ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது – சூ.யோ. பற்றிமாகரன்

702 Views

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது – சூ.யோ. பற்றிமாகரன்

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது

இலங்கை இந்திய உடன்படிக்கை

இலங்கை இந்திய உடன்படிக்கை என்னும் அனைத்துலக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 34ஆவது ஆண்டு யூலை மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இலங்கை தனது தேசிய நெருக்கடிகளின் பொழுது இந்தியாவிடம் முதலில் உதவி கோரியதன் பின்னரே அது அனைத்துலக நாடுகளிடம் உதவி கோரலாம் என்பதை வலியுறுத்தியே இந்த உடன்படிக்கை அந்நேரத்தில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டது.

1980களில் அமெரிக்க மேலாதிக்கம் திருகோணமலைத் துறைமுகத்தில் வேகம் பெறுவதை அன்றைய சிறீலங்கா சனாதிபதி ஜே. ஆர் ஐயவர்த்தன ஊக்கப்படுத்திய சூழ்நிலையில், இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையை செய்வதன் மூலம் அதனை மட்டுப்படுத்த வேண்டிய தேவை முதன்மையானதாக இருந்தது.

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது1983இல் யூலை ஈழத்தமிழின அழிப்பைச் சிறீலங்கா அரசாங்க ஆதரவுடன் சிங்கள பௌத்த பேரினவாதிகள் நிகழ்த்திய பொழுது அன்றைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான இச்செயற்பாட்டுக்கு இந்திய அளவிலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஆர்ஜென்டினாவைக் கொண்டு குரல் எழுப்பிய ராஜதந்திர முறைமையின் வழி அனைத்துலக அளவிலும் குரல் கொடுத்தார்.

இராணுவப் பயிற்சி

இந்த ஈழத் தமிழர்களுக்கான குரல் கொடுத்தலின் வளர்ச்சியாக ஈழத் தமிழ் இளையவர்களால் உருவாக்கப்பட்ட ஈழமக்களின் உயிரையும், உடமைகளையும், நாளாந்த வாழ்வையும் பாதுகாக்கும் அரசியல் எதிர்ப்பினை ஆயுத எதிர்ப்பாக அவர்கள் வெளிப்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவே இராணுவப் பயிற்சிகளையும், ஆயுதங்களையும் வழங்கியது.

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டது‘எங்கள் பையன்கள்’ என்று ஈழத் தமிழ்ப் போராளிகளை அழைத்து, அவர்களுடைய போராட்டத்தை இந்திய தேசியப் பிரச்சினை சார்ந்த ஒன்றாக நிலைப்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி அவர்கள்.

இந்திரா காந்தியின் ஆட்சியில் சிறீலங்கா அரசின் இறைமையை மீறி இந்திய விமானங்கள் மூலம் ஈழத் தமிழகப் பகுதிகளில் அதீத மனிதாய உதவிகளை நாடிநின்ற மிகநெருக்கடிக்கு உள்ளான மக்களுக்கு உணவுகளை வான் வழியாக வழங்கி, ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையை இந்தியத் தேசியப் பிரச்சினையின் ஒரு அங்கமாகவே உலகின் முன் நிறுத்தினார். இவைகள், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளையும், அந்நேரத்தில் நாடற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருந்த மலையகத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையும், இலங்கைக் குடிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மலையகத் தமிழர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் அவர்களின் பூர்வீகத் தாயகம் என்ற வகையில் இந்தியாவின் பொறுப்பை நிலைநாட்டுவதையும், அடிப்படையாகக் கொண்டு, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் சிறீலங்கா குறித்த அரசியல் அணுகுமுறைகள் அமைந்திருந்தன.

இந்த அணுகுமுறைகளின் வழி அமெரிக்க வல்லாண்மை, திருகோணமலைத் துறைமுகத்தின் மேலாண்மையாக மாறுவதைத் தடுத்தல் என்ற தலைமை நோக்கை அன்றைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்று சிறீலங்காவில் இந்திரா காந்தி அவர்களின் நோக்கங்கள் எல்லாவற்றுக்கும் முற்றிலும் எதிரான நடைமுறையையே சிறீலங்கா தோற்றுவித்து, இந்திரா காந்தியின் நோக்குகளைத் தோற்கடித்துள்ளது.

இலங்கை இந்திய உடன்படிக்கை

சிறீலங்காவின் இந்த வெற்றிக்கு, இந்திரா காந்தி அவர்களின் மறைவுக்குப் பின்னர் சிறீலங்கா பிரதமராகவும் பின்னர் சனாதிபதியாகவும் விளங்கிய ஜே. ஆர். ஜயவர்த்தன அவர்களின் நரித்தந்திர அரசியல் தந்திரோபாயங்களே வித்திட்டன.

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டதுஇலங்கை இந்திய உடன்படிக்கையை சிறீலங்காவின் இறைமைக்கும் ஒருமைப் பாட்டுக்கும் இந்திய பாதுகாப்பை உறுதி செய்கிற தலைமை நோக்குடைய உடன் படிக்கையாக ஜே ஆர்  கட்டமைக்க வைத்தார்.

இதனால் அன்று முதல் இன்று வரை இந்தியா சிறீலங்காவின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் முக்கியத்துவம் மட்டுமல்ல உறுதியும் அளிக்கும் பொறுப்புள்ள நாடாகத் தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு  செயற்பட்டு வருகிறதே தவிர, ஈழத்தமிழர்களின் அரசியலுரிமைகளைப் பாதுகாத்தல் என்ற இந்திராகாந்தி அவர்களின் முக்கிய நோக்குக்கு எதனையும் செயலளவில் செய்யாதிருக்கிறது.

இதனால் இந்திரா காந்தி அவர்கள் எவற்றை யெல்லாம் சிறீலங்காவில் தடுத்து நிறுத்தி அதன்வழி இந்திய நலன்களையும், ஈழமக்களின் நலன்களையும் பேண வேண்டுமெனச் செயற்பட்டாரோ அவற்றுக்கு எதிரானவைகளே, இலங்கை இந்திய அனைத்துலக உடன்படிக்கை காலம் முதல் இன்றுவரை சிறீலங்காவில் நடைபெற்று வருகின்றன என்பது உலகறிந்த விடயம்.

அதிலும் இன்றைய ராசபக்ச குடும்ப ஆட்சி மையத்தினர் தங்களின் சீனச்சார்பு நிலையிலும், இந்தியாவின் இலங்கை குறித்த நேரடித் தலையீட்டு அணுகு முறைகளைத் தடுத்து,  அமெரிக்காவின் வழி இந்தியா தனது நலனை இலங்கையில் மேற்கொள்ள வைக்கும் இராஜதந்திரத்தில் பெருவெற்றியை நிலைநாட்டியுள்ளமை இந்திரா காந்தி அவர்களின் சிந்தனைகளின் வழி இந்தியா தனது இலங்கைக்கான கொள்கைகளை தொடராததன் விளைவெனலாம். இது இந்திரா காந்தி அவர்களின் தலையாய நோக்கை இந்தியாவைக் கொண்டே முறியடித்த சிறீலங்காவின் செயற்பாடாக உள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு சிறீலங்காவின் இறைமைக்குள்ளும், ஒருமைப் பாட்டுக்குள்ளும் சமத்துவமான உரிமைகளை உறுதி செய்தல் என்ற இலங்கை இந்திய உடன்படிக்கையின் 13ஆவது பிரிவு, ஈழத் தமிழர்களின் தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளையும் இவற்றுக்கு அடிப்படையான ஈழத் தமிழர்களின் வரலாற்றுக்கு முன்னரான காலம் முதலாக இலங்கைத் தீவில் தொடர்ந்து வரும் இறைமையையும் வெறுமனே சிறுபான்மை இனத்தவரின் அரசியல் உரிமை எனச் சிறுமைப் படுத்தியது.

இதுவே சிறீலங்கா ஈழத் தமிழர் தேசியப் பிரச்சினையை மீளவும் தனது உள்நாட்டுப் பிரச்சினையென இன்று வரை ஈழத்தமிழின அழிப்புக்களையும், அவர்களின் தாயக தேசிய தன்னாட்சி சிதைப்புக்களையும் தனது ஆயுத படைபலம் கொண்டு தொடரவும் வழிசெய்து வருகிறது.

ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இந்தியத் தேசியப் பிரச்சினையின் அங்கமாக பார்க்கப்பட்டதுஇன்று ராசபக்ச குடும்பத்தினர் இந்தியாவின் முகத்திலேயே அடிப்பது போல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “தமிழர்களின் தன்மான வாழ்வை உறுதி செய்தல்” இந்தியாவின் ஈழத் தமிழர் குறித்த இந்திய அரசின் கொள்கையென அறிவித்த உடனேயே “சிறீலங்காவில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை” என பதிலறிவிப்புச் செய்தனர்.

இந்தியாவின் கண் எதிரிலேயே அது கூறும் பல்லின பலபண்பாட்டு மக்களின் நாடு இலங்கை என்பதற்கு மாறாக ‘ஒருநாடு ஒருசட்டம்’ எனச், சீனப் பாணியில், பாராளுமன்றத்தின் மூலமே ஒருகட்சி ஆட்சிமுறையை வேகமாக நிறுவி, சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தாரக மந்திரமான “இது எங்கள் நாடு – எங்கள் இனத்துக்குரிய நாடு – எங்கள் மதத்திற்குரியது” என்பதை நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.

ஆனால் இவ்வாரத்திலும் இந்தியாவின் வெளிவிவகார இராஜங்க அமைச்சர் வீ.முரளிதரன் அவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் “பல்லின பல்மத சமூகம் என்ற இலங்கையின் குணாதிசயத்தை பாதுகாப்பதற்கான நல்லிணக்க முயற்சிகளுக்கும், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றி, தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது உட்பட்ட அர்த்த பூர்வமான அதிகாரப் பகிர்வில் ஈடுபடுமாறும், இது இலங்கையின் ஐக்கியம் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு உதவும் எனவும் இந்தியா வலியுறுத்தி வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் சமத்துவம், நீதி, அமைதி, மற்றும் கௌரவத்திற்கான தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் பொறுப்பை இந்தியா வலியுறுத்தியுள்ளது ” என எழுத்து மூலமாகப் பதிலளித்துள்ளார்.

இந்தியா பல்லின பலபண்பாடடு மக்களின் நாடாக சிறீலங்காவை தனது கொள்கை உருவாக்கத்தில் பார்க்கையில், சிறீலங்காவோ, தனது அரச நிர்வாகத்தையே ஈழத்தமிழின அழிப்புக்களைச் செய்த படையினரின் தலைமையில் முன்னெடுத்து மக்களை இனங்காணக் கூடிய அச்சத்துக்குள் உள்ளாக்கி மக்களின் சனநாயகப் போராட்டங்கள் எதுவும் எழாதவாறு ஆயுத படைபலம் கொண்டு அவர்களின் அரசியல் பணிவைப் பெற்று வருகின்றது.

சட்ட அமுலாக்கத் துறையில் சனாதிபதியின் நேரடித் தலையீடுகள் வழி நீதித்துறைச் சுதந்திரத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் இல்லாதொழித்து, சிறீலங்கா நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்ட படையினரையே விடுதலை செய்யும் அளவுக்குச் சிறீலங்கா  நீதிக் கருக்கலைப்பு செய்து வருகின்றது.

இவற்றை உறுதி செய்யக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. கொத்லாவலை இராணுவக் கல்லூரியின் தலைமையின் கீழ் நாட்டின் கல்வி முறைமையையே கட்டுப்படுத்தி, இராணுவ மயமாக்கல் தேவை என்கிற சிந்தனைகளை வளர்த்து, கட்டாய இராணுவப் பயிற்சிக்கு இளையவர்களைத் தயார் செய்து, கிட்லரைப் போன்று மக்களைப் படையணியாக்கி,  அனைத்துலக சட்டங்களுக்கு அஞ்சாத தெற்காசிய சர்வாதிகார அரசாகத் தன்னை நிறுவிக் கொள்வதற்கான அனைத்தையும் செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தியா ஈழத்தமிழர் பிரச்சினையைத் தனது தேசியப் பிரச்சினைகளில் ஒன்றாக இந்திரா காந்தி அவர்களைப் போல மீளவும் முன்னெடுத்து, இலங்கையிலும் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களுடன் உரையாடல்களையும், உறவாடல்களையும், இந்திரா காந்தி அவர்களின் காலத்தில் இருந்தது போல் மீளவும் தொடங்க வேண்டும். இதன் வழியாகவே இலங்கை இந்திய உடன்படிக்கையை மீளவும் ஈழத் தமிழர்களின் அரசியலுரிமைகளைப் பாதுகாக்கும் அனைத்துலக உடன் படிக்கையாகவும் இலங்கையில் இந்திய நலன்களை பேணும் உடன் படிக்கையாகவும் இருதளத்திலும் செயற்பட வைக்க முடியும். இலங்கை இந்திய அனைத்துலக உடன்படிக்கை நடைமுறைச் சிக்கல்களை எதிர் நோக்கியதற்கு முக்கிய காரணம் ஈழத் தமிழர்கள் தேசியப் பிரச்சினை வழி உருவான அந்த உடன்படிக்கையில் இந்தியா சிறீலங்காவை நாடென்ற முறையில் பங்காளராக்கியதே தவிர ஈழமக்களை அந்த உடன் படிக்கையின் பங்காளராக்கவில்லை. இது சிறீலங்கா தனக்குச் சாதகமான முறையில் அதனை உருவாக்க உதவியது. இனிமேலும் அந்தத் தவற்றினைத் தொடராது சம்பந்தப்பட்ட ஈழ மக்களையும் அவர்கள் குறித்த தீர்மானம் எடுத்தலில் இணைத்துச் செயற்பட்டாலே உரிய தீர்வுகள் நடை முறையில் உரிய பயனை அளிக்கும்.


ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply