ஈழத்தமிழரின் இறைமையை ஒடுக்க கொண்டு வரப்பட்டுள்ள இருசட்டங்களையும் தடுக்க கூட்டொருங்குச் செயற்பாடு தேவை
| ஆசிரியர் தலையங்கம் | Weekly ePaper 255

1979ம் ஆண்டு யூலை 9ம் திகதி தற்காலிகச் சட்டமாகச் சிறிலங்கா அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட 48ம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம் தமிழர் தாயகத்தில் அவர்களின் இறைமையை ஒடுக்க அரசியல் விழிப்புணர்வுள்ள இளையவர்களை கண்ட இடத்தில் சுடவும் சுட்ட இடத்தில் விசாரணையின்றி எரிக்கவும் சிறிலங்காவின் படைகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கியது. அத்துடன் அந்த ஆண்டு டிசம்பர் மாதத்துள் ஈழத்தமிழரில் அரசியல் விழிப்புணர்வாளர்களை பயங்கரவாதிகள் எனக் கொன்றழிக்க வேண்டும் என்று கால எல்லை கொடுத்து வடக்குக்கு அனுப்பப்பட்ட அக்கால ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவின் மருமகன் பிரிகேடியர் கொப்பேகடுவின் தலைமையிலான திட்டம், அந்த ஆணையை விடுதலைப்புலிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றி வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு உரிய நேரத்தில் சான்றாதாரத்துடன் தெரியப்படுத்தியதால் ஜே. ஆரால் கைவிடப்பட்டது. ஆயினும் ஈழத்தமிழர்கள் தங்களின் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் சிறிலங்காப் படைகளால் ஏற்படுத்தப்பட்ட இனங்காணக்கூடிய அச்சத்தில் இருந்து காக்க ஆயுத எதிர்ப்பை ஈழத்தமிழர்கள் வெளிப்படுத்துவதைப் பயங்கரவாதச் செயல் என நியாயப்படுத்தி அவர்களின் மேல் சிறிலங்கா கடந்த 44 ஆண்டுகளாக இனஅழிப்பை அரசியற் கொள்கையாக வெளிப்படுத்தி அரசியற் கோட்பாடாக நடைமுறைப்படுத்துவதற்கான சட்டப்பாதுகாப்பை பயங்கரவாதத் தடுப்புச் சட்டமே வழங்கி வருகிறது.
1982ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிக ஏற்பாடு என்ற நிலையில் இருந்து நிலையான சட்டமாக மாற்றப்பட்ட பின்னரே 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பைச் சிறிலங்கா அரசாங்கம் அரசபயங்கரவாதத்தின் வெளிப்பாடாகத் தனது படைகளின் பாதுகாப்புடன் சிங்களவர்களைக் கொண்டு திட்டமிட்ட முறையில் செய்து , அவர்களின் சொத்துக்களைச் சூறையாடவும் ஊக்குவித்தது. 2015ம் ஆண்டு இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குறுதியளித்த சிறிலங்கா அதனைச் செய்யாது, தற்போது இந்த 1979ம் ஆண்டின் 48ம் இலக்கப் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை, உத்தேசப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகப் புதிய பரிணாமம் பெறவைத்துள்ளது. முன்னையை விட படுமோசமான மனிதாபிமானத்துக்கு எதிரான சட்டமாகக் கடந்த 15ம் திகதி இந்தச் சட்டம் சிறிலங்கா வர்த்தமானியில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சர் விஜயதாச ராசபக்சாவினால் வெளியிடப்பட்டுவிட்டது.
முன்னயை சட்டம் பயங்கரவாதம் வராது பாதுகாத்துத் தடுத்தல் என்ற கருத்தை முன்வைத்தது.
ஆனால் இப்போது பயங்கரவாதம் நிரந்தரமாகி விட்டதால் அதனை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தைச் சட்டத்தின் பெயரிலேயே முன்வைத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே முறியடிக்கிறது. எனவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுத் தலையீட்டால் தடுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதைப் பெயரே உறுதி செய்கையில் உலகத் தமிழர்கள் இதனை தெளிவுபடுத்தி இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் அழுத்தத்தால் நீக்குவதற்கு கூட்டொருங்குச் செயற்பாடுகளைத் தொடங்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
அதே நேரத்தில் இலங்கையில் ஊடகச் சுதந்திரத்தை முற்றாகச் செயலிழக்க வைக்குமளவுக்கு ஆற்றலுள்ள நிகழ்நிலைக் காப்புச் சட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்வழி ஈழத்தமிழர்கள் நாளாந்தம் சிறிலங்காவால் மனித உரிமைகள் வன்முறைகளுக்கும் இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் ஊடகச் சுதந்திரமும் சிறிலங்காவால் பலவிதங்களில் பாதிப்புக்குள்ளாகும் நிலை தோன்றியுள்ளது. இதன்வழி ஈழத்தமிழரின் அடிப்படை மனித உரிமைகள் மோசமாகப் பாதிப்படையும் பொழுதும் அவர்கள் இனஅழிப்புக்கும் அவர்களின் நிலம் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்படும் பொழுதும் சமூக ஊடகங்கள் அவற்றை வெளிப்படுத்த இயலாது போகும். கூடவே உலக நாடுகளிலும் ஈழத்தமிழர்களின் மனித உரிமைகள் மற்றும் இனஅழிப்பு விடயங்களை முன்னெடுத்து உலக நாடுகளையும் உலக அமைப்புக்களையும் உதவக்கோரிப் பொதுக்கருத்துக்கோளங்களை ஊடகங்கள் வழி உருவாக்க முயலும் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் பலவிதங்களில் பாதிப்படையும் அபாயம் தோன்றியுள்ளது. இதனால் இந்த நிகழ்நிலைக் காப்புச் சட்டம் குறித்த விரிவான பார்வைகள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் வேகப்படுத்தப்பட்டு அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் ஈழத்திலும் புலத்திலும் ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்குச் சட்டக்கல்வி, அனைத்துலகச் சட்டக்கல்வி பயின்ற ஈழத்தமிழ்க்கல்விச் சமூகங்கள் இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கட்டமைக்க கூட்டொருங்குச் செயற்பாடுகளை உடன் தொடங்க அனைவரும் உழைக்க வேண்டுமென்பதும் இலக்கின் வேண்டுகோளாகவுள்ளது.
இவ்வாறு ஈழத்தமிழர்களின் இறைமையை அன்றும் இன்றும் என்றும் சட்டங்களால் ஒடுக்கி அவர்கள் சனநாயக முறைகளிலும் தங்கள் தேசியப்பிரச்சினையை உலகின் முன் கொண்டு வருவதை முடக்கும் சிறிலங்காவின் இந்த மனித உரிமை மீறல்களை கொண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை உலகு கண்டுகொள்ளாது செய்யும் ராஜதந்திரமாகத் தனது கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகநாடுகளையும் உலக அமைப்புக்களையும் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையில் தலையிடாதவாறு திசை திருப்புகின்றது. அதே நேரத்தில் தொடர்ந்தும் ஈழத்தமிழருக்கு இனம்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் அரசியல் பணிவைப் பெற முயல்கின்றது. இதற்கு நல்ல உதாரணமே, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சீ சரவணராஜா அவர்கள் சிறிலங்காவின் சட்டமா அதிபராலேயே அளித்த தீர்ப்பைப் பிக்குகளுக்கும் இராணுவத்துக்கும் அவர்கள் நிலையான நில ஆக்கிரமிப்பு செய்வதைத் தடுக்க இயலாதவாறு மாற்றி எழுதவைக்க எடுத்த அச்சுறுத்தல் முயற்சிகளும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தால் இராணுவத்தில் இருந்தபொழுது யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் என்று சந்தேகிக்கப்படும் இன்றையச் சிறிலங்காப் பாராளுமன்ற நாட்டின தேசியப் பாதுகாப்புக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகராவால் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட அச்சப்படுத்தல் பேச்சுக்களும், சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரின் உயிரச்ச விசாரணைகளுமே அவரை இன்னொரு நாட்டுக்குச் சென்று அரசியல் புகலிடம் கோரவைத்துள்ளது.
இந்நிலையிலேயே சட்டத்தின் ஆட்சி சிறிலங்காவில் இல்லை என்ற நிலையிலும் உலகநாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் சிறிலங்காவுக்கு அளிக்கும் மனித உரிமைகள் குறித்த நிபந்தனையற்ற நிதி உதவிகள் இன்னும் இன்னும் மனிதஉரிமைகள் வன்முறைகளை அதிகரிக்கவே செய்யுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் அவர்கள் இவ்வாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில் உலகுக்கு எடுத்துரைத்துள்ளார். இந்த உண்மையை உலகத்தமிழர்கள் தங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பிரதமர்களுக்குக் கூட்டொருங்குச் செயற்பாட்டின் மூலம் வலியுறுத்தி சிறிலங்காவுக்கு நிதி வழங்குவதற்கு மனித உரிமையைப் பேணலை நிபந்தனையாக்குவிக்க வேண்டுமென்பதே இலக்கின் இவ்வார மற்றொரு வேண்டுகோளாகவுள்ளது.

Tamil News