அனைத்து விதமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்-ஒன்றிணைந்த  ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

IMG 20210809 141929 1 அனைத்து விதமான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்தும் விலகல்-ஒன்றிணைந்த  ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட ஒண்றிணைந்த அதிபர் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள்,

‘சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் வலுப் பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்திலும் சகல தொழிற் சங்கங்களும் இணைந்து ஒரு சம்மேளனத்தினை உருவாக்கி யுள்ளோம். அதனூடாக போராட்டத்தினை வலுவுடையதாக மாற்றவேண்டிய தேவை எமக்குள்ளது.

குறிப்பாக இரண்டு தசாப்பதங்களிற்கும் மேலாக ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்ந்து வருகின்றது. ஆட்சிக்குவரும் அனைத்து அரசுகளும் அதனை தீர்க்காது தட்டிக்கழித்து வந்துள்ளது. நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம். இந்த சந்தர்ப்பத்திலே எமது சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை பாடசாலையின் சகல விடயங்களையும் புறக்கணிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் ஆயிரம்கோடி ரூபாய் நிதி உடற்பயிற்சி நிலையங்களிற்கு ஒதுக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான வரிச்சலுகைக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கொரோனா காலப் பகுதியிலேயே இடம் பெற்றது. இந்த சூழலில் அரசாங்கத்திற்கு கொவிட் நிதி பலமடங்கு சேர்ந்துள்ளது.  எனவே இந்த சூழலை அரசாங்கம் காரணமாக காட்ட முடியாது.

குறிப்பாக பாடசாலையில் தினசரி வரவுகளை உறுதிப்படுத்தாது இருத்தல், தொலைபேசி மூலமாகவோ, பிறமார்க்கங்கள் மூலமாகவோ கோரப்படும் தகவல்களை வழங்காதிருத்தல், கடமைநேரத்தில் பாடசாலைக்கு செல்லாதிருத்தல், ஒண்லைன் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இருத்தல், போராட்டம் முடியும் வரை வீடுகளில் இருந்து பணியாற்றாமல் இருத்தல், ஆகிய தீர்மானங்களை இனிவரும் காலங்களில் நடைமுறைப் படுத்துவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளது

இதே வேளை கோவிட் சூழலை கருத்தில் கொண்டு எமது போராட்ட வடிவங்களையும் மாற்றியுள்ளோம்  என்றனர்.

குறித்த ஊடகசந்திப்பில் இலங்கை ஆசிரியர்சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அதிபர் சங்கம், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம், ஏகாபத்த குருசேவாசங்கம் ஆகியன கலந்து கொண்டிருந்தது.

ilakku-weekly-epaper-141-august-01-2021