ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 256
ஈழத்தமிழர்களையும் பலஸ்தீனிய மக்களையும் பொறுத்த மட்டில் தனியான தேச இனங்களாகப் பிரித்தானிய காலனித்துவ அரசால் கைப்பற்றப்பட்ட இவர்களின் இறைமையுள்ள நிலப்பரப்புக்களை காலனித்துவ பிரித்தானிய ஆட்சியாளர்கள் ஒரு அரசுக்குள் இரு நாடுகள் என்ற நிலையில் சுதந்திரம் கொடுத்துச் சென்றதால் இனஅழிப்புக்கு உள்ளாகும் நாளாந்த வாழ்வை அனுபவிக்கின்ற மக்களாக இன்றைய உலகில் துன்பவாழ்வ வாழ்கின்றனர். ஈழத்தமிழர்களதும் பலஸ்தீனியர்களதும் தேசியப் பிரச்சினைகளைப் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் உரிய முறையில் தீர்த்து வைக்காது விட்டு விலகிய நிலையில் காலனித்துவப் பிரச்சினைகளாக ஐக்கிய நாடுகள் சபையும் சரியான முறையில் இதனை தீர்க்காது காலதாமதம் செய்வதால், இன்று உலகப்போர்கள் இப்பகுதிகளில் தோன்றக் கூடிய அனைத்துலகப் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் ஊறுவிளைக்கும் நிலை வேகப்பட்டு வருகிறது.
இவர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இவர்களின் இறைமைகளை ஏற்க ஐக்கியநாடுகள் சபை மறுத்து வருவதால் இவர்களை இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு செய்து இவர்களின் இறைமையை இவர்கள் மீளவும் நிலைநாட்டாதவாறு இவர்களை ஆளும் ஆட்சியாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பாதிப்புற்ற நிலையில் உள்ள இம் மக்களை, ஆளும் அரசாங்கத்தினர் தொடர்ச்சியாக இனஅழிப்பு செய்து அவர்களை நிரந்தர அடிமையாக்குவதைத் தங்களின் அரசியல் கொள்கையாகவும் அரசியற் செயற்திட்டமாகவும் இனஅழிப்பை கோட்பாடாக்கிச், செயற்பட்டு வருகின்றனர். இதுவே 17.05. 2009 இல் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 176000 ஈழத்தமிழர்களை ஒரு தேசமாகவே சிறிலங்கா இனஅழிப்பு செய்யவும், இன்று பலஸ்தீனியத்தின் காசா நீள்கரைத் தேசத்தில் 500 சிறுவர்கள் உட்பட 1537 பலஸ்தீனியர்களை ஒரு தேசமாகவே இஸ்ரேயல் இனஅழிப்புக்குள்ளாக்கவும் காரணமாகின்றது.
இன்றையப் போர்ச் சூழலுக்கு ‘கமாஸ்’ பலஸ்தீனிய ஆயுதப்போராளிகள் இஸ்ரேயல் மக்களின் மேல் திடீரென நடாத்திய தாக்குதல்களால் 1300 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதே தொடக்கக் காரணமாக அமைவதால் உலகநாடுகளில் இந்தியா உட்பட மேற்குலகநாடுகள் இஸ்ரேலிய அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் எனத் தங்களின் ஆதரவை இஸ்ரேலிய அரசுக்கே தொடர்ந்து தெரிவித்து தங்களாலான உதவிகளைச் செய்து வருகின்றனர். உலகின் கவனம் காசாவில் இருக்கையில் ஈழத்தமிழின அழிப்பை பலவழிகளில் முன்னெடுக்க சிறிலங்கா திட்டமிடலாம் என்னும் அச்சம் ஈழத்தமிழர்களிடை பலமாக உள்ளது. உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் கூட்டொருங்குச் செயற்பாடுகள் மூலம் ஈழத்தமிழர்கள் இந்தக்காலக்கட்டத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நேரமிது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
மேலும் ஒருவகையில் மேற்குலக – இந்திய இஸ்ரேலுக்கான ஆதரவு அனைத்துலக அரசியல் ஒழுங்கு முறையைப் பேணுவதற்கான அவற்றின் செயற்பாடு என்று இந்த நாடுகள் நியாயப்படுத்துமானால் யுத்தச் சட்டங்கள் இன்று என்னவாகிறது? அவை எந்த அளவுக்கு பலஸ்தீனியரைத் தங்களின் குடிமைசார் மக்கள் என ஆட்சிப்படுத்தும் இஸ்ரேயலால் ஏன் பின்பற்றப்படாது விடப்படுகிறது? என்பதை நடுநிலையில் நின்று ஒழுங்குபடுத்த வேண்டியது இந்த நாடுகளின் அனைத்துலகச் சட்ட நடைமுறைப்படுத்தல் கடமையாகவுள்ளது என்பதை இலக்கு வலியுறுத்திக்கூற விரும்புகிறது.
எந்த யுத்தத்திலும் யார் யுத்தத்தில் ஈடுபட்டாலும் அது அரசாக இருந்தாலும் சரி எந்தப் பங்குபற்றுபவர்களானாலும் சரி “குடிமைசார் மக்கள் (சிவிலியன்கள்) இலக்காக்கப்படக் கூடாது” என்பது அனைத்துலக மனிதநேயச் சட்டக் கோட்பாடாக ‘jus in bello’ என்னும் யுத்தத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான சட்ட விளக்கமாக 1949ம் ஆண்டு ஜெனிவா மரபுசாசனத்திலும் 1977ம் ஆண்டு மரபுச் சீர்முறைமையிலும் உள்ளது. தற்செயலாகக் கூடக் குடிமைசார் மக்களுக்கு உயிரிழப்போ, காயங்களோ, உடைமைகளுக்கோ பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கெனக் கண்டால் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதும் அப்படிச் செய்தால் அது சட்டத்தால் யுத்தக் குற்றமாகவும் மனிதாயத்துக்கு எதிரான குற்றமாகவும் இனவழிப்பாகவும் குற்றத்தன்மைக்கு ஏற்ப அமையுமென வரைபு செய்யப்பட்டுளள்து.
பலஸ்தீனியப் போராட்டக்குழு கமாஸ் இஸ்ரேயலைத் தாக்கி இன்றைய சூழ்நிலை தோன்றியது என இஸ்ரேயல் கூறினாலும் பலஸ்தீனிய மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கம் தாங்களும் கமாசும் ஒனறல்லவென தன் பேச்சாளர் மூலம் தெரிவித்துள்ளது. எனவே கமாசை அழிப்பதாக இஸ்ரேயல் பலஸ்தீனிய மட்டுப்படுத்தப்பட்ட அரசாங்கத்தையும் செயற்படாதவாறு தடுப்பது ஐ.நா.வால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. மேலும் நாட்டின் அரசாங்கமாகவுள்ள இஸ்ரேயல். தனது குடிமை சார் மக்கள் (சிவிலியன் ) ஆகிய பலஸ்தீனியர்களின் உணவு உடை தண்ணீர் மருந்துகள் ஆடைகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான இடங்கள் என்பவற்றின் வழங்கல் காசாவில் எவ்விதத்திலும் பாதிப்புறாதவாறு பேணிய நிலையிலேயே அரசுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அனைத்துலகச் சட்டக் கடமையுள்ளதாக உள்ளது. அதனை இஸ்ரேயல் இன்று செய்யத் தவறுவதற்கு முன்னுதாரணமாகச் சிறிலங்காவின் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின இனஅழிப்பு உள்ளது. இதற்குச் சாட்சியங்கள் நிறைய இருந்தும், யுத்தகாலத்திலும் சரி, அதற்குப் பின்னரும் சரி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ஐக்கிய நாடுகள் சபையினதும் அனைத்துலக நாடுகளினதும் திட்டமிட்ட காலதாமதங்களும் ஊக்குவிப்புக் காரணிகளாக உள்ளது என்பதை உலகுக்கு இவ்வேளையில் சுட்டிக்காட்ட இலக்கு விரும்புகிறது.
சமகாலப்பிரச்சினை குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைமைப் பொறுப்பாளர் யோசப் போரல் ( Joseph Borell) தெரிவித்துள்ள கருத்து முக்கியமானது. “இஸ்ரேயலுக்கு தன்னைப் பாதுகாக்க எந்த அளவுக்கு உரிமையிருக்கிறதோ அந்த அளவுக்கு அனைத்துலக சட்டங்களையும் அனைத்துலக மனிதாயச் சட்டங்களையும் பின்பற்றவும் கடமையுண்டு” எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த மாதிரியான நாட்டின் குடிமைசார் மக்களைப் பாதுகாக்கும் பேச்சுக்கள் எதுவும் ஈழத்தமிழர்களின் மேல் சிறிலங்கா இனஅழிப்பினை நடத்தும் பொழுது ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க அளவு ஈழத்தமிழர்கள் வாழ்கின்ற நிலையிலும் ஏன் பேசப்படவில்லை என்பது சிந்தனைக்குரிய கேள்வியாக உள்ளது. ஈழத்தமிழர்கள் கூட்டொருங்கு செயற்பாட்டாளர்களாக மாற வேண்டிய அவசியத்தை இது மீளவும் உணர்த்துகிறது.
பலஸ்தீனிய மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையற்ற சிறப்புப் பிரதிநிதித்துவ உறுப்புரிமையை ஐக்கிய நாடுகள் சபை அளித்துள்ளதால் அவர்களால் இன்று நடப்பதுபோன்ற பிரச்சினைகள் நடைபெறுகையில் அதனை ஐக்கியநாடுகள் சபையில் வெளிப்படுத்த முடிகிறது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இந்த சிறப்புப் பிரதிநிதித்துவமும் கூட இல்லாத நிலையில் அவர்களின் நிலையை ஐக்கிய நாடுகள் சபையிலும் வெளிப்படுத்த இயலாதநிலை தொடர்கிறது. இதனைப் பலஸ்தீனிய இன்றைய பிரச்சினையின் பின்னணியில் உலகுக்கு வெளிப்படுத்தி ஈழத்தமிழரின் இறைமை மறுப்பு மூலம் சிறிலங்கா இஸ்ரேயல் போல செயற்படாது தடுக்க ஐ.நா. சிறப்பு பிரதிநிதி உரிமை உடன் தேவை என்பதைத் தாயகத்திலும் உலகிலும் ஈழத்தமிழர்கள் கூட்டொருங்குச் செயற்பாட்டின் மூலம் முன்னெடுக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.