Home Blog Page 5

இலங்கையில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் இணையக் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சமூக ஊடகங்கள் தொடர்பான 6,512 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 1198 முறைப்பாடுகள் நிதி மோசடியுடன் தொடர்புடையது எனஇலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

மிகவும் பொதுவான முறைப்பாடுகளில் போலி பேஸ்புக் கணக்குகள் மூலம் செய்யப்படும் குற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒன்லைன் பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கிங் சம்பவங்கள் ஆகியவையும் முறைப்பாடுகளில் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணைய குற்றங்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலையும், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் போது அதிக விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கையின் அவசியத்தையும் இந்த புள்ளிவிவரங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

பயனர்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், ஒன்லைனில் மோசடி நடவடிக்கைகள் மற்றும் பிற தீங்கிழைக்கும் செயல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும் இந்த தரவுகள் வலியுறுத்தியுள்ளது.

காணாமல் போனோர் குழுவின் ஆய்வுக்கூட்டத்தில் நீதி அமைச்சர் பங்கேற்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதன்கிழமை (செப்டம்பர் 24) புறப்படவுள்ளார்.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் இலங்கையின் முதலாவது ஆய்வுக்கூட்டம் இதுவாகும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அமைச்சர் நாணயக்கார விளக்கமளிக்க உள்ளார்.

இந்தக் கூட்டம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை சர்வதேச அரங்கில் விவாதிப்பதற்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இலத்திரனியல் விசா (e-visa) நடைமுறையை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை மீறிய குற்றத்திற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் இலத்திரனியல் விசா செயல்முறையை நிறுத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் நாயகமான ஹர்ஷ இலுக்பிட்டிய, நீதிமன்றத்தின் இந்த உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்ததாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

யசந்த கோத்தாகொட, ஜனக் டி சில்வா, அர்ச்சுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய – இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு

இலங்கைக்கு  உத்தியோகபூர்வ  பயணம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார்.

இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு தொடர்பான மூலோபாய மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையால் 12 வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் பங்கேற்றதன் பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதியன்று நாட்டிலிருந்து புறப்பட உள்ளார்.

பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஐ.நாவில் பிரான்ஸ் அறிவிப்பு

 பிரான்ஸ் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐநா சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் அமைதிக்கான நேரம் வந்துவிட்டது என்றும் காஸாவில் நடைபெறும் போரை எதுவுமே நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர இருநாடு தீர்வுக்கான திட்டம் தொடர்பாக பிரான்ஸும் சௌதி அரேபியாவும் இணைந்து ஐநா பொதுச் சபையில் ஒருநாள் உச்சிமாநாட்டை நடத்தின. இதில் ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.

இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக மக்ரோங் தெரிவித்தார். முடிவில்லா போர்களின் ஆபத்து பற்றி எச்சரித்த மக்ரோங், “என்றும் வலிமையை விட உரிமையே நிலவ வேண்டும்.” என்றார்.

மத்திய கிழக்கில் நிலைத்த அமைதியை ஏற்படுத்த சர்வதேச சமூகம் தோற்றுவிட்டதாகக் கூறும் மக்ரோங், “இஸ்ரேலும் பாலத்தீனமும் அருகருகே அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் இருநாடு தீர்வை உருவாக்க நமது சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் நாம் செய்ய வேண்டும்.” என்றார்.

முன்னதாக பிரிட்டன், கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள் – ஊழல் விசாரணை ஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட  இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதியன்று 2024 ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர் விபரங்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பெயர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர் ஆறு பேர்,முன்னாள் மாகாண ஆளுநர்கள் நால்வர்,முன்னாள் தூவர்கள் 29 பேர்,மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 2 நீதியரசர்கள் உள்ளடங்குகின்றனர்.

குடந்த கடந்த அரசாங்கத்தின் கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை குறித்த காலப்பகுதிக்குள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை.

அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சரான (காலஞ்சென்ற)லொஹான் ரத்வத்தே, மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சாந்த பண்டார,காதர் மஸ்தான்,பிள்ளையான் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை.

அத்துடன் முன்னாள் மாகாண ஆளுநர்களான ரொஷான் குணதிலக, செந்தில் தொண்டமான்,நவீன் திஸாநாயக்க மற்றும் விலியம் கமகே ஆகியோரும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சாரத் துறை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படாது: ஜனாதிபதி உறுதி

இலங்கையின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக  வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மின் உற்பத்தி நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு விநியோக நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு இயக்க நிறுவனம் உட்பட புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை  உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

 

 

“பாலத்தீனத்தை அங்கீகரித்ததற்கு இஸ்ரேல் பழிவாங்க கூடாது” : பிரித்தானியா தெரிவிப்பு

பாலத்தீனத்தை தனி நாடாக பிரித்தானியா அங்கீகரித்ததை பதிலடி தரும் விதமாக மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்கக் கூடாது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடக்கவுள்ள ஐநா பொதுச்சபையில் கலந்துகொள்வது பற்றி சர்வதேச ஊடகமான பிபிசியிடம்  கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பால் மேற்குக் கரையின் சில பகுதிகளை இஸ்ரேல் இணைக்கும் என கவலைப்படுகிறீர்களா? எனக் கேட்டபோது, இஸ்ரேல் அரசாங்கம் இதைக் செய்யக்கூடாது என இஸ்ரேலிய பிரதிநிதியிடம் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், “நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு பாலத்தீன பாதுகாப்பை மட்டுமல்ல, இஸ்ரேலிய பாதுகாப்பை கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டது” என்றார்.

பிலிப்பைன்ஸில் அரசின் ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

போலி நிவாரணத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதால் பலர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க ஊழலுக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) பல்லாயிரக்கணக்கான பிலிப்பைன்ஸ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிலா மற்றும் பிற நகரங்களில் மாணவர்கள், தேவாலய குழுக்கள், பிரபலங்கள் மற்றும் பல்வேறு அரசியல் முகாம்களைச் சேர்ந்த குடிமக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்தப் போராட்டங்களின்போது 20 சிறுவர்கள் உட்பட 72 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் 39 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மேலும் தடுப்பு வேலியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ட்ரெய்லர் வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் அதிகாரிகள் ஒப்பந்தங்களுக்கு ஈடாக பெரும் லஞ்சம் வாங்கியமை உட்பட பல்வேறு விடயங்கள் இந்தப் போராட்டங்களுக்கு காரணமாக கூறப்படுகின்றன.

அதேநேரம், நாட்டை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்ட ஊழலால் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் £1.48 பில்லியன் வரை இழந்திருக்கலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கிரீன்பீஸ் அமைப்பு, 2023ஆம் ஆண்டில் காலநிலை தொடர்பான திட்டங்களிலிருந்து £13 பில்லியனுக்கும் அதிகமான தொகை பறிக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது.

“எங்கள் நோக்கம் நமது ஜனநாயகத்தை சீர்குலைப்பது அல்ல. ஆனால், வலுப்படுத்துவது” என்று பிலிப்பைன்ஸின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் கார்டினல் பாப்லோ விர்ஜிலியோ டேவிட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

முத்து நகர் விவசாயிகள் 6ஆவது நாளாக இன்றும் போராட்டம்!

திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளைநிலங்களை உடனடியாகத் திருப்பிக் கொடு!”, “இந்தியக் கம்பனிகளின் நில மற்றும் வளச் சூறையாடலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்குவோம்!”, “பொய்கள் வேண்டாம்”, “விவசாயிகளை இப்படியா நடாத்துவது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முத்து நகர் விவசாயிகள் மற்றும் மக்கள் போராட்ட இயக்கம், அகில இலங்கை விவசாய சம்மேளன பிரதிநிதிகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முத்து நகர் விவசாயிகளின் விவசாய காணிகளை தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின் சக்தி உற்பத்திக்காக வழங்கப்பட்டதையடுத்து இச்சத்தியக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் தற்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

கடந்த அரசாங்கம் போலவே இந்த அரசாங்கமும் நடக்கின்றது. வெளிநாடுகளுக்கு மக்கள் விவசாய காணிகளை தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர். முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை தற்போது அபகரித்துள்ளனர். ஜனாதிபதி செயலகம் வரை போராடிய முத்து நகர் விவசாயிகளுக்கு தீர்வில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதும் தீர்வு தருவதாக கூறியவர்கள் இதுவரை தீர்வு வழங்கவில்லை. இது போன்று சம்பூரிலும் காணிகளை அபகரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்து வைக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.