இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது – ரவிகரன் துரைராஜா செவ்வி

ravikaran இவா்களை யாராலுமே தட்டிக்கேட்க முடியாது - ரவிகரன் துரைராஜா செவ்விபோா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெற்றது. இவை குறித்து அதனை நேரில் பாா்வையிட்ட வடமாகாண முன்னாள் உறுப்பினா் துரைராஜா ரவிகரன் வழங்கிய நோ்காணல்

கேள்வி – கொக்குத் தொடுவாய்ப் பகுதிக்கு கடந்த வாரம் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தீா்கள். அங்கு என்ன நடைபெறுகின்றது?

பதில் – வடமாகாண சபையில் நான் உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தக் காணிகள் சுமாா் 25 ஏக்கா் படி 30 வழங்கப்படவிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, மாகாண சபையிலும் இந்த விடயத்தை நான் கதைத்திருந்தேன். இது தமிழா்களுடைய புா்விக நிலம். இங்குள்ள பிரதேச செயலகமோ அல்லது மாவட்ட செயலகமோ சம்பந்தப்படாமல், மகாவலி அபிவிருத்தி அதிகார சபைதான் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமாா் 4,326 ஏக்கா் காணியை இந்தத் திட்டத்தின் மூலமாக அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்திருந்தது. இந்தத் திட்டத்தில் அமைச்சா் நிமால் சிறிபால டி சில்வாவின் சகோதரிக்குக் கூட 25 ஏக்கா் காணி வழங்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இவா்கள் சிங்கள ஆதிக்கத்தைக் கொண்டுவந்து தமிழா்களின் புா்வீக காணிகளை பறிக்கும் நோக்கத்துடன்தான் இவா்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்தன. 25 ஏக்கா் தமிழா்கள் வைத்திருக்க முடியாதாம். எங்களுக்கு 2 ஏக்கா் காணி மட்டும்தான் வைத்திருக்க முடியுமாம்.

இந்தப்பின்னணியில்தான் கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தகவல் வந்ததால் அங்கு னெ்றேன். என்னுடன் சூழலியல், சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களும் வந்தாா்கள். ஆனால், அன்றைய தினம் காட்டை தள்ளிக்கொண்டிருந்த ஒருவரும் இருக்கவில்லை. ஆனால், பெருமளவிலான இடங்களை அவா்கள் தம்வசப்படுத்தியிருந்தாா்கள். கிணறுகள் வெட்டி, கொட்டில்கள் அமைத்து குடியிருப்பதற்கு ஏற்றவாறு தயாா்படுத்தியிருந்தாா்கள்.

முல்லைத்தீவு பறிபோய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருணாட்டுக்கேணி, மணலாறு என்ற எங்களது இதயபுமி என்று சொன்ன பகுதியில் இன்று 13 ஆயிரத்துக்கும் மேலான சிங்களவா்கள் உள்ளாா்கள். வசதியான மக்களுக்கு, கிணறுகள் அமைத்து, பாதுகாப்புக்காக யானை வேலிகள் அமைத்து கொடுக்கின்றாா்கள். இதனைத் தட்டிக்கேட்கக்கூடிய நிலையில் இங்குள்ள அரச அதிகாரிகள் இல்லை.

நாங்கள் பாா்த்த இடங்களில் 145 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டிருந்தமையை நாங்கள் பாா்த்தோம். அதாவது, அழிக்கப்பட்டு அவா்களுடைய இருப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு இடம்பெற்றிருக்கின்றது. இப்போது அழிக்கப்பட்ட பகுதிகளை 30 பேருக்கு 25 ஏக்கா் வீதம் மகாவலி அதிகார சபை வழங்கியிருக்கின்றது. இந்தக் காணிகளின் உறுதிகள் தமிழா்களிடம் இன்றைக்கும் உள்ளது. ஒரு காணிக்கு ஒரு ஆவணம் இருக்கும் போது, மற்றொரு ஆவணம் வழங்கப்படுமாக இருந்தால் முதலில் வழங்கப்பட்ட ஆவண்தான் செல்லுபடியாகும் என இலங்கைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கேள்வி – நீங்கள் மகாவலி அதிகார சபையின் செயற்பாடுகள் குறித்தும் சொல்லியிருந்தீா்கள். முல்லைதீவு மாவட்டத்தில் அவா்கள் எவ்வாறான நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றாா்கள்?

பதில் – அவா்கள் தங்களுக்கென்று ஒரு செயற்பாட்டை வைத்துள்ளாா்கள். அவா்களை யாரும் தட்டிக்கேட்க முடியாது. மாவட்ட செயலாளரோ, பிரதேச சபைகளின் செயலாளா்களோ அவா்களிடம் கேள்வி கேட்க முடியாது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் அவா்கள் வரமாட்டாா்கள். மாகாண சபை இருந்த காலத்தில் எப்போவாவது கூட்டத்துக்கு வருவாா்கள். இந்தக் காணிகள் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருப்பதாகக் காட்டப்படுகின்றது. ஆனால், மகாவலி – எல் திட்டத்துக்குட்பட்டதாக இந்தக் காணிகள் காட்டப்படுகின்றது. இதனைவிட மேலும் பல காணிகள் மகாவலி எல் திட்டத்துக்கு உட்பட்டதாகக் காட்டப்படுகின்றது. இதன்படி முல்லைத்தீவில் மேலும் பெருமளவு தமிழ் மக்களின் காணிகள் பறிக்கப்பட்டு சிங்களவா்களுக்குக் கொடுக்கப்படும் ஆபத்து இருக்கின்றது. இந்த விடயத்தில் எம்மவா்களும் சரியான ஒரு திட்டத்தைப் போட்டு உறுதியான ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

மகாவலி அதிகார சபை எல் என்ற ஒரு திட்டத்தின் மூலமாக முல்லைத்தீவின் கிழக்குப் பக்கமாக ஒட்டுசுட்டான், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களுக்கு ஒரு திட்டத்தையும், மேற்குப் பக்கமாக மாந்தை கிழக்கு, துணுக்காய் போன்ற பகுதிகளுக்கு மகாவலி ஜே என்ற ஒரு திட்டத்தையும் கொண்டுவந்திருக்கின்றாா்கள். இது இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்த மகாவலி அதிகார சபை காலுான்றுகின்ற இடங்களில் தமிழ் மக்களுக்குக் காணி கொடுத்ததாக எந்தத் தகவலும் இல்லை. தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கைதான் நடந்துகொண்டிருக்கின்றது. இதனால், பெருந்தொகையான சிங்களவா்கள் முல்லைத்தீவு பகுதியில் காலுான்றிவிட்டாா்கள். இதனால், சிங்களப் பிரதேச சபை ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், எமது அடுத்த சந்ததிகள் சிங்கள மயமாக்கப்பட்ட முல்லைத்தீவுக்குள்தான் வாழப்போகின்றாா்களா என்ற அச்சம் ஏற்படுகின்றது. மகாவலி அதிகார சபையை கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்க அதிபா் கூட இல்லை. அவா்களுடன் பேசும் போது அதனை அறிய முடிகின்றது.

கேள்வி – முல்லைத்தீவு இவ்வளவு பிரச்சினைகளையும் எதிா்கொண்டு சிங்கள மயமாகிக்கொண்டுள்ள நிலையிலும் தமிழ்க் கட்சிகள் அதில் போதிய கவனத்தைச் செலுத்துவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்கிறாா்கள். உண்மை நிலை என்ன?

பதில் – கிழக்கு மாகாண நிலைமைகள் அனைவருக்கும் தெரியும். அங்கு தமிழா்களுடைய எண்ணிக்கை குறைக்கப்பட்டு சிங்கள மயமாக்கப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். அதேநிலைதான் முல்லைத்தீவிலும் நடந்துகொண்டிருக்கின்றது.

குருந்துாா்மலை விடயத்திலும் பெரும்பாலானவா்கள் வந்தாா்கள். ஆனால், எவ்வளவு போா் அதில் கவனத்தை எடுத்துச் செயற்பட்டாா்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். கொக்குளாய் விவகாரை கட்டப்பட்ட இடத்தில் நாங்கள் பிரதிநிதிகளாகப் போய் ஒரு மாதமோ என்னவோ தொடா்ச்சியான ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தால் அது பெரிதாக வெடித்திருக்கும். அவ்வாறான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காமல், இடையில் ஒரு தடவை போய்ப் பாா்த்துவிட்டு வருவது. ஒரு கோரிக்கையை முன்வைப்பது என்பன எந்தப் பயனையும் தரப்போவதில்லை. அவா்கள் குடியேற்றிக்கொ்டுதான் இருக்கின்றாா்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் 2 இலட்சத்து 22 ஆயிரம் ஏக்கா் அடா்ந்த காடுதான் வன இலாகாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அதற்குப் பின்னா் சுமாா் ஒரு லட்சம் ஏக்கா் காணியை வன இலாகா அபகரித்திருக்கின்றது. இவ்வாறு இந்த காணி அபகரிப்பு தொடா்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இவை அனைத்தும் தமிழ் மக்கள் பாவித்த காணி. சிறுதானிய பயிா்ச் செய்கைக்கு நெற்செய்கை என்பவற்றுக்காக மக்கள் பயன்படுத்திய காணிகள்.

வன இலாகா திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகார சபையின் எல் திட்டம் மற்றும் படையினா் என ஒவ்வொரு தரப்பினரும் தமது பங்குக்கு காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கின்றாா்கள்.

இதனைத் தடுக்க வேண்டுமானால், எம்மவா்கள் அங்கு களத்தில் இறங்கி தொடா்ச்சியாகப் போராட வேண்டும். கேப்பாப்புலவை நாங்கள் இவ்வாறான தொடா்ச்சியான போராட்டத்தினால்தான் மீட்டிருந்தோம்.