இலங்கையின் இராஜதந்திர பலவீனம் ‘சவூதியில் மரண தண்டனையால் ஊசலாடும் அனோஜனின் எதிர்காலம்’ : விதுரன்

அறியாமையினாலும் உணர்ச்சிவசப்பட்ட நிலையினா லும் சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்ட ஒரு கருத்திற் காக, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் சிவராசா அனோஜன் என்ற இளம் தொழி லாளியின் உயிர் இன்று ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
“எனது மகன் செய்தது தவறுதான். தன்னை மன்னித்து, எனது மகனை விடுவித்துத் தாருங்கள். உங்க ளிடத்தில் கையெடுத்துக் கும்பிட்டு, மடிப்பிச்சையாகக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றவாறான தாயின் கண்ணீர்க் குரல், இன்று ஒட்டுமொத்த இலங்கையர்களின் மனச்சாட்சி யையும் உலுக்கியுள்ளது.
தாயின் கதறல் வெறுமனே குடும்பத்தின் சோகத்தை மட்டுமல்லாமல், வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இராஜதந்திரப் பலவீனம், நிர்வாக அலட்சியம் மற்றும் பொறுப்புக்கூறலற்ற போக்கையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
மட்டக்களப்பு, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் புலம்பெயர் தொழி லாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, முகநூலில் ஏற்பட்ட நிகழ்நிலை விவாதம் ஒன்றின்போது நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவிட்டதா கக் குற்றம்சாட்டப்பட்டார்.
தான் செய்த தவறை உணர்ந்த அனோஜன், 5 முதல் 10 நிமிடங்களுக்குள்ளாகவே அந்தப் பதிவை நீக்கியதுடன், இஸ்லாமியச் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் காணொளியையும் வெளியிட்டிருந்தார்.
எனினும், அந்தப் பதிவின் திரைப்பதிவுகள் தீவிரமாகப் பகிரப்பட்டு, இலங்கையிலிருந்தே சவூதி அதி காரி களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடுமையான இணையக் குற்றத் தடுப்புச் சட்டம் மற்றும் மத நிந்தனைச் சட்டங்களின் கீழ் அவர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண் டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் (சுமார் 23 கோடி இலங்கை ரூபா) அபராதமும் விதிக்கப்பட்டது.
இத்தண்டனையைக் குறைப்பதற்காக அனோஜ னின் குடும்பத்தினருக்கு மேன்முறையீடு செய்வதற்காக வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டலின் படி, அனோஜனின் குடும்பத்தினர் 1,890,766 ரூபா சட்டக் கட்டணத்தை அமைச்சின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, 2026 ஆகஸ்ட் 24 அன்று மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், அந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பு குறித்த தகவலை அனோஜன் தொலைபேசி வழியாகத் தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்த பின்னரே இந்தத் துயரச் செய்தி வெளியுலகிற்குத் தெரியவந்தது.
இச்சம்பவம் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் செயற் பாடுகள் மீதான கடுமையான கேள்விகளையும் பொறுப்புக் கூறல் அவசியத்தையும் தோற்றுவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெற்ற சட்ட ஆலோசனையில் மேல்முறையீடு மூலம் தண்டனை குறைய வாய்ப்பில்லை என்று மதிப்பிடப்பட்டிருந்தும், ஏழைக் குடும்பத்திற்கு மேல்முறையீடு செய்ய ஏன் அறி வுறுத்தப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.
மேலும், குடும்பத்தினரால் செலுத்தப்பட்ட பெருந் தொகையான சட்டக் கட்டணத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த வகையான மேற்பார்வையை மேற்கொண்டது? நீதி மன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி யார்? அவர் யாரால் நியமிக்கப்பட்டார்? அவருக்கு யார் அறிவுறுத்தல் வழங்கினார்கள்? மேல்முறையீட்டு ஆவணங்கள் குடும்பத் தினருக்கு வழங்கப்படுவதில் ஏற்பட்ட தாமதங்கள் எதனால் நிகழ்ந்தன? போன்ற கேள்விகளுக்கு வெளிவிவகார அமைச்சு பதில்களை வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.
சவூதி அரேபியா போன்ற கடுமையான சட்டங் களைக் கொண்ட ஒரு நாட்டில், புலம்பெயர் தொழிலா ளர்களின் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் காட்டிவரும் அலட்சியப் போக்கிற்கு இதுவுமொரு சான்றாகும்.
மேன்முறையீடு செய்வதன் மூலம் தண்டனை அதிகரிக்கக்கூடும் என்ற சட்ட அபாயத்தைக் கணித்து குடும்பத்தினருக்கு எச்சரிக்கத் தவறியமை, வழக்கை நடத்தும் சட்டத்தரணி குறித்த எந்தவொரு தகவலையும் குடும்பத்தினருக்கு முறையாகப் பகிராதமை, நீதிமன்றத்தில் வேறு சட்டத்தரணி ஆஜரானபோது அதனை மேற்பார்வை செய்யத் தவறியமை போன்றவை இலங்கை இராஜதந்திரக் கட்டமைப்பின் பாரிய வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தரும் தொழி லாளர்களின் உயிரும் உரிமைகளும் ஆபத்தில் இருக்கும் போது, தூதரகங்கள் வெறுமனே கடிதப் பரிமாற்றங்களுடன் நின்றுவிடாமல், காத்திரமான சட்ட உதவிகளை வழங்கத் தவறுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய சூழலில், மத்திய கிழக்கில் வாழும் தமது பிரஜைகளின் உரிமைகளையும் உயிர்களையும் பாது காப்பதில் பிற நாடுகள் காட்டும் முன்னுதாரண அணுகு முறைகளை இலங்கை ஆராய வேண்டும்.
உதாரணமாக, பிலிப்பைன்ஸ் அரசு தனது புலம் பெயர் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, வெளி விவகார அமைச்சின் கீழ் சிறப்பு உத்தியோகபூர்வ சட்ட உதவி நிதியை ஒதுக்கி, பிரத்தியேக இராஜதந்திரக் குழுக்களை அமைத்துச் செயற்படுகிறது.
சவூதி அரேபியாவில் பிலிப்பைன்ஸ் தொழிலாளர் கள் கைது செய்யப்படும்போது, முதல் கட்டத்திலேயே தூதரக அதிகாரிகளும் அனுபவமிக்க உள்ளூர் சட்டத்தரணிகளும் தலையிட்டு, வழக்கு நிலைகளை நேரடி மேற்பார்வை செய்கின்றனர்.
மேலும், வழக்கின் அபாயங்களை ஆராய்ந்து குடும்பத்தினருடன் வெளிப்படையான தொடர்பைப் பேணுவதுடன், தேவைப்படும் இடங்களில் அரசுத் தலைவர் மட்டத்திலான உத்தியோகபூர்வக் கடிதங்கள் மற்றும் உயர்மட்ட தூதுக்குழுக்கள் மூலம் மன்னர் நிர்வாகத்தை அணுகி, மரண தண்டனையைக் குறைக்கும் அல்லது விடுவிக்கும் இராஜதந்திர அழுத்தங்களை வெற்றிகரமாகச் செலுத்துகின்றனர்.
அதேபோன்று, இந்திய அரசாங்கமும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தமது பிரஜைகளுக்கு சட்ட உதவி வழங்க, பிரத்தியேக சமூக நல நிதியைப் பயன்படுத்துவதோடு, தூதரக அதிகாரத்துவத் தாமதங்களைத் தவிர்த்து, நேரடியாக அமைச்சரவை மற்றும் வெளியுறவு அமைச்சு மட்டத்தில் தலையீடுகளை மேற்கொள்கிறது.
இலங்கை வெளிவிவகார அமைச்சும் ரியாத் தூதரகமும் இந்த நாடுகளின் இராஜதந்திர வழிமுறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, வழக்கமான நிர்வாக நடைமுறைகளிலிருந்து வெளியேறி, அனோஜனின் வழக்கில் உடனடி உயர்மட்ட சட்ட மற்றும் இராஜதந்திரத் தலையீடுகளை ஒருங்கிணைக்க வேண்டும்.
தற்போதுள்ள முதன்மையான இலக்கு அனோஜ னின் உயிரைக் காப்பாற்றுவதேயாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ள போதிலும், இது சாதாரண தூதரக அறிக்கைகளுடன் நிறுத்தப்பட வேண்டிய தொன்றல்ல.
வெளிவிவகார அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சவூதி வெளிவிவகார அமைச்சருடன் நேரடியா கப் பேசுவதுடன், தேவைப்படின் இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய இராச்சியத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊடாகத் தலையீட்டைக் கோர வேண்டும்.
சவூதி அதிகாரிகளிடமிருந்து தீர்ப்பின் உத்தியோக பூர்வ பிரதியைப் பெற்று, அனுபவமிக்க சுயாதீன சட்டத் தரணிகளின் உதவியுடன் மறுஆய்வு வாய்ப்புகளை ஆராய் வது அவசியமாகும்.சவூதி அரேபியாவின் மன்னரும் பட்டத்து இள வரசரும் இஸ்லாமிய மார்க்கத்தின் உயர்ந்த கருணைத் தத்துவத்தின் அடிப்படையில் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தேசத்தினதும் தற்போதைய எதிர்பார்ப்பாகும்.
ஆகவே, இராஜதந்திர, சட்ட மற்றும் மனிதாபிமான வழிகள் அனைத்தையும் உடனடியாகப் பயன்படுத்தி, அனோ ஜனின் உயிரைப் பாதுகாப்பது இலங்கை அரசாங்கத்தினதும் அனைத்து மக்களினதும் வரலாற்றுப் பொறுப்பாகும்.