சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்!

சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்!

சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! – அகிலன்

சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்வடபகுதியில் – பூநகரி, கௌதாரிமுனைப் பகுதியில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டு இயங்கி வந்த கடலட்டைப் பண்ணை குறித்த தகவல்கள் கடந்த மாதம் வெளி வந்தபோது, தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு எதிரான உணர்வுகள் வெளிப்பட்டன. அதற்கு அனுமதி கொடுத்தது யார்? அதனை எவ்வாறு செயற்படுவதற்கு அனுமதிக்க முடியும்? என்ற கேள்விகள் தமிழ்க் கட்சிகளால் எழுப்பப் பட்டன. இது குறித்த செய்திகள் தமிழ் மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கள ஆய்வு

யாழ். மாவட்ட எம்.பி.க்களான எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் நேரடியாகச் சென்று கள ஆய்வுகளையும் செய்திருந்தார்கள். வடபகுதியில் சீனா கால் பதிப்பதை ஏற்றுக்கொள்வதற்குத் தமிழ் மக்கள் தயராக இருக்கவில்லை என்பதை இந்த அரசியல்வாதிகளும் பிரதிபலித்தார்கள். அதே வேளையில், இதன் மூலம் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்து, பொருளாதார நலன்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்றால் அதனை அனுமதிக்கலாம், ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தாமல் அது செயற்பட வேண்டும் என்ற கருத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் முன்வைக்கப் பட்டிருந்தது.

சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்சிறிதரனும், கஜேந்திரகுமாரும் தெரிவித்த கருத்துக்களில் இரண்டு விடயங்கள் பொதிந்திருந்தன. ஒன்று – தமிழ் மக்களுடைய உணர்வுகளை அவர்கள் பிரதிபலித்தார்கள். இரண்டு – இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனாவின் வடபகுதிப் பிரசன்னம் ஆபத்தானது என்ற எச்சரிக்கையையும் வெளிப்படுத்தி இருந்தார்கள். அதன்மூலம், இந்தியாவின் நன்மதிப்பைத் தக்க வைப்பது அவர்களுடைய நோக்கமாக இருந்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை சீனா அமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியான போதுகூட இதேவிதமான பிரதிபலிப்பைத் தான் பார்க்க முடிந்தது. தமிழ்த் தரப்பினரது கடுமையான அழுத்தங்களுடன், இந்தியாவும் நெருக்கடியைக் கொடுக்க குறிப்பிட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. இந்தத் திட்டங்களை இந்தியாவுக்குக் கொடுத்திருந்தால், தமிழ்க் கட்சிகளும் அதனை ஏற்றுக் கொண்டிருக்கும். தமிழ் மக்களும் அதனை வரவேற்றிருப்பார்கள்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனாவின் வடபகுதிப் பிரசன்னம் ஆபத்தானது

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு அம்பாந்தோட்டையும், கொழும்பு துறைமுக நகரமும் போதுமானவையாக இருந்தாலும் கூட, வடபகுதியிலும் தமது இருப்பைப் பேணுவது சீனாவின் உபாயங்களுக்குப் பலத்தைச் சேர்ப்பதாக இருக்கும். அதற்கான உபாயங்கள் சிலவற்றை சீனா வகுத்திருக்கின்றது. கொழும்பில் ராஜபக்ஷக்கள் அதிகாரத்திலிருப்பது இவ்விடயத்தில் சீனாவுக்கு அதிகளவு வாய்ப்புக்களைக் கொடுக்கின்றது.

இதில் அவதானிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் சீன எதிர்ப்புணர்வு தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது என்பதுதான். தென்பகுதியில் ராஜபக்ஷக்களுடன் சீனா நெருக்கமாக இருப்பது மட்டும் தமிழ் மக்களின் இந்த உணர்வுக்குக் காரணமல்ல. தமிழகத்தை – இந்தியாவை தமிழ் மக்கள் தமது தொப்புள் கொடி உறவுகளாகப் பார்ப்பதும் இதற்குக் காரணம். தமிழ் மக்களின் மனங்களில் காணப்படும் சீன எதிர்ப்பு உணர்வுக்கு அதுவும் ஒரு காரணம்.

சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்தமிழ் மக்களுடைய இந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டதாகவே சீனாவும் இருக்கின்றது. வடக்கு கிழக்கில் தமது செயற்பாடுகளை விஸ்த்தரிக்க வேண்டு மானால், தமிழ் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில் சீனா இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

தமிழ் மக்களை இலக்கு வைத்து பல தசாப்தங்களுக்கு முன்னரே பீக்கிங் வானொலியில் தமிழ் ஒலிபரப்பு ஒன்று ஆரம்பிக்கப் பட்டிருந்தாலும், அது வெறுமனே சீன கம்யூனியக் கோட்பாடுகளின் பிரச்சாரத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் மிகவும் குறைந்தளவு நேயர்களே அதற்கு இருந்தார்கள். இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அங்கு பணியாற்றி யிருந்தார். ஆனால், சீனர்கள் தான் அதிகளவுக்குத் தமிழைக் கற்று அந்த ஒலிபரப்பை நடத்தினார்கள் என்பது முக்கியமானது. அப்போதே சீனர்கள் தமிழைக் கற்கத் தொடங்கிவிட்டார்கள்.

கோவிட் தடுப்பூசி

சீனாவின் ‘தடுப்பூசி’ இராஜதந்திரம்! இப்போது வடக்கு கிழக்கில் தமிழர்களின் மனங்களை வெல்வதற்கு சீனாவுக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம்தான் கோவிட் தடுப்பூசி. இலங்கை மக்கள் அனைவருக்கும் செப்டம்பருக்குள் கோவிட் தடுப்பூசி போட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கொடுத்திருப்பது சீனாதான். காரணம் சீனாவின் சினோபாம் தடுப்பூசி இலங்கைக்குத் தாராளமாகக் கிடைக்கின்றது. அமெரிக்காவின் ‘பைஃசார்‘ மற்றும் ‘மடோனா’ போன்ற தடுப்பூசிகளின் விலை அதிகமாகக் காணப்படுகின்றது. அதனைவிட, அவற்றைப் பேணிப்பாதுகாப்பதில் காணப்படும் சிரமங்களும், சீனாவின் கோவிட் தடுப்பூசியை நோக்கி இலங்கை செல்வதற்குக் காரணமாகவுள்ளது. அதேவேளையில், குறிப்பிட்டளவு தொகையான தடுப்பூசியை அன்பளிப்பாகவும் சீனா வழங்குகின்றது.

ஆனால், இதிலுள்ள பிரச்சினை என்னவென்றால், வெளி நாடுகளுக்குச் செல்வதற்காகக் காத்திருப்பபவர்களும், உயர்கல்வி விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லவிருக்கும் மாணவர்களுக்கும் சீனத் தடுப்பூசி ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. மேற்கு நாடுகள் சீனத் தடுப்பூசி போட்டவர்களை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டன. வடபகுதியில் சீனத் தடுப்பூசியைப் பெறுவதற்குக் காணப்படும் தயக்கத்துக்கு இதுவும் ஒரு காரணம்! அந்தத் தயக்கத்துக்கு மத்தியிலும் பெருந் தொகையானவர்கள் சீனத் தடுப்பூசியைத் தான் பெற்றுக் கொள்கின்றார்கள்.

அதே வேளையில், இந்த நிலைமைகளைப் பயன்படுத்தி வடபகுதி மக்களின் மனங்களை வெல்வதற்கு இந்தத் தடுப்பூசியை ஒரு இராஜதந்திரமாகப் பயன்படுத்துவது சீனாவின் உத்தியாகவுள்ளது. கடந்த வாரம் 16 இலட்சம் தடுப்பூசிகள் சீனாவிடமிருந்து கிடைத்தன. ஜனாதிபதி செயலகத்தில் இந்த தடுப்பூசிகளைக் கையளிக்கும் நிகழ்வில், ஜனாதிபதி முன்பாக வைத்தே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சீனத் தூதுவர் அவற்றைக் கையளித்தார். இவை வடக்கு கிழக்கு மக்களுக்காக என பெரியளவில் பிரச்சாரப் படுத்தப்பட்டது.

அதேவேளையில் சீனத் தூதரகத்தின் ருவிட்டர் பதிவுகளிலும் இவை குறித்து அதிகளவுக்குப் பிரச்சாரப்படுத்தப்பட்டது. தமிழ் மொழியிலேயே அவ்வாறான பதிவுகளைச் சீனத் தூதரகம் வெளியிட்டமையும் கவனிக்கத் தக்கது.

வடக்கில் சீனாவின் முதலீட்டுத் திட்டங்களை நிராகரிக்கும் தமிழ் மக்களை நோக்கி தடுப்பூசிகளை சீனா வழங்குகின்றது. தற்போது கொரோனா தீவிரமாகப் பரவிவரும் நிலையில், அதற்கு எதிராக இருக்கக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.

ஏற்கனவே உறுதியளித்தபடி அஸ்ரா – ஜெனேகா தடுப்பூசிகளை இந்தியாவால் வழங்க முடியாமல் போய்விட்டது. அமெரிக்கத் தடுப்பூசி அதன் விலை – பாதுகாத்து வைப்பதிலுள்ள சிரமம் போன்றவை காரணமாக குறைந்தளவிலேயே கொண்டு வரப்பட்டிருக்கின்றது. வெளிநாடு செல்பவர்களுக்கு மட்டுமே அது வழங்கப் படுகின்றது. இந்தப் பின்னணியில், சீனத் தடுப்பூசியை நோக்கி வடக்கு கிழக்கு மக்கள் செல்வது தவிர்க்க முடியாததாகி விட்டது.

இதனை சீனாவும் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றது. சீனத் தடுப்பூசி தமிழ் மக்களுடைய இரத்தத்தில் கலக்கும் போது தமிழ் மக்களுடைய மனங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்பது சீனாவின் நம்பிக்கையாக இருக்கலாம்!

ilakku-weekly-epaper-140-july-25-2021