Ilakku Weekly ePaper 257 | இலக்கு-இதழ்-257-அக்டோபர் 21, 2023: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம், ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
காசாவும் ஈழமும் இருதேச இனங்களை ஒரு நாடாக்கினால் ஒரு தேசமக்களின் இறைமை இழப்பால் அவர்கள் இனஅழிப்படைவர் என்பதற்கு உதாரணம் – ஆசிரியர் தலையங்கம்
மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் பின்னணியில் இரகசியத் திட்டம்! – அகிலன்
மோடிக்கான கடிதம் பயனற்ற ஒரு முயற்சி –ஐங்கரநேசன்-செவ்வி
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் –மட்டு.நகரான்
ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
இந்தியா…ஹிந்துமதம்… எந்தப் பெயரை மாற்ற வேண்டும்? – இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்
இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா? – தமிழில்: ஜெயந்திரன்
மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
கிளிநொச்சி- பூநகரில் உல்லாச துறையை மேம்படுத்தும் வகையில் உல்லாசத்துறை வலயமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான இடத்தை ஒதுக்கி இருப்பதாகவும் லங்கா பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டு நேற்றையத் தினம் (வியாழக்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமா் மேற் கண்டவாறு கூறியுள்ளார் இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சிக் காலத்தில் வீதிகள் மட்டுமே புனரமைப்பு செய்யப்பட்டது.
ஆனால் எங்களுடைய ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு அங்கமாகவே மயிலிட்டி துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்படுகிறது.
இதேபோன்று பருத்திதுறை துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம், குருநகா், காரைநகா் போன்ற துறைமுகங்களையும் நாம் புனரமைப்பு செய்யவுள்ளோம். மேலும் பூநகரி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை வலயம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் “தமிழீழ தேச கட்டமைப்புகள்” ( “Structures of Tamil Eelam : A Handbook” ) என்ற நூல் நாளை (19) பேர்ண் நகரில் வெளியிடப்படுகிறது. ஆங்கில மொழியில் வெளிவரும் இந்த தொகுப்பாய்வு நூல்பற்றி மேலும் விடயங்களை அறிந்துகொள்ள அக்கினிப்பறவைகள் அமைப்பினர் இலக்கு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலை நாம் எமது வாசகர்களுக்கு தருகின்றோம்.
கேள்வி – “தமிழீழ தேச கட்டமைப்புகள்” என்ற நூலை அக்கினிப்பறவைகள் அமைப்பினராகிய நீங்கள் இன்று வெளியிடுகிறீர்கள். புலம்பெயர் தேசமொன்றில் பிறந்து வளர்ந்த உங்களைப் போன்ற இளையோருக்கு தேசவிடுதலை சார்ந்த அமைப்பொன்றை நிறுவி செயற்படும் சிந்தனை எவ்வாறு தோற்றம் பெற்றது?
பதில் – நாம் 2009ம் ஆண்டில் நிகழ்ந்த அழிவுகளை புலம்பெயர்ந்த தேசத்திலிருந்து பார்த்துக்கொண்டு இருந்தோம். எமக்கு அப்பொழுது இளைய வயது. அக்காலப் பகுதியில் புலம்பெயர்ந்த தேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவற்றில் கலந்துகொண்ட போதிலும் எம்மால் தாயகத்தில் ஏற்பட்ட அழிவினை தடுக்க முடியவில்லை.
இருப்பினும் மே 18னைத் தொடர்ந்து நாம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் எம்மை இணைத்துக் கொண்டோம். ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் செயலற்று இருந்தன (இருக்கின்றன). இவர்களுக்காக காத்திருக்க இது தருணம் இல்லை என்பதினால், நாம் இளையோராக ஒரு அமைப்பினை உருவாக்கினோம்.
கேள்வி – இந்த அமைப்பின் மூலம் நீங்கள் வேறு எந்தவகையான செயற்திட்டங்களை முன்னெடுக்கிறீர்கள்?
பதில் – ஆம். நாம் புலம்பெயர்ந்த தேசங்களில் பிறந்த இளந் தலைமுறையினருக்கு எமது போராட்டத்தின் தேவையினையும் மற்றும் அதன் வரலாற்றினையும் எடுத்து விளக்கிவருகிறோம். அத்தோடு புலம்பெயர்ந்த தேசங்களில் வலுவிழந்திருக்கும் தமிழீழ அரசியற்தளங்களை ஒரு புறத்தில் பலப்படுத்திக் கொண்டு வருகிற வேளையில், மறுபுறத்தில் புதிய அரசியல் தளங்களை உருவாக்கி, விரிவாக்குகின்றோம். அதற்கு எம்மால் மீள்வெளியீடு செய்யப்பட்ட தமிழீழத் தேசிய அடையாள அட்டை இதற்கொரு உதாரணமாகும்.
கேள்வி: இந்த நூலை இன்றைய சூழ்நிலையில் வெளியிடுவதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
பதில் – முதலாவது விடயம்: இந்நூலில் எடுத்துக்காட்டப்படும் தமிழீழ நடைமுறை அரசானது, சரியாக ஒரு தசாப்தத்துக்கு முன் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் அழிக்கப்பட்டது. அத்துடன் இவ்வரசின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையை முறியடிக்க வேண்டியதேவை எமக்குள்ளது.
இரண்டாவது விடயம்: ஆயுதப் போராட்டமானது எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அதாவது இலங்கைக்குள் தீர்வினைக் காண முற்பட்டவர்கள், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவுசெய்து, அடுத்த கட்டப் போராட்டத்துக்கான அத்திவாரத்தை இட்டுச்சென்றார்கள். அதற்குப் பின் ஆயுதங்கள் ஏந்தி எமக்கான இறைமையுள்ள நாட்டினை தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பினார்கள். 2009ம் ஆண்டு அவ்வரசு நடைமுறை ரீதியாக அழிக்கப்பட்டாலும், அவ்வரசு எமது நினைவுகளில் நிலைத்து நிற்குறது. ஆகையால் எமது போராட்டத்தின் தொடர்ச்சி அவ்வரசினூடாக தொடரவேண்டும்.
சர்வதேசத்தினதோ அல்லது பிராந்தியத்தினதோ நலன்களுக்கு இசைவாக செல்லத் தேவையில்லை. அது போன்று நிலைமாறுகால நீதியினூடாகவோ இலங்கை அரசினூடாகவோ செல்லத் தேவையில்லை. ஆனால் இப்போதுள்ள நிலைமையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வாதாகக் கூறும் பல தரப்பினர் இதனையே செய்கின்றனர். இதனை முறியடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்த தலைமுறைக்கு எமது அரசின் வரலாற்றினைச் சொல்லியாக வேண்டும்.
கேள்வி – இந்த நூல் உள்ளடக்கியிருக்கும் முக்கியமான விடயங்களாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் ?
பதில் – நாம் இங்கும் ஒளிப்படச் சான்றுகளை முக்கியமானவையாகக் கருதுகிறோம். ஏனெனில் ஒரு விடயத்தை நாம் எந்தளவுக்கு நன்றாக எழுத்தில் கொண்டு வந்தாலும், அதனைக் காட்சிப் படுத்தாவிடின், அது முழுமையானதாக இருக்காது. அது போல இவை முக்கியமானதாக எமனுக்குப் படுகின்றன. அத்துடன் தமிழீம் தொடர்பான ஒளிப்படங்கள், மற்றும் ஆவணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமல் செய்யப்படும் இந்த வேளையில் இவ்விடயத்தை நாம் முக்கியமானதாகக் கருதுகிறோம்.
கேள்வி- இந்த எமது நூலின் மூலம் அனைத்துலக சமுகத்திற்கு என்ன செய்தியை கொண்டு செல்கிறீர்கள்? உலகத் தமிழர்களுக்கு இந்த நூல் எந்த வகையில் முக்கியமானது?
பதில் – 2009ம் ஆண்டு சர்வதேசத்தின் வல்லாதிக்க சக்திகளும் மற்றும் பிராந்திய வல்லரசும் எமக்கு ஒரு தெளிவான விடயத்தினை சொல்லியிருக்கின்றன. அவர்களின் நலன்களுக்கு பாதகம் என்று கருதினால் அவர்கள் எந்த விளிம்புவரை செல்வார்கள் என்பதினை அவர்கள் உணர்த்தியுள்ளார்கள். ஒரு தசாப்தத்துக்குப்பின், போராட்டத்தின் அடுத்த தலைமுறையினராகிய நாம் இந்நூல் மூலம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், “இவர்கள் என்ன செய்தாலும் தமிழிறைமை என்னும் கோட்பாடு அழிக்கப்பட முடியாத ஒரு விடயமாகும்” என்பதாகும்.
உலகத் தமிழர்களுக்கு நாம் சொல்ல விரும்பும் செய்தி என்னவெனில், சேரர், சோழர், பாண்டியர், தஞ்சாவூர் கோயில் என்று நாம் பெருமைகொள்வது தவறல்ல. ஆனால் எம்முடைய வாழ்நாளிலே எமது கண்ணுக்கு முன்னால் மலர்ந்து பின்பு அழிந்த இந்நடைமுறை அரசு, தமிழர்களின் வரலாற்றில் அழியாத இடம்பிடிக்க வேண்டும். ஏனெனில் இவ்வரசை நிறுவு வதற்காகவும், இறுதியில் இவ்வரசை பாதுகாப்பதற்காகவும் முழு அகிலத்தையே எதிர் கொண்ட தமிழர்களின் வரலாறு மறக்கப்பட முடியாத ஒன்றாகும்.
கேள்வி: தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எமது அடுத்த தலை முறைக்கு கடத்தும் ஓரு உந்து சக்தியாக இந்த நூல் விளங்குமா?
பதில் – நிச்சயமாக. தமிழர் இறைமையை, தமிழீழ ஆட்புல ஒருமைப்பாட்டை கருத்தியலாக மட்டும் காவாமல் நடைமுறை ரீதியாகவும் நிகழ்த்திக்காட்டிய நீண்ட வரலாறு இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றை எமது இளைய தலைமுறை விளங்கிக் கொள்ளும் போது தேசம் தொடர்பான பற்றும் விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் இயல்பாகவே ஏற்படும்.
கேள்வி – புலம்பெயர் இளைய தலைமுறை பல்வேறுபட்ட நாடுகளில் பல்வேறு மொழிகளைப் பேசும் ஒரு சமூகமாகக் காணப்படுகிறது. இந்தநிலையில் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளிலும் இந்த நூலின் தேவை உள்ளதாக நீங்கள் உணரவில்லையா?
பதில் – நாம் அதனை நன்கு உணர்ந்தே உள்ளோம். இதுதொடர்பாக அக்கறையெடுத்துச் செயற்படுவோம்.
கேள்வி – இந்த நூல் தொடர்பான வரவேற்பு மற்றும் இது பற்றிய கருத்துக்கள் எவ்வாறு உள்ளன?
பதில் – இந்நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பினை நாம் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக இளந்தலைமுறையினரிடம் இருந்து பலமான வரவேற்புகள் கிடைக்கின்றன. ஏனெனில் அவர்கள் இந் நடைமுறை அரசு தொடர்பாக கேள்விப்பட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான போதுமான தகவல்கள் இதுவரை எவராலும் கொடுக்கப்படவில்லை. அத்தருணத்தில் இந்நூல் அவ் வெற்றிடத்தை நிறப்பியுள்ளது. தவிர வெளிநாட்டவர்கள் கூட இந்நூல் பற்றிய தமது நேரியல் கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
கேள்வி – எவ்வாறு இந்த நூலை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?
பதில் – இன்று (19.05.19) சுவிஸ் நாட்டில் இந்நூல் வெளியிடப்பபடுகிறது. அதுபோன்று வேறு நாடுகளிலும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்கினிப் பறவைகள் அமைப்பின் இணையத்தளத்தின் மூலம், அந்நிகழ்வுகளின் விபரங்களை, வெளிவந்தவுடன் அறிந்து கொள்ளலாம்.
கேள்வி – இளைய தலைமுறையினராகிய நீங்கள் புலம்பெயர் ஈழத் தமிழர் சமூகத்திற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
– எமது போராட்டம் ஒரு தேசிய விடுதலைப் போராட்டமாகும். நாம் எமது தேசிய அடையாளத்தினை மறைப்பதன் மூலம் அல்லது வேறு நாட்டவர்களுக்காக இலங்கையின் அடையாளத்தினைத் தழுவதின் மூலம், எமது போராட்டத்தின் ஆன்மாவினை நாமே சிதைக்கிறோம். இதனை நாம் தவிர்த்து, நாம் ஈழத்தமிழர்கள் மற்றும் எம்முடைய தாயகமானது தமிழீழம் என்பதினை தெளிவாக சொல்ல வேண்டும். அதுவே எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த பரிமாணத்துக்கான முதல் அடியாகும்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.
புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் அன்றைய தினம் இரவு பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுமார் 800 ஏக்கர் விவசாய காணி சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அரசாங்கத்தால் இந்திய தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் புதன்கிழமை (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் அன்றைய தினம் இரவு வரை உரிமைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துறையாடியிருந்ததுடன், விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
போராட்டத்துக்காக 2 பேருந்துகளில் பொதுமக்கள் வருகைத் தந்திருந்ததுடன், சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் அம்மக்கள் முத்து நகர் நோக்கி பயணமானார்கள். விவசாயிகளிடமிருந்த காணியை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளதோடு மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்கு பயண்படுத்தப்பட்ட குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முத்துநகர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமைதி காக்கும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஆழப்படுத்துவதற்கு இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் இணங்கியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃபிரெஞ்ச் (Marc-André Franche), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி பணிப்பாளர் கரேன் வைட்டிங் (Karen Whiting) மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களில் இலங்கை துருப்புக்களின் ஈடுபாடு குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை மார்க் அண்ட்ரே ஃபிரெஞ்ச் வரவேற்றுள்ளார்.
இலங்கையின் அமைதி காக்கும் திறனை வலுப்படுத்துவதற்கான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரித்தானியா தலைமையிலான மையக்குழு நாடுகளால் அண்மையில் முன்மொழியப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையில் தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, மோதல்கள் என்ற சொல்லின் ஊடாக இனப்பிரச்சினை என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது.
அத்துடன் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரின் போது நிறைவேற்றும் வகையில் பிரித்தானியா தலைமையிலான மையக்குழு நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த 9ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அப்பிரேரணை தொடர்பான உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல் நடைபெற்றதுடன், அதில் பங்கேற்றிருந்த இலங்கையின் பிரதிநிதிகள் அதனை நிராகரித்திருந்தனர். இந்த பின்னணியில் இலங்கை தொடர்பான மையக் குழு நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவதாக வெளியிடப்பட்ட பிரேரணையுடன் ஒப்பிடுகையில், இதில் கணிசமான திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதன்படி சகல தரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செயற்திறன்மிக்க பொறுப்புக்கூறல் செயன்முறை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னைய பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது தற்போது வெறுமனே பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று திருத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரதானமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்த விடயம், ‘பயங்கரவாதத் தடைச்சட்டம் விகிதாசார அடிப்படையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அதிகமாகப் பாதிக்கிறது’ என்று திருத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது.
இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர்.
உக்ரைன் – ரஷ்யா போர் ஏற்கெனவே “ஏராளமானோரை சென்றடைந்துவிட்டதாக,” உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார், இப்போது அதற்கான (போரை நிறுத்துவதற்கான) பொறுப்பு உலக தலைவர்களின் கையில் உள்ளது என அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொதுச்சபையில் பேசிய ஜெலன்ஸ்கி, புதினை தடுத்து நிறுத்தாவிட்டால், “அவர் இந்த போரை மேலும் விரிவாகவும் ஆழமாகவும் எடுத்துச் செல்வார்” என எச்சரித்துள்ளார்.
கடத்தப்பட்ட குழந்தைகள் வீடு திரும்புவதையும், போர்க்கைதிகள் விடுதலை, பணயக்கைதிகள் வீடு திரும்புவதையும் உறுதிப்படுத்துவது ஐநா பொதுச் சபையில் உள்ளவர்களிடத்தில் உள்ளதாக அவர் கூறினார்.
செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு “சிறப்பானதாக இருந்ததாக” ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் ஆதரவை தான் மதிப்பதாக கூறிய அவர், “ஆனால் முடிவில் அமைதியை சார்ந்தே அனைத்தும் உள்ளது,” என்றார்.
“இந்த போரை ரஷ்யா இன்னும் நீட்டித்துவரும் நிலையில் அமைதியாக இருக்காதீர்கள், அதற்கு எதிராக கண்டனம் தெரிவியுங்கள்,” எனவும் அவர் கூறினார்.
மன்னாரில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்களை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் போராட்டம் தீவிரமாகும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:
மன்னாரில் காற்றாலைத் திட்டங்கள் வேண்டாம் என 50 நாள்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலகத்துக்கு முன்பாகவும் மன்னார் மக்களும், சிவில் அமைப்பினரும் போராட்டம் நடத்தியிருந்தனர். ஆனால் இந்தப் போராட்டங்களையெல்லாம் கருத்திற்கொள்ளாத ஜனாதிபதி அநுர, காற்றாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களையும் அனுமதியையும் வழங்கியுள்ளார்.
மன்னார் மக்களின் வாழ்வுரிமையை இந்த அரசாங்கம் மறுத்து வருகின்றது. மக்களின் இறையாண்மையை அரசாங்கம் மீறுகின்றது. இது நியாயமா? என இந்த உயரிய சபையில் கேட்கின்றேன்.தற்போதைய ஜனாதிபதி போராட்ட இயக்கமொன்றில் இருந்துவந்துதான் இன்று அரசாங்கத்தின் தலைவராகியுள்ளார். ஆனால் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கி, எமது மக்களின் உயிரை துச்சமென மதிக்கும் வகையிலேயே செயற்படுகின்றார்.
இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக மன்னார் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடரும். இனிவரும் நாள்களில் கூடுதல் வீரியத்துடன், அதிகளவான மக்களுடன் அந்தப் போராட்டங்களை முன்னெடுப்போம் – என்றார்.
முகமாலையில் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த கண்ணிவெடி அகற்றும் பணிகள் தற்போது முற்றாக நிறைவடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போரின் பின்னர், முகமாலை, வேம்பொடுகேணி, இத்தாவில், கிளாலி ஆகிய பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.
கடந்த 14 வருடங்களாக சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளை முன்னெடுத்த ‘ஹலோ ரஷ்ட்’ நிறுவனம் தற்போது இறுதிக்கட்டப் பணிகளையும் நிறைவுசெய்து அங்கிருந்து வெளியேறியுள்ளது. கண்ணிவெடிகள் காரணமாக விடுவிக்கப்படாமல் இருந்த காணிகளை விடுவிப்பதற்கும் தற்போது நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் வடக்கு – கிழக்கில் முழுச்சுதந்திரத்துடன் செயற்பட்டோம். தற்போதைய, அரசின் ஆட்சியில் அவ்வாறு செயற்பட முடியாதுள்ளது – இவ்வாறு தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்னதேரர்.
தற்போது நடப்பவற்றைப் பார்த்து, துயரத்தின் உச்சத்தால் சுவரில் தலையை அடித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், எப்படியான சவால்கள் வந்தாலும் எமது நாட்டின் வீரம் மிகுந்த தலைவர்கள் தொடர்பிலும், சிரேஷ்ட தலைவர்கள் தொடர்பிலும் நாங்கள் கதைப்போம். ஏனெனில் பௌத்த சாசனத்தை அவர்கள் பாதுகாத்துள்ளனர். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்திலும், கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் எமக்கு எவரிடமும் அடிபணிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கவில்லை. வடக்கு, கிழக்கில் முதுகெலும்புடன் செயற்பட்டு பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தோம்.
அதேபோல், தொல்லியல் இடங்களை பாதுகாப்பதற்குரிய வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தோம். ஆனால் தற்போது அவற்றின் மீதான பிடிமானங்களை இழந்துள்ளோம். இது தொடர்பாகக் கதைக்கும்போது எம்மை அரசாங்க எதிர்ப்பாளர் என்று கூறுகின்றனர். சில கட்சிகளுக்குச் சார்பாகச் செயற்படுகின்றோம் என்றும் விமர்சிக்கின்றனர். நடப்பவற்றைப் பார்த்து துயரம் தாங்க முடியாது, தலையை சுவரில் அடித்துக்கொண்டேன். நான்கு நாள்கள் மருத்துவமனையில் இருந்தேன். ஆனால் வழுக்கி விழுந்தேன் என பொய்கூறினேன். துயரம் தாங்காது தலையை சுவரில் அடித்துக்கொண் டேன் என்பதே உண்மை. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை அரசாங்கம் எமக்கு வழங்க வேண்டும்-என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா (Marcelo Rebelo de Sousa) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் புதன்கிழமை (24) நடைபெற்றன.
இதன்போது இலங்கைக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை உறவுகளை மேம்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் நடைபெற்றன.
இதன் போது இலங்கை மற்றும் அவுஸ்திரேலியவிற்கு இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் இதன்போது கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், புதிய முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதன்போது, இலங்கை-பாகிஸ்தான் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை தமிழகம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸ் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டு துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.
ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.
விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான விசேட முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள்,அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார்.
விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் விசேட முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.