பிரேசில் சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 52 சிறைக்கைதிகள் மரணம்

பிரேசில் நாட்டின் வடபகுதியில் உள்ள அல்ரமிரா சிறையில் திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று (29) ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களில் 16 பேர் தலை துண்டிக்கப்பட்டும், ஏனையவர்கள் அடித்தும் கொல்லப்பட்டுள்ளனர் எனவும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலை உணவு பரிமாறும்போது கலவரம் ஆரம்பமாகியிருந்தது. காவல்துறையினர் கலவரத்தை தடுப்பதை தவிர்க்கும் பொருட்டு கலவரத்தில் ஈடுபட்டோர் சில பகுதிகளுக்கு தீ வைத்திருந்தனர்.

கடந்த மே மாதம் சிறையில் இடம்பெற்ற கலவரத்திலும் 55 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பல்வேறு சிறைகளில் ஏற்பட்ட கலவரங்களில் 120 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

பிரேசில் சிறைகளில் போதைப் பொருட்கள் கடத்தும் குற்றவாளிகளே அதிகம் உள்ளனர். 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் 726,712 கைதிகள் சிறைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.