ஆணைக்குழுக்களை அமைத்து ஈஸ்டா் தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது – சரத் பொன்சேகா

ஆணைக்குழுக்களை அமைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அதன்போது சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு 5 வருடங்களாகியுள்ளன. இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. பேராயர் தனது வேதனையை வெளிப்படுத்தும் போது அவரை விமர்சிக்கின்றனர். அவ்வாறு நடக்கக் கூடாது. இதில் நீதி கிடைக்க வேண்டும். ஆணைக்குழுக்களை அமைத்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

பயங்கரவாதிகளை அவ்வாறான ஆணைக்குழுக்களால் அடையாளம் காண முடியாது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கே அதனை செய்ய வேண்டும். இது தொடர்பான பொறிமுறைகளும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளுக்கே தெரியும். அதன்படி அவர்களை அதற்கு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பவத்தில் பிரதான நபரான சஹரானுக்கு யார் சம்பளம் கொடுத்து வளர்த்துள்ளனர்.

அவரை உருவாக்கியவர்கள் யார்? சலே என்பவரே அவரை வளர்த்துள்ளார். 2014ஆம் ஆண்டிலேயே சஹரான் தொடர்பில் தகவல்கள் வெளியாகிய போதும் அவரை கைது செய்ய முடியாது போயுள்ளது. தமது கடமைகளை தவறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும்.

நாடு இந்த நிலைமைக்கு வர காரணமானவர்கள் யார்? பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். சம்பவத்திற்கு முன்னர் அது தொடர்பில் தகவல்கள் தெரிந்தும் அதனை தடுக்காது தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். எவ்வாறாயினும் எனக்கு அதிகாரம் கிடைக்குமாக இருந்தால் அந்த நபரை சட்டத்தின் முன்னால் கொண்டுவந்து தண்டனையை கொடுத்தே தீருவேன்” என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தாா்.