Home Blog Page 2

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வழக்கில் இலங்கை காவல்துறை அதிகாரி விடுதலை

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ்  அதிகாரியை  தமிழகம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ்   நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன்  பொலிஸ் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டு துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர்  இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது.

ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர்.

விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது  சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான விசேட முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த நிலையில் இவ் வழக்கில்  நேற்று புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள்,அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார்.

விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் விசேட முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அனைத்துப் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலக்கு – பிரதமர் ஹரிணி

அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் இலக்கு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும்.  அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்ல, நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கலந்துரையாடலான 12 ஆவது காலி கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இந்திய பெருங்கடலின் எதிர்காலத்தைப் பற்றிய கலந்துரையாடலுக்கான ஒரு தளத்தை ஒன்றிணைப்பதில் இலங்கை கடற்படையின் தொலைநோக்குப் பார்வையையும், தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். இது உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், ‘மாறிவரும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் கண்ணோட்டம்’ என்பது காலத்திற்கு ஏற்றதும் முக்கியமானதும் ஆகும். இந்தியப் பெருங்கடல் உலகின் மிகவும் நீட்டிக்கப்பட்ட மூலோபாய கடல்சார் களங்களில் ஒன்றாகும், இது வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய உயிர்நாடியாகவும் உள்ளது.

ஆயினும் அது புவிசார் அரசியல் போட்டிஇ சுற்றுச்சூழல் அழுத்தம், ஒழுங்கற்ற குடியேற்றம் மற்றும் நிர்வாக சவால்களிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களை இந்த பிராந்தியம் எதிர்கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் நாகரீகங்களின் ஒரு மையமாக இருந்து வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாத்தியமாக்கியுள்ளது. இன்று, மூலோபாய நலன்கள் ஒன்றிணையும் ஒரு அரங்கமாக உள்ளது. இதனால் இது போட்டியின் அரங்கமாகவும் ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகவும் அமைகிறது.

இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும்.  அந்த இடத்தை நாம் ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்லஇ நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும்.

இந்திய பெருங்கடல்  முன்னோடியில்லாத அழுத்தத்தில் உள்ளது. காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை பல்லுயிர், மனித பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைதிக்கு அச்சுறுத்தல் விடுகின்றன. கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தேசிய உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான், வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் நாடுகளிடையே ஆழமான அறிவியல் ஒத்துழைப்புக்கு அழைக்கிறோம்.

பயனுள்ள கடல்சார் நிர்வாகம் சமமாக முக்கியமானது. பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு அப்பால், போதைப்பொருள் கடத்தல் உட்பட பாரம்பரியமற்ற சவால்களையும் இலங்கை எதிர்கொள்கிறது. இது நமது கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட முன்முயற்சி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

மாறிவரும் கடல்சார் பாதுகாப்பு நிலை மற்றும் இலங்கை கடற்படையின் முக்கியப் பங்கைப் அங்கீகரிக்கும் வகையில், 2025 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் கடற்படைக்கு 92.5 பில்லியன் இலங்கை ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதமான அதிகரிப்பாகும். இந்த முதலீடு தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நமது கடல்சார் களத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வழக்கமான ரோந்துப் பணி, ஆய்வு மற்றும் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, கப்பல்களை இடைமறித்து, கடத்தல்காரர்களைக் கைது செய்து, அதன் மூலம் கடல்சார் களத்தை  பாதுகாப்பதில் இலங்கை கடற்படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். ஆயினும், இந்த சவால்களை இலங்கை மட்டும் சமாளிக்க முடியாது. இந்தியப் பெருங்கடலில் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு மற்ற நாடுகளின் தீவிர ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

கப்பல் போக்குவரத்து சுதந்திரம், சர்வதேச சட்டத்திற்கு மரியாதை மற்றும் கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு பதிலளிப்பது ஆகியவை தகவல் பகிர்வு, கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தது. கடலில் ஒரு விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு ஸ்திரத்தன்மையின் மூலக்கல்லாக இருக்க வேண்டும். கப்பல் போக்குவரத்து, மீன்வளம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் நீலப் பொருளாதாரம் வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் அதன் கரைகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஓட்டங்களுக்கு மையமானது. இது பிராந்திய சக்திகள் மற்றும் உலகளாவிய கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது. ஒத்துழைப்பின் மூலம்இ கடற்படைகள் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கலாம்இ ஆக்கிரமிப்பைத் தடுக்கலாம், சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடலாம் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பதிலளிக்கலாம். உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு பங்களிக்குமாறு இலங்கை அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறது.

ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தியப் பெருங்கடல் அமைதி, செழிப்பு மற்றும் வாய்ப்புகளின் களமாக இருக்க முடியும். சவால்கள் வலிமையானவைஇ ஆனால் செய்தி தெளிவாக உள்ளது. எந்தவொரு நாடும் தனியாக அவற்றை எதிர்கொள்ள முடியாது. அவர்களுக்கு பல்தரப்புவாதம், கூட்டாண்மை மற்றும் கடற்படைகள், அரசாங்கங்கள், தொழில் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையிலான ஈடுபாடு தேவை. “காலி கலந்துரையாடல்”  இந்த உணர்வை உள்ளடக்கியது என்றார்.

‘செழிப்பான தேசம் மற்றும் அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குடன் இலங்கை மக்கள் ஒன்றிணைந்துள்ளனர்: ஐ.நா-வில் ஜனாதிபதி உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றினார்.  இது பதவிக்கு வந்த பின்னர் அவர் ஐ.நா. பொதுச் சபையில் ஆற்றிய முதலாவது உரை ஆகும்.

அமைதி, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்தி அவர் தனது உரையில் பல்வேறு முக்கிய விடயங்களை எடுத்துரைத்தார்.

உலகளாவிய வறுமை, ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்கள் போன்ற பல சவால்களை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

காசா பகுதியில் தொடர்ந்து நிகழும் மனிதாபிமானப் பேரழிவு குறித்து அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மேலும், உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்றும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பாலஸ்தீனத்திற்கான தனி நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஊழலை ஒரு ‘தொற்றுநோய்’ என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இது அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகக் கூறினார். இலங்கையில் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

தனது உரையில், ‘துன்பத்திலிருந்தும் இருளிலிருந்தும் விடுபட்டு, செழிப்பான தேசம் மற்றும் அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குடன் இலங்கை மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழலற்ற, நீதிமிக்க ஆட்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், கோடிக்கணக்கான டொலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த உரையின் மூலம், உலகளாவிய அரங்கில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது?  – மு. திருநாவுக்கரசு

“ உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்று ஒரு பிரெஞ்சு பழமொழியுண்டு”. உன்னை  நோக்கி பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டு மேயாயினும் கூட நீ சத்தமிட வேண்டும். ஒரு பச்சைக் குழந்தைகூட தன்னருகே யாரும் துணை இல்லையேல் என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும்.
இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர் கள்  கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாய்  போராடாதிருக்கும்  நிலையில் உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது ; வெளிநாடுகளும் பாராது. உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின் நீ கை தூக்க வேண்டும். ஆதலாற் களத்தில் போராடுவதன்  மூலம் மட்டுமே உள்ளும், புறமும் கவனத்தை ஈர்த்துப்  போர்  கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும்.
“Only the fittest will survive ‘ அதாவது “தக்கன மட்டுமே உயிர் வாழும்” அதாவது இங்கு காணப்படும் சூழல் என்பது ஒன்று.  அந்தச் சூழலையும், தன்னையும் இணைத்துத் தனக்குப் பொருத்தமாகக் கையாள தெரிந்தவைத்தான்  உயிர் வாழும் என்பதே  இதன் முழுமுதற் பொருள்.
இந்த உயிரியல் டார்வினிசத்தைச்  சமூக அல்லது அரசியல் டார்வினிசமாகக்  கையாளும் போது அதை அதிகம் தலைமைத்துவப் பண்புடன் கூடிய வகையிற் கையாள வேண்டும். அதாவது உயிரியல் டார்வினிசத்தில்  அந்த உயிருக்குச் சுயநல உயிரியல் மரபணு ( selfish gene ) இயல்பாக இயற்கைத் தேர்வின் படி தத்துவத்தை வழங்குகி றது.
மனிதனும் உயிர் என்ற வகையிற் சுயநல மரபணுவைக் கொண்டவனேயானாலும் ஒரு சமூகமாகும் போது  அங்கு மேலதிகமாகத் தலைமைத்துவ ஆளுமை தேவைப்படுகிறது. இந்த வகையில் உயிரியல் டார்வினிசத்திலிருந்து சமூகவியல்  டார்வினிசம்  குறிப்பிடக்கூடிய அளவுக்குத் தெளிவான ஆளுமைப் பரிமாண வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
சமூகப் பரிமாணத்தைக் கட்டமைப்புச் செய்து முன்னெடுக்கும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டால் அந்தச் சமூகம் தக்க தேர்வுவின்றித் தேய்ந்து போய் அல்லது அழிந்து போய்விடும். அதாவது உயிரிகளில் காணப் படும் வரையறுக்கப்பட்ட உயிர்களின் தலைமைத்து வத்திற்கப்பால் மனிதச் சமூகத்தில்  நுண்ணறிவும், முன்னறிவும் கொண்ட  அளவாற் பெரிய ஓரினம் ( சிங்கள இனம்) அளவாற் சிறிய இனங்களின் மீது அதிக தலைமைத்துவ ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம் சிறிய இனங்களின் தெரிவு சுருங்கும், பாதிப்புக்குள்ளாகும். சீரழிவுக்குள்ளாகும். இந்த வகையில் ஈழத் தமிழர்கள் அதிகம் தலைமைத்துவப் பண்புடனும், முனைப்புடனும்  செயல்பட்டால் மட்டுமே காணப்படும் சமூக சூழல் யதார்த்தத்தில் தம்மைத் தக்க வைக்க முடியும்.
மனிதனும் ஏனைய பிராணிகள் போல ஓர் உயிர் என்பதால்  உயிரியல் டார்வினிசத்திலுள்ள பொதுத்தன்மைகள்  மனிதனுக்கும்  உண்டேயானா லும், உயிரினங்களில் அதிக நுண்ணறிவு கொண்டு மனிதன் சமூகமாகத் தன்னைக் கட்டமைப்பதில் வேறுபட்ட ஆளுமை அளவுகளைப் பிரயோகிக்க முடிகிறது.
அரசுள்ள அளவாற் பெரிய சிங்கள சமூகத் தோடு அரசற்ற அளவாற் சிறிய  தமிழ்ச் சமூகம் தலைமைத்துவ ஆளுமையில் தக்க முனைப்பைக் காட்டத் தவறினால் அந்தச் சமூகம் தன் வாழ் நிலையை இழந்துபோக நேரும் .
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் தம்மை தமிழர் என்ற உட்சமூக ரீதியாகவும், இலங்கை என்ற உள்நாட்டு ரீதியாகவும், அண்டை நாடு,  வெளிநாடுகள், சர்வதேச சமூகம் , உலகளாவிய அரசியல் நிலை  போன்ற காணப்படும் அனைத்துப் புறநிலை யதார்த்தத்திற்கும் பொருத்தமாக தமக்கான தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்தவகையில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலான அரசியற் சூழலில் ஈழத்தமிழர் நிலை யானது கூழ்முட்டை (Rotten egg)  நிலையையே கொண்டுள்ளது. மேற்படி நடப்புநிலை உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு, உலகளாவிய யதார்த் தத்தை உள்வாங்கி இப்போது ஒரு புதிய வகையில் தமிழ்த் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டுமென்று இக்கட்டுரை வேண்டி நிற்கின்றது.
ஏறக்குறைய 1970 களின்  பிற்பகுதியளவில் ஒற்றை உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம் தரைப்படை ,கடற்படை, பீரங்கிப்படை, விமானப்படை , சர்வதேச சரக்கு கப்பல் அணியென  வளர்ந்த நிலையில் கோட்டை கொத்தளங்களெல்லாம் அழிந்தவாறு குண்டூசிகூட இல்லாத நிலையை  ஆயுதப் போராட்டம் அடை ந்துள்ளது.
ஆனால் 1979 ஆண்டு 10 ஆயிரத்துக்குட்பட்ட படையினருடன் ஒரு பிரிகேடியரைத்  தலைமைத் தளபதியாகக் கொண்டிருந்த இலங்கை ராணுவம்  இன்று அதிநவீன ஆயுதங்களுடன்  கூடிய வகை யில் 3 லட்சத்து 46 ஆயிரம் படையினருடன் காணப் படுகிறது.
நாடாளுமன்ற அரசியலில் 21 உறுப் பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று சிதைந்து, சுக்குநூறாகி  தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உறுப்பினரையும் ,  இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி  ஒரு உறுப்பினரையும் பாதிக்குமேல்ச் சுருங்கி கிடக்கிறது.  மேலும் சனநாயகப் பண்பற்றுச் சீரழிந்து சின்னாபின்னமாகி  கிடக்கிறது.
2001 ஆம் ஆண்டு  அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல் உலகெங்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முது கெலும்பை உடைக்க வழிவகுத்த போதிலும் அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது.
எனவே மக்கள் போராட்ட அலையெனும் ஓராயுதம் உலகரங்கில் முதன்மை பெறத் தொடங்கியது. பறிக்கப்பட்ட வெடிகுண்டு,  துப்பாக்கி ஆயுதத்துக்குப் பதிலாக மக்கள் திரளெனும் ஓராயுதம் மக்கள்  சனநாயகக் கிளர்ச்சியாய் வடிவம் பெற்றது .
முள்ளிவாய்க்காலில் இராணுவம் அப்பா வித் தமிழ் மக்களைப் படுகொலை செய்ததோடு முடிந்து போகவில்லை. அங்கு அரச இராணுவம் தனது இராணுவச் சூளையில்  இனப்படுகொலை யென்னும் மிகக் கூரியதோர்  ஆயுதத்தை உற்பத்தி செய்தது.  எனவே  முள்ளிவாய்க்காலில் பறிபோன துப்பாக்கி-வெடிகுண்டு ஆயுதங் களுக்குப் பதிலாக மக்கள் காட்டுமிராண்டித் தனமாக கொல்லப்பட்டதன் வாயிலாக  இனப்படுகொலையென்னும் ஆயுதம் தமிழ் மக்கள் கைக்குக் கிடைத்தது.  இந்த வகையில் இனப்படுகொலை என்ற ஆயுதத்தை முதலீடாகக் கொண்டு தமிழ்மக்கள் தமது அரசியற் போராட் டத்தை முன்னெடுக்க வேண்டுமென்று 2016 ஆம் ஆண்டு இக்கட்டுரையாசிரியரால்  எழுதப்பட்ட “  டொனமூர் முதல் சிறிசேன வரையான உத்தேச அரசியல் யாப்பு” என்ற நூலில் தெளிவாக எழுதப் பட்டிருந்தது. அந்நூல் வெளியிட்டு விழாவில் தமிழரசு, தமிழ்க் கொங்கிரஸ் கட்சிகளின் முன் னணித் தலைவர்கள் உட்பட   பல்வேறு அரசியற் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்களும், ஊடகவியலாளர்களும், உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது ஈழத் தமிழர்களின் குறைந்தபட்ச உரிமைக்கான போராட்டங்களைக் கூட இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. முதலாவதாக இலங்கையில் நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற மரபு அரசியற் பாதை  இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதை வளர்க்கவே உதவியுள்ளது என்பதை 1833 அண்டு நடைமுறைக்குவந்த  கோல்புறூக் யாப்பு நடைமுறையிலிருந்து இன்றைய (2025) ஆட்சியா ளர்களின் யாப்பு நடைமுறை வரை  வெள்ளிடை மலையெனத் தெரிகிறது.
தமிழ்த் தலைவர்கள் குறிப்பாக சோல்பரி அரசியல் யாப்பை ஒட்டிய காலத்தில் 14 மணி நேரம்  மூச்சு விடாமற் பேசியும் பயனில்லை. தற்போது நாடாளுமன்றத்தில்  திரைப்படப் பாணியில்  14 நிமிடங்கள்  அங்கிங்குமாய் காலை, கையை உயர்த்தி, முதுகை வளைத்து, கண்ணை  உருட்டி சொண்டைப்  பிதுக்கிப் பேசியும் எந்த பயனுமில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டி யிட்டுத் தமக்கான மக்கள் ஆதரவை உள்ளும், புறமும் நிரூபிப்பது சரி.  நாடாளுமன்றத்தில் பேச்சுப்போட்டி நடத்தி எதனையும் சாதிக்க முடியாது. மாறாக நாடாளுமன்றத்தை உள்ளும்,  புறமும் போர்க்களமாக மாற்றவல்ல திட்டங்களை யும், வியூகங்களையும் வகுத்து அதற்கூடாக போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், புறமும்,  உலக அரங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டும்.  இதற்கான வியூகங்கள் வகுக்கப் பல வழிகளுண்டு. இதற்கான வியூகங்களைப் பின் பொருனிக் கட்டுரையில் ஆராய்வோம். இப்போது போராட்டத்துக்கான முதற் திட்டத்தை வரையறை செய்வோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளும், புறமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை, இந்தியா தவிர  மேலும் 31 நாடுகளில் அந்த தடை பட்டியல் நீண்டுள்ளது. ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே  உள்ளும், புறமும் இடமில்லை. ஆனால் இனப் படுகொலைக்கெதிரான குரலை மனிதநேயத்தினடிப்படையில் உலகெங்கும் முன்னெடுக்க முடியும்.
அதனைத்  தமிழகத்திலும் முன்னெடுக்க லாம், முழு இந்தியாவிலும் முன்னெடுக்கலாம், அமெரிக்காவிலும் முன்னெடுக்கலாம், ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் முன்னெடுக்கலாம், உலகின் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக்கலாம்.  அது எதிரிக்கும், தமிழர் உரிமைகளை எதிர்க்கவல்ல வேறு சக்திகளுக்கும் எதிரான ஒரு பலம் வாய்ந்த ஆயுதம்.
செம்மணி புதைகுழியும் இதற்கு அரணமைக்கிறது.  குறிப்பாக 1958 ஆம் ஆண்டி லிருந்து கறுப்பு யூலை வரையும் அதன் பின்பும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அனைத்து மனிதப் படுகொலைகளும் தொடர்பான நீதி  நிர்வாக நடவடிக்கைகளும் இவற்றுக்கு அணிசேர்க்கின்றன.
முதலாவதாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை, இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறை,  படுகொலை, சிறுவன் பாலச்சந்தி ரன் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டமை  என்பனவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி அதற்கான போராட்டத்தை உள்நாட்டு அரங்கிலும், தமிழகத்திலும்,  இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுக்க வேண்டும்.இதற்கு  வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தளமாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை. தமிழ்ச் சமூகம் ஒன்று திரண்டு  நடைபெற்ற அநீதிகளுக்கு  நீதி கோரிப் போராடுவதற்கான ஒரு பொதுச் ஒரு செயற்குழுவை உருவாக்க வேண்டும்.   இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம்.  சிவில் சமூக உறுப்பினர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள்,  மூத்த குடிமக்கள்  உள்ளடக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு செயற்குழுவை உருவாக்கி பிரச்சனை கையாளுவதற்கு அதற்கு அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.   உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதுவே தமிழ் மக்களால்  உள்ளும்,  புறமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  அமைப்பாக இருக்க வேண்டும். அதுவே எம் மத்தியில் ஏற்பட்டுள்ள உள் உடைவுகளைச் சரி செய்வும் புதிய செயல்பூர்வ மான ஒரு பாதையை வடிவமைக்கவும்  வழி கோலும்.
“ An idle mind is the devil’s workshop” “வெறும் மனம் பிசாசின் பட்டறை” என்பதற்கிணங்க போராடாது  தேங்கி வரண்டு கிடக்கும்  ஒரு சமூகத்தின் மனதில் பிசாசுகள் குடிகொண்டு அதனை தங்கள் பட்டறையாக மாற்றிவிடும். இப்போது தமிழினத்தின் அரசியலும் அப்படித் தான் உள்ளது.
எனவே இனப்படுகொலை என்ற ஆயுதத் தைக் கையிலேந்தி அதற்காகப் போராட வல்ல ஒரு அமைப்பைச் சனநாயக பூர்வமாக வடிவமைத்து வெற்றிடங்களில்  நிரப்பிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.  சர்வதேச நாடுகளும் தமிழரின் தலையில்  கொண்டையும் கட்டி, கொண் டையிற் பூவும் கட்டி , அதற்கப்பால் தலையில் குருவி கூடும் கட்டி செல்லும்.
உலகெங்கும்  சிதறி  வாழும் ஈழத் தமிழர்களே!  ஈழத்தமிழ் மண்  இந்து மாகடலின் மையத்தில் இந்தியாவின் வாசற்படியாக இருக்க வல்ல அதன்  கேந்திர அமை விடத்தின் நிமித்தம் அது உலகப் பெரும் வல்லரசுகளை யெல்லாம் ஈர்க்கவல்ல புள்ளியிலுள்ளது. சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய புள்ளியிலுள்ளதால்  அதனை ஒரு முதலீடாக்  கொண்டு   அறிவாற்றலுடனும்,  தமிழ் தலைவர்கள் செயல் பட வேண்டும்.

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்…

தியாக தீபம் திலீபனின் 10ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதிபர் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதி, இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள பிரதிநிதி  மற்றும் வெள்ளை மாளிகை ஜனாதிபதி பணிக்குழாம் பணிப்பாளர் செர்ஜியோ கோர் (Sergio Gor)  உடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் வர்த்தக, வாணிப,சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட இருநாடுகளுக்கும் முக்கியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தத் துறைகளை மேலும் முன்னேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு  பலமான மக்கள் ஆணையுடனான புதிய அரசாங்கம் என்ற வகையில், பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வளமான பொருளாதார  முன்னுரிமை  அடிப்படையில் அமெரிக்காவுடன் ஒரு  செயற்பாட்டுடனான மற்றும்  மிக நெருக்கமான உறவைப் பேண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் உட்பட, மக்களின் எதிர்காலத்திற்காக பொருளாதாரத்தின் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்குத் தேவையான மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக  சமமின்மையை நிவர்த்தி செய்தல், இருதரப்பு வர்த்தகத்திற்கான தடைகளைக் குறைத்தல், நியாயமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக ஒரு உடன்பாட்டை எட்டுதல்  மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன் போது  இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள்   இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான கூட்டத்தில் வட, கிழக்கு உறவுகள் பங்கேற்பு

ஜெனிவாவில் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்தில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பமாகி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கிவரும் கிளைக்கட்டமைப்புக்களில் ஒ;றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழு என்பது சகல நபர்களையும் வலிந்து காணாமலாக்கப்படல்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான பிரகடனத்தை ஏற்றுக் கையெழுத்திட்டுள்ள உறுப்புநாடுகளால் அப்பிரகடனம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்காணிப்பதற்கான சுயாதீன நிபுணர்களை உள்ளடக்கியதொரு கட்டமைப்பாகும். இக்குழுவில் உறுப்புநாடுகளால் முன்மொழியப்படும் 10 உறுப்பினர்கள் உள்ளடங்குவர்.

இக்குழுவின் 29 ஆவது கூட்டத்தை முன்னிட்டு இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல் விவகாரம் கையாளப்படும் முறைமை, அதனுடன் தொடர்புடைய கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடு என்பன தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பனவும், சிவில் சமூகத்தின் சார்பில் கொள்கை ஆய்வுக்கான அடையாளம் நிலையம், சர்வதேச மன்னிப்புச்சபை, தமிழ் உலகம் அமைப்பு, கிழக்கு சமூக அபிவிருத்தி அமையம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு உள்ளிட்ட அமைப்புக்களும் தமது அறிக்கைகளை ஏற்கனவே இக்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளன.

இக்குழுவில் நாளையும் (26), நாளை மறுதினமும் (27) இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று புதன்கிழமை (24) ஜெனிவா பயணமாகினர்.

அதேவேளை வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா சென்றடைந்துள்ளார்.

மட்டக்களப்பு: குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிக்கு நிதி மதிப்பீடு

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் மனித புதைகுழியென நம்பப்படும் குருக்கள்மடம் பிரதேசத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதி மதிப்பீட்டை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

நீதிமன்றம் 2.8 மில்லியன் ரூபாய் கோரிக்கையை நிதி அமைச்சு மற்றும் நீதி அமைச்சிற்கு அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளது.

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 150ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மனிதப் புதைகுழியை அகழ்வாய்வு செய்ய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு  கடந்த 23ம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஸப்னா ஸிராஜ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அகழ்வாய்வுப் பணிகளுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மதிப்பீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதை மேல் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டதாக வழக்கு விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பான சட்டத்தரணி முசாம் முபாரக் தெரிவித்தார்.

கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரியினால் மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு குறித்து   அவதானம் செலுத்தப்பட்டது. இதற்கமைய 2.85 மில்லியன் ரூபாய் பாதீட்டின் பட்ஜட் பிரேக்டவுன் (budget breakdown)  நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இந்த பாதீட்டு நிதியினை பெற்றுக்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தின் ஊடாக நிதி அமைச்சுக்கும், நீதி அமைச்சுக்கும் அனுப்புமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஒக்டோபர் 9, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் ஓகஸ்ட் 25, 2025 அன்று அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

எலும்புக்கூடுகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படாமல், அகழ்வாய்வினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள, இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதலாவது மனித புதைகுழி இதுவாகும்.

1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைத்ததாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்…

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று(24)  ஜெனீவாவுக்கு  பயணம் மேற்கொள்கிறார்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக அவர் ஜெனீவாவுக்கு செல்கிறார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐ.நா. குழுவின் 29ஆவது அமர்வில் இம்முறை இலங்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்த அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நடைபெறுவுள்ளதுடன் இதன்போது இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நிலைமை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்படும்.

இலங்கை தொடர்பாக நாளைமறுதினம் (26) மொத்தம் ஆறு மணி நேரம் மதிப்பாய்வு செய்யப்படும்.
அத்துடன் அந்தந்த நாடுகளில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை விசேட குழு ஒன்று இதன் போது முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இனப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட தமிழரசு கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது.

இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக் கோரி, “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என தலைப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசு கட்சி அனுப்பி வைத்துள்ளது.

ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் ஆகின்ற நிலையில், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாக, தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

தங்களது மத்திய குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகவும் இலங்கை தமிழரசு கட்சி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களிலும் அதன் பின்னரான சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கான அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.