ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்

185 Views
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்ஆடிப் பெருக்கும் தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்நாள், வார, திங்கள்(மாதம்) எனும் கால நிலைகளின் அடையாளத்தில் பன்னிரு திங்கள் பகுப்பு என்பது இயற்கைச் சூழலறிவின் பயன்பாட்டைப் புலப் படுத்துகிறது. சித்திரைத் திங்களுக்குப் பிறகான நான்காவது திங்களாக அமைந்தது ‘ஆடித் திங்கள்’. கோடை வெப்பம் அமைதி அடைவதற்கான மடைத்  தொடக்கம் ஆனி தொடங்கி ஆடி முற்பகுதி வரை பரவலாக அமைகிறது. இந்த நாள்களின் மழைப் பயன்பாடு உழவு நிலங்களைப் பயிர் செய்யத் தயார்ப் படுத்தும் முறையில் அமைகிறது.
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
ஆடிப் பெருக்கு

விதைப் பயிர்கள் ஆடி பதினெட்டு சார்ந்து விதைக்கப் படுகின்றன. நாற்றுப் பண்ணையில் விதைக்கப் படுகின்ற இந்தக் காலத்தின்  அடையாளத்தில் ஆடித் திங்களின் பதினெட்டாம் நாள் சிறப்பிடம் பெறுகிறது.

ஆடிப்பெருக்கு என்றால் என்ன?
தமிழர்களின் நீர் முகாமைத்துவமும்
முளைப்பாரி

விதை விதைத்து நாற்றுப் பயிர்களை வளர்த்தெடுக்கிற நாள்களின் அடிப்படையில் அமைந்த விழா ஆடிப் பெருக்கு. நாற்று வளர்த்து நடப்படுவதற்கு முன்னர் கொண்டாடப் படுகின்ற விழாவாக ஆடிப்பெருக்கு அமைகிறது. நிலத்தில் நாற்று பயிரிடப் படுவதற்கு முன்னர் நீரோட்டம் அல்லது ஆற்றுப் பெருக்கு கணக்கிடப் படுகிறது. நீர்ப் பெருக்கம், பெருகி வரும் நீரைப் பயன் படுத்துவதற்கான செயல் முறைகளை உணர்த்துகிறது ஆடிப் பெருக்கு.

நிலம் நனைந்து பெருகி வரும் நீரைப் பயன்படுத்துதலும், நீரைத் தொடர்ந்து பயன்படுத்திப் பயிரை வளர்த்தெடுப் பதற்கான வழிமுறைகளோடும், இயற்கையின் ஆற்றலான மழையையும் அதனைப் பயன்படுத்துவதற்கு அமைந்த நீரோட்டத்தையும் நினைவுகூரும் நாளாக ஆடிப்பெருக்கினை உணர வேண்டும். இப்படி உணரத் தலைப்பட்டதில் மக்கள் செலுத்திய வணக்கத்திற்கான அடையாள நாளாக ஆடிப்பெருக்கு அமைகிறது. வயல் சார்ந்து அமைக்கப் பெற்ற நீர்நிலைகள் குளங்களாக உள்ளன. ஆற்றுப் பெருக்கு வயல் பாசனமாக வந்து சேருகிற வரையில் நீரைப் பயன்படுத்துதலும் நிலைப்படுத்துதலும் ஆகிய பணிகள் கவனமாகக் கையாளப் பட்டுள்ளன.

காலத்தைக் கணித்தல்

காலத்தைக் கணித்தல் முறையிலான அறிவில், கோயிலின் உள்ளே கதிரவன் ஒளி விழும் அமைப்பில் கோயில் கட்டப்பட்டுள்ள முறைகள் உள்ளன. நீரைப் பயன் படுத்துதலில் உள்ள கவனத்தை கோயிலின் உள்ளே உள்ள கருவறையில் நீர் வரும் அமைப்பில்(திருஊறல்/திரு அணைக்கா) கட்டப்பட்டுள்ள கோயில்களின் மூலமாக அறியலாம்.

கால இயக்கம் இட(நில) நிலை இவைகளை அறிந்து நீரைப் பயன்படுத்தி பயிர்களை வளர்க்கிற வரலாற்றில் விதைக்கிற கால அடையாளமாக ஆடித்திங்கள் மிக முக்கிய இடம் பெறுகிறது. அதிலும் நாற்றுத் தயாரிப்பு முறையில் நடவுக்கு முன்னான ஆடித்திங்களின் பதினெட்டாம் நாள் கொண்டாட்டத்திற்கு உரியதாக அமைந்தது. பயிர்கள் வளர்வதில் நீர்வளம் நிறைகிற வகையில் அமைந்த இயற்கையை ஐப்பசி-கார்த்திகையில் காண்கிறோம். ஐப்பசி அடை மழைக் காலங்களில் நீரைப் பயன்கொள்ளும் அறிவாற்றலின் அறிவுறுத்தும் ஐப்பசித் திங்கள் முழுவதற்குமான கொண்டாட்டம் ஐப்பசி முழுக்கு. இதன் இறுதி கார்த்திகைத் திங்களின் தொடக்க நாளன்று ‘முடமுழுக்கு’ என்று கொண்டாடப் பெறுகிறது. நீரோட்டத்தை முடக்குப்படுத்தி அல்லது நிலை நிறுத்திடும் பணியை கார்த்திகைத் திங்களின் தொடக்கத்திலேயே செய்ய வேண்டும் என்பது இதன் அடையாளம். இதனை உணர்த்தும் கதை மரபுகள் முற்றிலும் இருட்டடிப்பு முறையிலான சடங்குகளாக வழிவழி எடுத்துரைக்கப் பட்டு கட்டமைக்கப் படுகின்றன.

முளைப்பாரி இட்டு வழிபடுவதுமயிலாடுதுறை எனும் ஊரின் சார்பில் காவிரி ஆற்றில் நடை பெறும் ஐப்பசி முழுக்கு வரலாற்றில் சிவபெரு மானிடம் ஒரு பெண் கலந்தாள் (நாதசர்மா என்பார் மனைவி அனவித் யாம்பாள்) என்றும் அந்த லிங்கதிற்கு சேலை அணிவிக்கப் படுகிறது என்பதும் மரபு. இதன் வரலாற்றுக்கு உரிய மூலமானது தாய்வழிச் சமூக வரலாற்றை உணர்த்துவதாகும். பெண்கள் உற்பத்தி வரலாற்றின் செய்தியை அடையாளப் படுத்துவது இந்த வழிபாட்டு முறை. இந்த வரலாற்றின் உள்ளடக்கங்களோடு ஆடிப்பெருக்கு சார்ந்த பெண்டிர் செயல்பாடுகள் தற்சார்பு முறையில் பின்பற்றப் படுகின்றன. உழவு – உற்பத்தி வரலாற்றில் நாற்று விடுதல் தொடங்கி காலக் கணக்கீடு நூல்முடிச்சு போடப்பட்டு கணக்கிடப்படும். பிள்ளைப்பேறுக்கு உரிய பெண் உற்பத்தித் தொழிலுக்கு உரியவளாக இருந்து விதை விதைத்தலைச் செய்தாள். தொடர்ந்து நெல் முதலான உற்பத்தியை முழுவதுமாகப் பெண்கள் செய்ய, சேகரித்தல் தொழிலில் ஆடவர் ஈடுபட்டனர். உற்பத்திக்கு உரிய மழை பெண் சார்ந்து அடையாளப்பட்டு ‘மாரி’ வழிபாடு வந்தது. நீர்த்திவலையில் தூய்மை, பசுமை வகையில் முத்துமாரி, பச்சை வாழி போன்ற அடையாளங்கள் அமைந்தன.

போர் வகையிலும் ‘கொற்றவை’ அடையாள வரலாறுகள்  உள்ளன. இயற்கையோடு உற்பத்தி முறையிலும் குழந்தையை ஈனும் ‘கரு’ வகையிலும் கடவுளான பெண்ணின் வரலாற்றினை உணர்த்தும் நூல் முடிப்பு, முளைப்பாரி செயல்பாடுகள் வரலாற்றை மறைத்து மகிமை நோக்கில் தற்போது கொண்டாடப் படுகின்றன. கன்னிப் பெண்ணின் கையில் கட்டப்பட்ட முடிச்சுக் கயிறு காப்புக் கயிறாக உள்ளது. பின் கழுத்தில் மங்கல நாணாக அமைந்தது. பயிர் உற்பத்தி செய்த பெண் வரலாறு, சடங்கில் முளைப்பாரி சுமக்கும் வரலாறாக உள்ளது.

உற்பத்தி முறை விரிந்த காலத்தில் நீர்ப்பாசன முறைக்கு உரிய செயல்பாடுகளின் அறிவுத்திறனும், உற்பத்திக்கு மூலமான வரலாற்று அம்சங்களும் ஆடிப்பெருக்கில் பிணைந்துள்ளன. இதன் வளர்ச்சிப் போக்கு ஐப்பசித் திங்கள் காவிரிப் போக்கிலான முழுக்கிலும் அறிய வருகின்றன.

கன்னிப் பெண்கள் திருமணம், வளைகாப்பு, மஞ்சல் சரடு கட்டிக் கொள்வது, காவிரிக்கு செய்யப்படும் வழிபாட்டு முறைகள், செல்வம் பெருக வேண்டுதல் எனத் தற்போது கொண்டாடப்படும் செயல்பாடுகள் பெண்டிர் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த வரலாற்றை உடன்கொண்டவை. மரபு பேணலாக இவை அமைந்தாலும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான போக்கினைக் கொண்ட சடங்குகளாகப் பட்டிருக்கின்றன. உற்பத்திக்கான நீர்வளத்தைக் காப்பாற்றும் முறைகளைச் சிந்திப்பதற்கான வாய்ப்பையும் மறக்கடித்துள்ளன.

ஆடிப்பட்டம் தேடி விதை

மழை பொழியத் தொடங்குகிற ஆனித் திங்களை யொட்டி, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது அறிவுறுத்தப்படுகிறது. அறுவடைக் காலத்தின் இயற்கைச் சூழலைக் கணித்து அப்படிக் கூறப்பட்டது. சித்திரை தொடங்கி ஆறு திங்களின் முன்பின்னாக விதைத்தலும் அறுவடை செய்தலும் கணிக்கப்படுகின்றன. விதைத்தலுக்கு முன்னான மழை, பயிர் செழித்தலுக்கானதும்  பயிர் மழையைத் தாங்கி வீழாமல் நிற்றலுக்கான முறையில் ஐப்பசி மழை, குளிரும் வெப்பமுமான சூழலில் பயிர் வளர்ச்சி பின் அறுவடை என வானத்து மழையை ஒட்டியே பயிர் வளர்ப்பு கணிக்கப்பட்டது. ஆயினும், நீர்ப் பெருக்கினைப் பயன்படுத்துதல் என்பது கவனமாகக் கையாளப் பட்டது. மழை சார்ந்த கொள்ளளவில் ‘ஏரி’, வயல் சார்ந்த பயன்பாட்டில் குளம் என நீர்நிலைகள் விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்பில் கட்டியமைக்கப்பட்டன.

இந்த நில நீர் நிர்வாகம் கதிரவன் இயக்கத்தை ஒட்டி சீரமைக்கப்பட்டது. மழைநீர் பெருகி ஓடும் நிலையில் ஆற்றுப்பெருக்கின் பயன்பாடு அறிவுறுத்தப்பட்டு, ஆடிப்பெருக்கு நீர் நிர்வாகத்தை உற்பத்தி நோக்கி அறிவுறுத்துகிறது. காவிரி, வைகை, தாமிரபரணி, கெடிலம், பெண்ணை என அனைத்து நீர் போக்கு – வரத்து படுகைகளும் கவனம் பெறுகின்றன. இவை சார்ந்த ஏரி, குளம் நிறைத்தலில் தொடக்க நிகழ்ச்சியை ஆடிப்பெருக்கு அறிவுறுத்துகிறது. இதன் நிறைவை ‘ஐப்பசி திங்கள்’ நீர்ப் பயன்பாட்டைக் கணித்தல் கடவுளை இணைத்த வகையில் கட்டாயமாக்கப் படுகிறது. இப்படி கடவுளையும் இயற்கை வழிபாட்டையும் இணைத்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் செயல்முறைகள் கட்டாய கட்டமைப்பு நிர்வாகத்தைக் கவனப்படுத்துபவை. இயற்கை தற்சார்பு நலமாக மாற்றி புராணங்கள் செய்த புனைவுகளின் மூலமாக தற்கால கொண்டாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

நீர்பாசனத்தை உற்பத்திக் காலம் தொடங்கி கையாளுவதை அரசு உணர வேண்டும். அதை மக்கள் விழிப்புணர்வு மூலமே நடைமுறையாக்க முடியும். வெறும் வழிபாட்டல அது. மக்கள் வாழ்தலுக்கான உற்பத்திச் செயல் முறைகளுக்கான திட்டமிடல். இயற்கையான மழையே ஆடிப்பட்டம் தொடங்கி விதையை அறுவடைக்கு ஆக்குகிறது. ஆனாலும் நீரைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்துவதற்கு திட்டமிடலை ஆற்றுப் பாசனத்தை நோக்கி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு அறிவுறுத்துகிறது. அதை முற்றிலுமாக முறைப்படுத்திக் கொள்ள வேண்டியதை ‘ ஐப்பசி முழுக்கு’ அறிவுறுத்துகிறது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply