பெற்றோர் கனவு

335 Views

பெற்றோர் கனவு

பெற்றோர் கனவு – வேலம்புராசன் விதுஜா யாழ்.பல்கலைக்கழகம்

தெரு ஓரம் தனது நண்பிக்காகக் காத்திருந்த மாலாவிற்கு அங்கிருந்த வயது முதிர்ந்த தாய் தந்தையர் தமது அரை வயிற்று உணவிற்காகப் படும் துன்பத்தைக் காண்கையில் சில கணங்கள் அவள் மனதில் சிந்திக்கத் தூண்டிய விடயமே பெற்றோர் கனவு

பெற்றோர் கனவு

ஆம்! இயந்திரமாய் சுழன்று கொண்டிருக்கும் இவ் இயந்திர வாழ்க்கையில் தம் கனவுகள் நிறைவேற்றப் பட்டனவோ இல்லையோ, தாம் பெற்றெடுத்த தம் பிள்ளைகளின் ஆசைகளும், கனவுகளும் அவர்களின் கைகளுக்கு எட்டாக் கனியாக இருந்துவிடக் கூடாது என்று எத்தனையோ பெற்றோர்கள் மழையிலும், வெயிலிலும் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டும் இல்லை.

பெற்றோர் கனவுAC  பூட்டிய அறையில், மண் தரையில் கால்படாமல் பணி புரியும் பெற்றோர்கள் எந்தவித கஷ்டங்களும் அனுபவிக்க வில்லை என்று கூறிவிட முடியுமா? அதுவரை காலமும் தமது பெற்றோரிடம் தவறாக ஒருவார்த்தைகூட கேட்டிருக்காத தந்தை, தான் பணி புரியும் அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையிலும் தனது உயர் அதிகாரியிடம் அவமானப்பட்டு நின்றிருக்கலாம். அல்லது தனது பெற்றோருடனும், அண்ணனுடனும், தம்பியுடனும் சந்தோசமாக வாழ்ந்த ஒரு பெண், தன் பெற்றோரிடத்தில், தான் கனவாக நினைக்கும் தன் பிள்ளைகளின் கனவுகளிற்காய், பணி புரியும் இடத்தில் இன்னொரு ஆணினால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி இருக்கலாம்.

தமது ஒரு நேர உணவிற்காக இவ்வளவு துன்பங்களையும் சந்திக்கின்றனர் என நாம் காரணம் காண்பிக்கலாம். ஆனால் அது ஒரு புறமிருக்க அதில் மூன்றில் இரண்டு பங்கினைப் பிள்ளைகளே எடுத்துக் கொள்கின்றனர். வேலைக்கு புறப்பட்டுச் செல்லும் போது தன் பிள்ளை ஆசையாக வாங்கி வரச்சொல்லி தன் தந்தையிடம் கேட்ட ஒரு உணவுப் பண்டம், கடைக்கு செல்லும் போது தன்னால் வாங்க முடியவில்லை என ஏக்கமாகப் பார்த்த ஒரு காலணி, தன் பிள்ளையால் கொண்டாட முடியாது போன முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம்.

பெற்றோர் கனவுதிறமை இருந்தும் பணப் பற்றாக்குறையால் தன் பிள்ளையால் கலந்து கொள்ள முடியாது போன பாட்டுப் போட்டி, விதவிதமான ஆடைகளுடன் தன் பிள்ளையின் நண்பர்கள் சுற்றுலா செல்லும் போது தன் பிள்ளை மட்டும் கையில் பணம் இல்லாது பழைய ஆடைகளை மட்டும் அணிந்து செல்ல வேண்டி வருமோ என்கின்ற ஆதங்கம் இவ்வாறு எத்தனையோ மனக் குமுறல்கள், சோர்ந்து போய் இருக்கும் வேளையிலும் கருவண்டு குடைவதை  போல் மனதை துளைக்கத்தான் செய்கின்றன.

வேறு ஒரு ஊரிற்காவது, வேறு ஒரு நாட்டிற்காவது அல்லது இன்னொருவரிடம் கூலி வேலை செய்தாவது தனது பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றிவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தன் உடல் நிலையையோ அல்லது தன் நண்பர்களுடன் சந்தோசமாக செலவிட வேண்டிய இளமைப் பருவத்தைத் தெரிந்தோ தெரியாமலோ கடந்து முடிக்கின்றனர் பெரும்பா லான பெற்றோர்கள்.

எந்தவித வீட்டுச் சுமைகளும் இல்லாமல் அதிகாலையில் எழுந்து பாடசாலைக்கோ அல்லது பல்கலைக்கழகத்திற்கோ செல்ல  சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் எம்மைப் போன்றவர்களுக்கு, காரணமே இல்லாமல் எம்மை பாடசாலைக்கு தயார்ப் படுத்துவதற்கும் எம் தேவை அறிந்து அதனை நிறைவேற்றவும் விதவிதமாக உணவு தயாரித்து கொடுப்பதற்கும் என எம்மையும் எமது கனவுகளையும் சுமந்து கொண்டு உண்ணும் உணவையும் சரிவர எடுத்துக் கொள்ளாமல் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக உறங்க முடியாது எதற்காக இயந்திரம் போல் நம் பெற்றோர்கள் பணி புரிகின்றனர் என்று தெரிவதில்லை. ஒரு நிமிடமாவது நாம் அதைப்பற்றி சிந்தித்து இருந்தால் பெற்றோரின் கனவே நாம் தான் என்பது எப்பொழுதோ புரிந்திருக்கும்.

பெற்றோர் கனவுஇத்தனைக்கும் நம் பெற்றோர்களுக்கு நாம் என்ன செய்து விட்டோம் முன் ஜென்மத்தில் எம்மிடம் ஏதேனும் கடன்பட்டார்களா? இல்லை ஒப்பந்தம் ஏதேனும் போட்டுக் கொண்டார்களா? எதுவும் இல்லை. நாம் அவர்களின் பிள்ளைகள் என்பது மட்டுமே காரணம். பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்கும் ஒரு விடயத்தை நிறைவேற்றி முடிப்பதற்குள் பெற்றோர்களின் உயிர் கரைந்து கொண்டிருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்கின்றார் திருவள்ளுவர். ஆனால் பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்பதனைக்கூட  முதியோர் இல்லங்களில் இருந்து கொண்டே அறிந்து கொள்கின்றனர் இன்றைய பெற்றோர்கள்.

இன்று எத்தனையோ பிள்ளைகளுக்கு தம் பெற்றோரைத் தூக்கிப் போடக் கிடைத்திருக்கும் முதியோர் இல்லங்களைப் போன்று, அன்று நாம் பிறந்த போது எம்மைத் தூக்கிப் போட அவர்களுக்கு ஒரு குப்பைத் தொட்டியோ அல்லது அநாதை இல்லமோ  தென்படாது போயிருக்குமா? நிச்சயமாக தென்பட்டிருக்கும். ஆனால் அன்று அவர்களின் கைகளில் இருந்த எம்மை அவர்கள் தம் வாழ்நாள் கனவாக கண்டனர். ஆனால் இன்று எம்மில் பலர் அவர்களை வெறும் பாரச் சுமையாகவே கருதுகின்றனர்.

ஒட்டு மொத்தமாக அனைத்து பிள்ளைகளையும் குறை கூற முடியாது. ஆனால் எம்மில் பலர் இன்று இவ்வாறே நடந்து கொள்கின்றோம். பெற்றோர் களுக்கென்று தனிப்பட்ட கனவு ஒன்றும் இல்லை. அவர்களின் கனவுகளே நாம் தான். எம்மை சுற்றியிருப்பவர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பெற்றோர் களுக்கு கொடுக்காது போனாலும், ஒரு நாட் பொழுதில் ஐந்து நிமிடங்களையாவது செலவு செய்து அவர்களுடன் நாம் இருக்கின்றோம் என்கின்ற ஆறுதலை மட்டும் கொடுங்கள். அது ஒன்றே அவர்களின் ஆயிரமாயிரம் கவலைகளுக்கு மருந்தாக அமையும்.

Leave a Reply