அடிப்படையில் டில்லியில் சந்திப்பை மேற்கொள்கின்றார்கள். ஆகவே அப்படியான நிலைமையை நோக்கி ஏன் இங்கு வரமுடியாது? இதில் நாங்கள் கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மக்கள் மத்தியில் ஒரு விழிப்பு நிலை வந்து, ஏற்கனவே கூறியது போல இந்த அரசியல் கட்சிகளுக்கு வெளியே ஒரு வலுவான தேசியத் தளத்தை உருவாக்கி, அதன் ஊடாக அழுத்தத்தைக் கொடுக்கின்ற போது தான் ஐக்கிய முன்னணியில் முன்னேற்றங்களைக் காண முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் ஐக்கிய முன்னணி இல்லாமல் ஒரு சிறிய முன்னோக்கிய அசைவைக் கூட எங்களால் ஒருபோதும் செய்ய முடியாது.

இன்றைக்கு தமிழ் அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் முன்னெப்போதையும் விட வாய்ப்பான சூழல். ஏனெனில் சர்வதேசத்துடன் இலங்கை முரண்பட்டிருக்கின்றது. தென்னிலங்கையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவை எல்லாம் தமிழ்த் தரப்பிற்கு சாதகமான விடயங்கள். ஆனால் இந்த சாதகமான விடயத்தைக் கையாளக்கூடிய வகையில், இன்றைய அரசியல் தளம் இல்லை யென்பது தான் மிகவும் கவலைக்குரிய ஒன்று என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி?
இவ்வாறான ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பலமான சிவில் சமூகம் ஒன்று தமிழ் மக்களிடம் உள்ளதா?

பதில்!
இதுவும் எங்களுக்கு கவலைக்குரிய விடயம். என்னவென்றால், எங்கள் மரபில் வலுவான சிவில் சமூகம் என்று இருக்கவில்லை. சிங்களத் தரப்பில் வலுவான சிவில் சமூகம் இருக்கின்றது. குறிப்பாக மதத்தை அடிப்படையாக வைத்து இருக்கிறது. வேறு அமைப்புக்கள் கூட வலுவான சிவில் சமூக அமைப்புக்களாக இருக்கின்றன. ஆனால் அப்படியான சிவில் சமூக அமைப்பை எங்களால் உருவாக்க முடியவில்லை. இந்த சிவில் சமூக அமைப்பை உருவாக்க முடியாததன் ஒரு விளைவும் இந்த ஐக்கிய முன்னணி முயற்சிகளை பின்னடைவிற்குக் கொண்டு வந்திருக்கின்றது என்று நான் நினைக்கி றேன்.

ஐக்கிய முன்னணி உருவாகவில்லை என்பதற்காக நாங்கள் பேசாமல் இருக்க முடியாது. நாங்கள் புதிதாக உருவாக்கும் முயற்சியில் கூடுதலான கவனம் செலுத்துவது ஆரோக்கியமானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதாவது அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் அங்கீகரிக்கக் கூடிய அல்லது அவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தக்கூடிய நபர்களை இணைத்து, நாங்கள் அந்த சிவில் சமூகத்திற்குரிய தலைமையை உருவாக்க வேண்டும். அப்படி நாங்கள் தலைமையை உருவாக்குவோமாக இருந்தால், இவர்களின் நடத்தைகளில் சில மாற்றங்களைச் செய்யலாம் என்று தான் நான் நினைக்கிறேன்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம், கடைசியாக ஜெனீவா தொடர்பாக ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்ட போது, நடுநிலையாக இருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனால் அதில் இருந்தவர்கள் சமூகத்தில் மதிக்கப்படக் கூடியவர்களாக இருந்தபடியால் ஒரு கட்டத்திற்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு இணங்கிப் போகாது முன்னகர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் கீழே இறங்கி இணக்கத்துக்கு வந்த நிலைமை காணப்பட்டது.

ஒரு வலுவான முக்கியஸ்தர்களைக் கொண்டு நாங்கள் ஒரு சிவில் சமூக அமைப்பை  உருவாக்குவோமாக இருந்தால், இந்த விடயத்தில் நாங்கள் முன்னேறிச் செல்லலாம் என்று நான் நினைக்கிறேன். தோல்விகள் வரலாம். தோல்விகள் வந்தாலும் இதைச் செய்ய வேண்டும் என்று தான் வரலாறு எங்களை நிர்ப்பந்தித்திருக்கிறது என்பதே என்னுடைய அபிப்பிராயம்.

முற்றும்

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply