அம்பாறையில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ்க் கிராமங்கள் அழிவடைந்துள்ளன

அம்பாறை மாவட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட தமிழ் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதே நிலைமை தொடர இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 26.07இல் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே கவீந்திரன் கோடீஸ்வரன் மேற்படி கருத்தை தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்தப் பிரதேசம் தற்போது முன்னேற்றமடைந்து வருகின்றது.  அதற்குக் காரணம் இங்குள்ள புத்திஜீவிகளும், இந்த பிரதேசத்தின் தவிசாளருமேயாகும். இங்கு வாழும் முஸ்லிம் மக்களுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. ஆனால்  முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்காக முஸ்லிம் மக்களுக்கு மட்டும் திட்டங்களை மேற்கொண்டு உதவி செய்து வருகின்றனர். இது கவலைக்குரியது. முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் தங்கள் நிதி மூலம் தங்கள் இன மக்களுக்காக மட்டும் உதவி செய்து வருகின்றனர். இது இன பேதத்தை தூண்டும் செயலாக அமைகின்றது.

எப்போதும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. சில அற்ப சலுகைகளை கொடுத்து தமிழர்களை விலை கொடுத்து வாங்கலாம் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் வடக்கில் பெருமளவு நிதியை கொட்டி தேர்தலில் போட்டியிடுவதற்கு செலவிட்டனர். ஆனால் அங்கு ஒரு உறுப்பினரைக்கூட பெற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்கள் ஒன்று சேர்ந்து தமிழ் தேசியத்தை பலப்படுத்தினார்கள். அதேபோல கிழக்கிலும் தமிழ் தேசியத்தை பலப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்தார்.