கிழக்கில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள் | மட்டு.நகரான்

தமிழ் ஊடகவியலாளர்கள்

மட்டு.நகரான்

அச்சுறுத்தலுக்குள்ளாகும் தமிழ் ஊடகவியலாளர்கள்

ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக ஊடகத்துறை விளங்குகின்றது. ஊடகத்துறையானது ஜனநாயக ரீதியாக தனது இயங்கு நிலையினை கொண்டிருக்கும் போது அந்த நாட்டில் ஜனநாயகமும் பன்முகத் தன்மையும் பேணப்படும்.

இவ்வாறான நிலையிலேயே சர்வதேச நாடுகளினால் சர்வதேச ஊடக சுதந்திர தினம் பிரகனடப்படுத்தப்பட்டு வருடாந்தம் மே 03ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது.

இலங்கையினைப் பொறுத்த வரைக்கும் ஊடகத்துறையானது ஒரு அச்சுறுத்தல்மிக்க துறையாகவே இருந்து வருகின்றது. அதன் காரணமாக இன்று சர்வதேச நாடுகள் இலங்கையினை ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்ட நாடாக அடையாளப்படுத்தி வருகின்றது.

இலங்கையில் கடந்த காலங்களில் ஜனநாயகத்தினை பாதுகாக்க முற்பட்ட பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள் இந்த நிலையானது இன்றும் பல்வேறு வழிகளில் பல்வேறு விதங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை கடும் போக்காளர்களின் செயற்பாடுகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதும் அவர்களின் கருத்துகளை வேதவாக்காக கொண்டுசெயற்படுவதுமே ஏனைய ஜனநாயக ரீதியான கருத்துகளைக்கொண்டவர்களின் குரல்வளையினை நசுக்குவதற்கு காரணமாக அமைகின்றன.

குறிப்பாக கடந்த காலத்தில் வடகிழக்கில் சிங்கள மேலாதிக்கத்தினை நிலை நாட்டுவதற்காக தமிழர்கள் குரல்களை நசுக்குவதற்காக தமிழ் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்கள் என்பது பாரியளவிலேயே இடம்பெற்றுவந்த நிலையில் அந்த செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரையில் தமிழர்களின் ஜனநாயகத்தினை நசுக்கும் வகையிலான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. 1985ஆம் ஆண்டு தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்கள் என்பது கடுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இலக்குவைத்து முன்னெடுக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள், இன அழிப்பு செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளியில் செல்லவிடாமல் செய்வதற்கான பல்வேறு செய்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழர்கள் அடக்கியொடுக்கப்படும்போது, அல்லது தமிழர்கள் மீதான படுகொலைகள் முன்னெடுக்கப்படும் போது, அல்லது தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும் போது அதற்கு எதிராக குரல்கொடுக்கும் அல்லது அது தொடர்பான தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கொல்லப் படுகின்றார்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றார்கள் அல்லது அச்சுறுத்தப் படுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா துரத்தியடிக்கப்பட்டபோது கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் தலைமையில் இயங்கிய ஆயுதக்குழுவினர் ஜனநாயக ரீதியான குரல் கொடுப்பவர்களையும் ஊடகவியலாளர்களையும் படுகொலைசெய்தும் அவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தனர்.

தமிழ் ஊடகவியலாளர்கள்2004ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தல்கள் இன்று வரையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. மனித உரிமைகளுக்காக குரல்கொடுத்த மாமனிதர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லட்டதுடன் கிழக்கில் பிள்ளையான் குழுவினர் மேற்கொண்டுவந்த அராஜாகம், கருணாவின் பிரிவில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொணர்ந்த காரணத்தினால் ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடசேன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கிலிருந்து உண்மைகளை வெளிக் கொணர்ந்து பல தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு துரத்தப்பட்டனர்.

அக்காலப்பகுதியில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள தமிழர்கள் உண்மை நிலையினை அறிந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் ஊடகவியலாளர்களை படுகொலைசெய்யுதும் அச்சுறுத்தியும் வந்த பிள்ளையான் குழுவினர் கிழக்கிற்கு வந்த தமிழ் தேசிய பத்திரிகைகளை இங்கு விற்பனை செய்யாமல் தடுத்ததுடன் அவற்றினை எரிக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.அதனையும் மீறி விநியோகம் செய்த பத்திரிகை விநியோகஸ்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிழக்கில் தனித்துவமாக கிழக்கு மக்களின் குரலாக செயற்பட்ட பத்திரிகை அலுவலகங்கள் வலுக்கட்டாயமாக பூட்டப்பட்டதுடன் அதன் செயற்பாடுகளும் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து பிள்ளையான் தொடர்பாகவும் பிள்ளையான் குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் எழுதுவோர் கடுமையான மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இன்றுவரையில் உள்ளாகிவருகின்றனர்.

யுத்தம் மௌனிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரையில் பிள்ளையான் குழுவினரால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் தகவல்கள் வெளிவருவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை பிள்ளையான் குழுவினர் முன்னெடுத்துவருகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் இருந்தபோது காணி பங்கீட்டினை முஸ்லிம் தரப்பான ஹிஸ்புல்லா போன்றவர்களுடன் ஏற்படுத்திக்கொண்டு பெருமளவான காணிகளை அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுக்கு வழங்குவதற்கு உறுதுறையாகயிருந்ததுடன் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்னும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைப்பான காணிகளை வாகரை பிரதேசத்தில் வழங்குவதற்கும் அக்காலத்தில் பிள்ளையான் துணைநின்றார். அதற்கு சன்மானமாக முதலமைச்சர் பதவி ஹிஸ்புல்லாவின் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட்டதுடன் பிள்ளையான் குழு உறுப்பினருக்கு ஏறாவூர்ப்பற்று,வாகரை போன்ற பகுதிகளில் பெருமளவான காணிகளை அபகரிப்பு செய்வதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளை அன்றைய காலப்பகுதிகளில் வெளிக்கொணர்ந்து ஊடகவியலாளர்கள் கடுமையான மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.குறிப்பாக அன்றைய காலப்பகுதியில் தினக்குரல் செய்தியாளராகயிருந்து பல உண்மைகளை வெளிக் கொணர்ந்த மா.சசிக்குமார் என்னும் ஊடகவியலாளர் கடுமையாக தாக்கப்பட்டார். பிள்ளையான் குழுவினை சேர்ந்தவர்களினால் தான் தாக்கப்பட்டதை அவர் தாக்குதல் நடாத்தியவர்களை இனங்கண்டன் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் அவர்கள் எவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப் படவில்லை.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. 2019ஆம் ஆண்டு படுகொலைசெய்யப்பட்ட நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய ஊடகவியலாளர்களின் தலைகள் வட்டமிடப்பட்டு அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

புலனாய்வுத்துறையினர் ஒரு புறமாகவும் பிள்ளையான்குழுவினர் ஒரு புறமாகவும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை மீண்டும் முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் என்பது கிழக்குமாகாணத்தில் ஊடகத்துறையினருக்கு என்பதைவிட வடக்குகிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களின் அச்சுறுத்தல் என்பது ஆயுதப்போர் காலம் தொட்டு தற்போதுவரை ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே வருகிறது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ் ஊடகவியலாளர்கள்ஆயுதப்போராட்டம் 2009 முள்ளிவாய்க்கால் மௌனம் ஏற்படும் வரை ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வரலாறுகள் உண்டு. ஊடகவியலாளர் ஒருவர் முதன்முதலாக படுகொலை செய்யப்பட்ட வரலாறு கிழக்கில் தான் உண்டு  ஊடகவியலாளர் கணபதிப்பிளை தேவராசா  1985 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 திகதி அக்கரைப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு அம்பாறை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்த நிலையில ஊடகவியலாளர் க.தேவராசா படுகொலை செய்யப்பட்டார். இந்த ஊடகவியலாளர் படுகொலைசெய்யப்பட்டபோதும் இவர் தொடர்பான தகவல்கள் பெரிதாக வெளியில் வரவில்லை இவர் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து வருடங்கள் பின்னர் யாழ்ப்பாணத்தில் 2000,ம் ஆண்டு ஒக்டோபர்,19, ம் திகதி மயில்வாகனம் நிர்மலராஜன் படுகொலை செய்யப்பட்டார் இவரின் படுகொலை தேசியப்பரப்பிலும் சர்வதேச பரப்பிலும் பேசப்பட்ட படுகொலையாகும்.

ஆனால் முதன்முதலாக கிழக்கு மாகாணம் அம்பாறைமாவட்டத்தில் அக்கரைப்பற்றை சேர்ந்த கணபதிப்பிள்ளை தேவராசா 1985, டிசம்பர்,25, ல் படையினால் அவர்களின் முகாமில் வைத்து படுகொலைசெய்யப்பட்டு 2009, மே,18, வரை 46, ஊடகவியலாளர்கள் இலங்கையில் படுகொலைசெய்யப்பட்டனர்.அவர்களில் 36, தமிழ் ஊடகவிநலாளர்களும் 08, சிங்கள ஊடகவியலாளர்களும்,02, முஷ்லிம் ஊடகவியலாளர்களும் உள்ளனர். இந்தப் படுகொலைகளுக்கு பயந்து இலங்கையில் இருந்து 30, க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் ஜரோப்பிய நாடுகளில் புலம்பெநர்ந்து வாழ்கின்றனர். இந்த முப்பது பெயர்களில் கணிசமானவர்கள் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஆறு ஊடகவியலாளர்களும் இதில் உள்ளனர்.

தற்போது போர் மௌனித்தபின்னர் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் சுதந்திரமாக ஊடகப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல், தொலைபேசி மிரட்டல், புலனாய்வாளர்களால் அழைத்து விசாரணைகள், ஊடகவியலாளர்களின் வீடுகளுக்கு சென்று புலனாய்வாளர்கள் கண்காணித்தல் என்பதும் அதைவிட அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் முகவர்கள், ஆதரவாளர்களும் நேரடியாகவும் சமூகவலைத்தளங்கள் மூலமாகவும் ஒருவித அச்சுறுத்தல்களை வழங்கி வருவதை காணமுடிகிறது. செய்திகளை நேரடியாக சேகரிக்க செல்லும்போது அரச தரப்பு இராஜாங்க அமைசரசர்களின் ஆதரவாளர்களால் தாக்கப்படும் நிலையும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.போர்காலத்தில் ஊடகவியாளர்கள் படுகொலைகளுக்கு முகம் கொடுத்து அச்சத்தைடனும் அவலுத்துடனும் வாழ்ந்தனர்.

ஆனால் போர் இன்றிய காலத்தில் சுதந்திரமாக ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரிக்க சென்றால் அரச புலனாய்வாளார்களாலும், அரசதரப்பு ஆதரவாளர்களாலும் கண்காணிக்கப்படுவது இன்று கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக மட்டக்களப்பிலும் தொடர்வதை காணலாம். ஊடகவியலாளர்களுக்கு அன்று துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இன்று பயங்கரவாத்தடைச்சட்டத்தை காட்டும் அச்சுறுத்தல் தொடர்கிறது இதுவே உண்மை என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்கள் பிள்ளையான் குழு மற்றும் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசிய பரப்பில் உள்ள சட்டத்தரணிகளும் புத்திஜீவிகளும் முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

Tamil News