Home Blog Page 3

ஜேர்மன் பிரதி தூதுவர் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான ஜேர்மன் நாட்டின் பிரதித் தூதுவர் Sarah Sharief, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனை இன்று புதன்கிழமை (24) மாநகர சபையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் விசேட ஏற்பாட்டில் அமைந்த இச்சந்திப்பின்போது, மட்டக்களப்பு மாநகர சபைக்கும் ஜேர்மனியின் முனிச் (Munich) நகர சபைக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு நல்லுறவு, தற்போதைய சவால்கள் மற்றும் எதிர்கால கூட்டுத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், ஜேர்மன் பிரதி தூதுவருடனான  சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான புதிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதி தூதுவருடன் விரிவாக ஆராயப்பட்டது.

அத்தோடு, மட்டக்களப்பு நகரில் வாழும் பல்லின மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் அவர்கள் தமக்கிடையே பேணிவரும் சுமுகமான, இணைந்து வாழும் பண்புகள் குறித்தும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஜேர்மன் அரசும், அந்நாட்டு மக்களும் வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்காக முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

குறிப்பாக, 2005ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபைக்கும் ஜேர்மனியின் முனிச் நகர சபைக்கும் இடையில் செய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் வெற்றிகரமாகச் செய்து கொடுக்கப்பட்டமை நன்றியோடு நினைவுகூரப்பட்டது.

இரு நகரங்களுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை வெளிப்படுத்தும் நோக்கில், கல்லடி பாலத்துக்கு அருகில் ‘முனிச் பிரண்ட்ஷிப் ரோடு’  எனப் பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை நாட்டப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு, அந்த காலகட்டத்தில் முனிச் நகர சபையினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் சொகுசு வாகனம் (Luxury vehicle) மூலம் மட்டக்களப்பு மக்கள் பெற்ற நன்மைகள் குறித்து இருதரப்பும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டன.

முன்னர் மாநகர சபை ஊழியர்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஜேர்மனியில் விசேட பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டிருந்தது. அதேபோன்றதொரு பயிற்சியை தற்போதைய ஊழியர்கள் மற்றும் சபை உறுப்பினர்களின் திறனாற்றலை மேம்படுத்தும் பொருட்டு மீண்டும் நடத்துவதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு பிரதி தூதுவரிடம் வழங்கப்பட்டது.

மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் தரப்பிலிருந்து நேரடி நிதி உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறித்து இங்கு விபரிக்கப்பட்டது.

குறிப்பாக, ஊழியர்களின் 60 சதவீத (60%) சம்பளத்தை மாநகர சபையின் சொந்த வருவாயிலிருந்தே வழங்கவேண்டியுள்ளதால், நகரின் ஏனைய அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதில் பெரும் நிதி நெருக்கடி நிலவுவதாக எடுத்துரைக்கப்பட்டது.

செம்மணியில் அகழ்வு பணிகள் நிறைவு – மீண்டும் ஜூலையில் ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் யூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.

அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டு 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 53 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12நாட்கள் நடைபெற்று கடத்த மே மாதம் 09ஆம் திகதி வரையில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மீட்கப்பட்ட என்பு கூடுளுடன் சேர்ந்து 261 என்பு கூடுகள் மீட்கப்பட்டன .

அந்நிலையில் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமாகி  நேற்றைய தினம் (23) வரையில் 22 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டு , எதிர்வரும் யூலை 15ஆம்திகதியளவில் மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் அடிப்படையில் முதலாம் , இரண்டாம் கட்டங்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தின் இதுவரையிலான 32 நாட்கள் முன்னெடுக்கப்ப அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மியான்மாரின் 5,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிறைவைப்பு

தாய்லாந்து எல்லைக்கு அருகிலுள்ள மியான்மார் பகுதிகளில் இயங்கி வரும் ஒன்லைன் நிதி மோசடி மையங்களுக்குள் இன்னும் 5,300க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு பல நாடுகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட பாரிய கூட்டு நடவடிக்கைகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்ட போதிலும், இந்த மோசடி மையங்கள் இன்னும் தொடர்ந்து இயங்கி வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மனித கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் சிவில் சமூக வலைப்பின்னல் அமைப்பு தாய்லாந்து பொலிஸாரிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்துள்ளது.

மியான்மார் ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு பகுதிகளில் அமைந்துள்ள இந்த மையங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடுகளின்படி அங்குள்ளவர்களில் சுமார் 1,600 சீனர்களும், சுமார் 200 மியான்மார் குடிகளும், 20 தாய்லாந்து நாட்டவர்களும் அடங்குவதுடன் பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, பிரேசில், ரஷ்யா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மியான்மார் மற்றும் கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இயங்கி வரும் இந்த குற்றவியல் நெட்வொர்க்குகள், இணையம் மூலம் மக்களை ஏமாற்றி ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்வதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகிறது.

மனித கடத்தல் மூலம் இந்த மையங்களுக்கு அழைத்து வரப்படும் வெளிநாட்டவர்கள், வலுக்கட்டாயமாகவும் கடுமையான அழுத்தங்களின் கீழும் நிதி மோசடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தாய்லாந்தின் தலையீட்டுடன் மியான்மாரின் மியாவாடி பகுதியில் இருந்து சுமார் 5,000 பேர் மீட்கப்பட்ட போதிலும், இந்த மோசடி மையங்கள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.கே.பி.ஏ ஆயுதக் குழுவோ அல்லது மியான்மார் இராணுவ ஆட்சியின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர்களோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகளைப் பாதுகாப்பது தேசிய முன்னுரிமையாகும் – பிரதமர்

குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, மாறாக அது எமது பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரு தேசிய முன்னுரிமையாகும் என்று பிரதமர் ஹரணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வளர்வதையும், வன்முறையற்ற சூழலில் வாழ்வதையும் உறுதி செய்வதற்காக, உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல், முன்னேற்றங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் துரித நடவடிக்கைகளை எடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெற்காசிய அமைச்சர்கள் மாநாடு’ (EVAC) ஜூன் 23 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானது.

இரண்டு நாட்கள் (ஜூன் 23 மற்றும் 24) நடைபெறும் இந்த பிராந்திய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முறைசார்ந்த அணுகுமுறைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்ததோடு, குழந்தை பாதுகாப்பு என்பது ஒரு துறை சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது நாட்டின் பரந்த அபிவிருத்தி, நிர்வாகம் மற்றும் சமூக நீதிக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ளடங்கிய ஒரு தேசிய முன்னுரிமையாகும்

கல்வி முறையானது குழந்தைகளுக்கு மிகவும் பலமானதொரு சூழலாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது என்றும், அது கற்றலுக்கானதொரு இடமாக மாத்திரமின்றி, குழந்தை பாதுகாப்பிற்கான முக்கியமான தளமாகவும் செயல்படுகிறது.
பாடசாலைகள் கல்வி கற்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிதல், உளவியல் சமூக ஆதரவு மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பில் தலையீடுகளுக்கான முக்கியமான இடங்களுமாகும். பரிந்துரைக்கும் பொறிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் உள்ளிட்ட பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை இலங்கை தொடர்ந்தும் பலப்படுத்தி வருகின்றது.
அத்தோடு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள்வதில் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், குழந்தை பாதுகாப்பு தொடர்பான சவால்கள் தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுதல், கற்றல்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் நிலையான ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஊடாகவே இவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் SAARC அமைப்பின் செயலாளர் நாயகம் முஹம்மட் கோலம் சர்வர், இலங்கையின் யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிக்ஹாம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி நஜாத் மல்லா மஜித், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன  மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு

சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்புக்கள் இன்னும் சந்தைக்கு போதுமான அளவு விநியோகிக்கப்படாமை  பிரச்சினையாக மாறியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த  கையிருப்புகளை சந்தைக்கு விநியோகிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தல் வழங்கினார்.
மாவட்ட மட்டத்தில் உள்ள களஞ்சியசாலைகளின் நிலைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், களஞ்சியசாலைகளின் நிலைமை மற்றும் பாதுகாப்பான கையிருப்புகள் குறித்த துல்லியமான தரவுத் தொகுதியொன்றை பேணுவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

குறிப்பாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் போது, பாதுகாப்பான நெல் கையிருப்புகளை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது ஒரு சாதாரண செயல்முறை அல்லாமல், விசேட கவனத்திற்குரிய ஒரு விடயமாக அமைய வேண்டும் என்றும்  இதன் போது தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி : உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – ரவிகரன்

யாழ்ப்பாணம் செம்மணியைத் தவிர, அரியாலை,கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்ன  ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும் என  வன்னி மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்  அரசாங்கத்திடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற  சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான விதிமுறைகள் என்பன  மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

செம்மணி மனிதப் புதைகுழியானது தற்போது நாட்டிலே பாரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 390 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், முதியவர்கள் என பலதரப்பட்டவர்களுடைய எலும்புக்கூடுகளும் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த வாரம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இந்த புதைகுழி விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் உறுதியுரைத்துள்ளார். அந்தவகையில் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதிகிடைக்க வேண்டுமென்ற பெருத்த எதிர்பார்புடன் இருக்கும் பாதிக்கப்பட்ட எமது தமிழ்மக்களுக்கு நீதி அமைச்சரின் இந்தக் கருத்து நம்பிக்கைதருவதாக அமைந்துள்ளது.

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லுரி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி படுகொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான குற்றவாளியான இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் மரண  தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த இரணுவ லான்ஸ்கோப்ரல் செம்மணியில் படையினரால் 300 – 400 வரையான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

சோமரத்னவின்  தகவல்களின் அடிப்படையில் அக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் 15 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதனையடுத்து  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கம்  இந்த புதைகுழி விசாரணையை கிடப்பில் போட்டிருந்தது.

தற்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளங்காணப்பட்டு, மீண்டும் அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக பன்னாட்டு விசாரணையாளர்கள் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு தயாராக இருப்பதாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனது மனைவி மூலம் ஜனாதிபதிக்கு சோமரத்ன ராஜபக்ச கடிதமொன்றினை எழுதியிருந்தார்.

மேலும் அக்கடிதத்தில் செம்மணியைத் தவிர, அரியாலை, கொழும்புத்துறை பகுதிகளிலும் இராணுவத்தினரால் சடலங்கள் புதைக்கப்பட்ட தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.ஆகவே செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சோமரத்தின ராஜபக்சவிடம் பன்னாட்டு விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். அதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார்.

பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து இலங்கை – அமெரிக்கா விரிவாக ஆராய்வு

கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க – பசுபிக் விமானப்படை கட்டளைத்தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடருக்கும் பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு  திங்கட்கிழமை (22) நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பேரனர்த்த சூழ்நிலைகளின் போதான உதவிகள், இணையப் பாதுகாப்பு, கடல்சார் மற்றும் வான்வழி ஒத்துழைப்பு என்பன உள்ளடங்கலாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவடைந்துவரும் பாதுகாப்புத்துறைப் பங்காண்மை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதுகுறித்து கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில், ‘உலகளாவிய வர்த்தகத்தின் சீரான இயக்கத்துக்கு இலங்கையின் துறைமுகங்களும் கடற்பிராந்தியமும் இன்றியமையாதவையாகும். அந்த நலன்களைப் பாதுகாப்பதற்கு அவசியமான நவீன, தொழில்வாண்மைத்துவமுடைய, ஒழுக்கமான படைகளைக் கட்டியெழுப்புவதானது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகிய இரண்டுக்குமான முதலீடாகும். அந்த முயற்சியில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை அமெரிக்க பெரிதும் மதிக்கிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடராஜர் சிலை விவகாரம் குறித்து சி.வே.கே.சிவஞானம் கடற்றொழில் அமைச்சருக்கு கடிதம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.

குறித்த நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தின் ஊடாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில், அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போது பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இன்னமும் அங்கே நிறுவப்படாது இருப்பது பற்றி எம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த விடயத்தில் தாங்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் அக்கறையெடுத்து இச்சிலையை மேற்குறிப்பிட்ட இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியிருந்தேன்”

“இதனை நினைவூட்டி இந்த விடயத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று சி.வி.கே சிவஞானம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அத்துமீறிய ஊடுருவல் அதிகரிக்குமென எச்சரிக்கை

இலங்கைக்கு மிக அருகில் உள்ள தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையான தூரம் சுமார் 38 கிலோமீற்றர் மாத்திரமாகும்.

இதில் தனுஷ்கோடியில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 6ஆம் மணல் திட்டுடன் இந்திய எல்லை முடிவடைகிறது.

இந்த குறுகிய கடல் எல்லைப் பகுதி வழியாக இருநாட்டு கடத்தல்காரர்களும் தடையின்றி ஊடுருவும் சூழல் காணப்படுவதாக எச்சரிக்கப்படுகிறது.

முன்னதாக, கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த பாம்பன் பாலம், ராமேஸ்வரம் ஓலைக்குடா, வேர்க்கோடு மற்றும் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் ஆகிய பகுதிகளில் காவல்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டன.

எனினும், கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் போதிய காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்படாததால் இந்த கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தனுஷ்கோடியில் காவல்துறையினர் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த ஓய்வறையும் உடைந்து கிடப்பதுடன், ஒரு காவல்துறை அதிகாரி கூட பணியில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்படுகிறது

இதன் காரணமாக கடல் வழியிலான கடத்தல்களும் ஊடுருவல்களும் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள அரசாங்கம் இந்த சோதனைச் சாவடிகளுக்கு உடனடியாக காவல்துறையினரை நியமித்து கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

பயங்கரவாத தடை சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் : ஜனாதிபதி உறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, திட்டமிடப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் குறித்து கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தற்போதைய சமூகத்துக்குப் பொருத்தமான வகையில் இந்த புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கும், நாட்டின் சாதாரண குடிமக்களின் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.