Home Blog Page 6

சொத்து விபரங்களை வெளியிட்ட அமைச்சர்கள் தொடர்பில் சந்தேகம்!

அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரின் சொத்து விபரங்கள் அண்மையில் வெளியான நிலையில் அது முக்கிய பேசுபொருளாக மாற்றம் அடைந்துள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தில் உள்ள பல உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பான கேள்வி அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத்தின் ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் விரைவில் தகவல் கோரவுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேநேரம், அரசாங்கத்தில் உள்ள ஏனைய மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களும் கோப்புகளும் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆறு அமைச்சரவை அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதால், உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இது குறித்து அவசரமாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த அமைச்சர்கள் எதுவித தொழிலை புரியாமலும், வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், முழுநேர அரசியலில் ஈடுபட்ட நிலையில், இவ்வளவு செல்வத்தை எவ்வாறு பெற்றனர் என்பது கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

எனவே, உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இந்தத் தகவலைப் பெற்ற பின்னர், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெறப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

சர்ச்சைக்குரிய சீன ஆய்வு கப்பலின் பிரசன்னம் இந்து சமுத்திரத்தில்…

இலங்கைக்கு வருகை தந்த சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வு கப்பலான, யுவான் வாங் 5 (Yuan Wang 5), சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்து சமுத்திர கடற்பகுதியில் அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பிராந்திய கண்காணிப்பினை தீவிரப்படுத்திவரும் நிலையில், இந்த கப்பல் மீண்டும் தோன்றியுள்ளது.
சீன மக்கள் விடுதலைப் படை கடற்படையால் இயக்கப்படும் அதிநவீன செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் 5, கடந்த 18ஆம் ஆம் திகதியன்று இந்தோனேசியாவிற்கு அருகே இறுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 முதல் 25ஆம் திகதி வரை வங்காள விரிகுடாவில் இந்தியா ஒரு ஹைப்பர்சோனிக் நீண்ட தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் வங்காள விரிகுடாவின் வான்வெளியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விமானப்படையினருக்கான அறிவிப்பொன்றையும் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் சீனாவின் குறித்த சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பல் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. யுவான் வாங் 5, கப்பலானது விமானம் அல்லது விண்வெளிசுற்றுப்பாதையில் உள்ள பொருட்களைக் கண்காணிக்கும் திறன் கொண்ட மேம்பட்ட ரேடார் அமைப்புகளைக் கொண்டுள்ளதுடன், 400க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இதன் இரட்டைப் பயன்பாட்டு கண்காணிப்புத் திறன்கள் இந்தியாவில் கவலைகளை எழுப்பியுள்ளதுடன், இந்திய அதிகாரிகள் சாத்தியமான கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக உள்ளனர்.
கப்பல் அதன் வழிசெலுத்தல், பாதுகாப்பு மற்றும் விசேட உபகரணங்களை மேம்படுத்த 2022ஆம்ஆண்டு தொழில்நுட்ப மேம்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு கவலைகள் இருந்தபோதிலும் இலங்கை அனுமதி வழங்கிய பின்னர், இந்தக் கப்பல் முன்னதாக 2022 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
இந்தத் துறைமுகம் 2016ஆம் ஆண்டு முதல் சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழ அகதி ஒருவரின் மனு தொடர்பில் இந்திய நீதிமன்றம் முக்கிய உத்தரவு

இலங்கை பெற்றோருக்கு, இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 34 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாடற்றவர்’ என்று அறிவிக்கப்பட்ட ஒருவர், நீதிக்கோரி சென்னை மேல் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தநிலையில், இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் குறித்த மனுதாரருக்கு எதிராக கட்டாய நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் உத்தரவை நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ளார்.  அத்துடன் அவரின் குடியுரிமை விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமாபுரத்தைச் சேர்ந்த ஆர்.பாஹிசன், என்பவரே ஆட்சியர் அலுவலகத்தால் ‘நாடற்றவர்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்திய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பலவற்றை வைத்திருந்தாலும் திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்படும் அச்சுறுத்தலை அவர் எதிர்கொள்கிறார்.
இந்தநிலையிலேயே அவர் நீதிகோரி சென்னை நீதிமன்றை நாடியுள்ளார்.

இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த விவகாரம் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டா தெரிவித்தார்.
இந்த குழுவின் அடுத்த அமர்வில் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கவலை இலங்கையர்களுக்கும் அப்பால் பிற வெளிநாட்டினரையும் பாதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இதனிடையே விசா விடயத்துக்கும் மேலதிகமாக, இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில்!

இலங்கையில் மக்கள் தொகையில் 16.6 சதவீதமானவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது 2030ஆம் ஆண்டுக்குள் 5 சதவீதமாகக்  குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரவித்தார்.

கண்டி செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இத்திட்டம் குறித்து அரச அதிகாரிகளுக்கு மாவட்ட ரீதியில் தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவே இந்த கூட்டம் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் கண்டியில் நடத்தப்பட்டது. அதன்போதே அவர் தனது தலைமையுரையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் வறுமையில் வாழ்கின்றனர். மேலும் இந்த நிலைமையை 2030ஆம் ஆண்டுக்குள் 5% ஆகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான செயற்றிட்டங்கள் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

கண்டி மாவட்ட மேலதிகச் செயலாளர் லலித் அட்டம்பாவல உட்பட மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்திய கடற்படைத் தளபதி இலங்கைக்குப் பயணம்!

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி, நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (22)  நாட்டை வந்தடைந்தார். இந்திய கடற்படை தளபதி இந்த பயணத்தின் போது  பிரதமர் ஹரிணி அமரசூரிய, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கஞ்சன பனாகொட உட்பட பல முக்கிய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புக்களின்போது கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பயிற்சி மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் ‘மாறும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் நோக்குநிலை’ என்ற கருப்பொருளில் கொழும்பில் நடைபெறவுள்ள 12ஆவது காலி உரையாடல் 2025 – சர்வதேச கடல்சார் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடல், பணியாளர்கள் பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கை – இந்தியா கடற்படைப் பயிற்சி, பயிற்சி மற்றும் நீரியல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பிற செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் தொடர்ந்து இணைந்து செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை தளபதியின் இவ்விஜயமானது பரஸ்பர மரியாதை, கடல்சார் நம்பிக்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த, இந்தியா – இலங்கை உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

‘பாலத்தீனம் தனிநாடு அங்கீகாரம்’ பிரதமர் நெதன்யாகு கருத்து

பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள்   அறிவித்துள்ளன. அதற்கு முன்னர் போர்ச்சுகலும் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரித்திருந்தது.

சில மாதங்களுக்கு முன்பு செட்பம்பருக்குள் போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் பாலத்தீனை தனி நாடாக அங்கீகரிப்போம் என அந்த நாடுகள் கெடு விதித்திருந்தன.

அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஐநாவில் நடைபெற உள்ள பொதுச்சபை கூட்டத்திற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இதனை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றன.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனி பாலத்தீன நாடு உருவாகாது எனத் தெரிவித்துள்ளார். இதனை அங்கீகரித்த தலைவர்களுக்கு நான் தெளிவான செய்தி அனுப்பியிருந்தேன் என்று கூறும் நெதன்யாகு “நீங்கள் தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

ஆனால் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இதனை மறுத்துள்ளார். “இது ஹமாஸுக்கு வழங்கப்படும் வெகுமதி இல்லை. ஹமாஸுக்கு எதிர்காலம் இல்லை, அரசாங்கம் மற்றும் பாதுகாப்பில் எந்தப் பங்கும் இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்புப் படுகொலை: 35ஆவது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்புப் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவுதினம்  பொதுமக்களால்  நினைவு கூரப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்தில் 1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இந்தப் படுகொலை நடந்தேறியது.

சம்பவதின இரவு புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவமும், இராணுவத்துடன் இணைந்த ஊர்காவல் படையும் வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ்மக்கள் 45 பேரை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வைத்து பெண்கள், குழந்தைகள் உட்பட 17 தமிழர்களை கூரிய ஆயுதங்களால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தனர். 9 ஆண்களும், 8 பெண்களும் கொல்லப்பட்டனர். பலர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

நினைவேந்தல் நிகழ்வு கடற்கரை வீதியில் உள்ள நினைவுத் தூபியில் நடைபெற்றது. கொல்லப்பட்டவர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 35 ஆண்டுகள் கடந்துள்ள போதும் கொல்லப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இந்த ஆண்டில் நடந்த வீதி விபத்துகளில் 960 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் ஆயிரத்து 960 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 1 முதல் செப்ரெம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகப் காவல்துறையினர்  தெரிவித்தனர். இந்தக் காலகட்டத்தில், 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.

ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ எனும் தலைப்பில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு (A/u;RC/60/L.1) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரைவானது, 2027 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறும் 66ஆவது அமர்விலேயே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால் அதுவரை  இலங்கைக்கு காலஅவகாசத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றது.
அதற்கிடையில், பேரவையின் 61ஆவது மற்றும் 64ஆவது அமர்வுகளில் வாய்மொழி அறிக்கைகளையும், 63ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையும், 66ஆவது அமர்வில் இறுதி அறிக்கையையும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ் தானிகர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த வரைவு கால அட்டவணையை குறிப் பிட்டுள்ளது.
கடந்த கால தீர்மானங்களின் தொடர்ச்சி யாக, கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த வரைவு பொதுப்படையில் ‘ஆகக்குறைந்த மென்மை யான உள்ளடக்கப் பெறுமானங்களைக் கொண்டிருக் கின்றபோதும்’ பெரும் விவாதங்களுக்கு உள்ளாகி யுள்ளது.
குறித்த வரைவு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்குமாறு கோருகின்ற நிலையில் ஆணை வழங்கும் காலப்பகுதி எவ்வாறாக இருப்பினும் முதலில் குறித்த வரைவை மையப்படுத்திய தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதில் நிச்சய மற்ற நிலைமை காணப்படுகிறது.
ஏனெனில், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார தலைமையி லான புதிய அரசாங்கம் ‘உள்நாட்டுப் பொறி முறைகள்’ மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், பொறுப்புக்கூறல் செய்யப்படலாம் என்று உறுதி யளித்துள்ளதால், பல நாடுகள் அந்த வாக்குறுதியை நம்புவதற்குக் தயாராக இருக்கின்றன. இது இலங்கை மீதான புதிய தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவதில் சவாலான நிலைமையை தோற்று வித்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மொத்தம் 47உறுப்பு நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றவையாக உள்ளன. அவற்றில், 13 நாடுகள் வரை மட்டுமே இலங்கைக்கு நேரடியாக ஆதர வளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை ஆசிய-பசுபிக், ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளாக இருக்கலாம் என்பதும் எதிர் பார்ப்புத்தான்.
பல நாடுகள், தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கின்றன. இது தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பும் நாடுகளுக்கு பெரும் தடையாக உள்ளது.
பிரேரணையைக் கொண்டுவருவதற்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் தலைமையாளரான பிரித்தானியாவும் கனடாவும் கூட அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றன. ஆனால், அமெரிக்கா தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.
இது இணை அனுசரணை நாடுகளின் இராஜதந்திர பலத்தை வெகுவாகக் குறைக்கிறது. இருப்பினும், பிரித்தானியா தம்மால் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானமாக நிறைவேற்றப் படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றது. கள நிலைமையைப் பார்க்கையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கை குறித்த புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்குப் போதிய வாக்குகளைப் பெறுவது கடினமானதாக உள்ளது.
பல நாடுகள் தத்தமது உள்நாட்டுப் பிரச்சி னைகளில் சர்வதேசத் தலையீட்டை விரும் பாததால், இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக் கின்றன. இதனால், குறைந்தபட்சம் ஒரு பிரேர ணையை நிறைவேற்றுவதற்காக, அதன் உள்ளடக் கத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டிய துரதிஷ் டமான நிலைமை தோன்றியுள்ளது.
எவ்வாறாயினும், தீர்மானம் பலவீனமான தாக இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவது மிக முக்கியம். ஏனெனில், இதுவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங் கையின் மனித உரிமை நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஆவணப் படுத்து வதற்கும் தீர்மான நிறைவேற்றம் அவசியமானதாகும்.
அவ்வாறில்லாத பட்சத்தில், 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மீது தொடர்ந்து வரும் கண்காணிப்பு நிறுத்தப்படும், அது இலங்கை யின் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதேநேரம், இலங்கை யில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் விடயம் சர்வதேச அரங்கிலிருந்தே அகற்றப்பட்டுவிடும் பேராபத்தும் உள்ளது.
அடுத்தபடியாக, புதிய வரைவின் உள்ளட கத்தைப் பார்க்கின்றபோது, பாதிக்கப்பட்ட மக் களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த தசாப் தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச சுயாதீன நீதிமன்றப் பொறிமுறை நிறுவப்பட வேண்டும் என்றே நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
அத்தகைய பொறிமுறையில், சர்வதேச வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளடங்குவர். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கை இல்லாத நிலைமையே உள்ளது.
இலங்கையின் நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்கல் துறைகள் வெகுவாக ஆட்சியில் உள்ள மற்றும் எதிரணியில் உள்ள அரசியல் தரப்புக்களின் ‘அரசியல் தாக்கங்களுக்கு’ உட்பட் டவை, அவை நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளன. தற்போதும் தவறியே வருகின்றன என்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் வெளிப்படையாக உறுதிப்படுத்தக்கூடிய நிலைப்பாடாகும்.
ஆனால், புதிய வரைவானது, இலங்கையி னுள் ஒரு பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரு கிறது. அதாவது சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலக மொன்றை ஸ்தாபிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றது.
ஆகவே புதிய வரைவில் வலியுறுத்தப் பட்டுள்ள பொறிமுறை, பெரும்பாலும் உள்நாட்டு நீதித்துறை வழிமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நிலைமையானது, கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் அதியுச்சமாகக் காணப்பட்ட ‘சர்வதேச கலப்பு நீதிமன்றம்’ என்ற கோரிக்கையிலிருந்து குறிப்பிடத்தக்க பின் வாங்கலாகும். அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை கோரிக்கையிலிருந்தான சர்வதேசத்தின் பாரியதொரு விலகலாகும்.
போரின் பின்னரான இலங்கையின் எந்த அரசாங்கமும் சர்வதேச தலையீட்டை தொடர்ச்சி யாகவும் கடுமையாகவும் எதிர்த்தே வந்திருக் கின்றன. இலங்கையின் இறையாண் மைக்கு உட் பட்டதொரு உள்நாட்டுப் பொறிமுறையே பொறுப் புக்கூறலுக்கு உகந்தது என்பதிலும் உறுதியாகவே இருந்துள்ளன. இலங்கையின் இந்த நிலைப்பாட்டிற்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் தாராளமான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. இந்த நாடுகள், உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளை எதிர்ப்பதால், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தீர்மானங்களுக்கு எதிராக நிற்கின்றன. குறித்த நாடுகளின் மேற்குல எதிர்ப்பும், இலங்கைக்கான ஆதரவும் சர்வதேச சமூகத்தை ‘இராஜதந்திர நெருக்கடிக்குள்’ தள்ளியிருக்கின்றன.
குறிப்பாக, இம்முறை ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் அமர்வில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தாண்டி, எரித் திரியா, லாவோஸ் ஆகிய நாடுகளும் பகிரங்கமாக இலங்கைக்கான ஆதரவினை வெளிப்படுத்துவதில் மும்முரமாக இருக்கின்றன.  இதனைவிடவும் தமக்கு ஆதரவாக, பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எதியோப்பியா, ஐவரிகோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, வனூட்டு, தென்கொரியா, எரித்ரியா, ஈரான், நேபாளம், இந்தியா, சிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுவேலா, மாலைதீவுகள், கியூபா, தென்சூடான், சூடான், ரஷ்யா மற்றும் புரூண்டி உள்ளிட்ட 33நாடுகள் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளமை யால் தான் இணை அனுசரணை நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், ஒரு முழுமையான சர்வதேசப் பொறிமுறையை வலியுறுத்துவதை விட, இலங்கையுடன் ஒத்துழைத்து, ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு கோருவது, நடை முறைக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதி யிருக்கிறது.
உண்மையில் ஜெனிவாவில் நடைபெற்று வரும் 60ஆவது அமர்வு இலங்கைக்கும், பாதிக் கப்பட்ட மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமான தருணம். ஒவ்வொரு தரப்பும் தமது பிடிமானங்களை தக்கவைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதொரு நிலைமை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் பக் கத்திலிருந்து அதற்கான போதுமான முனைப் புக்கள் முன்னெடுக்கப்படவில்லை. லொபி யிங்கிலும் பாரிய பின்னடைவுகளே காணப் படுகின்றன.
அரசியல் கட்சிகள், சிவில் சமூகங் கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், புலம் பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்குள் காணப்படு கின்ற ‘அக முரண்பாடுகள்’ இந்த மிக மோசமான நிலைமையை தோற்றுவித்துள்ளன என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுப் பதற்கு வரையறைகள் உள்ளன. ‘நாடுகளுக்கும் நாடுகளுக்குமான உறவு’ ‘அரசுக்கும், அரசுக்குமான இருதரப்பு உறவு’ போன்ற பல்வேறு காரணங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளன.
இவற்றையெல்லாம், பயன்படுத்தி, இலங் கையின் புதிய ஆட்சியாளர்கள், சர்வதேசத்தின் தலையீட்டை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன் உள்ளகப் பொறிமுறையை சர்வதேச சமூகத்தால் ஏற்கவும் செய்துள்ளமையானது அவர்களின் வெற்றியே.