இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution) சிலோனுக்கான புதிய அரசியலமைப்பை பிரகடனப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 18.07.1946 இல் 1931ம் ஆண்டு முதலாக நடைமுறையில் இருந்த டொனமூர் அரசியலமைப்பின் 16வது வரவுசெலவுத் திட்டத்தை கடைசி வரவு செலவுத்திட்டமாக டி. எஸ் சேனநாயக்கா சிலோன் சட்டவாக்கச் சபையில் சமர்ப்பித்தார்.
இதனால் இவ்வாண்டு ஈழத்தமிழரின் இறைமையை பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் 1833இல் தான் தனது சந்தை மற்றும் இராணுவ நலனுக்காக ஈழத்தமிழர்களின் விருப்பின்றி சிங்களவர்களின் இறை மையுடன் இணைத்துச் செயற்கையாக உருவாக்கிய சிலோன் தேசியத்தின் அரசாங்கமாகத் தான் நிறுவிய சிலோன் அரசாங்கத்துள் கட்டமைத்தது. அன்று முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் தங்களின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலான இலங்கைத் தீவில் தொடருகின்ற தங்களின் இறைமையையும் தங்களின் தேசியத்தின் ஒருமைப்பாட்டையும் மீள் உற்பத்தி செய்யும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிரிவினையுமல்ல. இதற்கான அணுகுமுறை பயங்கரவாதமும் அல்ல.
இந்த உண்மையை உலக மக்களுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் அனைத்துலக நிறுவனங்களுக்கும் வெளிப்படுத்தும் மாதமாக மே மாதத்தை வெளிப்படுத்தும் பொறுப்பு தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கும் உலகெங்கும் புலம் பதிந்து உலக இனமாகவுள்ள ஈழத்தமிழர்களுக்கும் உண்டு என்பதை இலக்கு முதலில் வலியுறுத்திக் கூறவிரும்புகிறது. அதுவும் பிரித்தானியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களை அமைச்சர்களைச் சந்திப்பவர்கள் பிரித் தானியாவால் ஏற்படுத்தப்பட்ட ஈழத்தமிழரின் அவலவாழ்வை மாற்றும் தார்மீகப் பொறுப்பு பிரித்தானிய அரசுக்கு உண்டு என்பதை தெளிவாக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
மேலும் 13.11. 1947 இல் பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சோல்பரி அரசியலமைப்பின் அடிப்படையிலான சிலோன் சுதந்திர மசோதா நிறைவேற்றப்பட்டு 10.12. 1947 இல் பிரித்தானியாவின் அரச கையெழுத்தைப் பெற்றமை வரலாறு. இதன் வழி 04.02.1948இல் சிலோன் சுதந்திரமான நாடாக பிரித்தானிய காலனித்துவ அரசிலிருந்து விடுபட்டது. ஆனால் சோல்பரி அரசியலமைப்பின் கீழ் ஈழத்தமிழர்களால் தங்களது அரசியல் உரிமைகளை மீளப்பெறுவதற்கு 22.05. 1972 வரை 24 ஆண்டுகள் எடுத்த அனைத்து சனநாயக வழிப் போராட்டங்களையும் இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு அரசியல் மூலம் தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையிலான சிங்கள அரசாங்கங்கள் அழித்தன என்பது வரலாறு.
அத்துடன் 1969ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பின் கீழ் 1956ம் ஆண்டுச் சிங்களம் மட்டும் சட்டத்துக்கு எதிராகச் செய்யப்பட்ட கோடீஸ்வரன் வழக்கில் பிரித்தானிய பிரிவிக்கவுன்சில் அளித்த தீர்ப்பான சிங்களம் மட்டும் சட்டத்தை மீளப்பெற்று கோடீஸ்வரனுக்கு அவரைப் பதவி நீக்கம் செய்த காலத்துக்கான சம்பளத்தை நட்ட ஈடாகக் கொடுத்து சோல்பரி அரசியலமைப்புக்கு அமைய மீளவும் சிங்களம் மட்டும் சட்டத்தை சிறுபான்மை மதங்களுக்கோ அல்லது சிறுபான்மை இனங்களுக்கோ பாதிப்பு ஏற்படாதவகையில் மீளவும் சிலோன் பாராளுமன்றத்தில் மீளவும் கொண்டு வரவேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டமை வரலாறாக உள்ளது.
இந்த பிரிவிக்கவுன்சில் தீர்ப்பை ஏற்க மறுத்து மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் மகாராணியவர்கள் சிலோன் அரசாங்கத்தின் தலைவி என்ற நிலையை நிராகரிக்கும் வகையில் 22.05. 1972இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிறிலங்காச் சுதந்திரக்கட்சி இடதுசாரிகள் கூட்டணி ஆட்சியாளர்கள் சோல்பரி அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் பங்களிப்பை மறுத்து தன்னிச்சையாக பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நவரங்கலா மண்டபத்தில் சிங்கள பௌத்த சிறிலங்கா சோசலிச குடியரசை பிரகடனப்படுத்தி ஈழத்தமிழர்களை 22.05. 1972 இல் அரசற்ற தேசஇனமாக (Nation without State) மாற்றினர்.
இதனால் மே மாதத்து 22ம் நாள் ஈழத்தமிழர்கள் தங்களிடம் பிரித்தானிய காலனித்துவத்திடம் இருந்து இயல்பாகவே மீண்டுவிட்ட தங்களின் யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் நிலப்பரப்பு மீதான தங்களின் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் மீள் உற்பத்தி செய்து கொடுத்து 54 ஆண்டுகளாகத் தொடர்ந்து சனநாயக ரீதியாக இன்று வரை தங்களுக்கான தேசிய விடுதலைப் போராட்டத்தின் வழி முன்னெடுத்து வருகின்றனர். இதனை சிறிலங்கா அரசாங்கம் அரச பயங்கரவாதத்துடன் கூடிய இனஅழிப்பு மூலம் 1956 முதல் தடுத்து 1972 முதல் ஈழத்தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் நாளாந்தம் இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி வந்ததால் ஈழத்தமிழர்கள் தங்களின் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்க தங்களுக்கான நடைமுறையரசை (Defacto Government) 1978 இல் கட்டமைத்தனர்.
1975ம் ஆண்டு அடையாளக் குடியொப்பம் 1975ம் ஆண்டு சிறிலங்காவின் தேசிய சபையில் தன்னாட்சிப் பிரகடனம் 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977ம் ஆண்டின் தமிழர் தாயகக் குடியொப்பம் வழியாக அனைத்துலகச் சட்டங்களுக்கு அமைய ஈழத்தமிழர்கள் தங்களின் தன்னாட்சிக்கான அனைத்துலகச் சட்டத் தகுதியைப் பெற்றனர். இதன் அடிப்படையில் 1978 முதல் 2009 வரை தங்களின் உள்ளகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சீருடை அணிந்த முப்படைகளுடனும் சட்டவாக்க நிர்வாக சட்ட அமுலாக்கத் தன்மைகளுடனும் தங்களுக்கான அரசைத் தங்களின் நாளாந்த பாதுகாப்புக்காக நடைமுறைப்படுத்தினர்.
அதே நேரத்தில் தங்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அனைத்துலக நாடுகளின் ஏற்புடைமைக்காக உழைத்து வந்த நேரத்தில் இதே மே மாதம் 18ம் நாள் 2009ம் ஆண்டு சிறிலங்காவால் ஈழத்தமிழர்கள் தேசமாகவே 146000 ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டமை வரலாறு. அனைத்துலக சட்டங்களுக்கு எதிரான ஈழத்தமிழ் மக்கள் மேலான சிறிலங்காவின் இனஅழிப்பாலும் ஈழத்தமிழர்களின் தாயக உட்கட்டுமான அழிப்பாலும் மீளவும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சியை படைபலத்தால் சிறிலங்கா 2009 இல் நிறுவியது. இன்று வரை 17 ஆண்டுகள் ஈழத்தமிழர்களின் அரசியல் பணிவையும் ஈழத்தமிழர்களின் தாயகத்தின் நிர்வாகத்தையும் படைபலத்தால் நடாத்தும் ஆக்கிரமிப்பு அரசாக சிறிலங்கா தொடர்கிறது. அதேவேளை 2009 முதல் இன்று வரை சனநாயக வழிகளில் மீளவும் தங்களின் தாயக விடுதலைக்காகத் தேசிய நீக்கத்திற்கு எதிராக இறைமை ஒடுக்கத்துக்கு எதிராக ஈழத்தமிழர்கள் தாயகத்தில் தொடர்ந்து வலிசுமந்த நெஞ்சினராய்த் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
எனவே மே மாதம் ஈழத்தமிழர்களின் உண்மை வரலாற்றை வெளிப்படுத்தி ஈழத்தமிழரின் இறைமையை ஒருமைப்பாட்டை மீளுறுதிப்படுத்தும் மாதமாக வலிகள் தரும் உணர்ச்சிகளைத் தாண்டி சனநாயக வழிகளில் முன்னெடுத்து அனைத்துல மக்கள் மயப்படுத்தி மீளவும் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பான அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் பெற தாயகத்திலும் அனைத்துலகிலும் ஈழத்தமிழர்கள் தங்களின் தாயகக் கடமையை முன்னெடுக்க வேண்டுமென்பதை இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்த விரும்புகிறது.
மேலும் மயிலிட்டியில் அனைத்துலகத் தொழிலாளர் நாளன்று மக்கள் போராட்டம் தாங்கள் வாழ்வதற்கு 36 ஆண்டுகளாக விடுவிக்கப்படாதுள்ள தங்கள் காணிகளை மீளத் தருமாறு கடந்த வாரத்தில் நடைபெற்றுள்ளது. சிறிலங்காவின் மகிந்தராஜபக்ச அரசாங்கம் 2013ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசகாணியாகக் கைப்பற்றிய 6000 ஏக்கர் நிலத்தில் 2015ம் ஆண்டு சிறிசேனா அரசாங்கம் 3000 ஏக்கர் சொந்தக் காணிகளில் மக்கள் மீளவும் சென்று வாழலாமென அறிவித்தது. இதில் கமண்டோ பங்களாவொன்றைக் கட்டுவதற்காக கைப்பற்றிய 200 குடும்பங்களின் காணிகளும் அடங்கும்.
ஆயினும் இந்த மக்களுக்கான சட்டபூர்வ உரிமையை பெறாதவாறு வர்த்தமானி விடுத்த அறிவித்தல் இன்று வரை விலத்தப்படாது தொடர்வதால் மக்களால் எதுவும் செய்ய இயலாதுள்ளது. இன்றைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் 28.03. 2025ம் ஆண்டு வெள்ளிக்கிழமை வெளியிட்ட 2430ம் இலக்க வர்த்தமானி மூலம் வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் கடலோரக்காணிகளில் 6000 ஏக்கரை அரசவுடமையாக்கியது. இந்த மக்களின் போராட்டம் நூற்றுக்கு நூறு வீதம் நியாயமானதென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பியுள்ள குரலை அனைத்துலகிலும் ஈழத்தமிழர்கள் உலக மக்கள் மயப்படுத்த வேண்டுமென்பது இலக்கின் கருத்தாக உள்ளது.
அத்துடன் தமிழர் என்னும் ஒருமைப்பாட்டில் தமிழர் தடுமாறுவதால் மக்கள் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுவது ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் நாளாந்த வாழ்வதைத் தமிழக வெற்றிக்கழகத்தினை ஆட்சியமைக்க தமிழக மக்கள் ஆணை வழங்கிய நிலையில் அவரை ஆட்சியமைக்கவிடாது அங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகள் உலகிற்கு எடுத்துரைக்கின்றன. அதே வேளை தமிழ் மக்கள் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழர்களுக்கு பலமாக இருந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டி யோசப் விஜய் அவர்களும் அத்தகைய விதத்தில் பலத்தினை அளிக்க வேண்டுமெனத் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளதை இலக்கும் யோசப் விஐய் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து மீள்சுட்டிக்காட்ட விரும்புகிறது.
வியட்னாம் அரசத்தலைவரின் இலங்கை வருகை சீனாவுக்கான ஈரான் வெளிவிவகார அமைச்சரின் பயணம் தொடரப் போகும் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் சீனப்பயணம் என்பன தெற்காசியாவை மையப்படுத்தி உலக அரசியல் நகர்வுகள் இடம்பெறுவதைத் தெளிவாக்குகின்றன. இத்தகைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் தங்களின் உலகளாவிய அறிவுச்சமுதாயத்தை எதிர்வினைகள் செய்வதற்கான கட்டமைப்பாக மாற்ற வேண்டும் என்பதையும் இலக்கு இவ்வாரத்தில் வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஆசிரியர்




