மொழியாக்கம்: – ஜெயந்திரன்
இந்த ஆக்கத்தை நீங்கள் வாசிக்கும் நேரத்தில், கிரேக்க தேசத்தில் உள்ள சேமொஸ் (Samos) என்ற தீவிலுள்ள அகதிகளும் குடிபெயர்வாளர்களும,; தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு முகாமிலிருந்து, ஒரு புதிய, சிறையை ஒத்த ஒரு நிலையத்துக்கு இடம் மாற்றப்பட்டிருப்பார்கள். மூடப்பட்டதும் அதே நேரத்தில் வெளியுலகத்துடன் கண்காணிப்புடனான தொடர்புகளைக் கொண்டதுமான இந்த மையம், 900 பேர் தங்கள் வீடுகளிலேயே தடுத்து வைக்கப்படக்கூடிய வசதிகள் உட்பட 3000 பேர் தங்குவதற்கான வசதிகளைக் கொண்டது. மக்கள் வாழ்கின்ற நகரங்களுடன் முற்று முழுதாக எந்தவித தொடர்பையும் கொண்டிராத இந்த மையம், இராணுவத் தரம் வாய்ந்த முட்கம்பிகளை மேலே கொண்ட மூன்று வரிசை வேலிப்பாதுகாப்பைக் கொண்டது. மிகவும் நவீனமான கண்காணிப்புக் கருவிகளும் அங்கே பொருத்தப்பட்டிருக்கின்றன.
அகதிகள் தொடர்பான தமது தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா
ஒரு மனிதநேயச் சாதனையாக கிரேக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகள் இந்தப் புதிய முகாமை விபரிக்கிறார்கள். உண்மையில் நிலைமை அதற்கு முற்றிலும் எதிர்மாறானதாகும். தஞ்சக்கோரிக்கையை முன்வைப்பதற்கும், மருத்துவ சிகிச்சை, மனித மாண்பு என்பவற்றுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களை, முற்றுமுழுதாகச் சமூகத்திலிருந்து வேறுபடுத்தி, பிரித்து வைக்கின்ற ஒரு முயற்சியாகவே இது நோக்கப்படுகின்றது. பாதுகாப்பு, அகதி அந்தஸ்து, ஐரோப்பாவில் ஒரு நல்ல வாழ்க்கை போன்ற விடயங்களைத் தேடியது தான் இந்தக் குடும்பங்களும் தனிநபர்களும் இழைத்த குற்றங்களாகும்.
கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பாபன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில், அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதை விடுத்து, இவ்வாறான அடக்குமுறைக் குடிபெயர்வுச் சட்டங்கள் இந்த அகதிகளைக் குற்றவாளிகளாக்கி, அவமானப்படுத்தித் தண்டிக்கின்றன. இவ்வகையான, கொள்கைகளின் கொடூரத்தன்மையை மூடிமறைப்பதற்காக தஞ்சக்கோரிக்கையாளர்களையும் அகதிகளையும் அவர்கள் தமது முயற்சியைக் கைவிடத் தூண்டுவதற்காக, சட்டவிரோதமான, கட்டுப்படுத்துகின்ற, மிக மோசமான சூழ்நிலைகளை வெளிப்படுத்த மிகவும் கவர்ச்சியான சொற்பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான தடுப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கென மில்லியன் கணக்கிலான யூரோக்கள் 2020ம் ஆண்டிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தால் கிரேக்க அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. சேமொஸ் தீவில் தற்போது திறக்கப்படும் தடுப்பு நிலையம் இவற்றுள் முதலாவது ஆகும். அதிக வசதிகளைக் கொண்ட தடுப்பு நிலையங்கள் என்று விளம்பரப்படுத்தப்படுகின்ற இந்த முகாம்கள் அனைத்தும் ஒரே ஒழுங்குமுறையையே கைக்கொள்கின்றன: மக்கள் வாழ்விடங்களிலிருந்து தொலை தூரத்தில் அமைக்கப்படுதல், தங்கும் வீடுகளிலேயே முன்னெடுக்கப்படும் கடும் பாதுகாப்பு நடைமுறைகள், பெரும் சமூகத்திலிருந்து அவர்களைப் பிரித்து வைத்திருத்தல், அகதிப் பிரச்சினை வெளியிலே தெரியாதவாறு பேணுதல் போன்ற விடயங்களை இந்த ஒழுங்குமுறை கொண்டிருக்கின்றது. அகதிகள் மற்றும் குடிபெயர்வாளர்களின் அடிப்படை உரிமைகள் எவ்விதத்திலும் இங்கு மதிக்கப்படுவதில்லை. பன்னாட்டு அகதிகள் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் அடிப்படையில் இவற்றைப் பேண வேண்டிய கடப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் கிரேக்கத்துக்கும் இருக்கிறது.
கிரேக்கத் தீவுக்கூட்டங்களின் நடுவில் அகப்பட்டிருக்கின்ற பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், சிரியா, மற்றும் கீழ்சஹாராவைச் சேர்ந்த ஆபிரிக்க மக்கள் போன்ற இந்த மக்களை, எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) இவர்களுடன் பயணித்து, இவர்களது தேவைகளை நிறைவு செய்து வருகின்றது. அகதிகள் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியாதவாறு வகுக்கப்பட்டிருக்கும் கொள்கைகள், அகதிகள் மற்றும் குடிபெயர்வாளர்களினதும், அதே வேளை அவர்களைப் பராமரிக்கின்ற சமூகங்களினதும் உடல், உள நலத்தில் ஏற்படுத்தியிருக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்கனவே நாங்கள் தெளிவாகப் பார்த்திருக்கிறோம்.
அதனால் தான் இந்த நிலைகண்டு நாங்கள் கொதித்தெழுகிறோம். 2021 ஏப்பிரல் மாதத்திலிருந்து சேமொஸ் தீவில் எமது சேவைகளைப் பெற்றுக்கொள்கின்ற நோயாளர்கள் தற்கொலை செய்வதைப் பற்றிச் சிந்தித்தது மட்டுமன்றி, பத்துப்பேருக்கு இருவர் என்ற விகிதத்தில் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்திலும் இருக்கிறார்கள். எம்மிடம் சிகிச்சை பெற்றுவருகின்ற மக்கள், கடந்த பல மாதங்களாக சிறைகளுக்குள் தாம் அடைக்கப்படவிருப்பது தொடர்பான பயத்தோடு வாழ்ந்துகொண்டிருப்பது மட்டுமன்றி, தாம் எல்லோராலும் கைவிடப்பட்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதாகவும் உணர்கிறார்கள்.
2021 ஜூன் மாதத்தில் நாங்கள் வெளியிட்ட அறிக்கை, புதிய முகாமினால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் தொடர்பாக எச்சரிக்கையைப் பதிவுசெய்தது மட்டுமன்றி, கிரேக்க தீவுகளில் அகப்பட்டிருக்கின்ற தஞ்சக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கின்ற துன்பங்களின் தீவிரத்தன்மையையும் வெளிக்கொணர்ந்தது.
ஏற்கனவே பலவிதமான உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகி, இலகுவில் நலிந்துபோகக்கூடிய நிலையில் இருக்கும் மக்களை மீண்டும் சிறையை ஒத்த ஒரு சூழலுக்கு மாற்றுவது மிகவும் ஆபத்தானது என்பது மட்டுமன்றி மீண்டும் ஒரு தடவை அவர்களை உளப்பாதிப்புகளுக்கு உள்ளாக்கக்கூடியதுமாகும். ‘ஐரோப்பியக் கோட்டை’ (Fort Europe) என்ற எண்ணக்கரு இங்கு முற்றிலும் பொருத்தமற்றதாகும். பாதுகாப்பைத் தேடுகின்றவர்களை இந்தக் கொள்கை எந்தவிதத்திலும் மாற்றாது என்பது மட்டுமன்றி, பயம் மற்றும் வன்செயல் என்பவற்றைத் தூண்டி இன்னும் அதிகமான துன்பத்தையும் மனஉளைச்சலையும் அந்த மக்களில் அது தோற்றுவிக்கும்.
போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற யேமன், சிரியா, ஈராக், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் எம்எஸ்எவ் (MSF) அமைப்பு மருத்துவமனைகளையும் வேறு பல மனிதாயச் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறது. இவ்வாறான சேவைகள் அங்குள்ள மக்களின் உயிரைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அவர்களது மனித மாண்பையும் பேணிப்பாதுகாக்கின்றது.
போர்க்காலங்களில் தமக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கத்துடனும் அதே வேளையில் தமது குடும்பங்களுக்கு பாதுகாப்பான வாழ்வைத் தேடுவதற்காகவும் இந்த மக்கள் மேற்கொள்ளுகின்ற மிக ஆபத்தான பயணங்கள் தொடர்பாக, அந்த மக்களுக்கான சேவைகளை வழங்கும் எமது குழுக்களைச் சேர்ந்தவர்கள் மிகவும் நன்றாகவே அறிந்திருக்கிறார்கள்.
எமது சேவையைப் பெற்றுக்கொள்ளும் மக்களில் பலர் பாகிஸ்தான், பங்களாதேஷ், சூடான் போன்ற தமது அயல்நாடுகளால் பராமரிக்கப்படுகிறார்கள். இடம்பெயர்கின்ற அகதிகளின் மொத்த எண்ணிக்கையை நோக்குமிடத்து, ஐரோப்பிய கோட்டை மிகச் சொற்பமான அகதிகளையே பராமரிக்கின்றது. அகதிகளுக்கு அது செய்ய வேண்டிய உதவியில் ஒரு சிறு பங்கை மட்டுமே அது செய்துவருகிறது அத்துடன் இந்த அகதிகள் மட்டில் தனக்கிருக்கின்ற தார்மீகக் கடமையை அது நிறைவேற்றத் தவறியிருக்கிறது. அகதிகளின் மாண்பைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் அவர்களை வரவேற்றுப் பராமரிக்கின்ற வசதிகளை ஏற்படுத்தும் பொறுப்பிலிருந்து அது தவறியிருக்கிறது.
ஒரு மில்லியன் எண்ணிக்கையிலான சிரிய அகதிகளை 2015ம் ஆண்டில் ஏற்றுக்கொண்டதன் மூலம், ஐரோப்பாவில் தஞ்சம் தேடுவதற்கு அந்த மக்களுக்கு உறுதியாக இருக்கின்ற உரிமையை ஜேர்மனி மீள உறுதிப்படுத்தியிருந்தது. விரைவாக முதுமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற ஜேர்மானிய சமூகத்துக்கு அந்த மக்கள் ஆற்றக்கூடிய பங்களிப்பை அது இனங்கண்டிருந்தது. இப்படிப்பட்ட கொள்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் ஒரு தடவை தமதாக்கிக்கொள்ள முடியும். சிரியா, ஆப்கானிஸ்தான், கீழ்சஹாரா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் உலகின் பல்வேறு இடங்களில் போதிய வசதிகளும் வரவேற்பும் இன்றி, எங்கு செல்வது என்று தெரியாது இன்னோரன்ன துன்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்ற ஒரு பின்புலத்தில், ஐரோப்பியர்கள் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு தாம் செய்ய வேண்டிய கடமையைப் பிரதிபலித்து, ஐரோப்பியச் சமூகத்துக்குள் அவர்களை உள்வாங்கி, அவர்களுக்கு அகதித் தஞ்சம், சுகாதாரசேவை மற்றும் ஏனைய அடிப்படைச் சேவைகளை நீதியான முறையில் உரிய நேரத்துக்கு வழங்கக்கூடிய வகையில் ஒரு துணிகரமான குடிபெயர்வுக் கொள்கையை உருவாக்கிக்கொள்ளலாம்.
இராணுவ மயப்படுத்தப்பட்ட எல்லைப் பாதுகாப்புகளுக்கும், சிறையை ஒத்த தடுப்பு முகாம்களுக்கும் மில்லியன் கணக்கிலான யூரோக்களைச் செலவழிக்காது, கிரேக்க தீவுகள், இத்தாலி, வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, மனித மாண்பைப் பேணும் விதத்திலும் மக்களைச் சமூகத்தினுள் உரிய முறையில் உள்வாங்கக்கூடிய செயற்பாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் தனது முயற்சிகளையும் நிதிவளங்களையும் முதலீடு செய்யலாம். இவ்வாறாக குடிபெயர்வு விடயத்தில் ஐரோப்பா தனது தலைமைத்துவப் பண்பைச் செயற்படுத்தி, பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையில் தமது கடமைகளை நிறைவேற்றி, இளமையான, பலபண்பாடுகளை உள்ளடக்கிய, ஆரோக்கியம் நிறைந்த நாளைய பன்முக ஐரோப்பிய சமூகத்தைக் கட்டியெழுப்பலாம்.
‘எமது கண்களைவிட்டு மறைந்துவிட்டால் அவர்கள் இல்லையென்றே கருதிக்கொள்ளலாம்’ என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, குடிபெயர்வுப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளைக் காண்பது உண்மையில் நீண்டகால அடிப்படையில் வெற்றியளிக்கப்போவதில்லை என்பதை ஐரோப்பிய அரசுகள் உணர்ந்தாக வேண்டும். இப்பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமுள்ள காத்திரமான தீர்வுக்கு தீர்க்கதரிசனப் பார்வை, துணிவுமிக்க தலைமைத்துவம், கூட்டுத்தலைமைத்துவம் போன்றவை அத்தியாவசியமானவை. ஒருபோதும் இல்லாதவாறு இன்று, இந்த விடயங்கள் மிக அதிகமாகவே தேவைப்படுகின்றன.
நன்றி: அல்ஜசீரா