சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் புதன்கிழமை (23) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த வருட சிறு போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்புக்கள் இன்னும் சந்தைக்கு போதுமான அளவு விநியோகிக்கப்படாமை பிரச்சினையாக மாறியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கையிருப்புகளை சந்தைக்கு விநியோகிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன், இந்த சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன் போது அறிவுறுத்தல் வழங்கினார்.
மாவட்ட மட்டத்தில் உள்ள களஞ்சியசாலைகளின் நிலைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், களஞ்சியசாலைகளின் நிலைமை மற்றும் பாதுகாப்பான கையிருப்புகள் குறித்த துல்லியமான தரவுத் தொகுதியொன்றை பேணுவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குறிப்பாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் போது, பாதுகாப்பான நெல் கையிருப்புகளை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது ஒரு சாதாரண செயல்முறை அல்லாமல், விசேட கவனத்திற்குரிய ஒரு விடயமாக அமைய வேண்டும் என்றும் இதன் போது தெரிவித்தார்.



