கிழக்கில் சரிவு நிலைக்கு செல்லும் தமிழர்களின் கல்வி நிலை! – மட்டு.நகரான்

447 Views

தமிழர்களின் கல்வி நிலைமட்டு.நகரான்

கிழக்கு மாகாணம் கல்வி நிலையில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதிலும் இம்முறை வட-கிழக்கு மாகாணம் தமிழர்களின் கல்வி நிலை பாரியளவிலான பின்னடைவினை எதிர்கொண்டுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமையில், இவ்வாறான பின்னடைவினை வட-கிழக்கு பகுதிகள் எதிர்கொண்டுள்ளன. அதிலும் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கல்வி நிலை பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.

யுத்த காலத்தில் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் சாதனைகளைப் படைத்த தமிழர்களின் கல்வித்துறையானது, இன்று பாரியளவிலான பின்னடைவினைக் கண்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொரோனா சூழலைப் பலர் இந்தக் கல்வியின் பின்னடைவுக்குக் காரணம் காட்டினாலும், யுத்த சூழ்நிலையினைவிட இன்றைய கொரோனா சூழ்நிலை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியெழுகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையே பாரிய வீழ்ச்சி நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு வெறுமனே நாங்கள் யாரையும் தனித்துக் குற்றஞ்சாட்டிவிட முடியாது என்றாலும், கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலைக்கான வீழ்ச்சிக்கு அரசாங்கம் முழுமையான பொறுப்பினைக் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இங்கு குறிப்பிடவேண்டிய விடயமாகும்.

தமிழர்களின் கல்வி நிலைகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் கல்வி நிலையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. யுத்தம், இனப்பிரச்சினை, இயற்கை அனர்த்தங்கள், கோவிட் தாக்கம் என பல்வேறு நிலை காரணமாக கல்வியில் வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகின்றது.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad கிழக்கில் சரிவு நிலைக்கு செல்லும் தமிழர்களின் கல்வி நிலை! - மட்டு.நகரான்

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்கள் காணப்படுகின்றன. இதில் ஒரு முஸ்லிம் கல்வி வலயமும், நான்கு தமிழர்களின் கல்வி வலயமும் காணப்படுகின்றன. இவற்றில் முஸ்லிம் கல்வி வலயமே இன்றுவரையில் கல்வியில் முதல் நிலையிலிருந்து வருகின்றது. குறித்த கல்வி வலயமானது, ஆரம்பிக்கப்பட்டு சுமார் 10வருடங்களே கடந்துள்ள நிலையில், கல்வித்துறையில் பாரியளவிலான சாதனை படைத்துள்ளது. குறித்த வலயமானது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் என்ற  முஸ்லிம் கல்வி வலயமாகவுள்ளது. இது முஸ்லிம் பிரதேசங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இந்த வலயத்தில் உள்ள 99வீதமான பாடசாலைகள் எழுவான்கரையிலேயே அமைந்துள்ளன.

ஏனைய நான்கு கல்வி வலயங்களில் ஒரேயொரு வலயம் மட்டுமே முழுமையாக எழுவான்கரையில் உள்ளது. ஏனைய கல்வி வலயங்கள் படுவான்கரையும், எழுவான்கரையும் இணைந்த வகையிலேயே கல்வி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

படுவான்கரையினைப் பொறுத்தவரையில், கல்வி நிலையானது இன்று ஒரளவு நல்ல நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றது. எழுவான்கரையினைப் பொறுத்தவரையில், நீண்ட நிலப்பரப்பும் தொடர்பற்ற கிராமங்களும் உள்ளதன் காரணமாகவும், நீண்ட தூர இடைவெளிகளில் பாடசாலைகள் உள்ள காரணத்தினாலும் பாடசாலை கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் பெரும் சிக்கல்கள் காணப்படுகின்றன.

பின்னடைவினை வட-கிழக்கு பகுதிகள் எதிர்கொண்டுள்ளனபோக்குவரத்து, மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் வாழும் மக்களும் உள்ள இப்பகுதியில் தொடர்ச்சியான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர். எவ்வாறாயினும் கல்வியை பெற்றுக்கொள்வதில் பிள்ளைகள் மத்தியிலான ஆர்வம் என்பது கடந்த சில வருடங்களாக குறைந்து வருவதைக் காணமுடிகின்றது.

கல்வியைப் பெற்றுக்கொள்ளும் சூழ்நிலை இலகுபடுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறுகின்றபோதிலும், படுவான்கரைப் பகுதியில் மக்கள் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் கஸ்டங்களையே தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், கல்வி நடவடிக்கைகளின் செயற்பாடுகளில் பொது அமைப்புகள், தமிழ் கல்விமான்களின் செயற்பாடுகள் என்பது மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. இன்று இலங்கையின் பல பாகங்களிலும் பாடசாலை நிர்வாகம் மற்றும் கல்விப் பணிமனைக்கு அப்பால், பொது அமைப்புகளும் கல்வியிலாளர்கள் கூட்டமைப்பும் இணைந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் தங்கள் இனம் சார்ந்து, கல்வி தொடர்பான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த 30வருடத்திற்கு மேலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் உள்ள நிலையிலும், அவ்வாறான செயற்பாடுகள் பெரியளவில் நடைபெறவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிரபல தமிழ் பாடசாலைகளில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், புறநகர்ப்பகுதி மற்றும் கிராமப்புறப் பாடசாலைகளில் அவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை.

இவ்வாறான மாணவர்களை காட்டி, சிலர் புலம்பெயர் மக்களிடமும், சர்வதேச நாடுகளிடமும் உதவிகளைப் பெறுகின்ற போதிலும், அவை முறையான திட்டமிடல்கள் இல்லாமல் செலவு செய்யப்படுவதனால், அவை பிரயோசனமற்ற செயற்பாடுகளாகவே இருக்கின்றன.

குறிப்பாக படுவான்கரையில் மிகவும் கஸ்டநிலையில் உள்ள பாடசாலைகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மேற்கு வலயம் முன்னெடுத்துவந்த, மாணவர்களுக்கான இடமாற்ற கற்கை நடவடிக்கைகள் சில வருடங்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், அதற்கான ஆதரவுகள் இன்மையினால் அவை கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அழைத்துவந்து, படுவான்கரையில் ஒரு பாடசாலையில் தங்கவைக்கப்பட்டு, பரீட்சைகளை நோக்காக கொண்டு, அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. புலம்பெயர் மக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த அந்த கற்கை செயற்பாடுகளினால் பாரியளவிலான அடைவு மட்டங்களை மாணவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். எனினும் அதற்கு உதவியளித்தவர்கள் பின்னாளில் பின்வாங்கிய காரணத்தினால், அதனைத் தொடரமுடியாத நிலை கல்வித் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் மக்கள் வடக்கு கிழக்கு என பிரிந்து நிற்காமல், கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பில் சிந்தித்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும்

அத்துடன் 2008ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணக் கல்வி அடைவு மட்டங்களில் தொடர்ச்சியான பின்னடைவுக்கு அரசியலும் மிக முக்கிய காரணமாகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாடசாலைகளுக்கு சிற்றூழியர் நியமிப்பதிலிருந்து ஆசிரியர், கோட்டக்கல்வி அதிகாரிகள், வலய கல்வி அதிகாரிகள் என பல்வேறு தரப்பட்ட நியமனங்களும் அரசியல் நோக்குடன் மட்டுமே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக தகைமையுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டதும், கல்வித்துறையினை கட்டியெழுப்ப முடியாமைக்கான காரணங்களாகும். அதனை மாற்றியமைக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைத்தோம், வழக்குத் தாக்கல் செய்தோம். ஆனால் ஓரு சிலவற்றுக்கு தீர்வு கிடைத்தாலும், பலதுக்கு இதுவரையில் தீர்வில்லை. சரியானவர்களுக்குச் சரியான பதவிகள் வழங்கப்பட்டிருந்தால், இன்று கிழக்கு மாகாணக் கல்வித்துறை உயர்ச்சியடைந்திருக்கும். ஆனால் அது முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழர்களின் கல்வி தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய கட்டாய தேவை இன்று எழுந்துள்ளது. ஒன்பது மாகாணங்கள் உள்ள நிலையில் கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இன்னும் இறுதி மாகாணங்களாகவே இருந்து வருகின்றன.

இவ்வாறான நிலையினை மாற்றவேண்டுமானால், தமிழ் சமூகத்தில் உள்ள கல்வியியலாளர்கள் சிந்திக்கவேண்டிய காலமாக இது உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், இனிவரும் காலங்களில் கல்வியினால் வளர்ச்சி பெறுவதன் மூலமே இந்த மாகாணத்தினைத் தமிழர்கள் தக்கவைப்பதற்கான சூழ்நிலையிருக்கின்றது. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து செல்லும் போது, நாங்கள் அனைத்துத் துறைகளிலும் பின்நோக்கிச் செல்லும் நிலையானது தமிழர்களுக்கு மிகவும் பாதகாமான நிலையினை ஏற்படுத்தும்.

அண்மையில் வெளியான கா.பொ.த.சாதாரண தர முடிவுகள் தமிழர்களின் கல்வி நிலையினை படம்போட்டுக் காட்டியுள்ளது. இன்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் தேசிய கல்வியில் போட்டி நிலையில் உள்ளபோது, தமிழர்களின் ஏனைய கல்வி வலயங்களில் பாதாளத்தில் உள்ளதானது, தமிழர்களுக்கான கல்வி நிலையில் சிவப்பு எச்சரிக்கையாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளபோதிலும், தமிழர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான எந்தவித முயற்சியினையும் அது மேற்கொள்ளாத நிலையில், தேசிய கல்விக் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாகவுள்ளது.

இந்தவேளையில் புலம்பெயர் மக்கள் வடக்கு கிழக்கு என பிரிந்து நிற்காமல், கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பில் சிந்தித்து செயற்படுவதற்கு முன்வர வேண்டும். இன்று நீங்கள் கவனம் செலுத்தாது போனால், கிழக்கு மாகாணம் தமிழ்த் தேசிய எழுச்சிப் பரப்பிலிருந்து மிக விரைவில் அகன்று விடும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

Leave a Reply