Home Blog Page 2722

பிரேசில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 52 சிறைக்கைதிகள் மரணம்

பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள அல்ரமிரா சிறையில் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (29) ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் 16 பேர் தலை துண்டிக்கப்பட்டும், ஏனையவர்கள் அடித்தும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை உணவு பரிமாறும்போது கலவரம் ஆரம்பமாகியிருந்தது. காவல்துறையினர் கலவரத்தை தடுப்பதை தவிர்க்கும் பொருட்டு கலவரத்தில் ஈடுபட்டோர் சில பகுதிகளுக்கு தீ வைத்திருந்தனர்.

கடந்த மே மாதம் சிறையில் இடம்பெற்ற கலவரத்திலும் 55 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பல்வேறு சிறைகளில் ஏற்பட்ட கலவரங்களில் 120 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

பிரேசில் சிறைகளில் போதைப் பொருட்கள் கடத்தும் குற்றவாளிகளே அதிகம் உள்ளனர். 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் 726,712 கைதிகள் சிறைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கு 36 28-07-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 36 28-07-2019

நாமல் ராஜபக்ஸவின் யாழ். விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ இன்று 29.07 யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.  நாமல் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் மதத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். அத்துடன் மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ். ஆயர் இல்லத்திற்குச் சென்று ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்தனர். அத்துடன் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் நல்லூர் ஆதீனத்திற்கு சென்று ஆதீனக் குருமுதல்வர் ஞானதேசிக சோமசுந்தர சிவாச்சாரியார் சுவாமிகளைச் சந்தித்து கலந்துரையாடினர்.

namal நாமல் ராஜபக்ஸவின் யாழ். விஜயம்இதையடுத்து யாழ்.நகரிலுள்ள நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பின்னர் நாகவிகாரை விகாராதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச் சந்திப்புக்களில் பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர் றொசான் உட்பட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் குறிப்பாக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கலந்து கொண்டிருந்தார்.

namal2 நாமல் ராஜபக்ஸவின் யாழ். விஜயம்

ராஜீவ் காந்தியை கொலை செய்யவே தாக்குதல் நடத்தினேன் -32 வருடங்களின் பின்னர் மனம் திறந்த முன்னாள் கடற்படைச்சிப்பாய்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜூவ் காந்தி இலங்கை- இந்திய உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு கொழும்பு வந்தபோது அவரை கொலை செய்யும் நோக்குடனேயே அவரை தாக்கினேன். நிழலைக் கண்டு அவர் தலையை குனிந்ததால் தப்பித்தார். தோள்பட்டையிலேயே அடிபட்டது என 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடற்படை சிப்பாயாக இருந்த ரோஹன விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் பின்னர் இடம்பெற்ற கடற்படை மரியாதை அணிவகுப்பின்போது அப்போது கடற்படை சிப்பாயாக இருந்த ரோஹன விஜேமுனி தனது கையிலிருந்த துப்பாக்கியால் இந்தியப் பிரதமரை தாக்கியிருந்தார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று 32 வருடங்களை அண்மிக்கின்ற நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கும்போதே ரோஹன விஜேமுனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அந்த தாக்குதலின் போது எதையும் சிந்திக்காமல் நான் வெறுமனே அதனை செய்யவில்லை. நான் மேற்கொண்ட தாக்குதலில் ராஜூவ் காந்தி இறந்திருந்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்று அனைவரும் கூறினர்.

அன்றைய காலகட்டத்தில் இந்திய ஜனாதிபதிக்கும் பிரதமர் ராஜூவ் காந்திக்கும் விரிசல் ஏற்பட்டிருந்தது. எனவே இதனால் இலங்கைக்கு எதிராக பாரதூரமான தீர்மானங்கள் எடுக்கப்படமாட்டாது என நான் அறிந்திருந்தேன்.

காரணம் பிரதமரின் மரணத்தின் பின்னர் இலங்கை தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார் என்பதனால் ராஜூவ் எனது தாக்குதலில் மரணித்திருந்தால் அது அரசாங்கத்தின் சதியாக அன்று தனி மனிதம் செய்த கொலையாகவே பார்க்கப்பட்டிருக்கும்.

நான் ராஜூவ் காந்தியை கொலை செய்யும் நோக்கிலேயே தாக்கினேன். நிழலைக் கண்டு அவர் தலையை குனிந்ததால் தப்பித்தார். தோள்பட்டையிலேயே அடிபட்டது.

இந்த தாக்குதலை நடத்த நான் அச்சமடையவில்லை. மரணிப்பதற்கு அச்சம் கொண்டிருந்தால் அதனை நான் செய்திருக்க மாட்டேன். அன்றே என்னை சுட்டுக் கொன்றுவிடுவர் என்றுதான் நினைத்தேன். என்னை சுடவில்லை என்றால் ராஜூவ் காந்தியின் மெய்ப்பாதுகாவலர்கள் தமது துப்பாக்கியை வெளியில் எடுத்தனர்.

rajiv ராஜீவ் காந்தியை கொலை செய்யவே தாக்குதல் நடத்தினேன் -32 வருடங்களின் பின்னர் மனம் திறந்த முன்னாள் கடற்படைச்சிப்பாய்தாக்குதலின் பின்னர் குற்ற விசாரணை திணைக்களத்தில் நான் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட 3 மாத காலங்கள் பற்றிக் கூறினால் நான் கண்ணீர் சிந்தவும் கூடும்.

அந்தளவுக்கு துன்பங்களை அனுபவித்தேன். மூட்டைப்பூச்சி நிறைந்த மேசை மீதே என்னை உறங்கச் செல்வார்கள். சீ.ஐ.டியினுள் இரு பொலிஸ் அத்தியட்சகர்கள் என்னை தாக்கியும் உள்ளனர்.

இதனை நான் முதல் தடவையாக வெளியில் கூறுகின்றேன். எனக்கு இன்று 53 வயதாகிறது. இந்த விடயத்தை வெளியில் கூறுவது தவறு என்று அன்று நான் நினைத்தேன்.

அந்த சந்தர்ப்பத்தில் எனது வழக்கிற்காக முன்னாள் சபாநாயகர் ஸ்டேன்லி திலகரத்ன உட்பட சட்டத்தரணிகள் 15 பேர் தாமாகவே முன்வந்தனர். அந்த வழக்கில் நியாயமின்றி ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் மூவரை அன்றும் நான் விமர்சித்தேன். இன்றும் அவ்வாறுதான். ஏனென்றால் நான் நாட்டுக்கான மரியாதையையே செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சென்று விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப் புக்கு சிறப்பு அதிகாரம்

என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்புக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கி, பார்லிமென்டில் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், இலங்கை யில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, அந்த அமைப்பினர், இலங்கை சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

இதுவரை, வழக்கு பதிவு செய்ய முடியாமல் இருந்தது. இனிமேல் வழக்கு பதிவு செய்து, தேவைப்பட்டால், இலங்கையில் கைது நடவடிக்கையிலும், என்.ஐ.ஏ., ஈடுபடும். இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில், ஏப்ரல், ௨௧ல், ஒன்பது இடங்களில், பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 250பேர் கொல்லப்பட்டனர்; 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அலட்சியம்

இந்த தாக்குதலை நடத்தியதாக, என்.டி.ஜே., என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஜவ்ஹான் ஹாசிம் மற்றும் அவரது கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக, இந்திய உளவு அமைப்புகளுக்கு கிடைத்த தகவல்கள், இலங்கை அரசுக்கு, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன. எனினும், அலட்சியமாக இருந்ததால், இலங்கையில் அப்பாவிகள் பலர் படுகொலை ஆகினர். இந்நிலையில், என்.ஐ.ஏ., அமைப்பிற்கு, அதிக அதிகாரங்கள் வழங்கி, பார்லிமென்டில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, ெவளிநாடுகளுக்கும் சென்று, இந்தியர்கள் தொடர்புடைய குற்றங்கள், இந்தியா மீது நடத்தப்பட உள்ள தாக்குதல்கள், அதற்கான சதி, இன்னும் பிற குற்றங்களை விசாரிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

 அதிகாரம்

இதுவரை, வெளிநாடுகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்த, என்.ஐ.ஏ.,வுக்கு, சட்ட திருத்தங்கள் மூலம், ெவளிநாடுகளில் பதுங்கி இருப்போரையும் கைது செய்யும் அதிகாரம் கிடைத்துள்ளது. அதனால், இலங்கை வெடிகுண்டு தாக்குதல், அதனுடன் தொடர்புடைய இந்தியர்களின் பங்கு, தாக்குதலை நடத்தியவர்களின் இந்திய சுற்றுப்பயணம், யார் யாரை அவர்கள் சந்தித்தனர் என்பன போன்ற விபரங்களை, என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரிக்க உள்ளது.

ஏப்ரலில் இலங்கையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததும், மே மாதம், என்.ஐ.ஏ., அதிகாரிகள், இலங்கை சென்று, விசாரணை நடத்தி, இந்தியர்கள் பங்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்தனர். அப்போது கிடைத்த சில தகவலின்படி, டில்லி, தமிழகம், கேரளா, பெங்களூரு போன்ற இடங்களில் பதுங்கியிருந்த, பயங்கரவாத குழுக்களின் ஆதரவாளர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த, ரியாஸ் (29) என்பவர் கைது செய்யப் பட்டுள்ளார். ஜம்மு – காஷ்மீரிலும், ஆதரவாளர்கள் சிலர் இருப்பதாக கூறப்படும் தகவலை, அந்த மாநில அரசு மறுத்து உள்ளது. இலங்கையின், என்.டி.ஜே., பயங்கரவாத அமைப்பின் தலைவர், ஜவ்ஹான் ஹாசிம், இந்தியா வந்து சென்றதும், அப்போது அவருடன் தொடர்பில் இருந்தோர் குறித்தும், என்.ஐ.ஏ., இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது.

பங்கு என்ன?

சமூக வலைதளங்களில் அவருடன் தொடர்பில் இருந்த சிலரை, ஏற்கனவே கைது செய்துள்ள, என்.ஐ.ஏ., விரைவில் இலங்கை சென்று, விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது. அப்போது, இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தியாவில் இருக்கும் பயங்கரவாத குழுக்களின் ஆதரவாளர்களின் பங்கு என்ன என்பது, விரிவாக தெரிய வரும்.

 

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமை கிடையாது – மகிந்த

இலங்கை அரசியல் மற்றும் உள்விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு எந்த உரிமையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ளதனது வீட்டில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் ஒழுக்கத்தை பாதுகாக்க முடிந்த தலைவர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். தேர்தலில் நாம்வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் நாடும், இனமும் அழிந்துபோகும். கடந்த தேர்தலில் என்னை தோற்கடிக்க வெளிநாடுகள் பணியாற்றின.இம் முறை வெளிநாடுகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடும்.

கடந்த தேர்தலை விட வெளி நாடுகளின் தலையீடு குறைவாக இருக்கும் எனநினைக்கின்றேன். எமது நாட்டின் அரசியல்மற்றும் உள் விவகாரங்களில் தலையிட சர்வதேசத்துக்கு உரிமையில்லை. இப்படியான தலையீடுகளை மேற்கொள்ளவேண்டாம் என அந்நாடுகளிடம் கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்கள் தாம்விரும்பியவரை தெரிவு செய்ய இடமளிக்கப்பட வேண்டும். எந்த நாடும் எமக்கு ஒன்றுதான். நாங்கள் அனைத்துநாடுகளிடம் நட்புறவாக செயற்பட்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.

அரச தலைவர் தேர்தலில் சிங்களத் தலைவர்களை தமிழர்கள் ஆதரிக்கக்கூடாது – சிவாஜி

சிறீலங்காவில் நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் தென்னிலங்கை சிங்களத் தலைவர்களை ஆதரிக்கக்கூடாது என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் தமிழ் மக்கள் விவாதித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளது. கூட்டமைப்பும் அதனையே தமிழ் மக்களுக்கு செய்துள்ளது.

சிங்களத் தலைவர்களை நம்பும் நிலையில் தற்போது தமிழ் மக்கள் இல்லை. கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த மைத்திரி-ரணில் அரசு முன்னைய அரசு தமிழ் மக்களுக்கு செய்ததையே செய்துள்ளது.

அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கிவரும் நிலையிலும், அரசியல் கைதிகள் சிறைகளில் உள்ளனர், நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது, அரசியல் தீர்வு முடக்கப்பட்டுள்ளது, நீதி விசாரணைகள் இடம்பெறவில்லை.

சிறீலங்கா அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வருடத்திற்குள் தீர்வு என கடந்த நான்கு வருடங்களாக கூறி வருகின்றது. ஆனால் எதுவும் நடைபெறவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து மைத்திரிக்கு வந்த கடிதம்

மிலேனியம் நிதிய உடன்பாட்டிற்கு அனுமதி வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார்.

இந்த உடன்பாட்டின் சில பிரிவுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மற்றும் வருத்தங்களைத் தொடர்ந்து, சிறிலங்கா அதிபர் இந்த உடன்பாட்டிற்கு அனுமதியளிக்க மறுத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் தெளிவான விளக்கம் அளித்திருந்தார். இந்த உடன்படிக்கை வெளிப்படையானது என்றும், இது சிறிலங்கா மக்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதென்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் அனுபவத்தைக் கொண்ட சிறிலங்கா அதிபர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்ககாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு பற்றி அறிந்திருப்பார் என்பதையும் அவர் அக் கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த உடன்படிக்கை மூலம் கிடைக்கும் 480 மில்லியன் டொலர், அமெரிக்க மக்களிடமிருந்து சிறிலங்காவிற்கு வழங்கப்படும் ஓர் அன்பளிப்பேயாகும். இது கடன் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இக்கடிதத்தில் மிலேனியம் சவால் நிதியம் பற்றி தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் கூட்டணியின் அறிவிப்பு

சிறிலங்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் மிகவும் முக்கியமாக இருப்பதால்,  தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்பிற்கே எமது ஆதரவு வழங்கப்படும் என்றும், இந்த உறுதிமொழி இந்தியாவின் மத்தியஸ்தத்துடனேயே நடைபெற வேண்டும் என்றும் தமிழ் மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளரின் சந்திப்பின் போதே அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள அனைத்து தமிழ் மக்களின் வாக்குகளையும் இணைத்து  எமக்கு வேண்டியவற்றை சாதித்துக் கொள்ளலாம்.  என்றும் தெரிவித்தார்.

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஜேர்மனியில் கைது.

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் பற்றி சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு குழப்பமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

2005ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அறுவர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சாள்ஸ் மாஸ்டர், மணிமேகலை, முத்தையா சகாதேவன், இசிதோர் ஆரோக்கியநாதன் ஆகியோரே இந்த அறுவருமாவார்.

இதில் இசிதோர் ஆரோக்கியநாதன் விடுவிக்கப்பட்டிருந்தார். சகாதேவன் கடந்த மாதம் சிறையில் உயிரிழந்து விட்டார். ஏனைய நான்கு சந்தேக நபர்களும் இறந்து விட்டதால், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக மேல்நீதிமன்றம் கூறியிருந்தது.

இவர்கள் தவிர்ந்த (பட்டியலில் இல்லாத) ஒருவரே ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவராவார். இவர் நவநீதன் என அழைக்கப்படும் 40 வயதுடைய நபர் என அறிய முடிகின்றது. எனினும் இவரின் சொந்தப் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவர் சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைக்கு உதவி செய்தவர்  என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பில் 2000 தொடக்கம் 2009 வரை உறுப்பினராக இருந்தார் என்றும், இறுதிப் போரின் போது  விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெளியேறிச் செல்ல உதவினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த நபரின் வழக்கை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த வழக்கிற்கு தேவையான சான்றுகள், ஆதாரங்களை இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக வழங்கியுள்ளோம் என்றும் கூறினார்.