தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை
– தாய்நாட்டின் நீர் வளத்தைப் பாதுகாப்போம்
ஒரு மனிதன் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு மட்டுமல்லாது ஒரு நாடு வளமாக இருக்க வேண்டுமாயின் மிகவும் அவசியமானது நீர் வளமாகும். இன்று உள்ளது போல் அடுத்த நூற்றாண்டு காணப்பட மாட்டாது. நீர் தேவைக்காக உலகமே ஏங்க வேண்டிய சூழல் கட்டாயம் நாளை ஏற்படலாம். இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டுமாயின், இன்றே இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
இரணைமடுக் குளம்
இன்று எமது தாயகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் பிரதானமாக உள்ள கிளிநொச்சி மாவட்டம் நீர் வளம் தொடர்பாக சில முக்கியமான விடயங்களை இங்கு விபரமாக எடுத்துக் கூற உள்ளேன். கிளிநொச்சி மாவட்டமானது 4 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளையும், 95 கிராம சேவையாளர்கள் பிரிவுகளையும், 354 கிராமங்களையும் கொண்ட ஒரு மாவட்டமாகும். இரணைமடுக் குளம் உட்பட்ட நான்கு பிரதான குளங்களையும், 5 நடுத்தர குளங்களையும், 394 சிறிய நீர்ப்பாசனக் குளங்களையும் உடைய ஒரு விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட ஒரு பிரதேசமாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் 26247 ஹெக்டேர் பெரும் போகத்தையும், 1742 ஹெக்டேர் சிறுபோகத்தையும் பயிரிடும் ஓர் பிரதேசமாகும். ஒரு லட்சத்து 28 ஆயிரம் மெற்றிக் தொன் நெல் விளைவைத் தரக்கூடிய ஒரு பிரதேசமாகும். இத்துடன் 10 வகையான பழ மரக்கன்றுகள் ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்பட்டு 11 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இன்று இவை முழுமையாகப் பயன்படுத்தப்படாமலும், பல குளங்கள் முழுமையாக புனரமைப்புச் செய்யப்படாமலும் உள்ளன.
2009இல் யுத்தத்தால் பாதிப்படைந்த கிளிநொச்சி மாவட்டம் கல்மடு குளம் முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு குளம் முழுமையாக புனரமைப்புச் செய்வதற்கு ஆறு மாதங்கள் மட்டுமே தேவைப் பட்டது. இன்று அரசு, சர்வதேச நிதி நிறுவனங்கள் பல மில்லியன் ரூபாய் நிதியை செலவு செய்ய முன்வந்த போதும், மூன்று வருடங்கள் தேவையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.
கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம், பொருளாதாரத் தடைகள் அமுலில் இருந்தபோது, உடையார்கட்டு குளம் உடைப்பு எடுத்தபோதும், இரணைமடுக்குளம் உடைப்பு எடுத்த சமயங்களிலும் தேச நிர்மானிகளின் முயற்சியால் 6 மாதத்தில் புனரமைப்புச் செய்யப்பட்டது. கல்மடு குளம் புனரமைப்பு செய்ய மூன்று வருடங்கள் தேவைப்பட்டதால் ஆயிரத்து 25 குடும்பங்கள் 3 ஆயிரத்து 450 ஏக்கரில் 3 வருடங்கள் பயிர் செய்ய முடியாமல் தவிக்க விடப்பட்டனர்.
இன்று கிளிநொச்சி மாவட்டம் ஒரு வருடத்தில் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியும் குறைவான குளங்களே புனரமைப்பு செய்யப்படுகின்றன. இன்றைய நிலையில் 354 கிராமங்களில் உள்ள 60இற்கும் மேற்பட்ட குளங்கள் புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
கிளிநொச்சி மாவட்டம் யாழ் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் பன்முகப் படுத்தப்பட்ட வேலைத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே 50% நிதியை ஒதுக்கீடு செய்கிறார்கள். அதில் நான்கு குளங்கள், வாய்க்கால் வரப்பு விவசாய திட்டங்களுக்கு 10 சதவீத நிதியை மட்டுமே ஒதுக்கீடு செய்கிறார்கள். எனவே சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்கள் ஒரு வருடத்தில் குறைந்தது 1000 மில்லியன் ரூபாய் நிதியை தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டும்.
மக்கள் அமைப்பு ஊடாக தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வாருங்கள் எங்கள் உறவுகளே….!
இன்றும் மக்களின் தேவை குறைந்த நிலப்பரப்பில் அதிஉயர் விளைச்சலைப் பெறும் போசாக்கற்ற உணவை உற்பத்தி செய்யாது, அதிக நிலப்பரப்பில் போசாக்கான உணவு உற்பத்தியை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். இயற்கைப் பசளைகளையும், இயற்கை கிருமிநாசினிகளையும் பயன்படுத்தி, தரமான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இதற்கு குளங்கள், வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். உள்ளூர் உற்பத்தி அதிகரிப்பதுடன் சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தேவைக்கு குளங்களில் நீர் வற்றாது இருந்தால் ஒவ்வொரு வீடுகளிலும் நிலத்தடி நீர் வற்றாது இருக்கும்.
எனவே சூழல் மாசுபடாமல் இருக்க கொடை யாளிகள் எல்லோரும் குளங்கள் புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். எமது தாயகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் குளங்கள் ஆற்றுப் படுகைகள் காணப் படுகின்றது. கிளிநொச்சி மாவட்டம் மட்டும் 7 ஆற்றுப் படுகைகள் ஊடாகவே பெரிய குளங்களுக்கான நீர் வந்து அடைகின்றது. எனவே குளங்கள் மட்டும் புனரமைப்புச் செய்யப் படாமல், ஆற்றுப் படுகைகளும் தூர்வாரப் பட வேண்டும்.
நேற்று குளம் புனரமைப்புக்கு 90 சதவீதமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று 10% கூட கொடுக்கப்படவில்லை. இது நாளை எமது தாயக மேம்பாட்டையே கேள்விக்குறியாக்கி விடும்.
குளங்களில் 12 மாதங்களும் தண்ணீர் இருந்தால் மட்டுமே கால்நடைகள் மட்டுமல்லாது மனித உயிர்களும் வாழ முடியும். குளத்தில் நீர் இல்லாது போனால், கிணற்றில் நீர் இல்லாமல் போய்விடும். விவசாயம் செய்ய முடியாது. எனவே 60% குளம் புனரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இன்று மொத்த நிதியில் 10 சதவீதம் கூட குளம் புனரமைப்புக்கு ஒதுக்கப் படவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். நேற்று குளம் புனரமைப்புக்கு 90 சதவீதமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இன்று 10% கூட கொடுக்கப் படவில்லை.
இது நாளை எமது தாயக மேம்பாட்டையே கேள்விக்குறியாக்கி விடும். எனவே நாம் எல்லோரும் சிந்திப்போம். செயல்படுவோம். எமது தாயகம் தன்னிறைவு அடைய வேண்டுமாயின், மனித வாழ்க்கைக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு குளம் புனரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம். குளத்துக்கு ஒதுக்கிய நிதியில் எந்தவிதமான ஊழல் பாகுபாடு காட்டாது அதனை 100% சரியாக பயன்படுத்த எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ள புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் அனைவரும் மிகவும் முக்கிய கவனம் எடுத்து, தமது தாயகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் உள்ள சகல குளங்கள், ஆற்றுப்படுகைகள் புனரமைப்பு மற்றும் விவசாய திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வது போன்ற திட்டங்களுக்கு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு, தமது தாயகம் தன்னிறைவான சூழல் பாதுகாப்பான வளமான நாடாக மாற எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம் .பத்து லட்சம் ரூபாய் நிதியில் ஒரு சிறு குளம் புனரமைப்பு செய்ய முடியும். எனவே மக்கள் அமைப்பு ஊடாக தமது பங்களிப்பை மேற்கொள்ள முன் வாருங்கள் எங்கள் உறவுகளே….!