Home Blog Page 2723

இராணுவ தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறப்பு

இராவண தற்காப்பு கலைக்கிராமம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இக்கிராமம் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் என். யூ.எம்.டபிள்யூ. சேனநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் குறித்த மாதிரி தற்காப்பு கலைக்கிராமம் வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவ கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்காப்புக் கலையினை அழியவிடாது அதனைப் பேணிப் பாதுகாக்கும் நோக்குடன் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் படையினருக்கு தற்காப்புக் கலை முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

குறித்த பயிற்சியின் நிறைவாகவும், கலை பாரம்பரியத்தினை பேணிப் பாதுகாக்கும் நோக்குடனும் இரணைமடுவில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் குறித்த தற்காப்புக் கலைக் கிராமம் படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போது பண்டைக்கால அரசாட்சி முறையில் எவ்வாறு தற்காப்புக் கலை பேணப்பட்டமை என்பதை பிரதிபலிக்கும் வகையில் விசேட  நிகழ்ச்சியும் நடைபெற்றது.

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா?

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தனது சேவையை நீடிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு ஜனாதிபதி சரியான பதிலை அளிக்கவில்லை. இவரின் பதவி எதிர்வரும் ஓகஸ்ட் 18 அன்று நிறைவடைகின்றது.

இப்போதைய  இராணுவத் தளபதி ஓய்வு பெற்றால் அடுத்து மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியை பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார் காணியில் மகாபோதி அமைக்க திட்டம்

யாழ். வலி வடக்கு தையிட்டிப் பகுதியிலுள்ள தனியாரிற்கு சொந்தமான காணியொன்றில் மகாபோதி அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் பிரதேச சபையிடம்  கோரியிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை எதிர்த்து தாம் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் கருத்துத் தெரிவிக்கையில், 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில், வலி.வடக்கில் பேக்கரிகளில் பணிபுரிந்த சிங்கள பௌத்தர்கள் தங்கள் வழிபாட்டிற்காக20 பரப்புக் காணியில்  பௌத்த விகாரை ஒன்றை அமைத்தனர். தற்போது அந்தக் காணியில் விகாரை அமைப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அனுமதியை பிக்கு ஒருவர் கோரியிருப்பது என்பது அனுமதிக்க முடியாதது.

இதனாலேயே நாம் நீதிமன்றம் செல்லவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மூதூரில் புதிய பிரதேச செயலகம்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் துண்டாடப்பட்டு புதிய பிரதேச சபை அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், தோப்பூர் பிரதேச செயலகம் என்னும் பெயரில் புதிய பிரதேச செயலகம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கான அமைச்சரவை பத்திரமும் தயாராவதாகவும் அறியமுடிகின்றது.

இந்த தோப்பூர் பிரதேச செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள் பின்வருமாறு

கிளிவெட்டி, குமாரபுரம், பாரதிபுரம், புளியடிச்சோலை, விநாயகபுரம், கங்குவேலி, மேங்காமம், மருதநகர், பாலத்தடிச்சேனை, முன்னம்போடிவெட்டை, சிறிநாராயணபுரம் ஆகிய கிராமங்கள்  இணைக்கப்படும்.

இந்த வேலைகள் நடைபெற்று நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் அழிவடைந்துள்ளன

அம்பாறை மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 26.07இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே கவீந்திரன் கோடீஸ்வரன் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசம் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றது.  அதற்குக் காரணம் இங்குள்ள புத்திஜீவிகளும், இந்த பிரதேசத்தின் தவிசாளருமேயாகும். இங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால்  முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காக முஸ்லிம் மக்களுக்கு மட்டும் திட்டங்களை மேற்கொண்டு உதவி செய்து வருகின்றனர். இது கவலைக்குரியது. முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் நிதி மூலம் தங்கள் இன மக்களுக்காக மட்டும் உதவி செய்து வருகின்றனர். இது இன பேதத்தை தூண்டும் செயலாக அமைகின்றது.

எப்போதும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. சில அற்ப சலுகைகளை கொடுத்து தமிழர்களை விலை கொடுத்து வாங்கலாம் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் வடக்கில் பெருமளவு நிதியை கொட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கு செலவிட்டனர். ஆனால் அங்கு ஒரு உறுப்பினரைக்கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை பலப்படுத்தினார்கள். அதேபோல கிழக்கிலும் தமிழ் தேசியத்தை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராலய செயலாளராக முன்னாள் அரசியல்வாதியின் மகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவின் மகள் துல்மினி அத்தநாயக்க அவுஸ்திரேலியாவிற்கான உயர்ஸ்தானிகராலய மூன்றாவது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு சம்பளம் மற்றும் பணியாளர் ஆணையத்தின் ஒப்புதல் பெறாததால் நிராகரிக்கப்பட்டது. இந்த நியமனத்திற்காக வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன கடந்த செவ்வாய்கிழமை அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்.

இப்போது சம்பளம், பணியாளர் ஆணைய ஒப்புதல் பெற்றிருப்பதனால், அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

முன்னாள் அமெரிக்கத் தூதுவரின் தற்போதைய பதவி

சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தனது பதவியை 27.07இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுகு்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதம பிரதி உதவி செயலாளராக அவர் பணியாற்றுவார்.

கெஷாப் தனது 25 வருட கால அமெரிக்க இராஜாங்க சேவையில் இந்தியா, மொரோக்கோ, கினியா மற்றும் இலங்கை, மாலைதீவிற்கான தூதுவராகப் பணியாற்றியிருக்கின்றார்.

ரணில் இந்தியாவில் ஹோம வழிபாடு

மனைவியுடன் இந்தியாவில் தல யாத்திரையை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்தியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில், இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமம் நடத்தினார்.

ரணிலின் வருகையை முன்னிட்டு கொல்லூரில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. சீரற்ற காலநிலை காரணமாக ஹெலிகொப்டரில் அழைத்து வராது தரைவழியாக பாதுகாப்பு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்றனர்.

பிரபாகரன் காலத்தில் மக்களிடம் அச்சம் இல்லை ராஜபக்ச

பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சமின்றி மத வழிபாடுகளை மேற்கொண்டதாக    ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் தேர்தலுக்காக பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்தா , தற்போது நாட்டில் கோவில், பள்ளிகள், தேவாலயங்களுக்குக் கூட மக்கள் அச்சமின்றி செல்ல முடியாத நிலைமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுத போராட்டம் உச்சத்தில் இருந்த போதும், பிரபாகரன் இருந்த போதும் கூட மக்களிடம் இந்த பயம் இருக்கவில்லை என்றும், தற்போதைய அரசாங்கத்திடம் எதை கூறினாலும் அதை கேட்கும் நிலையில் அவர்கள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்தது போர்குற்றம் மட்டும் அல்ல திட்டமிட்ட இனபடுகொலை.   ஒவ்வொரு சிங்கள தலைமைகளும்  தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்துகிறார்கள் ,

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கான ஆயுதங்கள் மே மாதம் 2009 இல் மௌனிக்கப்பட்டது. இந்நிலையில் ஜ.நா. பிரதிநிகள், மற்றும் அமெரிக்கா, இந்தியா, நோர்வே போன்ற பல சர்வதேச நாடுகள் கொடுத்த வாக்குகளிற்கமைய பல்லாயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் சிங்கள இனவாத அரசின் படுகொலை இராணுவத்திடம் சரணடைந்தனர். இவர்களில் 146679 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதற்க்கு  ராஜபக்ச  தான் முழு பொறுப்பாளி என்பது  நிதர்சனம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மற்றுமொரு சாட்சியையும் இழந்து நிற்கின்றது தமிழினம்!

இது வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வீதி வீதியாக அலைந்து சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டு, தமிழ் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையிழந்து எந்த வித அடிப்படை தீர்வுகளையும் பார்க்காமலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 38 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புதுக்குடியிருப்பு, இரணைபாலையை சேர்ந்த திருமதி செபமாலைமுத்து திரேசம்மா 24.07.2019 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவர் 01.07.2008 அன்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக தனது மகனை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டு 24.07.2019 அன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கும் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடக்கு கிழக்கு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அவரது மகனை எமது உறவாகக்கொண்டு அவருக்கான நீதியை பெற்றுக்கொடுக்க உத்வேகத்துடன் போராடுவோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கனகரத்தினம் காந்தமலர், சபாரத்தினம் மனோன்மணி, தெய்வேந்திரன் இந்திரா, நாகராசா சிவமணி, சாமிதம்பி திரவியம் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரம்பிள்ளை அருந்தவம், தவரட்ணம் பத்மாவதி, ராமன் கமலம், வீரகத்தி அமிர்தலிங்கம், சொக்கன் பரமேஸ்வரி, சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை, நாகராசா சிவசோதி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் தெய்வஈஸ்வரி, மகேந்திரன் உதயராணி, லவநீதன் இளவரசி, தம்பிமுத்து அமரசிங்கம், அழகிப்போடி சந்திரசேகரம், சந்திரசேகரம் ஞானசௌந்தரி, யாழ் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி புஸ்பராணி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கனகரத்தினம் மகேஸ்வரி, பாவிலு சந்தியோகு, மரியான் சரோரூபன் குருஸ், கனகரத்தினம் மகேஸ்வரி, வைத்தியலிங்கம் யோகரட்ணம், ஈஸ்வரன் உருத்திராதேவி, துரைசிங்கம் ஈஸ்வரி, சிதம்பரப்பிள்ளை யோகராசா மற்றும் அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி எம்முடன் இணைந்து போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜசிந்தா பீரிஸ், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கந்தையா அரியரத்தினம், அரியதாஸ் புவனேஸ்வரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அன்ரன் அல்பிரட், செபநாயகம் மரியமலர், செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன், ச.விஜயலட்சுமி, கோணமலை பொன்னம்பலம், வேலு சரஸ்வதி, செபமாலைமுத்து திரேசம்மா ஆகியோரின் (இங்கு வழங்கப்பட்ட மரணமானவர்களின் விபரமானது எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மட்டுமே. எமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதை விட அதிகமாக இருக்குமென கணிப்பிடுகின்றோம்) மரணத்துடன், எமது உறவுகளை மீட்பதற்காக போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள நிலையிலும் இலங்கை சிங்கள அரசாங்கமோ சர்வதேச சமூகமோ எமக்கான நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையினையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது போராட்டமானது எமது உறவுகளை மீட்டல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிதல், நீதியை பெறல் என்பவற்றுடன் இனிவரும் காலங்களில் எமது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் மனித குலத்திற்கே இவ்வாறான பிரச்சனைகள் நிகழாதிருக்கவுமேயாகும். ஆயினும் எமது போராட்டமானது மிக கடினமானது ஏனெனில் எமக்கான நீதியை பக்கச்சார்பற்று வழங்கக்கூடிய சர்வதேச பொறிமுறையை கட்டமைக்கவும் , நீதியை பெற்றுக்கொள்ளவும் கடுமையாக போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது.

மனித குலத்திற்கான நீதியானது நபர்களின் எண்ணிக்கை சார்ந்தோ (பெரும்பான்மை) பாதிக்கப்பட்டவர்களிடமுள்ள வளங்கள் சார்ந்தோ அல்லது நீதி வழங்குனர்கள் மற்றும் நீதி வழங்குனர்களின் பங்காளிகளின் தேவையின் அடிப்படையிலோ அமையுமெனின் அதன் பெயர் நீதியன்று. ஆயினும் இன்றைய காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் மேற்கூறப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதாக நாம் உணர்ந்ததன் விளைவாக உளச்சோர்வுக்கும் நோய்களுக்கும் உள்ளாகி மரணத்தை தழுவிக்கொண்டிருக்கின்றோம்.

2004-இல் சந்திரிக்கா அம்மையாரால் உருவாக்கப்பட்ட அதிபர் செயலக ஆணைக்குழுக்களாளோ 2013-இல் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினாலோ தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் , சிங்கள சார்பு நிலை உள்ளக நீதி நிறுவனங்கள் ஆகியன எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை , பெற்றுக்கொடுக்கப்போவதுமில்லை என்பதுடன் கால தாமதங்கள் ஊடாக உறவுகளை தேடுபவர்களை உடல் உள ரீதியாக பலவீனப்படுத்தி உயிரிழக்கவும் காரணமாக உள்ளன. அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகளானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் வகையில்லல்லாது அரசியல் நலன்களுக்காக எமது பிரச்சனைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன, மாறாக அவர்கள் பாரிய அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகித்து சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

மேலும் உள்ளூர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போன்று குறைகள் நிறைந்த காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு எம்மீது அழுத்தம் வழங்குவதணை நிறுத்தி எமக்கான நீதி விரைவில் கிடைக்கப்பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமும் ஆலோசனையும் வழங்கவேண்டும்.

இவற்றில் ஏற்படும் தாமதங்களால், நாம் நேரடியாக சர்வதேச விசாரணையினைக்கோருக்கின்றோம் ஆயினும் சர்வதேச நிறுவனங்கள் மீதான நம்பிக்கைகளை குறைக்கும் வகையில் அவர்களாலும் காலதாமதம் செய்யப்படுவதோடு நீதி வழங்களில் அவர்களின் பங்களிப்பு மற்றும் இலங்கை சிங்கள அரசாங்கம் மீதான அழுத்தம் போதாதுள்ளதாக கருதுகின்றோம். ஆயினும் மக்கள் மயப்படுத்தப்படலூடாக எமது போராட்டம் வலுப்பெறுவதற்கும் அதனூடாக உறவுகளை மீட்கவும் விரைவாக நீதியை பெறவும் முடியுமென கருதுகின்றோம்.

நீதி வழங்களில் ஏற்படும் தாமதங்கள் மேலும் உறவுகளை தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும். அதன் விளைவுகளும் புறக்கணிப்பும் எமது இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலை உருவாகாதிருக்க சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினுடனான விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு எமக்கான நீதி வழக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என வடக்கு கிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.