முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க போராளி ஜேர்மனியில் கைது.

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் பற்றி சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு குழப்பமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.

2005ஆம் ஆண்டு லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அறுவர் மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சாள்ஸ் மாஸ்டர், மணிமேகலை, முத்தையா சகாதேவன், இசிதோர் ஆரோக்கியநாதன் ஆகியோரே இந்த அறுவருமாவார்.

இதில் இசிதோர் ஆரோக்கியநாதன் விடுவிக்கப்பட்டிருந்தார். சகாதேவன் கடந்த மாதம் சிறையில் உயிரிழந்து விட்டார். ஏனைய நான்கு சந்தேக நபர்களும் இறந்து விட்டதால், இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக மேல்நீதிமன்றம் கூறியிருந்தது.

இவர்கள் தவிர்ந்த (பட்டியலில் இல்லாத) ஒருவரே ஜேர்மனியில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவராவார். இவர் நவநீதன் என அழைக்கப்படும் 40 வயதுடைய நபர் என அறிய முடிகின்றது. எனினும் இவரின் சொந்தப் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

இவர் சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலைக்கு உதவி செய்தவர்  என்றும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பில் 2000 தொடக்கம் 2009 வரை உறுப்பினராக இருந்தார் என்றும், இறுதிப் போரின் போது  விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெளியேறிச் செல்ல உதவினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த நபரின் வழக்கை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்த வழக்கிற்கு தேவையான சான்றுகள், ஆதாரங்களை இராஜதந்திர வழிமுறைகள் ஊடாக வழங்கியுள்ளோம் என்றும் கூறினார்.