ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம்போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது

தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு

தற்போதைய இலங்கை இந்திய உறவு நிலை பற்றியும், இந்திய வெளியுறவுச் செயலரின் இலங்கை விஜயம் பற்றியும், ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு தொடர்பாகவும் ‘இளந்தமிழகம்’ இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின் முழு வடிவம்.

தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடு

கேள்வி:
இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் போக்கில் அண்மைக் காலமாக ஒரு மாற்றம் தென்படுவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்:
இராசபக்சாக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர். ’இந்தியா முதலில்’ என்ற முழக்கத்தை முன்வைத்தார் கோத்தபய. ஆனால், கோத்தபயாவின் ஆட்சியில்தான் கொழும்புத் துறைமுகப் பட்டினத்தை சீனாவுக்கு தரும் சட்டம் இயற்றப்பட்டது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்வகிப்பதற்காக இந்திய – ஜப்பான் நாடுகளுடன் இலங்கை போட்டிருந்த உடன்படிக்கை முறித்துக் கொள்ளப்பட்டது. யாழ். குடா நாட்டின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான ஒப்பந்தம் சீன நிறுவனங்களுடன் போடப்பட்டது. இப்படி இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள தீவுகளில் சீனா கால் பரப்பியுள்ளது. இதை கவலைக்குரிய ஒன்றாக இந்திய அரசு பார்க்கிறது என்பது உண்மைதான்.

இது குறித்த தனது கவலையை இந்தியா வெளிப்படுத்தியிருக்கும் நிலையில்தான் ’இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு இலங்கையில் அனுமதி இல்லை’ என்று வாயளவிலேனும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இலங்கையை உருட்டிமிரட்டுவதற்கான பகடைக் காயாய் பார்ப்பதில் இந்திய அரசிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இந்தியா இலங்கையிடம் செய்தது ஒரு சலசலப்பு நடவடிக்கைதானே ஒழிய திட்டவட்டமானதல்ல.

கேள்வி:
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்ததால் தான் இந்திய அரசு இலங்கை அரசை அனுசரித்து போகும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதா?

பதில்:
இல்லை. இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பு வளையத்தில் வரும் ஒரு புள்ளியாகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர். அதனால், ’அணைத்து கெடுக்கும்’ கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்கிறது. அதன்படி, இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்வது. அப்படி செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்ள இலங்கைக்கு அதிகம் அதிகம் விட்டுக்கொடுப்பது.

மலையகத் தமிழர்களின்(இந்திய வம்சாவழித் தமிழர்கள்) குடியுரிமை பறிப்பை வேடிக்கைப் பார்த்தது, அவர்களை சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கையின் மூலம் இந்தியாவுக்கு திரும்பப் பெற்றுக் கொண்டது, கச்சத்தீவை தாரை வார்த்தது, ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியது என இந்தியாவின் ’விட்டுக் கொடுத்தலின் பட்டியல் நீள்கிறது. அதாவது இந்தியாவின் ’விட்டுக் கொடுத்தல்’ என்பது தமிழர்களின் தலையை உருட்டி விளையாடுவதுதான். சில விதிவிலக்கான தருணங்களைத் தவிர பிற நேரங்களில்  இலங்கை அரசை அனுசரித்துப் போவதே இந்தியாவின் தொடர்ச்சியான கொள்கையாக இருந்துவந்துள்ளது.

கேள்வி:
கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் கையாளும் பகுதியை தற்போது இந்தியா பெற்றுக் கொண்டுள்ளதுடன், அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவகாரச் செயலாளர் திருமலை எண்ணைக் குதங்கள் மற்றும் யாழ். பகுதிக்கு பயணம் மேற்கொண்டதானது, இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஒன்று ஏற்படுவதை காட்டுகின்றதா?

பதில்:
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கான இந்திய உடன்படிக்கையை திரும்பப் பெற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இந்திய வெளியுறவுச் செயலர் வருகைக்கு இரண்டு நாட்கள் முன்பு கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய கார்ப்பரேட் நிறுவனமான அதானிக்கு கொடுத்துள்ளது இலங்கை அரசு. இலங்கை பின்வாங்குவது போல் தோற்றம் காட்டியுள்ளதென்று இந்திய அரசு கருத இடமுண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கையில் இரண்டு சொத்துகள் உள்ளன. ஒன்று தமிழ் மக்கள். தமிழர்களின் பெயரால்தான் இலங்கை தீவில் இந்தியா தலையிட முடிகிறது. இன்னொன்று திரிகோணமலைத் துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் ஆகும். இலங்கை பின் வாங்குவதாக காட்டிக் கொண்டாலும், இலங்கை விசயத்தில் தமது பலம் என்று கருதுவது குறித்து தாம் விழிப்புடன் இருப்பதை இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டும் நோக்கில் இந்திய வெளியுறவு செயலர் திரிகோணமலைக்கும் யாழ். பகுதிக்கும் சென்றுள்ளதாகப் பார்க்க முடியும்.

கேள்வி:
தாயகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?

பதில்:
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னான இந்த 12 ஆண்டுகளில் தமிழர்கள் தம்மை கட்டமைப்பு வகையில் பலப்படுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீடுகள் பற்றி இரத்தமும் சதையுமான பட்டறிவு இருந்தும், அவற்றை கையாள்வதற்கான அரசியல் தலைமை, ஐக்கிய முன்னணி, வெளியுறவுக் கொள்கை என இவையாவும் உருப்பெறவில்லை. தமிழ்த் தலைவர்களின் சமரசம் இன்னொருபுறம். எனவே, ஈழத் தமிழ் மக்களைத் தன் விருப்பம்போல் கையாள முடியும் என இந்திய அரசு கருதுகிறது. அதேநேரத்தில், இந்தியா தொடர்பில் தமிழ் மக்களிடம் எழுந்துள்ள அதிருப்தியைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொண்டுள்ளது இந்தியா.

தமிழர் தொடர்பான இந்திய நிலைப்பாடுஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சம உரிமை, 13 ஆம் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தச் சொல்வது போன்ற வழமையான நிலைப்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை.  தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவ வெளியேற்றம், சிங்களக் குடியேற்றத் தடுப்பு போன்ற தமிழர்களின் உடனடிக் கோரிக்கைகளிலும் சரி, இன அழிப்புக் குற்றத்திற்காக இலங்கை அரசைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது, அரசியல் தீர்வுகான பொதுவாக்கெடுப்பு நடத்துவது போன்ற நீண்டகால கோரிக்கைகளிலும் சரி இந்திய அரசின் நிலைப்பாடு தமிழர்களுக்கு எதிராகவே உள்ளது. இவற்றில் எல்லாம் இந்திய அரசிடம் எவ்வித மாற்றமும் இல்லை.

கேள்வி:
இந்தியா ஏன் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எந்ந ஒரு செயற் திட்டத்தையும் இதுவரை முன்னெடுக்கவில்லை?

பதில்:
இந்தியா இலங்கையை தனது பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் புள்ளியாக கருதுவதால் அது உடைந்துவிடக் கூடாது என்று எண்ணுகிறது. இலங்கை அரசை தனது செல்வாக்கு மண்டலத்தில் வைத்துக் கொள்வதில் இடையூறு ஏற்படும் போது, தமிழர் பிரச்சினையைக் கையில் எடுப்பதன் மூலம் சிங்கள அரசை தனது வழிக்கு கொண்டுவர முடியும் என்று கருதுகிறது. எனவே, அந்த அளவிலேயே ஈழத் தமிழர்களின் இனச் சிக்கலைப் பயன்படுத்தி வருகிறது.

ஈழத் தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு ஏற்ப இலங்கைத் தீவு உடைக்கப்பட்டு தமிழீழ தனிநாடு உருவானால், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவில் அதன் தாக்கம் இருக்கும். குறிப்பாக பிரிவினைக் கோரிக்கையை எழுப்பிய தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று இந்திய அரசு கருதுகின்றது. எனவே, தனது உள்நாட்டு நலனையும் கருத்தில் கொண்டு வெளியுறவுக் கொள்கையைக் கையாள்கிறது, அதனால்தான், ஈழ்த் தமிழர்களுக்கு என்று எவ்வித நியாயமான தீர்வுத் திட்டங்களையும் இந்திய அரசு முன்வைப்பதில்லை.

சாதகமான சர்வதேச நிலைமைகள்(அமெரிக்க – சீன வல்லரசு போட்டி) இருப்பினும், ஈழத் தமிழர்களின் அரசியல் வலிமையும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் உறுதியான ஆதரவும் போராட்டமும் புலம்பெயர் தமிழர்களின் ஒருங்கிணைந்த பங்கேற்பும் இருந்தால் மட்டுமே, இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட வைக்க முடியும்.