Home Blog Page 3

மன்னார் காற்றாலை திட்டத்தை தடையின்றி தொடருமாறு ஜனாதிபதி அறிவிப்பு

யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு, மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு ஆவணம், வட்ஸ்அப் செயலி ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதிகளைத் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ ஆவணம் கிடைத்த பின்னர் அதன் விபரங்களைத் தாம் பகிரங்கப்படுத்த முடியும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாடிகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாடிகளை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியின் பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றாலை நிறுவல் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னாரில் தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அத்துடன், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னபாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதேநேரம் நிலைமையை அறிந்து பரிந்துரைக்கும் வகையில் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்திருந்தார்.  அந்த குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதியின் பணிப்புரையும் வெளியாகியுள்ளது.

அதேநேரம், இந்த பணிப்புரைக்கு மேலதிகமாக, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள சுற்றாடல் சம்பந்தமான தடுப்பு நடவடிக்கைகளையும் உரிய முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதியால் அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்ட ஆவணம் தமக்கு கிடைத்துள்ளதாக காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிடும் போராட்டக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அருட் தந்தை மார்க்கஸ் தெரிவித்தார்.  எனினும், ஜனாதிபதியின் பணிப்புரையைத் தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

திருகோணமலையில் மீனவர்கள் போராட்டம்!

கட்டு வலையிலுருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள மீன்பிடி திணைக்களத்தின் முன்பாக மீனவர்கள் இன்று புதன்கிழமை (24) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை – அரசடி சூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்பாட்டத்தில் ஏனைய மீனவ சங்கங்களும் இணைந்து கொண்டு தங்களது ஆதரவையும் வழங்கியிருந்தார்கள்.

இதன்போது “எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்காதீர்கள்”, “கட்டுவலையில் களவு செய்யாதீர்கள்”, “கட்டுவலைகளை சேதமாக்காதீர்கள்”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் குறித்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர்.

கட்டுவலையின் மூலம் 56 இடங்களில் அனுமதி பெற்று தாம் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் சிலர் தோணியில் தமது கட்டுவலைக்கு அருகில் வந்து கூட்டில் சிக்கியிருக்கின்ற காணவாய் மீன்களை விசேட தூண்டில்களை பயன்படுத்தி திருடுவதோடு வலைகளையும் சேதப்படுத்தி செல்கின்றனர் இதனால் மீன்கள் வெளியேறிவிடுகின்றன இதனால் தமது வருமானம் இழக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கவலை வெளியிடுகின்றனர்.

1935 ஆம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக கட்டுவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் தமது வாழ்வாதாரத்தை அரசாங்கம்  பாதுகாத்து திருட்டில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்தார் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் சபையின்  பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk)   இடையிலான சந்திப்பு  நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித உரிமை தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும்  ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர  பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவும் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர  பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டோரினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.

இந்நிலையில்,வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தியாகதீபம் திலீபனின் ஊர்திக்கு முன்பாக பட்டாசு கொளுத்தியவர் கைது!

தியாகதீபம் திலீபனின் ஊர்திக்கு முன்பாக பட்டாசு கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறையில் நேற்று இடம்பெற்றுள்ளது. தியாகதீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, தாயகத்தில் ஊர்திப்பவனி இடம்பெற்று வருகின்றது.

இந்தப் பவனி நேற்று பருத்தித்துறையைச் சென்றடைந்தது. இதன்போது பருத்தித்துறை நகர முதல்வர் வின்சன் டி போல் டக்ளஸ் போல், வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் உணர்வுபூர்வமாக மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த ஊர்தி, பருத்தித்துறை நகர சுற்று வட்ட வீதியூடாகப் பயணித்து நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக நிறுத்த முற்பட்டபோது அங்கிருந்த ஒருவர் பட்டாசுகளைக் கொளுத்தி ஊர்திக்கு முன்பாக வீசியுள்ளார். இதன்போது, பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தனது பாதணியால் பட்டாசுக் கோர்வையை மிதித்து, அதைத் தொடர்ந்து வெடிக்காமல் பார்த்துக் கொண்டதுடன், இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் அந்த நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மதுபோதையில் இருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட் டன.

செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு – பகலாக எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எனவே, தமிழ் மக்கள் பெருவாரியாக இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் – என்றனர்.

தாய்வானை கடுமையாக தாக்கியது ரகாசா சூறாவளி – 14 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ரகாசா தாய்வானை கடுமையாக தாக்கிய நிலையில், சீனாவின் தென் கடல் பகுதியை ஊடறுத்து ஹொங்கொங்கை தாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த சூறாவளி காரணமாக தாய்வானில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருவதுடன் வௌ்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.

தாய்வானின் கிழக்கு ஹுவாலியனில் உள்ள ஒரு ஏரியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் 14 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்த அனர்த்தத்தில் 120க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தாய்வானின் தீயணைப்பு படை அறிவித்துள்ளது.

அதேநேரம், இந்த சூறாவளி காரணமாக தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலிருந்து சுமார் 370,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே ஹொங்கொங் தமது எச்சரிக்கையை 10ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளது, இது உச்சபட்ச எச்சரிக்கையாகும்.

இதன்காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், ரகாசா சூறாவளி ஹொங்கொங்கை தாக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹொங்கொங் விமான நிலையம் 36 மணிநேரம் மூடப்பட்டுள்ளது.

தெற்கு சீன பகுதியில் அடுத்த சில மணி நேரங்களுக்குள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக பாரிய மண்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்கூறப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர்-அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நோக்கில்,  அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில்  (UNGA), இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புக் குறித்து எக்ஸ் தளத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளதாவது,

“அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தேன், இதன்போது, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார் ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வெளிவிகார அமைச்சரைச் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கில் உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அமைச்சர் விஜித ஹேரத்தும் சென்றுள்ளார்.

அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை  (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஜனாதிபதி பொதுச் சபையில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பல்கலைக்கழக மாணவர்களால் செவ்வாய்கிழமை (23) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் நாரஹேன்பிட்ட மற்றும் பொரளைக்கு இடையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பேஸ்லைன் வீதியை மறித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் வீதி மறிக்கப்பட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து நெறிசலால் பயணிகள் பெரும் சௌகரியத்தை எதிர்கொண்டனர். பட்டங்களுக்கான தெளிவான தகுதிகளையும், பட்டதாரிகளுக்கான எளிமையான ஆட்சேர்ப்பு செயல்முறையையும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் பேச்சுவார்த்தைகளைகளுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவித்து இவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் கையொப்பங்கள் கையளிப்பு!

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சேவிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் கையளிக்கப்பட்டன.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இக் கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம். சந்திரகுமார் அவர்களும், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும்  பிரதி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தில் நீதியரசர் திரு சீ.வீ. விக்னேஸ்வரன், கெள.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் திரு செ. கஜேந்திரன், கௌ. செல்வம் அடைக்கலநாதன், திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. முருகேசு சந்திரகுமார் மற்றும் திரு எஸ். நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர்.

காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப் படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும்,  கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை நேரடியாகவும் ஐ.நா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடந்த இச்சந்திப்பு கையெழுத்து ஆவணங்களையும் கடிதப் பிரதியையும் கையளித்ததுடன் முடிவு பெற்றது.

மாகாண சபைத் தேர்தல் தாமதம்: இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் – தமிழரசுக் கட்சி

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் கூட்டாக வலியுறுத்தினர்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தினால் காங்கேசன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 63மில்லியன் டொலர்கள் நன்கொடையாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வர்த்தகதுறைமுகமாக செயற்படுத்த முடியாதென அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாட்டையும் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், வைத்தியர் சத்தியலிங்கம், துரைராச ரவிகரன், சண்முகம் குகதாசன், வைத்தியர் ஸ்ரீநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதோடு அர்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட்டு நிலையான சமாதானம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா தனது கரிசனையை வெளிப்படுத்தியமைக்கு நன்றிகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், உள்நாட்டில் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதனை தொடர்ந்தும் தாமதப்படுத்துவதற்கே முனைந்து வருகின்றது. குறிப்பாக எல்லைமீள் நிர்ணய அறிக்கையை காரணம் காண்பித்து தேர்தலை பிற்போடுவதற்குரிய நடவடிக்கைகளையே முன்னெடுக்கின்றது.

அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்படுகின்ற நிலையில், சாணக்கியன் எம்.பியால் கொண்டுவரப்பட்டுள்ள பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பிரேரணை நிறைவேற்றுவதன் மூலமாக உடனடியாக தேர்தலை நடத்த முடியும். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுதல்களை முன்னெடுக்கின்றது.

மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்துவதன் ஊடாகவே ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகரம் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள விடயம் நடைமுறைக்கு வருவது சாத்தியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்கள்.

தொடர்ந்து, காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இந்தியா 63மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளபோதும் தற்போது அரசாங்கம் அத்துறைமுகத்தினை வர்த்தக ரீதியான துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு தயாரில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக இலங்கை வர்த்தக சம்மேளனத்துக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது, இந்திய முதலீடு;ட்டாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு தங்களது உற்பத்தியை அனுப்பி அதன்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைப்பதற்கான செலவீனம் தொடர்பில் கரிசனைகளை வெளிப்படுத்தியதோடு காங்கேசன்துறை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதன் ஊடாக தமது முதலீடுகளை விஸ்தரிக்க முடியும் என்றும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த முதலீடுகள் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு வருகின்றபோது இயல்பாகவே அவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே அந்த விடயத்தில் அரசாங்கம் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கண்டிப்பதோடு இவ்விடயம் சம்பந்தமாக இந்தியா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுத்தினர்.

இதனையடுத்து, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு தான் தொடர்ச்சியாக அரசாங்கத்தின் சகல மட்;டங்களிலும் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இந்தியா ஒரு தேசமாக சர்வதேச அரங்கிலும் அந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தொடர்ச்சியாக அந்த விடயத்தினை முன்னெத்துச் செல்வோம் என்றும் துறைமுக அபிவிருத்தி விடயம் சம்பந்தமாக அரசாங்கத்துடன் உரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.