Home Blog Page 2

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செங்கோலை கைப்பற்றினாலும் வழக்கு விசாரணைகளின் வேகம் குறையாது : நீதியமைச்சர் எச்சரிக்கை

நாடாளுமன்றத்தின் செங்கோலை எதிர்க்கட்சிகள் கைப்பற்றினாலும் அல்லது அதை விழுங்கினாலும் கூட, தற்போதைய நீதி அமைப்பில் வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கும் வேகம் ஒருபோதும் குறையாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற சீர்குலைவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்கும் நோக்கம் எதுவும் இல்லை என்றும், மாறாக தங்களுக்கு எதிராக நடந்து வரும் ஊழல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் தீர்ப்புகள் குறித்த பலத்த அச்சமே இதற்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வழக்கு விசாரணைகள் கணிசமாக வேகப்படுத்தப்பட்டுள்ளதால், வரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் என்ன என்பது எதிர்க்கட்சியினருக்கு நன்றாகவே தெரியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகளாக மாறாத ஒரு கண்ணியமற்ற அரசியல் கலாச்சாரத்தையே எதிர்க்கட்சிகள் இன்னும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், தங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவே நாடாளுமன்றத்தில் செங்கோலைத் தொடுவது போன்ற நாடகங்களை அவர்கள் அரங்கேற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதை ஒப்புக்கொண்ட அமைச்சர், இதற்கு எதிராக முன்வைக்கப்படும் மாற்று வாதங்கள் மற்றும் கருத்துக்களையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது என்றார்.

அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, மிகவும் பொருத்தமான ஜனநாயக முடிவை எட்டவே அரசு முறையாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

பொதுமக்கள் வழங்கிய ஆணையைத் தமது அரசாங்கம் எப்போதும் மதிக்கும் எனத் தெரிவித்த நீதியமைச்சர், நீதிமன்றத் தீர்ப்புகளுக்குப் பயந்து கற்பனை உலகில் வாழும் எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றத்தில் ஆதாரமற்ற மற்றும் அபத்தமான அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கேட்டுக்கொண்டார்.

இஸ்ரேலுக்கான பணப் பரிமாற்றத்தின்போது  இணையவழித் தாக்குதல் நடந்ததாக எழும் வதந்திகளுக்கு அரசாங்கம் மறுப்பு

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இணையவழித் தாக்குதலுக்கு (Cyberattack) உள்ளாகியிருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இலங்கை வங்கியுடன் இணைந்து பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் ‘குளோபல் ரெமிட்’ (Global Remit) என்ற சர்வதேச நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேலிய அரசாங்கம் தற்போது நடத்தி வரும் ஒரு விசாரணையின் காரணமாகவே இந்த நிதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா விளக்கியுள்ளார்.

இந்த சட்டப்பூர்வ விசாரணையின் விளைவாக சுமார் 5,100 இலங்கைத் தொழிலாளர்கள் தங்களது பணத்தைப் பெறுவதில் தற்காலிகச் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எனினும், இது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல என்றும், அங்கு பணிபுரியும் ஏனைய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 11,400 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ‘குளோபல் ரெமிட்’ நிறுவனம் இஸ்ரேலிய நீதிமன்றத்தில் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்துள்ளதுடன், உரிய தொகையைச் செலுத்துவதற்குத் தாங்களே பொறுப்பு என்றும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தூதரக மற்றும் நிறுவன ரீதியான மட்டங்களில் தலையிட்டு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், மிக விரைவில் இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, அரசியல் லாபங்களுக்காகப் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை நம்ப வேண்டாம் எனவும், ஊடகங்கள் சரியான தகவல்களை மட்டுமே பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா கேட்டுக்கொண்டுள்ளார்.

கோட்டாபயவின் மனு மீதான விசாரணை ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக சமர்ப்பிப்புகள் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்பாக இந்த மனு இன்று (24) இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது தரப்பு வாதங்களையும் மேலதிக சான்றுகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த மனுவில் காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர, காவல்துறையின் பரிசோதகர் மாதவ குணவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்த விவகாரம் குறித்து இதுவரையில் எந்தவொரு விசாரணை அமைப்பும் தன்னிடம் விசாரிக்கவோ அல்லது வாக்குமூலம் பெறவோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்குமூலம் வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

அதேவேளை, எவ்வித நியாயமான அடிப்படையுமின்றி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாகத் தமது தரப்பிற்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வித சான்றுகளும் இன்றி விசாரணைகளை முன்னெடுத்துத் தனது சுதந்திரத்தை மட்டுப்படுத்த பிரதிவாதிகள் முயல்வதாகவும் கோட்டாபய ராஜபக்ச தரப்பு சட்டத்தரணி இதன்போது குற்றம் சாட்டினார்.

இரு தரப்பு வாதங்களையும் அவதானித்த மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் வழக்கை எதிர்வரும் ஜூலை 6 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களின் தலைவர்களும் விவசாயிகளும் புதன்கிழமை (24) அநுராதபுரம் தம்புத்தேகம நகரில் அரசாங்கத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியும் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லினை விற்பனை செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கலைந்து, சிறந்த உத்தரவாத விலையினை நிர்ணயம் செய்து கொள்வனவு செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வினை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்பாபுலவு காணி அபகரிப்பு விவகாரம்: வட மாகாண ஆளுநரிடம் அம் மக்கள் அவசர கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனவும் தாம் அப்படி எந்த மாற்றுக் காணிகளையும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வட மாகாண ஆளுநர் நேரில் வருகை தந்து மக்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதோடு, வாழ்விடப் பிரச்சினைக்கு உடனடியான சாதகமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கேப்பாபுலவு பூர்வீக மக்கள் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

171 ஏக்கர் காணிகளை தொடர்ந்தும் இராணுவத்தின் 59 ஆவது காலால் படைப்பிரிவினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனவே எமது காணிகளை விடுவிக்க கோரி இன்றிலிருந்து தொடர் போராட்டமாக இந்தப் போராட்டத்தினை தாம் முன்னெடுக்க போவதாக மக்கள் தெரிவித்ததுடன் கேப்பாப்பிலவு இராணுவ முகாமிற்கு முன்பாக அடையாள உண்ணாவிரதத்தில தொடர்ந்து இன்றுமுதல் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக நம்பியிருந்த கேப்பாபுலவு மக்கள், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் துறைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

“போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் மக்களின் காணிகள் தொடர்ந்தும் அபகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 17 ஆண்டுகளாக தமது சொந்த நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருகிறோம். எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் எமது வளங்களை பயன்படுத்துகிறது. ஆனால் நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறோம். இது எந்த வகையிலும் நியாயமல்ல” என மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தின் போது வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு, எம் மண்ணில் நாம் உழைக்க வேண்டும் எம் உரிமையை நீ தர வேண்டும் இராணுவமே வெளியேறு, முகாம்களை மூடு நிலங்களை விடு, நில ஆக்கிரமிப்பை நிறுத்து, ஜனாநாயக அல்லது இராணுவ ஆட்சியா?, எமது வாழ்விடம் எமக்கு வேண்டும் போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

நீண்டகாலமாக தீர்வு காணப்படாத காணி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே கேப்பாபுலவு மக்களின் பிரதான கோரிக்கையாகும்.

 

சிறுவர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த சட்டமூலத்தை பைசர் முஸ்தபா பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்தச் சட்டத்தின் மூலம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சரான சிறுவர் விவகார அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் கிடைக்கிறது.

அத்துடன், ஒரு பிள்ளை ஒரு நாளில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக்கூடிய நேரத்தைச் சுருக்குவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிப்பதற்கோ இந்தச் சட்டத்தின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்தச் சட்டத்தைச் செயற்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் அங்கீகாரம் பெற்ற ஆணையாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்த எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப் பாதிக்கும் வகையில், சமகாலப் பட்டியலில் உள்ள சுற்றாடல் துறைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களில் தலையிடுவது பொருத்தமற்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்குத் தீர்வுகாணக்கூடிய விரைவான வழிமுறை, மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதாகும் என்றும், இதன் மூலம் ஓர் அரசியல் அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

13+ அல்லது 13- அல்லாமல், 13 ஆவது அரசியலமைப்பின் நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு தரப்பு என்ற ரீதியில், மாகாண சபைகளுக்கு தற்போதுள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

தாய்க்கட்சிக்குள் முரண்பாடு தாயக விடுதலைக்கு தடை.!! : பா.அரியநேத்திரன்

தாய்க்கட்சி என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் கடந்த 31.05.2025ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது அந்த கூட்டத்தின் பின்னர்
நிர்வாக செயலாளரும் மூத்த உறுப்பினருமான திரு குலநாயகம் சகல மத்திய குழு உறுப்பினர்களுக்கும் கடந்த 02.06.2025 ஒருகடிதம் அனுப்பியிருந்தார், அந்த கடிதத்தில் தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வர லாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக் கப்படுகின்றன.
ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற கட்சியானது அடாத்தும் சண்டித்தனமும் மேலோங்குவதாகத் தோன்றுகிறது. கறையான் புற்றெடுக்க கொடிய நாகங்களும், விச யந்துக்க ளும் குடிகொண்டு சங்கடம் கொடுக்கும் நிலை உள்ளது அதற்கு கட்சியை அந்த நிலைக்குத் தள்ளிவிட முடியாது, கட்சியுடனான எனது 62 ஆண்டுகாலச் செயற்பாடுகளை எண்ணிப் பார்க்கிறேன்.
வழிப்போக்கனாக இருந்துவிட்டு பதவி பெறுவதற்காக கட்சியில் சேர்ந்து இலாபம் அல்லது ஏதும் உதவி பெற்றவன் அல்ல நான். இலங்கைத் தமிழரசுக்கட்சி மீது இருக்கும் பேரார்வத்தாலேயே இக் கடிதத்தினை எழுதுகிறேன். இதனை மத்திய செயற்குழுவில் ஆய்வு செய்து தகுந்த தீர்வைக் காணவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடந்த தலைமைச் செயலகத்தில் 31.05.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற தலைவர் தெரிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். என தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் சேவியர் திரு குலநாயகம் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
நிர்வாக செயலாளர் குலநாயகம் இவ்வாறு எழுதிய கடிதம் தொடர்பாக இலங்கைத்தமிழரசுக் கட்சியின்  பொதுச்செயலாளர் சுமந்திரனால் பதில் கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளிவந்தது. அந்த கடிதத்தில் அனைத்துத் தெரிவுகளும் முடிந்த பின்னர், உடுப்பிட்டிக் கிளைத் தலைவர் எழுந்து, திரு. குலநாயகம் ஒரு பதவிக்கும் தெரிவாகவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய போது, உடுப்பிட்டித் தொகுதியில் இருந்து நியமிக்கப்பட்ட உறுப்பினர் தான் இராஜினாமா செய்ய முன் வந்தார். ஆனால் திரு. குலநாயகம் அதை நிராகரித்து விட்டார். இதுவே கூட்டத்தில் நடந்தது. இந்த விடயங்களை திரு. குலநாயகம் அவர்களே பதிவும் செய்தார். கூட்ட நடவடிக்கையில் எவ்விதமான முறைகேடான விடயமும் நடைபெறவில்லை. திரு. குலநாயகமோ வேறு எவருமோ இறுதியில் எந்த ஆட்சேபனையையும் எழுப்ப வில்லை. என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இருவருடைய கடிதங்களுக்கு அப்பால் மேலதிகமாக  யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் கடந்த 13.06.2026ல் தமிழரசுக்கட்சி விட்ட தவறுகளை சுட்டிக்காட்டி விரிவான கடிதம் ஒன்றை மத்தியகுழுவுக்கு முறையிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக்கிளை மற்றும் தொகுதிக்கிளைகளுக் கான புதிய நிர்வாகத் தெரிவுகள், கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையிலும் முறைகேடான முறையிலும் நடத்தப்பட்டுள்ளதாக நான்கு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார், அந்த நான்கு முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு
1. காங்கேசன்துறை தொகுதி நிர்வாகத் தெரிவில் முறைகேடு: கடந்த 2025 அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறைத் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளருக்குத் தெரியாமலும், ஏற்கனவே இயங்கி வரும் தொகுதி நிர்வாகத்திற்கு அறிவிக்காமலும், கட்சி யின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இந்தத் தெரிவு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொகுதி நிர்வாகிகள் ஏற்கனவே கட்சியிடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.
2. வட்டுக்கோட்டைத் தொகுதி தெரிவில் யாப்பு மீறல்: கடந்த 2026 ஏப்ரல் 23 அன்று, வட்டுக்கோட்டைத் தொகுதியில் ‘வெற்றிடம் நிரப்புதல்’ என்ற பெயரில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன்போதும் மாவட்டத் தலைவருக்கும், செயலாளருக்கும் அறிவிக்கப்படாமல்பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர்களைக் கொண்டும், காரைநகர் பிரதேசத்தையும் இணைத்தும் நடத்தப்பட்ட இந்தத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது என ஊடகங்களில் செய்திகள் வெளியானதோடு, தொகுதி உறுப்பினர்களும் கட்சி நிர்வாகத்தினரும் முறையிட்டுள்ளனர்.
3. யாழ் மாவட்ட கிளையின் அராஜகமான அதிகார துஷ்பிரயோகம்: கடந்த 2026 மே 31 அன்று, யாழ் மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டத்தில் நடைபெற்றுள்ளது. மாவட்டத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரே இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். இதன்போது, புதிய நிர்வாகத் தெரிவு குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கோரியும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “தலைமைப் பீடத்தில் (Table) இருந்து தெரிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக மறு தெரிவு கோரக் கூடாது” என மிரட்டும் தொனியில் பதில் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களைக் கேளாது நடத்தப்பட்ட இந்த அராஜகமான, ஜனநாயக விரோதச் செயல், ஜனநாயகத்திற்குச் சாவுமணி அடிப்பது போல் அமைந்துள்ளதாக கடிதத்தில் சாடப்பட்டுள்ளது.
4. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்ட தெரிவு: கடந்த தலைவர் தேர்தலின் போது, ‘தொகுதி’ என்பது ‘பிரதேச ரீதியானது’ என மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு, வலிகாமம் தென்மேற்கு மற்றும் வலிகாமம் தெற்கு என இரு பிரதேச பிரிவுகளாக பொதுச்சபைக்கு தலா 5 பேர் வீதம் (மொத்தம் 10 பேர்) தெரிவு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிர்வாக நடைமுறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், நீதிமன்ற வழக்கை மதிக்காமல், ஏற்கனவே பிரதேச பிரிவாக இருந்த நிர்வாக முறையை தற்போது மீண்டும் ‘தொகுதி’ என ஒன்றாக இணைத்துத் தெரிவு செய்தமை எந்த அடிப்படையில்? யாருடைய தீர்மானம்? என்ற கேள்விகளை யும் அவர் எழுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்முரண்பாடுகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட தொகுதிக் கிளைகள், மற்றும் மாவட்ட கிளைகளுக்கு புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவு  முறைகேடாக யாப்புக்கு முரணாக இடம்பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் கந்தசாமி பிருந்தாபன் மத்திய குழு உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை தொடர்பாக எப்போது மத்தியகுழு கூடுவது என்ன முடிவு எடுப்படும் என்பது ஒருபுறம் இருக்க, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தொடர்பாக மீண்டும் அதன் பதில் பொதுச்செயலாளர் கடந்த 2026, யூன், 15, ல் ஊடகசந்திப்பில் பாராளுமன்ற குழுவில் இருந்து யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அரசியல்குழுவிலிருந்து நீக்கியதை நியாயப்படுத்தி நான்கு காரணங்களைக்குறிப்பிட்டிருந்தார்.
சட்டமா அதிபர் நியமனம் , புனரமைப்பு நியமனம் என்பவற்றில் தவறானவர்களுக்கு ஆதரவளித்தாக காரணம் கூறியிருந்தார், குறிப்பாக இராணுவ அதிகாரியை நியமிக்க ஆதரவளித்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதனால் அவரை நீக்கி சாணக்கியனை நியமித் ததாகக்கூறியிருந்தார். ஆனால் சாணக்கியனை விட மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பு ஶ்ரீநேசன், அம்பாறை கோடீஷ்வரன் ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஏன் சாணக்கியனை நியமித்தார் என்பதை அவர் சொல்லவில்லை அதற்கான காரணம் தமது அணியை சேர்ந்தவர் என்பதாலும், ஶ்ரீநேசன், கோடீஷ்வரன் சிறிதரன் அணியை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை செய்யவில்லை என்பதே அவரால் கூறப்படாத உண்மை.
தந்தை செல்வாவால் 1949, டிசம்பர்,18, ல் ஆரம்பித்த தாய்க்கட்சி என கூறப்படும் இலங்கை தமிழரசுக்கட்சி கடந்த 2024, ஜனவரி,21, ல் இருந்து இன்றுவரையும் ஏறக்கு றைய இரண்டரை வருடங்களாக இரண்டு அணியாக செயற் படுவதே தொடர் முரண்பாடுகளுக்கு காரணமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நீண்டகாலமாக நிலவிவரும் உட்கட்சி முரண்பாடுகள், தத்துவார்த்த வேறு பாடுகள், தலைமைப் பதவிக்கான போட்டிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.
முக்கிய முரண்பாடுகள் மற்றும் பிளவுகளுக்கான அடித்தளமாக அமைந்தது கடந்த 2024,ஜனவரி,21, ல் இடம் பெற்ற ஜனநாயக ரீதியிலான வாக்கெடுப்பு மூலமான கட்சித் தலைவர் தேர்தலிலேயாகும்.
வாக்கெடுப்பில் 184 வாக்குகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்ற னர். சி. சிறீதரனை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.ஏ. சுமந்திரன் தோல்வியுற்று சிறிதரன் 47, மேலதிக வாக்குகளால் தலை வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்றாவது வேட்பாளரான மட்டக்களப்பு சீனித் தம்பி யோகேஸ்வரன் சிறிதரனை ஆதரித்தமையால் அவரின் வாக்கு உட்பட எந்த ஒரு வாக்கையும் யோகேஸ் வரன் பெறவில்லை என்பது ஒரு தேர்தலில் தனது வாக்கை இன்னொருவருக்கு செலுத்திய வேட்பாளர் என்ற சரித்திரம் இந்த தமிழரசுக்கட்சி தலைவர் தெரிவு தேர்தலில் யோகேஸ்வரன் பெற்றுள்ளார்.
தமிழரசுக்கட்சி ஆரம்பித்த 1949,டிசம்பர்,18, தொடக்கம் 2024, ஜனவரி,21, வரை 75, வருட வரலாற்றில் 16, தடவை கட்சி மாநாடுகளும், தலைவர் தெரிவுகளும் இடம்பெற்றன. இவ்வாறு வாக்கெடுப்பு மூலம் எந்த ஒரு தலைவர் பதவியும் தெரிவு செய்யப்படவில்லை. ஒற்றுமையாக பேசி சமாதானமாகவே சகல கட்சி பதவிகளும், 75 வருடங்களாக தெரிவான கட்சியானது 2024, ஜனவரி,21, ல் வாக்கெடுப்பு கலாசாரம் அரசியல் கட்சியில் நடந்தமையால் தற்போது இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களாக இரண்டு குழுவாக சிதறி தமிழரசுக்கட்சி பதவிக்காக அடிபிடி படும் கட்சி என்ற பெயரை பெற்றுள்ளது.
2024, ஜனவரி,21, ல் ஏற்பட்ட தலைவர் வாக்கெடுப்பின் எதிரொலி 2024,ஐனவரி,27, ல் திருகோணமலையில் இடம் பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் ஏனைய பொதுச்செயலாளர் உள்ளிட்ட மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவில் ஏற் பட்ட முரண்பாடுகள், குழப்ப நிலைமை அதனை சீர் செய்ய முடியாத கட்சிதலைமை விட்ட தவறானது பதவி ஆசைக்காக திருகோணமலை நீதிமன்றில் 2024, பெப்ரவரி திருகோணமலை சாம்பல்தீவைச்சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவரால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணே சராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மாநாட்டை நடத்துவதற்கு நீதி மன்றம் தடை யுத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு விசாரணை 2024, பெப்ரவரி, 29, தொடக்கம் 2026, யூன்,20, வரை ஏறக்குறைய இரண்டு வரு டங்களாக பல தவணையிடப்பட்டு முடிவின்றி தொடர்வதால் நிரந்தர தலைவரோ, நிரந்தர பொதுச்செயலாளரோ இன்றி தற்காலிக தலைவராக சி. வி.கே. சிவஞானமும், தற்காலிக பொதுச்செயலாளராக எம்.ஏ. சுமந்திரனும் , பாராளுமன்ற குழு தலைவர் பதவியும் தற்காலிகமாக சாணக்கியனும் தற்காலிக பதவிகளுடன் கட்சி தற்போது ஒற்றுமை இன்றி முரண்பாடுகளுடன் தொடர்கிறது.
இந்த முரண்பாடுகளுடன் கட்சி தொடர்வதால் வடகிழக்கு தமிழ் மக்கள் ஒட்டு மொத்த தமிழ்தேசிய கட்சிகள் மீதும் வெறுப்படைந்துள்ளனர்.
போதாக்குறைக்கு தமிழரசுக்கட்சிதான் இரண்டு அணி என பார்த்தால் அதே பாணியில் தற்போது ரெலொ கட்சியும் இரண்டு அணியாக கடந்த 2026, யூன்,14, ல் வவுனி யாவில் நடந்த ரெலோ மாநாடு உறுதிப்படுத்தியுள்ளது. செல்வம் அணி, வினோ அணி என ரெலோவும் இரண்டாக பிழவு பட்டுள்ளது.
தாய்க்கட்சி என அழைக்கப்படும்  தமிழரசுக்கட்சி தற்காலிக பதவிகளுடன் இரண்டரை வருடமாக இயங்கும் நிலையில் ஒற்றுமை இன்றி முரண்பாடே தொடர்கிறது. இது ஏனைய கட்சிகளுக்கும் வாய்ப்பாக மாறிவிட்டது.

‘கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்’ – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, கடல்வளத்தை அழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடைமுறைகளே தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இன்றி, தமக்குத் தேவையான விதத்தில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் துறைசார் அமைச்சர்கள் அனுமதி வழங்கியமையாலேயே கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.

அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முதலில் நாம் இரு மாதங்கள் அவகாசம் கோரினோம். ஆனால், அந்த கால எல்லை போதாது என்பதால், அறிவியல் பூர்வமான தீர்வை வழங்குவதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரியிருந்தோம். மீனவர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடல் வளங்களை நாசமாக்க இடமளிக்க முடியாது. சட்டவிரோத நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது. நாம் கடற்றொழிலாளர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

பாரம்பரியமான முறையில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடலாம்; அதற்குரிய புதிய முறைமை உருவாக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

நாம் கால அவகாசம் கோரியுள்ள விடயத்தை வைத்து, அரசியல் நடத்தி மீனவர்களைக் குழப்புவதற்கு எதிர்க்கட்சியினர் முற்படக் கூடாது.

அதேவேளை, இந்திய மீனவர் பிரச்சினை என்பது நீண்ட நாள் பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எல்லைத் தாண்டல்கள் குறைவடைந்துள்ளன” என்றார்.