Home Blog

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023

Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் ஆசிரியர் தலையங்கம்
  • மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் ரகசியத் திட்டம்!அகிலன்
  • மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
  • போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
  • ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
  • இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
  • இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
  • மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…

கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும்  லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.

ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

Kilinoch 2 கிளிநொச்சியில் சுற்றுலா வலயம்: சிங்கள மயமாக்கலை நிலைநாட்ட புதிய திட்டம்…இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி  பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19)  பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும்  இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி  மேலும் விடயங்களை  அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.

கேள்வி –  “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த  உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?

பதில் –  நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.

இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.Logo Klein தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?

பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில்,  மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள  அட்டை இதற்கொரு உதாரணமாகும்.

கேள்வி: இந்த நூலை இன்றைய  சூழ்நிலையில்  வெளியிடுவதில்  உள்ள முக்கியத்துவம் என்ன? 

பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின்  அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.

இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.

சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ  இலங்கை அரசினூடாகவோ  செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.

கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?

பதில் –  நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை  நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன்  தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.a 1 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில்  முக்கியமானது?

பதில் –   2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள்  உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.

உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று  நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை  அரசு,  தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும்  முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.

கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு  கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?

பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை  விளங்கிக் கொள்ளும் போது  தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.a 2 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட  நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?

பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.

கேள்விஇந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள்  எவ்வாறு உள்ளன?

பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை  நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை  எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல்  பற்றிய தமது  நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.WhatsApp Image 2019 05 16 at 20.11.20 தமிழீழ நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும் -அக்கினிப் பறவைகள் அமைப்பு

கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்? 

பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத்  தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.

சுவீடனுக்கு பயணமானார் அநுர குமார திசாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று வியாழக்கிழமை இரவு சுவீடனுக்கு பயணமானார்.

சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

ஏப்ரல் 27 சனிக்கிழமை சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தள விமான நிலையத்தை இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்க முடிவு

மத்தள சர்வதேச விமானத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது

அதன்படி மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை 30 வருட காலத்திற்கு இந்தியாவின் ஷௌரியா ஏரோநாட்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Shaurya Aeronautics pvt ltd) மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் (airports of Regions Management company)ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 1,512 குடும்பங்கள் இன்னும் அகதி வாழ்க்கை

போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1512 குடும்பங்கள் அகதி நிலையிலேயே வாழ்கின்றனர் என்று யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடமின்றி, 1,512 குடும்பங்களைச் சேர்ந்த 4,567 பேர் இருக்கின்றனர். இவர்களில் 10 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் 1,502 குடும்பங்கள் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. இவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள்என்றும் அவர் கூறியுள்ளார்.

பொய் சொன்ன மைத்திரியை உடன் கைது செய்ய வேண்டும் – வலியுறுத்துகிறாா் கம்மன்பில

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நான் அறிவேன் என்று பொய் கூறி தேசிய பாதுகாப்பையும், நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கி, இல்லாத பிரச்சினையை தோற்றுவிக்கும் மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் பேசுகையில், “பாதிக்கப்பட்டவர்களை அடையாளப்படுத்தி அரசியல் இலாபம் தேட ஒரு தரப்பினர் முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விவாதத்தில் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் பெயர், பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தகவல்கள் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டின் புலனாய்வு பிரிவு பலவீனப்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக இராணுவத்தையும்,புலனாய்வு பிரிவையும் காட்டிக்கொடுத்தது. இதனை பயங்கரவாதி சஹ்ரான் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் .

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பற்றி பேசாமல் இருப்பது இந்த விவாதத்தில் பிரதான குறைப்பாடாக இருக்கும். உண்மையான சூத்திரதாரியை தான் அறிவேன் என இவர் குறிப்பிட்டார். இவரை கைது செய்யுமாறு வலியுறுத்தினோம். ஆனால் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி அறிந்தும் அதனை மறைப்பது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 7 வருட கால கடூழிய சிறைத் தண்டனைக்குரிய குற்றம். குண்டுத் தாக்குலை யார் நடத்தியது என்பதை தான் அறிவேன் எனக்குறிப்பிட்டுக் கொண்டு மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் கூறிய விடயங்கள் முற்றிலும் பொய்யானது.இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சி.ஐ.டி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அவற்றை ஆராய்ந்த நீதவான் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு அதனை பாதுகாத்துள்ளார்.

தேசிய பாதுகாப்பையும், நாட்டு மக்களையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் கருத்துக்களை குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் மைத்திரி பால சிறிசேன உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

தமிழா்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மயமாகிறது – ரவிகரன் குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்கள மக்கள் குடியமர்த்தபடுகிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முல்லைத்தீவில் தமிழர்களுடைய பூர்வீக நிலங்களை ஆட்சியாளர்கள் அபகரித்து கொண்டிருக்கிறார்கள் அதாவது முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் கூடுதலான நிலப்பரப்பினை ஒவ்வொரு திணைக்களங்களின் ஊடாகவும் அபகரித்து அவற்றில் சிங்கள மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிலையே காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கரில் 74.24 வீதமான காணிகள் வன இலாகாவினுடைய பொறுப்பில் இருக்கின்றது. விடுதலைப் புலிகளின் காலத்தில் இந்த
பகுதிகளுக்கெல்லாம் வர பயந்து கொண்டிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் அடர்ந்த காடுகள் என்று கூறக்கூடிய அளவில் 36.72 வீதமான காணிகளும் அதாவது 2 இலட்சத்தி இருபத்தி இரண்டாயிரத்தி ஆறு ஏக்கர் காணிகள்தான் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தது.

மக்களுடைய பாவனையில் இருந்த காணிகள் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்பு ஒவ்வொரு திணைக்களங்களாக ஆட்சியாளர்கள் மக்களுடைய பெரும்பாலான விவசாய காணிகளை அபகரித்து வைத்துள்ளார்கள். அபகரிக்கப்பட்ட காணிகளில் சில இடங்களில் சிங்கள குடியேற்றங்கள், அதாவது வெலிஓயா என்று சொல்லக்கூடிய 28,500 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிங்கள குடியேற்றத்தை ஏற்றி தனி ஒரு சிங்கள பிரதேச செயலக பிரிவாக உருவாக்கி இன்று எங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மக்கள் தொகையை மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் விதமாக அவர்களுடைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.

இது தவிர 2009 ஆம் ஆண்டுக்கு பின் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு ஒரு இலட்சத்து 67 ஆயிரத்து 484 ஏக்கர் காணிகளை (30.37 வீதம்) அபகரித்து வன இலாகா வைத்திருக்கின்றது. இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில்
42631 ஏக்கர் காணி அதாவது 7.15 வீதமான காணிகள் அபகரித்து வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 இலட்சத்தி பத்தாயிரம் ஏக்கர் காணிகள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு வன இலாகாவினால் மட்டும் அபகரிக்கப்பட்டு எல்லைக்கல்லினை நாட்டி தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து வைத்திருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதற்கு முழுமுதல் காரணம் வனஜீவராசிகள் , வன இலாகா, தொல்லியல் திணைக்களங்கள் அதனைவிட மகாவலி எல் வலயம் இவ்வாறாக மக்களுடைய காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றார்கள். நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் காதர் மஸ்தானின் அறிக்கை ஒன்றில், ஏற்கனவே உள்ள இரண்டு ஜனாதிபதி அவர்களும் பிழைதான் விட்டிருக்கின்றார்கள் என்ற கருத்தையும் ஏற்றுகொண்டு அதாவது, இந்த காணிகள் பறிக்கப்பட்டதில் பிழை நடந்திருக்கின்றது என்ற கருத்தை கூறிக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடாக காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை பார்ப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு இலட்சத்தி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகங்களிலுமாக தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். நிலங்களை அபகரித்து வைத்துக் கொண்டு சிங்கள மக்களை குடியேற்றுவதும், தங்களுடைய திணைக்களங்களூடாக அபகரித்து வைத்து கொண்டிருப்பதும் தான், அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டும்.

இதே ஒரு நிலைமையில் ஆறுகள் உள்ள நீர்பரப்புகளாக சுண்டிக்குளம், நாயாறு, நந்திக்கடல் ஆகியன கிட்டத்தட்ட 69401 ஒரு ஏக்கர் நிலம் நீர்நிலைகளோடு சேர்ந்த நிலங்களாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய புள்ளிவிவரத்தின் ஊடாக நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. 29401 ஏக்கர் நிலம் வனஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய வழக்கு தவணையிடப்பட்டு எதிர்வரும் வைகாசி மாதம் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அறுநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் மக்களுடைய நிலங்களை இரணைப்பாலை, செம்மண்குன்று, அம்பலவன் பொக்கணை, மாத்தளன், வலயர்மடம், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் உள்ள விவசாயிகளுடைய காணிகள் தான் இவை. இந்த காணிகளை கூட வனஜீவராசிகள் திணைக்களம் தங்களுடைய பறவைகள் சரணாலயம் என்ற பகுதிக்குள் இணைத்து அவர்களுடைய காணிகளையும் பறித்து வைத்திருக்கிறார்கள்.

தமிழ் மக்களை ஒடுக்கும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறாக முழு ஏக்கர் காணிகளையும் அபகரித்து கொண்டு சென்றால் மக்கள் எங்கே போவது? எனவும் கேள்வி எழுப்பினார்.

கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினாா்களா? அநுரகுமார திஸாநாயக்க கேள்வி

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன எனக் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின்  (ஜே .வி.பி.) தலைவரும், எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தாக்குதல்தாரிகளும் தாக்குதலை தடுக்கத் தவறியதாக கூறப்படும் தரப்பினரும் கூட்டாக இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தினரா என்ற சந்தேகங்கள் உள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது –

“கடந்த 5 வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்திற்கு இடமான விடயங்கள் பல நடந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது.தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 9 நாட்கள் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் செனல் 04 ஆவணப்படம் வெளியாகியுள்ளது, பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளார். பிரதான சூத்திரதாரியை நாங்கள் அறிவோம் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக்ஷர்களின் அரசியல் செயற்பாடுகள் முஸ்லிம் அடிப்படைவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், சிங்கள இனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை மையப்படுத்தியிருந்தது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இதன் உச்சகட்டமாகவே இருந்தது. இந்த தாக்குதலை தடுக்க முடியுமாக இருந்த போதும் அதனை தடுக்கத் தவறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்நிலையில் தாக்குதலை நடத்தியவர்களும், அதனை தடுக்கத் தவறியவர்களும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனரா? என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றன.

நாட்டை அராஜகத்திற்குள் அரசியல் நோக்கத்திற்காக தாக்குதலை நடத்த முடியுமாக இருந்தால் இந்த நாடு எப்போதும் பாதுகாப்பற்றதே. சந்தேகங்களுக்கு காரணங்கள் உள்ளன. வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சஹ்ரான் தரப்பினரால் கொல்லப்பட்ட போது அதன் விசாரணைகள் ஏன் வேறு பக்கத்திற்கு திருப்பப்பட்டன? இதில் அரச பொறிமுறை இருந்துள்ளதா? தாஜ் ஹோட்டலில் ஜெமில் என்பவர் குண்டுத் தாக்குதலை நடத்தவிருந்த நிலையில் அவர் அங்கு குண்டை வெடிக்க வைக்காது தெஹிவளையில் குண்டை வெடிக்கவைக்க முன்னர் அவரின் வீட்டுக்கு புலனாய்வு அதிகாரிகள் சென்றனரா? மாத்தளையில் கைதான சின்ன சஹ்ரானிடம் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பை பொறுப்பேற்குமாறு புலனாய்வு அதிகாரி எவரேனும் அழுத்தம் கொடுத்தனரா? சாரா ஜஸ்மின் இறந்துவிட்டாரா? அவர் உயிருடன் இருப்பதாக சிலர் கூறும் நிலையில் அரச பொறிமுறையில் அந்த விடயம் இல்லாமல் செய்யப்பட்டதா? என்ற சந்தேகங்கள் உள்ளன.

தாக்குதல் நடத்தியவர்கள் வேறு குழுவாகவும், தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் வேறு குழுவாக இருந்தாலும் தாக்குதல்தாரிகளும், தடுக்க தவறிய குழுவினரும் ஒன்றாக இதனை செய்திருந்தால் இது ஆபத்தானதே. ஒவ்வொருவரின் இருப்புக்காகவும் ஒவ்வொருவரின் முதுகில் அதிகாரிகள் ஏறி பயணிக்கின்றனர். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும் செயற்பாடுகள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டன. நீர்கொழும்பு, புத்தளம், மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பேராயர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அவர் மாத்திரம் தலையிடாமல் இருந்திருந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடியிருக்கும்.

சந்தேகத்திற்கு இடமான குழுவினரிடமே தமது அரசியல் அதிகாரம் தங்கியிருக்கின்றது என்றால் நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. இதனால் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இதற்கு மக்கள் ஆணையுடன் கூடிய புதிய ஆட்சியை அமைக்க வேண்டும். அந்த புதிய அரசாங்கத்தில் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது தொடர்பான விசாரணைகளை வெளிப்படையாக நடத்த
வேண்டும்” என்றார்.

ஒருவிரல் புரட்சி – துரைசாமி நடராஜா

புரட்சி ஒருவிரல் புரட்சி - துரைசாமி நடராஜாஇலங்கையின் பாராளுமன்ற தேர்தல் முறையில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசி யலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய தேர்தல் முறை முன்வைக்கப்படுமிடத்து அது மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிரதி நிதித்துவத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையில் அமைய வேண்டுமென புத்திஜீவிகளும் சிவில் அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.

தேர்தல் என்பது ஒரு நாட்டில் மக்கள் பொதுவாழ்வில் பதவிகளை நிர்வகிப் பதற்காக ஒரு ‘தனிநபரை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை’ என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். தேர்தல்கள் என்பது 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி தற்கால பிரதிநிதித்துவ குடியாட்சி வரை வழக்கமான ஒரு செயற்பாடாக இருந்து வருகின்றன. ஜனநாயகம் உலகில் முக்கியத்துவம் மிக்க ஆட்சிமுறையின் கருதப்படுகின்றது.’

“மக்களுடைய மக்களுக்கான அரசாங்கமே ஜனநாயகம்” என்கிறார் அறிஞர் தோமஸ் கூப்பர். இதேவேளை ‘மக்களுக்காக ஆக்கப்பட்ட, மக்களினால் ஆக்கப்பட்ட, மக்களுக்கு பதில் சொல்லக்கூடிய, மக்கள் அரசு’ என்று ஜனநாயகத்தை வெப்ஸ்டர் வரைவிலக்கணம் செய்கின்றார். அறிஞர்களான தியாடோ பார்க்கர், லிங்கன் உள்ளிட்ட பலரும் ஜனநாயகம் குறித்த தமது வரைவிலக்கணங்களை முன் வைத்துள்ளனர். இந்த வகையில் ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பிடம் பெறுவதற்கு தேர்தல்கள் உந்துசக்தியாக விளங்குகின்றன.

மனித சமுதாயம் கடந்துவந்த அரசியல் அமைப்புக்களில் ஆகச்சிறந்தது ஜனநாயகமாகும்.உலகின் பல நாடுகளும், உலக மக்களும் ஜனநாயக ஆட்சியையே விரும்புகின்றனர். இந்த ஜனநாயக நாடுகளின் தலையெழுத்தை தீர்மானிப்பது தேர்தலாகும். ஒரு நாட்டில் ஜனநாயகம் சிறப்பாக செயற்பட வேண்டு மெனில் அதில் தேர்தல்களுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. ஒரு ஜனநாயக சமூகம் என்பது தேர்தல் மூலமே வரையறுக்கப்படுவது என்ற ஆழமான ஒரு நம்பிக்கை நிலவுகின்றது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகின்றது.

தேர்தலின் மூலமாக தாம் விரும்பிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அல்லது அவர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகின்றது. ஒரு நாட் டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குப் பின்னர் ஆட்சியாளர்களும், அரசாங்கமும் மாற்றியமைக் கப்படுவது ஜனநாயக வழக்கமாகும். இதற் காகவே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனநாயகத்தை நிலைநாட்ட தேர்தல்கள் மிகமிக அவசியமாகும். தேர்தல்கள் மூலம் சர்வாதிகாரம், குடும்ப ஆட்சி, ஊழல் நிறைந்த ஆட்சி என்பவற்றுக்கு முற்றுப்புள்ளிவைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நிலைமை ஏற்படலாம். இந்த வகையில் ‘ஒரு விரல் புரட்சி’ நாட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவும் அடிப்படையாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

அற்ப சலுகைகள் வேண்டாம்

சிவில் உரிமைகள், அரசியல் உரிமைகள், பொருளாதார உரிமைகள் என்று உரிமைகளை வகைப்படுத்துவார்கள். இவற்றுள் வாக்களிக்கும் உரிமை, தேர்தல்களில் போட்டியிடும் உரிமை, பதவியேற்கும் உரிமை, மனுச்செய்யும் உரிமை என்பன அரசியல் உரிமையின் பாற்படும்.இத்தகைய அரசியல் உரிமைகளுள் வாக்களிக்கும் உரிமை என்பது மிகவும் இன்றியமையாததாகும். இவ்வாக்குரிமையை வாக்காளர்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரமாக வும், சுயாதீனமாகவும் வாக்காளர்கள் வாக்க ளிக்க வேண்டும். அற்ப சலுகைகளுக்காக வாக்குரிமையை யாரும் விட்டுக் கொடுக்கக் கூடாது. ஒரு நாட்டின் தலைவிதியை தீர்மானிக் கும் தேர்தல்கள் நம்பகத்தன்மையுடன் இடம் பெறுதல் வேண்டும். இதுவே பலரினதும் எதிர் பார்ப்பாகும்.

மக்கள் தமது பிரதிநிதிகளை அல்லது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறை அல்லது தேர்தல் முறையே பிரதிநி தித்துவ முறை எனப்படுகின்றது. கோட்பாட்டு அடிப்படையில் இன்றுவரை மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளாக மூன்று வகையான பிரதிநிதித்துவ முறைகள் காணப்படுவதாக புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர். இனவாரிப் பிரதிநித்துவ முறை அல்லது சமூகவாரி பிரதிநித்துவ முறை, பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அல்லது தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறை, விகிதாசார பிரதிநிதித்துவ முறை என்பன அவை மூன்றுமாகும்.

இனரீதியில் அல்லது சமூக ரீதியில் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வழிமுறை இனவாரிப் பிரதிநிதித்துவ முறையாகும். இலங்கையில் பாராளுமன்ற ஆட்சிமுறை அறிமுகம் செய்யப்பட்ட காலப் பகுதியில் அதாவது 1833 ம் ஆண்டு கோல்புறூக் யாப்பின் கீழ் பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் வழிமுறைகளாக இனவாரி பிரதிநிதித்துவ முறையே பின்பற்றப்பட்டமை தெரிந்ததேயாகும். 1928 ம் ஆண்டில் தமது விதந்துரைகளை முன்வைத்த டொனமூர் ஆணைக் குழுவினர் இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழிக்குமாறு குறிப்பிட்டிருந்தனர். மேலும் ‘இனவாரிப் பிரதிநிதித்துவம் இனவேறுபாடுகளை குறைப்பதற்கு பதிலாக அவற்றை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, எப்போதும் தீவிரமானதாக விளங்கும் சாதி வேறுபாடுகளைப் பொறுத்து, அதன் உணர்ச்சிவசப்பட வைக்கும் வேண்டு கோள்கள் கடந்த காலங்களில் மிகவும் சிறிதளவுதான் குறைந்துள்ளது’ என்றும் தெரிவித் திருந்தனர்.

விகிதாசார தேர்தல் முறை

இலங்கையில் 1931 ம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1978 ம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்புவரை நடைமுறையில் இருந்தது. இன ஒற்றுமையைத் தூண்டி தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துதல், நிர்வாக ஓட்டத்தை துரிதப்படுத்தி தேசிய அபிவிருத்தியை துரிதப்படுத்துதல், பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டிய தேர்தல் தொகுதிகள் சிறியதாக இருப்பதால் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றக்கூடிய நிலை ஏற்படல், பிரதிநிதித்துவத்தில் வெற்றிடம் ஏற்படுகையில் இடைத்தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் இதனால் ஜனநாயகம் சிறப்படையும் என்று பிரதேசவாரி பிரதிநிதித்துவ முறைக்கு சார்பாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

எனினும் பெரும்பான்மை வாக்காளர் விரும்பாத ஒருவரை உறுப்பினராக தெரிவு செய்யக்கூடிய நிலை பிரதேசவாரி பிரதி நிதித்துவத்தில் காணப்பட்டதோடு நாடு தழுவிய ரீதியில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்திற்கும், பாராளுமன்றத்தில் அவை பெறும் ஆசனங்களுக்கும் இடையில் முரண்பாட்டுத்தன்மை காணப்பட்டது. இத்தகைய பல குறைபாடுகளும் 1977 இல் 5/6 பெரும் பான்மையுடன் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உள்நோக்கங்களுமே விகிதாசார தேர்தல் முறை 1978 ம் ஆண்டு யாப்பின் ஊடாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாக அரசியற்றுறை விரிவுரையாளர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

விகிதாசார தேர்தல் முறை எனப்படுவது, ‘ஒரு தேர்தல் மாவட்டத்தில் அல்லது பல்லங்கத்துவ தேர்தல் தொகுதியில் ஒரு கட்சியோ அல்லது குழுவோ பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கேற்ப ஆசனங்களை பகிர்ந்தளிக்கின்ற கணிதரீதியான ஒரு தேர்தல் முறையாகும்.’ தேர்தல் தொகுதியொன்றில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், குழுவும் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாக் கிற்கேற்ப அவற்றிற்குரிய ஆசனங்களை அல்லது பிரதிநிதித்துவத்தினைப் பங்கிட்டு வழங்கும் தேர்தல் முறையே விகிதாசார தேர்தல் முறை என்றும் கூறப்படுகின்றது. இங்கிலாந்தின் தோமஸ் குரே என்பவரால் விகிதாசார பிரதிநிதித்துவ முறை முதலில் அறிமுகம் செய்யப் பட்டது.

பெரும்பான்மை வாக்காளர்கள் விரும்பு கின்ற கட்சியைச் சேர்ந்தவரே, உறுப்பினராக வரக்கூடிய நிலையும் கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப உறுப்பினர்களை தெரிவு செய்யக்கூடிய நிலையும் காணப்படுவதால் கூடுதலான ஜனநாயகத்தன்மை மிக்க தேர்தல் முறையாக விகிதாசார தேர்தல் முறைமை காணப்படுகின்றது. நாட்டின் சகல விதமான அரசியல் அபிப்பிராயங்களும் ஆட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் பெறுவதை இயலச் செய்வதாக அமைந்திருத்தல். பலமான எதிர்க்கட்சி ஒன்றினை உருவாக்குதல் போன்ற பல விடயங்கள் விகிதாசார தேர்தல் முறைக்கு சார்பாக முன்வைக்கப்படுகின்றன. மேலும் இத்தேர்தல் முறை நாட்டின் அபிவிருத்திக்கும், ஐக்கியத்துக்கும் வலுசேர்க்கும் என்றெல் லாம் தெரிவிக்கப்பட்டபோதும் எதிர்பார்ப்புக்கள் பலவற்றையும் சிதைத்த ஒரு தேர்தல் முறை யாகவே இத்தேர்தல்முறை விளங்குகின்றது.

புதிய தேர்தல் முறை

வாக்காளர்களால் இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத தேர்தல் முறை. கணித ரீதியில் அமைந்த தேர்தல் முறை. தேர்தல் செலவுகள் அதிகம். பிரதிநிதிகளின் கண்காணிப்பு எல்லை அதிகம். பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் இடையில் குறைந்த தொடர்பு. பல்லங்கத்துவ தேர்தல் தொகுதி முறை பின்பற்றப்படுவதால் தமது உண்மையான பிரதிநிதி யாரென மக்கள் அடையாளம் காண இயலாத நிலை தோன்றும் என்றெல்லாம் இத்தேர்தல் முறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.மொத்தத்தில் அபிவிருத்திக்கு பதிலாக வீழ்ச்சிக் கும், ஐக்கியத்துக்கு பதிலாக விரிசலுக் கும் விகிதாசார தேர்தல் முறை வித்திட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு புதிய தேர்தல் முறையை முன்வைக்கும் முன்னெடுப்புக்கள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருகின் றன. எனினும் இது சாத்தியப்படாத நிலை யில் இப்போது பாராளுமன்ற தேர்தல் முறை
மையில் திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் மீண்டும் களமிறங் கியுள்ளது. இத்தேர்தல் முறைமையின் அடிப்படையில் 225 உறுப்பினர்களில் 160 பேர் நேரடியாக வாக்காளர்கள் மூலமாக தெரிவு செய்யப் படுவார்கள் என்றும் மீதமுள்ள 65 பேர் விகிதாசார அடிப்படையில் தேசிய அல்லது மாகாண அல்லது மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் ஆலோசனையை தொடர்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் தலைமையில் அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்து செயற்படுதல்

இதேவேளை விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநி தித்துவ அதிகரிப்பிற்கு வலு சேர்த்தது. பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்களில் மலையக பிரதிநிதிகள் ஆதிக் கம் செலுத்தினர். இதனூடாக பல்வேறு அபிவிருத்திகள் இம்மக்களை வந்தடையும் வாய்ப்பும் உருவானது. மலையக மக்களை பொறுத்தவரையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு தொழில்வாய்ப்பு, பாடசாலை வளமேம்பாடு போன்ற பல அபிவிருத்திகளும் இதில் உள்ளடங்கும்.

பிரதேசவாரி பிரதி நிதித்துவம் பெரிதும் பாதிப்புகளுக்கே வித்திட்டது. இந்நிலையில் இம்மக்களின் பிரதி நிதித்துவத்தை மழுங்கடித்து அவர்களின் அபிவிருத்திகளை பாழ்படுத்த புதிய தேர்தல் முறை காரணமாக இருந்துவிடக்கூடாது. இந்நிலையில் மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் எழுச்சிக்காக புதிய தேர்தல் முறையை சாதகமாக்கிக் கொள்ள புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து செயற்படுதல் வேண்டும் என்பதே உண்மையாகும்.

பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் – சாணக்கியன்

பிள்ளையான் எம்.பியை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில் தெரிவித்ததாவது –

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019ஆம் ஆண்டில் நடந்திருந்தாலும் அதனுடன் தொடர்புடைய குழுக்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் செயற்பட்டு வந்துள்ளனர். இது தொடர்பில் அடிக்கடி கூறியிருந்தாலும் இதன் பாரதூரதன்மை தொடர்பில் புரிந்துகொள்ளாது இருக்கின்றனர். எவ்வாறாயினும் தற்போது 2014ஆம் ஆண்டில் நடந்த சம்பவமொன்று தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் புலனாய்வுப் பிரிவினால் மூன்று இனங்களையும் உள்ளடக்கிய புலனாய்வுக் குழு ரம்பிக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டில் இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாயிஸ், ஆமி மொஹிதின், கலீல் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

கலீல் என்பவர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சிறைக்கு சென்று விடுதலையானவர். 2009 ஆம் ஆண்டில் திருகோணமலையில் 6 வயது வர்ஷா என்ற சிறுமியின் பெற்றோரிடம் கப்பம் கோரி கடத்திச் செல்லப்பட்டு கொலை செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் திருகோணமலைக்கு பொறுப்பான மேர்வின் என்பவர் கைது செய்யப்படுகின்றார். ஜனார்த்தனன், நிசõந்தன், ரெஜினோல்ட் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பின்னர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரின் பொறுப்பில் இருந்த போதே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை 8 வயது சிறுவனொருவரும் கப்பம் கோரி 2009இல் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் அவர்கள் நால்வரும் அரச படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவின் குழுவினர் தமது நோக்கத்திற்காக கப்பம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதன்பின்னர் கைது செய்யப்படுபவர்களை கொல்லும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இடையே என்ன தொடர்பு என்று நினைக்கலாம். ஆனால் 2008 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் திட்டமிட்டு கிழக்கில் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவ்வாறாக பரிசோதிக்கப்பட்ட விடயங்களே பின்னர் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.

பிள்ளையான் உள்ளே இருந்தால் அவர் பலவற்றை கூறலாம் என்பதனால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கையெடுத்துள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காது அவரின் உடலை எரித்துள்ளனர்.

இதேவேளை குறித்த எம்.பி.யை காப்பாற்ற நினைக்காது, அவரிடம் உள்ள வாக்குகளை பார்க்காது அவரை கைது செய்யுங்கள். இவர் ஒருவரை கைது செய்தால் 2005ஆம் ஆண்டில் இருந்து உண்மைகளை அறியலாம் என்றார்.

ரஷ்யா, உக்ரெய்னில் தமக்குள் போரிடும் இலங்கைப் படையினா் – தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட இலங்கை இராணுவம் இன்று ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிர் எதிராக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நமது இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ரஷ்யாவில் முகாம் உதவியாளர்களாக கொண்டு செல்லப்படுகின்றனர். இதில் பெரும் மோசடி நடக்கின்றது. எங்கள் இராணுவத்தினரை முகாம் உதவியாளர்களாக அழைத்துச் சென்று பின்னர் ரஷ்ய-உக்ரேனிய போரில் தள்ளுகின்றனர்.

இவ்வாறே குசாந்த குணதிலக்க என்ற இராணுவ வீரரை அழைத்துச் சென்று போர் டாங்கியில் அமர்த்தியுள்ளனர். அந்த போர் டாங்கி வெடித்து சிதறியதில் 2 பேர் பலியாகினர். அதிலிருந்து குசந்த தப்பித்தாலும், அவர் எங்கு உள்ளார் என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

அவர் நமது இராணுவத்தில் திறமையான ஒரு வீரராக இருந்தவராவார். இந்தியாவிலுள்ள சட்டத்தரணி ஒருவரது நிறுவனத்திற்காக அங்கு அவா் சென்றுள்ளாா். இவ்வாறு ஏராளமானோர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா 18 லட்சம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. நமது இராணுவத்தில் இருந்தவர்கள் ரஷ்யா, உக்ரைன் என தரப்பிலிருந்து ஒருவருக்கு எதிராக ஒருவர் போர் புரிகின்றனர். அங்கு இலங்கை இராணுவம் இரு புறமும் பிரிந்துள்ளது. நமது ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு சரியான வருமானம் இல்லாததாலேயே இவ்வாறு நடக்கின்றது. இது தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என கேட்க விரும்புகின்றேன்.

ஏனெனில், இன்று இலங்கை இராணுவத்தினர் இரு தரப்பிலும் சண்டையிடுகிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாங்கள் ஒன்றாகப் போராடினோம். இன்று இலங்கை இராணுவம் வேறு இரு நாடுகளுக்கிடையே ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவா் தெரிவித்தாா்.

சீல் வைத்து மூடப்பட்டது கொக்குவில் ரயில் நிலையம் – புகையிரத நிலைய அதிபரும் கைது

யாழ்ப்பாணம் – கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபரும் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளாா்.

கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கேப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக புகையிரத நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த புகையிரத நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் புகையிரத நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் யாழ் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லுாரி என்பவற்றில் கல்வி கற்கும் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.