யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை தொடர்பில் வடக்கு மாகாண சபை முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.
குறித்த நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தின் ஊடாக அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில், அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போது பலாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலை இன்னமும் அங்கே நிறுவப்படாது இருப்பது பற்றி எம்மால் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த விடயத்தில் தாங்களும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் அக்கறையெடுத்து இச்சிலையை மேற்குறிப்பிட்ட இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியிருந்தேன்”
“இதனை நினைவூட்டி இந்த விடயத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று சி.வி.கே சிவஞானம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



