செம்மணி புதைகுழி வழக்கு வெறும் அகழாய்வு அல்ல; அது சர்வதேச குற்றவியல் விசாரணையாக மாற வேண்டும் : சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல்

கடந்த ஜூலை 31ம் திகதி வெபினார் (webinar) நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட்டது, இதில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் “ செம்மணி மனித புதை குழி” நாங்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம்” எனும் தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. 
இதில், ஜொஹான் ஸௌஃபி- ஐ. நா. மனித உரிமைகள்  ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை மனித உரிமை மீறல் விடயத்தில் சான்றுகள் சேகரிக்கும் அலுவலகத்தின் தலைவர். இன்கிரிட் மஸாஜ் – சிறிலங்கா கம்பெயின் நிறுவனத்தின் தலைவி. கே.எஸ். இரத்தினவேல் சிரேஷ்ட சட்டத்தரணி, செம்மணி புதைகுழி சம்பந்தமாக ஆய்வுசெய்யும் நிறுவனமான CHRD இன் இயக்குனர்.
 
Webinar Moderator:  
யாஸ்மின் சுக்கா- ITJP International Truth & Justice Project இன் தலைவி. (சிறிலங்காவின் யுத்தக் குற்றங்களை ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்ட தருஸ்மன் நிபுணர் குழுவின் உறுப்பினராக செயல்பட்டவர்) ஆகிய  மூன்று நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடல் குறித்து இலக்கு செய்தி ஊடகத்திற்கு கே.எஸ். இரத்தினவேல் (மூத்த சட்டத்தரணி) அவர்கள் வழங்கிய கருத்து….
 
கேள்வி:
செம்மணி புதைகுழி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது?
பதில்:
இலங்கையில் இதுவரை சுமார் 15 மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் செம்மணி புதைகுழி மிகவும் முக்கியமானதாகக் கருதப் படுகிறது. காரணம், இந்தப் பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதைச் சுற்றி இராணுவ முகாம்களும் பாதுகாப்பு அரண்களும் அமைந்திருந்தன. எனவே, அக்காலத்தில் வேறு ஆயுதக் குழுக்கள் அல்லது தனிநபர்கள் இந்தப் புதைகுழியுடன் தொடர்புடையிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு.
கேள்வி:
தற்போது நடைபெறும் அகழாய்வில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன?
பதில்:
அகழாய்வு என்பது எலும்புக்கூடுகளை மீட் பதற்காக மட்டும் நடத்தப்படக் கூடாது. அதனுடன் இணைந்து முழுமையான குற்றவியல் விசாரணையும் முன் னெடுக்கப்பட வேண்டும். மரபணு (DNA) பரிசோதனைகள் மூலம் உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்தக் கால கட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிய முடியும். அதோடு சாட்சியங்கள், ஆவணங்கள் மற்றும் பிற தடயங் களும் சேகரிக்கப்பட்டு, சர்வதேச தரத்திற்கேற்ப புலனாய்வு முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தக் கருத்தே அண்மையில் நடைபெற்ற ITJP கலந்துரையாடலிலும் வலியுறுத்தப்பட்டது.
கேள்வி:
அகழாய்வில் இதுவரை வெளியாகி யுள்ள தகவல்கள் என்ன கூறுகின்றன?
பதில்:
மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளில் வயது வந்த வர்கள் மட்டுமல்ல; முதியவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள் என பல தரப்பினரும் இருப்பதாகத் தெரிய வருகிறது. சில குழந்தைகளின் அருகில் பால் போத்தல்கள், பாடசாலைப் பைகள், காலணிகள் போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மிகவும் அதிர்ச்சியூட்டும் சான்றுகளாகும்.
கேள்வி:
இந்த இடம் ஒரு இந்து மயானம் என்பதும் முக்கியமான அம்சமாகக் கூறப்படுகிறது. ஏன்?
பதில்:
இந்து மரபில் பொதுவாக உடல்கள் தகனம் செய் யப்படுகின்றன. எனவே ஒரு இந்து மயானத்தில் இவ்வளவு அதிகமான மனித உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது வழக் கத்திற்கு மாறானது. மேலும், உடல்கள் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டும், ஆடையின்றியும், சில இடங்களில் பெரியவர்களின் அருகில் அல்லது மடியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றன. இத்தகைய அம்சங்கள் அனைத்தும் இயல்பான அடக்க நிகழ்வுகளுடன் பொருந்தாதவை.
கேள்வி:
இந்த விசாரணையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்க வேண்டும்?
பதில்:
அகழாய்வில் மீட்கப்படும் மனித எச்சங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் தொடர்புடைய ஆய்வகங்களில் மரபணு மற்றும் நீதித்துறை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேநேரம், 1995 முதல் 2000 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் காலணிகள், நாணயங்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களும் குற்றவியல் விசாரணை யின் ஒரு பகுதியாக ஆராயப்பட வேண்டும்.
கேள்வி:
பொறுப்புக்கூறல் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
பதில்:
குற்றச்செயலில் நேரடியாக ஈடுபட்டவர்களை மட்டும் விசாரிப்பது போதுமானதல்ல. சர்வதேச சட்டத்தில் உள்ள ‘கட்டளைப் பொறுப்புக்கூறல்’ (Command Responsibility) என்ற கொள்கையின்படி, கட்டளையிட்ட உயர் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். இலங்கையில் இதுவரை அந்த நடைமுறை உரிய வகையில் அமுல்படுத் தப்படவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
கேள்வி:
கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கை நீங்கள் ஏன் குறிப்பிடுகிறீர்கள்?
பதில்:
அந்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷ, “நாங்கள் மேலதிகாரிகளின் கட்டளையின் பேரில்தான் செயல் பட்டோம்; எங்களைத் தண்டித்தவர்கள் அந்தக் கட்டளை யிட்ட அதிகாரிகளை ஏன் தண்டிக்கவில்லை?” என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வி இன்றும் பதிலின்றி உள்ளது.
கேள்வி:
இறுதியாக, இந்த விசாரணை எந்த நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
பதில்:
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணை என்பது வெறும் அகழாய்வாக இருக்கக் கூடாது. உண்மையை வெளிக்கொணரும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கும், மேலும் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் ஒரு சுயாதீனமான மற்றும் சர்வதேச தரத்திலான குற்றவியல் விசாரணையாக இது முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே நீதிக்கும், பொறுப்புக்கூறலுக்கும், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருப்பதற்குமான அடிப்படையாக அமையும்.