ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? – தமிழில்: ஜெயந்திரன்

தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன. ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? - தமிழில்: ஜெயந்திரன்ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்னஜூலை மாதம் 7ஆம் திகதி நள்ளிரவில், ஹயிற்றியின் அதிபரது தனிப்பட்ட வதிவிடத்தின் மேல் திடீர்த் தாக்குதலைத் தொடுத்த ஆயுததாரிகள், அதிபரைச் சுட்டுப் படுகொலை செய்தார்கள். ஹயிற்றி அதிபர் மீது துணிகரமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல், ஹயிற்றிய சமூகத்தை முற்றிலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொலைகாரர்கள் யாரால் அமர்த்தப் பட்டார்கள்? என்ன நோக்கத்துக்காக அதிபர் கொலை செய்யப்பட்டார்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையிலும் கூட, கொலம்பிய ஆயுததாரிகள், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு பாதுகாப்பு நிறுவனம், மற்றும் ஹயிற்றியில் இருக்கின்ற அதிபர் மொயிஸின் எதிரிகள் போன்ற பலர் இதன் சூத்திரதாரிகளாக இருக்கலாம் என்ற ஊகம் தற்போது நிலவுகிறது.

ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? – தமிழில்: ஜெயந்திரன்
ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்னதிடீர்த் தாக்குதலைத் தொடுத்த ஆயுததாரிகள்

தனது பதவிக் காலத்தை ஹயிற்றி அதிபர் மொயிஸ் நீடித்ததனால், அந்த நாட்டில் உருவான ஒரு நிச்சயமற்ற தன்மையின் காரணமாக அதிபர் மொயிஸ் மக்களது ஆதரவை இழந்தவராகவே காணப்பட்டார். ஹயிற்றி அதிபர் மொயிஸ் படுகொலை செய்யப்பட்டதன் அரசியல் பின்விளைவுகள், அங்கு நிலவும் கடும் அதிகாரப் போட்டி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறாதபடி அவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போடப்படுகின்ற தடைகள், இப்படிப்பட்ட இன்னோரன்ன விளைவுகளுக்கு ஹயிற்றி மக்கள் எதிர்வரும் நாட்களில் முகங்கொடுக்க வேண்டியிருக்கும்.

இது இப்படியிருக்க, ‘அதிக பிரச்சினைகள் நிறைந்த ஹயிற்றி அரசியலில் இது இன்னுமொரு குழப்பம்’ என்று பன்னாட்டு ஊடகங்கள் இந்த நிகழ்வுகளை விபரிப்பதைப் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்பது மட்டுமன்றி, பன்னாட்டுச் சமூகம் குறிப்பாக அமெரிக்காவும் ஐக்கிய நாடுகளும் அந்த நாடு “மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்” என அறிவிப்பதையும் காணலாம். ஹயிற்றிய நிலைமையை இவ்வாறு சித்தரிப்பது, வெளிநாடுகள், அந்த நாட்டில் மேற்கொள்ளும் வன்முறை ரீதியிலான தலையீடுகள், மற்றும்  தமது சுதந்திரத்துக்காக ஹயிற்றிய மக்கள் கொடுக்கும் விலை போன்ற பல்வேறு விடயங்களை இருட்டடிப்புச் செய்து, நன்மைக்குப் பதிலாகத் தீங்கு விளைவிக்கின்ற விடயங்களாகவே மாறி விடுகின்றன.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் வெளிநாட்டுத் தலையீடுகள்

 ‘ஒழுங்கற்ற நிலை’ ‘அமைதியற்ற நிலை’ ‘ஏழ்மை’ ‘ஊழல்’ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இன்றி ஹயிற்றி அதிபரின் படுகொலையைப் பற்றிப் பேசுவது இயலாத காரியமாகி விட்டது. “இரண்டு தலைமை அமைச்சர்களுக்கு இடையே நடை பெறுகின்ற கடுமையான அதிகார இழுபறியின் காரணமாக, ஹயிற்றி அதிபர் மொயிஸ் (Jovenel Moise) படுகொலையைத் தொடர்ந்து ஏற்கனவே குழப்பமான நிலையிலிருக்கின்ற ஹயிற்றியின் அரசியற் சூழல், மேலும் அதிக குழப்பத்துக்கு உள்ளாகக் கூடிய ஆபத்து நிலவுகிறது” என்று நியூயோர்க் ரைம்ஸ் (Newyork Times) நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் மேற்குறிப்பிட்ட நிகழ்வைச் சித்தரித்தது.

ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன“ஹயிற்றி நாட்டைச் சேர்ந்த மக்கள் தம்மை ஆள்வதற்குத் தகுதியற்றவர்கள், இன்று அந்த நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வுகள் எல்லாம் அந்த நாட்டில் ஏற்கனவே நிலவு கின்ற ஊழல்கள், செயற் திறனின்மை, அமைதி யற்ற தன்மை போன்றவற்றினால் தோற்றுவிக்கப் பட்டவை” என்றதோர் விம்பத்தைக் கொடுக்கவே பல ஊடகங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. ஹயிற்றியில் தற்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை ‘அந்த நாட்டில் எப்போதும் நிலவுகின்ற குழப்பமான சூழல்’ என்ற கண்ணாடியூடாகப் பார்க்கும் தன்மை, சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் நிலை நாட்டுவதற்கு ஹயிற்றி மக்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் போராட்டத்தை மலினப் படுத்துகின்ற செயற்பாடாகவே நோக்கப் படுகின்றது.

கறுப்பின மக்களால் ஆளப்படும் முதல் அமெரிக்க சமூகம்

பதினெட்டாம் நூற்றாண்டில், அதாவது 1791ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி, அன்று ‘செயின்ட் டொமிங்’  (Saint Domingue) என்று அழைக்கப்பட்ட பிரெஞ்சுக் காலனீய நாட்டில், அடிமைத்தளைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த ஆபிரிக்க மக்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்கள். காலனீய ஆட்சிக்கு எதிராக ஒரு தசாப்தத்துக்கு மேலாக அந்த மக்கள் போராடினார்கள். ஈற்றில், 1804ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி ‘கறுப்பின மக்களால் ஆளப்படும் முதல் அமெரிக்க சமூகம்’ என்ற பெருமையை அந்த நாடு பெற்றுக் கொண்டது.

ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்னஇவ்வாறாக அந்த நாடு சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட விடயம், காலனீயச் சக்தியாக இருந்த பிரான்சு நாட்டுக்குச் சரியாகப் படவில்லை என்பதனால், அந்த நாட்டில் காலனீய ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கு பிரான்சு தொடர்ந்தும் முயற்சிகளை எடுத்து வந்தது. மீண்டும் ஒரு பிரெஞ்சு ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப் படக் கூடிய ஒரு சூழல் இருந்த 1825ஆம் ஆண்டில், அதிபர் ஜோன் பியேர் புஆயே (Jean Pierre Boyer)  தலைமையில் இருந்த ஹயிற்றிய அரசு, தமது நாடு அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக பிரான்சுக்குத் திறை செலுத்தும் முடிவை மேற்கொண்டது. இந்த முடிவின் காரணமாக ஹயிற்றி தொடர்ச்சியாக நிதியைப் பொறுத்த வரையில் உறுதியற்ற தன்மையையே சந்தித்து வருகிறது,

ஆனால் அத்துடன் பிரச்சினை முடிந்து விடவில்லை. ஹயிற்றியின் அரசியல் இறைமை நாட்டின் மிகச் சக்தி வாய்ந்த அயல் நாடாக விளங்குகின்ற அமெரிக்கா வினாலும் மதிக்கப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்னஹயிற்றியின் துறைமுகங்கள், ஆயப் பணிமனைகள் போன்றவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் அந்த நாட்டில் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பையே சந்தித்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமது கடற்படையை அமெரிக்கா ஹயிற்றிக்குச் சொந்தமான கடற் பிரதேசத்துக்கு அனுப்பி வந்தது. பின்னர் 1914ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஹயிற்றியின் தேசிய வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த 500,000 டொலர்களைக் கையகப்படுத்தி, நியூயோக்குக்கு எடுத்துச் சென்றார்கள். அதற்கு அடுத்த வருடம் ஹயிற்றிக்கு சென்ற ஒரு அமெரிக்க தூதுக்குழு, அமெரிக்கா தனது இராணுவப் பாதுகாப்பு உதவியை ஹயிற்றிக்கு வழங்க முன்வருவதாகத் தெரிவித்தது. ஆனால் ஹயிற்றி அதனை ஏற்க மறுத்தது.

ஹயிற்றியின் அதிபர் ஜோன் வில்புறூன் கியோம் (Jean Vilbrun Guillaume) 1915ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த நாட்டை ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கும் நோக்குடன் அமெரிக்க அதிபர் வூட்றோ வில்சன் (Woodrow Wilson) அமெரிக்கத் துருப்புகளை அங்கு அனுப்பி வைத்தார். அமெரிக்கத் துருப்புகள் அங்கே 19 வருடங்கள் தங்கியிருந்தன. ஜிம் க்ரோ (Jim Crow) இனப் பாகுபாட்டை அக்காலப் பகுதியில் அமெரிக்கா அங்கு அமுல் நடத்தியது மட்டுமன்றி ஊடகச் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்தி, ஹயிற்றிய மக்களுக்கு எதிரான வன்முறைகளிலும் ஈடுபட்டது.

ஹயிற்றியிலிருந்து 1934ஆம் ஆண்டில் அமெரிக்கத் துருப்புகள் வெளியேறிய போதும் வெளிநாட்டுத் தலையீடுகள் அங்கே முடிவுக்கு வந்துவிடவில்லை. அந்த நாடு 1980களின் நடுப்பகுதியில் ஒரு சர்வாதிகார ஆட்சியிலிருந்து சனநாயக ஆட்சிக்கு மாறியது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த முப்பது வருடங்களில், நாட்டின் ஆட்சி 20 தடவைகள் கைமாறியிருக்கிறது.

ஜோன் பேட்ரண்ட் அறிஸ் ரீட் (Jean Bertrand Aristide) 1990ம் ஆண்டில் ஹயிற்றியின் முதல் சனநாயக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் முன்னரேயே சிஐஏயினால் (CIA) பயிற்சியளிக்கப்பட்டு, நிதியுதவி செய்யப்பட்ட ஒரு நிறுவனம் பங்குபற்றிய ஒரு சதி முயற்சியின் மூலம் அவர் பதவி கவிழ்க்கப்பட்டார். அமெரிக்கத் துருப்புகளின் பாதுகாப்புடன் மீண்டும் 1994ஆம் ஆண்டு அவர் ஹயிற்றிக்குத் திரும்பினார். அறிஸ் ரீட்  2000ஆம் ஆண்டு மீண்டும் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஓர் ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டார். இந்தக் கிளர்ச்சி வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப் பட்டதாகவே அறிஸ் ரீட் நம்புகிறார்.

ஹயிற்றியின் சனநாயக வளர்ச்சியை அமெரிக்காவின் தலையீடுகள் எவ்வாறு தடம் புரளச் செய்தன என்பதற்கு அறிஸ் ரீட்டின்  வரலாறு ஒரு முதன்மை எடுத்துக் காட்டு ஆகும். ஹயிற்றியில் சனநாயகம் சீரழிந்திருப்பதற்கும் 2004ஆம் ஆண்டிலிருந்து அந்த நாடு தனது இறைமையை முழுமையாக இழந்திருப்பதற்கும் அமெரிக்காவே முழுக்க முழுக்கப் பொறுப்பு என்று லொஸ் ஏஞ்சலசிலுள்ள கலிபோர்ணியாப் பல்கலைக் கழகத்தில் மானுடவியற் பேராசிரியராகப் பணிபுரிகின்ற ஜெமீமா பியேர் (Jemima Pierre) தெரிவித்தார்.

அறிஸ் ரீட்டுக்கு எதிராக நடைபெற்ற சதிப் புரட்சியைத் தொடர்ந்து, வெளிநாட்டு இராணுவத் தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்ற இன்னுமொரு காலப் பகுதிக்கு ஹயிற்றி திரும்பியது. இம்முறை அது ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டது. ‘ஹயிற்றியின் தற்போதைய நிலைமை அப்பிரதேசத்தில் பன்னாட்டு அமைதி, பாதுகாப்பு என்பவற்றுக்கு ஆபத்தாக விளங்கும் காரணத்தினால், அமைதிப்படையை அந்தக் கரிபியன் நாட்டுக்கு அனுப்புவதாக’ ஐக்கிய நாடுகள் காரணம் தெரிவித்தது.

இருநூறு மில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு வரவு செலவுத் திட்டத்தின் துணையுடன் ஆயிரக் கணக்கான வெளி நாட்டுத் துருப்புகளையும் காவல் துறைப் பணியாளர்களையும் ஐக்கிய நாடுகள் அந்த நாட்டுக்கு அனுப்பியது. உண்மையில் இவர்களின் வரவு அந்த நாட்டின் நிலைமையை எந்த விதத்திலும் முன்னேற்றவில்லை என்பது மட்டுமன்றி, பாரிய அழிவுக்குக் காரணமான வாந்திபேதிப் பெருந் தொற்றையும் தோற்றுவித்ததுடன் ஏராளமான பாலியல் ரீதியிலான குற்றங்களுக்கும் வழிவகுத்தது.

 ‘ஹயிற்றியில் ஐக்கிய நாடுகள் 17 வருடங்கள் தங்கியிருந்தது என்றும் என்றுமில்லாதவாறு துப்பாக்கிகளின் எண்ணிக்கை ஹயிற்றியில் அந்த நாட்களில் அதிகரித்திருந்தது’ என்றும் வடகரோலைனா மாநிலத்திலுள்ள டேவிட்சன் கல்லூரியில் ஆபிரிக்க கற்கை நெறிகளுக்கான பொறுப்பை வகிக்கின்ற பேராசிரியர் மமைறா புரொஸ்ப்பர் (Mamyrah Prosper) சுட்டிக் காட்டினார்.

உதவியளிக்கும் நிறுவனங்கள் சந்திக்கும் தோல்விகள்

கடந்த சில தசாப்தங்களாக ஹயிற்றியில் தொடர்ச்சியாக ஆட்சியை அமைக்கின்ற உறுதியற்ற அரசுகளும், பொருண்மியத்துக்காக அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற போக்கும், ஹயிற்றி நாடு தனது மக்களுக்கு உரிய சேவைகளை வழங்கும் தன்மையைக் கணிசமான வரையறைக்கு உட்படுத்தியிருக்கிறது. இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் நிகழ்ந்த நில அதிர்வும் அதைத் தொடர்ந்து வந்த வாந்திபேதிப் பெருந் தொற்றும் நாட்டைப் பெரும் அழிவுக்குள்ளாக்கி, அபிவிருத்திப் பணிகளுக்குப் பாரிய பின்னடைவைத் தோற்றுவித்திருக்கின்றன. ஏற்படுத்தப்பட்ட அழிவுகளையும் சொத்திழப்புகளையும் ஈடு செய்வதற்காக ஹயிற்றியின் அரசு கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

இதன் விளைவாக, நில அதிர்வுக்கு முன்னர் தொழில் துறைகள் செழித்து வளரும்   ஒரு முக்கிய தளமாக விளங்கிய ஹயிற்றி, மிகப் பிரமாண்டமான அளவில் மனிநேயப் பணிகளை முன்னெடுக்கும் ஒரு நாடாக மாற்றமடைந்தது. பதின் மூன்று பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட மனித நேய உதவிகளும் நிதி ரீதியிலான நன்கொடைகளும் நாட்டுக்குப் பெருமளவில் வழங்கப்பட்டன. அமெரிக்க கூட்டுத்தாபனங்களால் ஆதரிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும் அயலிலே உள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளால் அளிக்கப்பட்ட கடன்களும் இவற்றுள்ளே அடங்குகின்றன.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு உதவவும் அதே நேரம் ஹயிற்றியைச் சேர்ந்த மக்கள் தம்மைச் சுதாகரித்துக் கொள்ளவும் உதவி செய்வதற்குப் பதிலாகப் பன்னாட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு எவ்விதத்திலும் உதவவில்லை.

 ‘பல்தேசியப் பெருநிறுவனங்களைக் கவர்ந்திழுப்பதிலேயே ஹயிற்றியின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வு தங்கியிருக்கிறது’ என்று நம்பி, பில் கிளின்ரன், ஹிலறி கிளின்ரன் ஆகியோர் நில அதிர்வுக்குப் பிற்பட்ட காலப் பகுதியில் ஹயிற்றியில் அதிகமான அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்தார்கள். உட்கட்டமைப்பு விரிவாக்கத்தை உற்பத்தி செய்வதன் மூலம் பொருண்மிய அபிவிருத்தியை பன்மடங்கு அதிகரிக்கலாம் என்ற நம்பிக்கையுடன், கரக்கோல் (Caracol) என்று அழைக்கப்பட்ட தொழிற்றுறைப் பூங்காவை உருவாக்கும் திட்டத்தில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். பத்து வருடங்கள் கடந்து விட்ட பின்னரும், நூற்றுக் கணக்கான மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட பின்னரும் அந்தத் திட்டம் தனது இலக்கை எந்த விதத்திலும் எட்டவில்லை. அதன் ஒரு பகுதியாக விளங்கிய துறைமுக அபிவிருத்தி முற்று முழுதாகக் கைவிடப் பட்டிருக்கிறது.

இதே போலவே, நில அதிர்வுக்குப் பின்னர், யுஎஸ்எயிட் (USAID) நிறுவனம் 4.4 பில்லியன் டொலர்களைச் செலவிட்டது. ஆனால் அதனால் எந்தவிதமான உருப்படியான நன்மையும் களத்தில் உணரப்படவில்லை. இதில் நூற்றுக்கு இரண்டு வீதமான நிதி மட்டுமே ஹயிற்றியைச் சேர்ந்த நிறுவனங்களைச் சென்று சேர்ந்ததாகவும், அதன் பெரும் பகுதி அமெரிக்க ஒப்பந்தகாரர்களுக்கே வழங்கப் பட்டதாகவும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற, பொருண்மியம் மற்றும் கொள்கைக்கான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்களில் ஒருவரான ஜேக் ஜோண்ஸ்ரன் (Jake Johnston) தெரிவித்தார்.

அதே நேரம், ஹயிற்றியைச் சேர்ந்த அதிகாரிகளும் கூட வழங்கப்பட்ட உதவி நிதிகளை வீணாக்கினார்கள் என்பதையும் மேலும் அந்த நிதிகளைக் கையாடினார்கள் என்பதையும் மறுத்துவிட முடியாது.

எடுத்துக்காட்டாக, 2008 க்கும் 2016 க்கும் இடையில் கரிபியன் நாடுகளில் அபிவிருத்திக்குத் தேவையான நிதியை வாரிவழங்கிய வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த பெற்றோகரிபே (PetroCaribe) என்ற நிறுவனம், ஹயிற்றியில் 400 திட்டங்களுக்காக 4 பில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது. ஆனால் இந்த நிதியில் அதிகளவான தொகை கையாடப்பட்டது மட்டுமன்றி, அபிவிருத்தியில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றத்தையும் தோற்றுவிக்கவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

ஹயிற்றியின் இறைமையை மீள நிலைநாட்டுதல்

ஹயிற்றியின் இறைமையை மீள நிலைநாட்டுதல்ஹயிற்றி அதிபர் மொயிஸ் படுகொலையைத் தொடர்ந்து, இடைக் காலத்தில் தானே பதவியை வகிப்பதாக முதன்மை அமைச்சரான குளோட் ஜோசப் (Claude Joseph) தெரிவித்தார். ஆனால் ஜோசப்புக்குப் பதிலாக ஜூலை 5ம் திகதி அதிபர் மொயிஸினால் நியமிக்கப்பட்ட அறியேல் ஹென்றி (Ariel Henry), ஜோசப்பின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தினார். செனட் சபைக்குத் தலைமை தாங்குகின்ற ஜோசப் லம்பேட்டும் (Joseph Lambert) அதிகாரம் தன்னிடமே இருக்கிறது என்று வாதிடுகிறார்.

இயங்குகின்ற தேசியப் பேரவை ஒன்று இல்லாத காரணத்தினால், ஏற்கனவே இருக்கின்ற அரசியல் நெருக்கடி மேலும் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. கோவிட்-19 ஐக் காரணங்காட்டி தேர்தல்கள் நடத்துவதை ஹயிற்றி அதிபர் மொயிஸ் தள்ளி வைத்ததன் காரணத்தினாலும் நாட்டின் அதிபரின் அண்மைய படுகொலையைக் காரணங்காட்டி உச்ச நீதி மன்றத்தினால் முடக்கி வைக்கப் பட்டிருப்பதன் காரணத்தினாலும் தேசியப் பேரவை இயங்க முடியாத நிலையை அடைந்திருக்கிறது.

செப்டெம்பரில் தேர்தல்களை நடத்துவதற்குத் தற்போது முடிவு செய்யப் பட்டிருக்கின்றது. இருப்பினும் தேர்தல் ஊழல்கள் இன்றி நடைபெறுமா? என்று ஹயிற்றிய மக்கள் அங்கலாய்க்கின்றனர். எந்தவித வெளிநாட்டுத் தலையீடுகளும் இன்றி வெளிப்படைத் தன்மையுடன், நீதியான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஹயிற்றியின் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

தங்களது நாட்டைச் சரியான திசையில் நடத்திச் செல்ல வேண்டிய அனைத்து ஆற்றலும் ஹயிற்றிய மக்களிடம் இருக்கின்றது. துப்பாக்கிக் குண்டுகளும் வன்முறைகளும் தங்கள் மீது ஏவி விடப்பட்ட போதும் கூட, ஹயிற்றிய மக்கள் பொறுப்புக் கூறுமாறு  வீதிகளில் இறங்கி தங்கள் தலைவர்களுக்கு எதிராகப் போராடியதை வரலாறு முழுவதும் காணக்கூடியதாக இருக்கிறது. ஹயிற்றியில் முன்னெடுக்கப்படும் சனநாயக வழிமுறைகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பிரிக்க முடியாதவையாகும். ஐக்கிய நாடுகளின் ஆக்கிரமிப்பும்  ஹயிற்றி அதிபர் மொயிஸ் இன் சர்வாதிகார ஆட்சியும் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமது அரசியல் இறைமையை முழுமையாக அனுபவிக்கவும் உரிய மாண்புடன் தாம் வாழ்வதற்குமான ஆர்ப்பாட்டங்களை ஹயிற்றிய மக்கள் கடந்த சில வருடங்களாக முன்னெடுத்து வருகிறார்கள்.

அடிமட்ட மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் ஒரு மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்கான வாய்ப்பு ஹயிற்றியில் மிக அதிகமாகவே காணப்படுகிறது. பன்னாட்டுச் சமூகத்தினால் இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்படாவிட்டாலும் கூட உலகம் பூராவும் வாழ்கின்ற கறுப்பினச் செயற்பாட்டாளர்கள் இதனை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். “முக்கியமான விடயம் என்னவென்றால் ஹயிற்றி மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தாமே காண வேண்டும். வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடுகளும் இடையீறுகளும் இன்றி இயங்குவதற்குத் தேவையான அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டால், ஹயிற்றி மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வை தாமாகவே கண்டுபிடிப்பார்கள்” என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற சமாதானத்துக்கான கறுப்பின மக்களின் ஒன்றியம் என்ற அமைப்பைச் சார்ந்த அஜாமு பராக்கா (Ajamu Baraka) தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன7 ஹயிற்றியின் தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் என்ன? - தமிழில்: ஜெயந்திரன்இனச்சாயம் பூசப்பட்ட ‘குழப்பம்’ என்ற விளக்கத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக ஹயிற்றியின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பவற்றை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி யதார்த்தமான முறையில் உரையாட வேண்டும். வெளிநாட்டுச் சக்திகள் உண்மையில் ஹயிற்றியின் உறுதியான நிலைமைக்குப் பங்கம் விளைவித்தது மட்டுமன்றி, அந்த நாட்டின் சனநாயக வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, ஹயிற்றியின் இறைமையைப் பாதுகாத்து, நீதிக்கும் மாண்புக்குமான ஹயிற்றிய மக்களின் தொடர் போராட்டத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இந்த சக்திகள் நடந்தவற்றைச் சீர் செய்ய முன்வரவேண்டும். ஓர் ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புகின்ற அனைத்து ஆற்றலும் ஹயிற்றிய மக்களிடம் உண்டு என்ற உண்மையை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி: அல்ஜசீரா

ilakku-weekly-epaper-140-july-25-2021