ஐந்து வருடங்களின் பின்னா் சுதந்திரக் கட்சி தலைமையகம் வந்த சந்திரிகா

CBK ஐந்து வருடங்களின் பின்னா் சுதந்திரக் கட்சி தலைமையகம் வந்த சந்திரிகாஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சைகள் தொடரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.

5 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்றைய தினமே சந்திரிகா குமாரதுங்க சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு சென்றதுடன், கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோரும் அவருடன் கட்சித் தலை மையகம் சென்றிருந்தனர். கட்சியின் தவிசாளராக பதவி வகிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பதில் தலைவராக நியமிக்கப்பட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கட்சியின் பதில் தவிசாளராக சந்திரிகா தரப்பிலிருந்து நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் கட்சித் தலைமையகம் சென்றுள்ளார்.

அதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த சந்திராக குமாரதுங்க கூறுகையில், “சுதந்திரக் கட்சியுடனேயே எப்போதும் இருந்தேன். ஆனால் சிறிசேன என்னை துரத்தியதன் பின்னர் 5 வருடங்களின் பின்னரே இந்த அலுவலகத்திற்கு வந்துள்ளேன். கட்சியை கட்டியெழுப்புவோம். அது தொடர்பான திட்டங்களை பின்னர் கூறுகின்றேன். அந்த விடயம் தொடர்பிலேயே நான் பேசினேன். இதன்மூலம் கட்சி மட்டுமல்ல நாடும் கட்டியெழுப்பப்படும்” என்றார்.