Home Blog Page 4

23 சதுர கி. மீ. பரப்பிலேயே இன்னும் மிதிவெடி அகற்றப்பட வேண்டும் – சர்வதேச மாநாட்டில் இலங்கை தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் இன்னமும் 23 சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று சர்வதேச கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் இலங்கை தெரிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட் டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயல்பாட்டுக்கு பாராட்டும் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 130 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனிவா சர்வ தேச மையம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி நடவடிக்கைக்கான ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்புக்குழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளரும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் பணிப்பாளருமான டபிள்யூ. எஸ். சத்யானந்த, பிரதிப் பணிப்பாளர் வி.பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கில் ஒரு சதுர கிலோ மீற்றர் தூரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த, 3 வருடங்களில் இலங்கையை மிதிவெடிகள் இல்லாத நாடாக மாற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இன்னும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 23 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் மாத்திரமே கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை பிரதிநிதிகள் மாநாட்டில் தெரிவித்திருந்தனர்.

வெளிநாாடுகளில் வாழும் இலங்கையா்களுக்கு நிரந்தர விசா – அரசாங்கம் புதிய திட்டம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாதவர்கள் விரைவில் இங்கு வசிக்கவும் வேலை செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிடவிசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கான விதிமுறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன, விரைவில் திட்டத்தை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றார். வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர் குடியுரிமை நிறுத்தப்பட்ட இலங்கையர்கள், இலங்கை அல்லாத அவர்களின் மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகள் இங்கு வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்கள்.

விண்ணப்பம் செய்பவர் விசாவிற்கு 1,000 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் இலங்கை அல்லாத மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தலா 400 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும். அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாத, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பல முறையீடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் தனது கொள்கைக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். தற்போதைய தேவையின்படி, முதல் வருடத்தில் 3,000 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 10,000 விண்ணப்பங்களை அவர்கள் எதிர்பார்ப்பதாக இலுக்பிட்டிய கூறினார்.

பிரதம குடிவரவு அதிகாரி (ஈ.டி.ஏ. மற்றும் விசா), எம்.டி. செய்னுல் ரிலா, ஒரு குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வதிவிட விசா வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்று கூறினார். வதிவிட விசாக்கள் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு அதன் பிறகு புதுப்பிக்கப்படும் என்றார். பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், பொதுச் சேவையில் சேரவும், வியாபாரத்தில் ஈடுபடவும், இலங்கையில் முதலீடு செய்யவும் முடியும். அதேநேரம் விசாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் வர்த்தமானியில் வெளியிடப்படும்.

கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வி! – அரசாங்கம் கையில் எடுக்கவுள்ள புதிய துருப்புச் சீட்டு

அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.

வெற்றிகரமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற தலைப்பை எதிர்வரும் தேர்தல்களில் பிரதான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மகத்தான வெற்றியைப் பெற்றதாகக் காட்டி அதனைப் பெரிய துருப்புச் சீட்டாக மாற்ற அரசாங்கம் திட்டங்களைத் தயாரித்திருந்தது.

ஆனால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும், இலங்கையின் பிரதான கடனாளியான சீனா, பாரிஸ் கிளப் முன்வைத்த பிரேரணைக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து அரசாங்கம் புதிய திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன்படி, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத்திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது.

அல்லது இரண்டு கொள்கைகளின் கீழ் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தைச்செயல்படுத்த வேண்டும். ஆனால் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக உலகில் எந்த நாடும் இதுபோன்ற இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. அப்படி நடந்தால், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் செய்து கொள்ளும் கடன் ஒப்பந்தங்களை அது கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் அனைவரும் ஒரே திட்டத்தின் கீழ் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், சீனா மற்றும் பாரிஸ் கிளப்புடன் தனது கடைசித் துருப்புச் சீட்டாக இரண்டு கடன் திட்டங்களை செயல்படுத்த ஒரு உடன் பாட்டை எட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணிலும் பசிலும் பேசியது என்ன? ராஜபக்ஷக்களின் எதிா்ப்புக்கு மத்தியில் ஐந்தாவது சந்திப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பில் இருவருக்கும் இடையில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இருவருக்கும் இடையில் ஐந்தாவது தடவையாக இந்தச் சந்திப்புஇடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணிலுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சமீப ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் இதுவரையில் கிடைக்கவில்லை.

அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் சூழலே உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்க வேண்டும்.அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மைத்திரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூறிய பரிந்துரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? – கா்தினால் கேள்வி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ 2021 ஆம் ஆண்டு தம்முடன் தொலைபேசியில் உரையாசிய போது கூறிய விடயங்களை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது எனவும், ஏனெனில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி தம்முடன் தொலைபேசியில் உறையாடினார் என்பதனை தாமும் தமது செயலாளரும் நிருபிக்க முடியும் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த பேராயர் கர்தினால், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இடமாற்றம் செய்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது” என குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்த போதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருகோணமலை நகர் மீது அந்திய நாடுகள் கண்வைப்பதற்கு வளங்களே காரணம் – தேசிய மக்கள் சக்தி

திருகோணமலை நகர் முக்கிய வளங்களை கொண்டு காணப்படுவதால் பல நாடுகள் கண் வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்தார்.

திருகோணமலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் இந்தியா, சீனா ,அமெரிக்கா எந்த நாடாக இருந்தாலும் திருகோணமலை மீது கண் வைத்துள்ளது. தேசிய சொத்துக்கள் விற்பனை செய்து கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்த போக்கும் காரணமாக உள்ளது. சம்பூர், மற்றும் பெற்றோலிய வளம், துறைமுக, சுற்றுலாத் துறை போன்றன இதற்குள் அடங்குகின்றன.

இந்த காணிகள் விற்பனை செய்யப்படுகிறது மக்கள் நலனுக்காக இன்றி அரசாங்கத்தின்தேவைக்காக இதனை செய்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி ஆட்சி காலத்தில் இது போன்ற விடயங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் ஆட்சி மலரும் .

இந்தியாவின் ஆதிக்கம் தற்போது இங்கு வருகின்றமை தொடர்பில் மக்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாடு பாரிய கடனை பெற்று அதனை செலுத்த முடியாது இது போன்ற தேசிய சொத்துக்களை விற்பனை செய்து கடனை அடைக்க பார்க்கின்றனர். இதனை நடை முறைப்படுத்த அதற்கேற்ற ஆளுனரை நியமித்துள்ளார்.

முதலீட்டாளர்களுடன் சேர்ந்து பயணித்தாலும் மக்கள் நலனில் அக்கரை செலுத்த வேண்டும். ஜனாதிபதிக்கு இருப்பது இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்களே புதிய தேர்தல் வர இருக்கிறது. புதிய இரு ஆளுனர்களின் நியமனத்தால் மக்கள் மீது சுமைதான் உளளது. வடமேல் மாகாணத்தில் ஹாபிஸ் நசீர்,தென் மாகாணத்தில் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்கள் முன்னால் சுற்றாடல் அமைச்சர் முன்னால் முதலமைச்சர் குற்றம் சாட்டப்பட்டவர்தான் இவர் கடந்த காலங்களில் தேவையற்ற விடயங்களுக்கு மண் அகழ்வுக்காக அனுமதி கொடுத்தவர்.

மூதூர் சாபி நகர் பகுதியில் மண் அகழ்வுக்காக தேவையற்ற விதத்தில் அனுமதி கொடுத்தவர் இவரை ஏற்றுக் கொள்ள முடியாது நீதிமன்றில் பாராளுமன்ற பதவி பறிக்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டவர் இவர் போன்றவர்களுக்கு ஆளுனர் பதவி வழங்குவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.

தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து பேச்சு

IMG 20240504 WA0019 தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து பேச்சுதமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசில் நிதி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில், இலங்கை மக்களுக்கு தமிழக அரசு வழங்கிய உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நினைவு கூர்ந்தார்.

அத்துடன், தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகளை வலுவாக பேணவும் இருவரும் கலந்துரையாடினர்.

கோவிந்தன் கருணாகரனின் கருத்துக்கு மனோ கணேசன் பதில்

“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என மும்முரமாக செயற்படும் உங்களுக்கு எதற்காக சஜித் தூது விட வேண்டும் என எனக்கு தெரியவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில் உறுதியான முடிவை எடுங்கள். முதலில் அதை செய்யுங்கள். அப்புறம் புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம். சஜித்திடமும் பேசலாம்.

தன்னை சந்தித்த “மக்கள்-மனு வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக தூதுக்குழு”விடம் சஜித் பிரேமதாச, தான் 13ம் திருத்த மாகாணசபை சட்டத்தை முழுமையாக அமுல் செய்ய உள்ளதாகவும், அதுபற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்க இருப்பதாகவும், அதன் மூலம் சிங்கள மக்களின் ஆணையை பெற உள்ளதாகவும், எனது முன்னிலையில் உறுதி அளித்தார். மக்கள்-மனு வடக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக தூதுக்குழுவிடம் இதுபற்றி நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கேட்டு அறியலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் அமரர் சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வில், கோவிந்தன் கருணாகரம் எம்பி, தமுகூ தலைவர் மனோ கணேசனை பற்றி வெளியிட்ட கருத்து பற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தனது இந்த நிலைப்பாடு பற்றி, சஜித் மே தினம் அன்றும் மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். சஜித்தின் இந்த நிலைப்பாடு பற்றியே நான், எனது கிளிநொச்சி மே தின உரையில் தெரிவித்தேன். நான் கிளிநொச்சிக்கு, அங்கு நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக, நண்பர் சிவஞானம் சிறிதரன் எம்பியின் அழைப்பை ஏற்று வந்து கலந்து கொண்டேனே தவிர, சஜித்தின் தூதுவராக வரவில்லை. மேலும், எனது உரையில், “நான் கிளிநொச்சிக்கு சஜித்துக்கு வாக்கு கேட்டு வரவில்லை”, என்றும் கூட குறிப்பிட்டேன்.

மேலும், 13ம் திருத்த மாகாணசபை முறைமையை வடக்கு கிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படி நான் ஒருபோதும் கூறுவதும் இல்லை. ஆனால், 13ம் திருத்த மாகாணசபை முறைமை என்பது இன்றைய அரசியலைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்டம். இது புதிதாக வருகின்ற ஒரு தீர்வு அல்ல. இன்று அரசியல் சட்டத்தில் இருப்பதை அப்படியே அமுல் செய்வதாகதான் சஜித் கூறி உள்ளார்.

மேலும் மாகாணசபை முறைமை என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களை மாத்திரம் சார்ந்தது இல்லை. அது ஒன்பது மாகாணங்களையும் சார்ந்தது. ஆகவே சஜித், வடக்கு கிழக்குக்கு மாத்திரம் அல்ல, முழு நாட்டுக்குமே இந்த உத்தரவாதத்தை வழங்கி உள்ளார் என்பதை தமிழ் கட்சிகள் அறிய வேண்டும்.

இப்படி சஜித் கூறுவதை போன்று, ஏனைய பெரும்பான்மை கட்சிகளின் உத்தேச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களும் கூறுவார்களா என தமிழரசு கட்சி கேட்டு பார்க்க வேண்டும் எனவும் நான் என் உரையில் கூறினேன். அன்றைய கிளிநொச்சி இலங்கை தமிழரசு மே தின கூட்டத்தில், தமிழரசு தலைவர் அண்ணன் மாவை சேனாதிராசா, நண்பர் சிவஞானம் சிறிதரன் எம்பி, மாகாணசபை அவை தலைவர் சிவஞானம் உட்பட பல தமிழரசு பிரமுகர்கள் அமர்ந்து இருந்தார்கள். பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்ட நண்பர் சீ. வி. விக்கினேஸ்வரன் எம்பியும் இருந்தார்.

அன்றைய தினம் வரையிலும், இன்றும்கூட, இலங்கை தமிழரசு கட்சி தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எந்த ஒரு நிலைப்பாடும் எடுத்து இருக்கவில்லை. ஆகவே எனது உரையில், சஜித் கூறியுள்ளதை போன்று ஏனைய முன்னணி வேட்பாளர்களும் கூறுவார்களா என கேட்டு பாருங்கள் என இலங்கை தமிழரசு கட்சி நண்பர்களை நோக்கித்தான் சொன்னேன்.

ஏனெனில், 13ம் திருத்த மாகாணசபை முறைமை என்பது கையில் இருக்கும் குருவி. அதற்கும் மேலான தீர்வு என்பது மரத்தில் இருக்கும் குருவி. இன்றைய அரசியல் சட்டத்தில் இருப்பதை முதலில் அமுல் செய்தால்தானே, அதையடுத்து புதிய அரசியல் சட்ட தீர்வுக்கு போகலாம்?

மற்றபடி, நண்பர் கோவிந்தன் கருணாகரம், நண்பர் சீ. வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் இன்று ஆர்வத்துடன் முன்னெடுக்கும், தமிழ் பொது வேட்பாளர் என்ற யோசனையை மறுதலித்தும் நான் பேசவில்லை. தமிழ் கட்சிகளுக்கு, தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முழு உரிமை உள்ளது என்றுதான் கூறினேன். ஆனால், புதிய தீர்வு தொடர்பில் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் எந்தவொரு சிங்கள வேட்பாளரும் எழுதி எல்லாம் கொடுக்க மாட்டார்கள் என்றும், அப்படி கொடுத்தால் அவர்கள் தெற்கில் சிங்கள வாக்காளர்களிடம் சிக்கலை எதிர்கொள்வார்கள் எனவும் எனது பட்டறிவில் பட்டதை சொன்னேன்.

மேலும், தமிழ் பொது வேட்பாளர் கோஷம் என்பது வடக்கு கிழக்குக்குக்கு மாத்திரம் பொருந்தும். மலையகம் உட்பட தென்னிலங்கைக்கு பொருந்தாது. ஏனெனில் வடக்கு கிழக்கு ஒரு தளம். மலையகம் உட்பட தெற்கு வேறொரு தளம். இதையும் எனது உரையில் கூறினேன்.

இவ்விடயங்கள் தொடர்பில், வரலாறு முழுக்க எனக்கு மிக தெளிவான யதார்த்தபூர்வமான நிலைபாடுகள் இருப்பதாக நம்புகிறேன். இதை நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி அறிய வேண்டும். என்னிடம் தடுமாற்றங்கள் கிடையாது. தடுமாற்றம் இருப்பது உங்களிடம்தான். முதலில் உங்கள் தெளிவான நிலைபாடுகளை கூடி கலந்து பேசி அறிவியுங்கள். அதன் பிறகு புறா விடு தூது, அன்னம் விடு தூது, மான் விடு தூது, தென்றல் விடு தூது என்பவைகளை பார்க்கலாம்.

தமிழரசின் நிலைப்பாட்ட அறிந்த பின்னரே பொது வேட்பாளா் குறித்து இறுதி முடிவு – செல்வம்

தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் கேட்ட பின்னர்தான் ஒட்டுமொத்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளோம் என்று ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ். நகரில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் முடிவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றோம். இதற்கமைய தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் அடுத்த கட்டமாக இறுதி முடிவு எடுப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்த்து.

அதாவது எந்தெந்தக் கொள்கைகளை வகுத்து எவ்வாறு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது என்பது சம்பந்தமாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். இதற்கமைய அடுத்த கூட்டத்திலே கட்டமைப்புக்களை உருவாக்கி எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் இறுதித் தீர்மானம் எடுத்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் எந்தக் கொள்கையோடு பொது வேட்பாளரை நிறுத்துவது என்றும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இறுதி முடிவை எடுக்கவுள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோது இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தத் தமிழரசுக் கட்சி இரண்டு வாரங்கள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதனடிப்படையில் அவர்களுடைய கருத்தைக் கேட்ட பின்னர்தான் ஒட்டுமொத்தமாக இறுதி முடிவை எடுப்பதற்காக இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தக்கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

பொது வேட்பாளா் – இரண்டு வார அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடினர்.

சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். நகரிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று மாலை 3 மணியளவில ஒன்றுகூடிய சிவில் சமூகப் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் சுமார் நான்கு மணித்தியாலங்கள் பொது வேட்பாளர் தொடர்பில் ஆராய்ந்தனர்.

இதன்போது முதலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பிலும், அவ்வாறு நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் சில இணக்கப்பாடுகளும் பொதுவாக ஏற்படுத்தப்பட்டன.

பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களும், பல கட்சிகளும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்ற அதேவேளையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை காலமும் இந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தன.

இந்நிலையில் இந்தப் பொது வேட்பாளர் தொடர்பான நேற்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் இணைந்து கொண்டதுடன் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கட்சியின் ஏனைய சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நேற்றைய கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கட்சியினர் ஐனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்றே தொடர்ந்தும் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்றைய கூட்டத்தின்போது தமிழர் தரப்பில் இருந்து ஒருவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குப் பொதுக் குழு ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

இதற்கமைய பொதுக்குழு அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இரண்டு வார கால அவகாசம் கோரியிருந்தார். அதனால் பொதுக்குழு அமைப்பதை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்து கூட்டம் நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள முன்னணியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் மற்றும் அதன் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.