இலங்கையில் சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டம் பின்பற்றப்படுவதாகவும் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் (05) பாராளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
“எமது நாட்டில் ஒரு சாதாரண குடிமகன் அரச வங்கியில் சிறிய அளவிலான கடன் பெற்றிருந்தாலும், தவணைகளை காலத்துக்குள் செலுத்தத் தவறினால், ‘பாரடே நிறைவேற்று அதிகாரம்’ (Parate Execution) உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகள் மூலம் அவரது வீடு, வணிகம், வாகனம் உள்ளிட்ட சொத்துக்கள் கைப்பற்றப்படுகின்றன.
ஆனால், கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று நீண்டகாலமாக திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பெரும் கடனாளிகளிடமிருந்து அரச வங்கிகளுக்குச் சேர வேண்டிய மக்களின் பணத்தை மீட்டெடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“அரச வங்கிகளின் பணம் என்பது அரசாங்கத்தின் பணம் மட்டுமல்ல; அது இந்த நாட்டு மக்களின் சேமிப்புப் பணமாகும்.
சிறு கடனாளிகள் மீது சட்டம் முழு கடுமையுடன் அமுல்படுத்தப்படும் நிலையில், பெரும் கடன் நிலுவைகளை வைத்திருக்கும் செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதே சட்டம் ஏன் சமமாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்” என்றும் சாணக்கியன் வலியுறுத்தினார்.
அவ்வாறான பெரிய கடன் கணக்குகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள், இதுவரை மீட்கப்பட்ட தொகைகள் மற்றும் ஒவ்வொரு கணக்கின் தற்போதைய நிலை ஆகியவற்றை விளக்கும் ஒருங்கிணைந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
அல்லது முழுமையான தகவல்களைத் தயாரிக்க கால அவகாசம் தேவைப்படுமானால் குறைந்தபட்சம் மொத்தக் கணக்குகளின் எண்ணிக்கையும் அதனுடன் தொடர்புடைய நிலுவைத் தொகையும் அடங்கிய இடைக்கால அறிக்கையையாவது மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இது முன்னெப்போதும் இல்லாத கோரிக்கையல்ல. இதற்கு முன்னரும் பாராளுமன்ற எழுத்துமூல வினாக்கள் மூலம் அரச வங்கிகளில் பெரும் கடன் நிலுவைகளை வைத்திருப்பவர்களின் பெயர்களும், நிலுவைத் தொகைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முழுமையாக அரசுக்குச் சொந்தமான வங்கிகளும் பொது அதிகாரசபைகளாகக் கருதப்படுவதால், இந்தத் தகவல்களை வெளியிடுவதற்கு எந்தவித சட்டத் தடையும் இல்லை என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.



