கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை

712 Views

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை – மட்டு.நகரான்

தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் சிங்கள தேசம் தனது இரும்புக் கையினைக் கொண்டு அடக்கும் போதும், அது ஜனநாயக வரம்புகளை மீறும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போதும் தமிழர் சார்பான கருத்துகள் வெளிவருவதை மிகவும் கச்சிதமாக அடக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தது.

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறை, இலங்கையினைப் பொறுத்த வரையில் காலத்திற்குக் காலம் வரும் அரசுகள் தமிழர்களின் போராட்டத்தினை நசுக்குவதற்கும் சரி, அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் மேல் எழுவதை தடுப்பதற்கும் சரி ஊடகங்களை நசுக்கும் பணிகளையே முன்னெடுத்து வருகின்றன.

முன்னைய எனது கட்டுரை யொன்றில் இது தொடர்பில் நான் எழுதியிருந்த போதும், மீண்டும் அது தொடர்பில் சில விடயங்களை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழர்களின் உரிமைக்காக முன்னெடுத்த பல்வேறு போராட்ட காலங்களில், அதனை ஒடுக்குவதற்காக முதலில் ஜனநாயக குரல்வளைகள் நசுக்கப்பட்டன. அதன் பின்னர் தங்களது இரத்த வெறி கொடூரங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆயுதப் போராட்ட காலத்திலும் சரி, அதற்கு முந்திய காலத்திலும் சரி தமிழர்களின் போராட்டங்கள் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்பட்ட நிலையில், அதன் ஒரு பாகமாக தமிழ்த் தேசியத்தின் பால் செயற்பட்ட ஊடகங்களும் ஒடுக்கப் பட்டதுடன், தமிழ் ஊடகவியலாளர்களும் கொல்லப் பட்டுள்ளனர்.

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைதொடர்ச்சியாகத் தமிழர்களின் போராட்டங்களை முடக்குவதற்காகவும், தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொண்டு செல்வதைத் தடுப்பதற் காகவும் யுத்தம் மௌனிக்கப் படுவதற்கு முன்னைய காலத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன.

ஆனால் யுத்தம் மௌனிக்கப் பட்டதன் பின்னர், தமிழர்கள் சார்ந்து செயற்படும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பல்வேறு வகையிலான அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது குறைந்தாலும், அதனை வேறு வழிகளில் செய்வதற்கு இலங்கை அரசுகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

யுத்தம் மௌனிக்கப் பட்டதன் பின்னர், வடகிழக்கு – தமிழர் தாயப் பகுதிகளில் இலங்கை அரசாங்கம், பல்வேறு அத்துமீறல்கள் செயல்களை முன்னெடுத்து வந்த-வரும் நிலையில் அவற்றினை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் அடக்கப்படும் செயற்பாட்டினை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து வருகின்றது.

இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கண்டனங்களும், அழுத்தங்களும் இலங்கைக்கு எதிராக வெளிவருகின்ற போதிலும், தமிழ் ஊடகவியலளார்களைப் பாதுகாப்பதற்கு அல்லது அவர்கள் தங்களது கடமையினை சுதந்திரமான முறையில் முன்னெடுப்பதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப் படவில்லை.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தமிழர்கள் பல்வேறு நெருக்கடிகளையும், ஆக்கிரமிப்புகளையும் எதிர் கொண்டுள்ள இந்த வேளையில், தமிழ் ஊடகவியலாளர்கள் அது தொடர்பில் முன்னெடுக்கும் வெளிப்படுத்தல்கள் காரணமாக அரசாங்கம் பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு உள்ளாவதனால் தமிழ் ஊடகவியலாளர்களின் பேனா முனைகளை முடக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் அரசியல் வாதிகளின் பின்னணியில் அதிகாரிகள் முன்னெடுத்த ஊழல்களை வெளிக் கொணர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு, அனாமதேய இணையத் தளங்கள் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டதுடன், அவர்களுக்கு பல்வேறு அழுத்தங்களும் பிரயோகிக்கப் பட்டன.

இதே போன்று கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண் அகழ்வுகள், சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட மதுபான உற்பத்தி நிலையம், தொல்பொருள் செயலணி மூலம் தமிழர்களின் பாரம்பரிய காணிகள் அபகரிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக வெளிக் கொணர்ந்ததன் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பாதுகாப்பு துறை மூலம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் தமிழ் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலளார்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், அவர்களின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்யவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து அவர்களின் பணிகளை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை முன்னெடுத்த நிலையில், குறித்த நடவடிக்கைகளை முடக்கும் வகையில் சீஐடியினரால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப் பட்டன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பில் நினைவுத்தூபி அமைக்கப்பட்ட நிலையிலும், மட்டக்களப்பில் மட்டு.ஊடக அமையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவை இந்த நாட்டுக்கு எதிரானதாகவும், சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும், அதனோடு இணைந்து செயற்படுபவர்களை நாட்டுக்கு எதிரிகளாகவும் சித்தரிக்கும் நிலையினையும் காண முடிகின்றது.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மேய்ச்சல் தரை அபகரிப்பு, படை முகாம்களுக்கான காணி அபகரிப்பு, திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள், முந்திரிகைச் செய்கை என்ற அடிப்படையில் சிங்கள சிவில் பாதுகாப்பு பிரிவின் குடும்பங்களுக்கு தமிழ் பகுதிகளில் உள்ள காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு, சுதந்திர வர்த்தக வலையம் என்ற பெயருடன் சிங்கள மக்களை மட்டக்களப்புக்குள் குடியேற்ற முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிடுவோர் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைஇவ்வாறான நிலையில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் அவர்கள் மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, சுமார் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது அவருடைய எதிர்கால ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல கேள்விகளை கேட்டு அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

மிக முக்கியமாக எமது செயலாளரிடம் அவரது முகநூல் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, வங்கிக் கணக்கு, வட்ஸ் அப் கணக்கு உள்ளிட்ட பல தனிப்பட்ட விபரங்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் பெற்றுக் கொண்டதுடன், குறித்த கணக்குகளுக்கான கடவுச் சொல்லையும் (password) தருமாறு கோரியுள்ளனர், அத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக இருந்தீர்களா? உங்களது உறவினர்கள் யாரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்களா? நீங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்துள்ளீர்களா?

நீங்கள் எத்தனை வருடங்களாக ஊடகவியலாளராக உள்ளீர்கள்? எந்த எந்த ஊடகங்களுக்கு பணியாற்றுகின்றீர்கள்? தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுடன் தொடர்பில் இருக்கின்றீர்களா? பற்றிநாதம், மீனகம் இணையதளங்களை நீங்களா நடத்துகின்றீர்கள்? நீங்கள் தொண்டு நிறுவனம் வைத்துள்ளீர்களா? உங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவன இணையத்திற்கும் தொடர்பு உள்ளதா? உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறதா? எந்த எந்த நாட்டில் இருந்து பணம் வருகிறது? யார் யார்? பணம் அனுப்பினார்கள்? எந்த எந்த ஊடக அமைப்புகளில் அங்கத்தவராக உள்ளீர்கள்? என பல கேள்விளை கேட்டு துருவி துருவி விசாரணை நடத்தியதோடு, அதற்கான பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து பல இடங்களில் கையொப் பங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதே போன்று கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணை செய்யப் பட்டுள்ளதுடன் அவரது மனைவி ஒரு அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றுவதன் காரணமாக அவரின் தொழிலுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவோம் என்ற ரீதியில் அச்சுறுத்தப் பட்டுள்ளதுடன், விடுதலைப் புலிகளின் காசுகளைப் பெற்று இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் விரைவில் கைது செய்யப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தப் பட்டுள்ளார்.

இதே போன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் அண்மையில் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி காரியாலயத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப் பட்டுள்ளார்.

இங்கு ஊடகவியலாளர்களுக்கு மட்டும் இந்த விசாரணைகள் மூலம் அழுத்தங்கள் வழங்கப்படுவதில்லை. குறித்த ஊடகவியலாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் அழுத்தங்களுக்கு உட்படுத்தப் படுவதுடன், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்படும் நிலையுள்ளது. இதன் காரணமாக அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வந்த சில ஊடகவியலாளர்கள் ஊடகத் துறைக்குள் இருந்து ஒதுங்கிச் செல்லும் நிலை காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையானது எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை வெளிக் கொணர முடியாத நிலையினை ஏற்படுத்தக் கூடிய சூழல் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் நாங்கள் வெளிப்படுத்தி யிருக்கின்ற போதிலும், சர்வதேசத்தில் பணியாற்றும் அமைப்புகளோ இலங்கையில் காணப்படும் அமைப்புகளோ இது தொடர்பில் எந்தக் கரிசனையும் கொள்வதாக தெரியவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைப்பதற்கு முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் கடமையாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வர வேண்டும்.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply