சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது என்றும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர மற்றும் சாய்ந்தமருது நகர சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இன்று (07) வழங்கிய தீர்ப்பானது, சாய்ந்தமருது மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாகக் கருதப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் சாய்ந்தமருது நகர சபை உருவாக்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
இதன்போது எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையாகி வாதாடிய பின்னரே நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்கு இந்தத் தகவலை வெளியிட்டார்.
அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான எல்லை மீள் நிர்ணயப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
இப்பகுதிகளில் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது குறித்து நிஸாம் காரியப்பர் முன்வைத்த வாதத்திற்கு பதிலளித்த நீதிமன்றம், இது மாகாண சபை அமைச்சும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவும் தீர்மானிக்க வேண்டிய விடயம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பான முழுமையான அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட தரப்பினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி மூலம் இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழலில் கல்முனை மாநகர சபைக்கோ அல்லது சாய்ந்தமருது நகர சபைக்கோ தேர்தல்களை நடத்த முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எல்லைகள் சரியாக வரையறுக்கப்பட்டு ஜனாதிபதியினால் வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகும் என்று தெரிவித்தார்.
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்த எல்லைப் பிரச்சினைக்கு இந்தத் தீர்ப்பு ஒரு தெளிவான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதால், இதனைத் தாம் வரவேற்பதாகவும் நிஸாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டார்.



