அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமைகளை மீறும் வகையிலும், தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இச்சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
இச்சட்டமூலம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் சபையின் ஐந்து சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழு தயாரித்த அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இச்சட்டமூலமானது, இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான மற்றும் பரந்த அதிகாரங்களை காவல்துறையினருக்கு வழங்க முற்படுவதாக உள்ளது.
குறிப்பாக, காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை காவல்துறை தடுப்பு காவலில் வைக்க இச்சட்டமூலம் அனுமதிக்கிறது.
மேலும், உதவி காவல்துறை அத்தியட்சகர் பதவி நிலைக்கு மேற்பட்ட அதிகாரியிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியங்களாக ஏற்கவும், அச்சுறுத்தல் மூலம் அந்த வாக்குமூலம் பெறப்பட்டது என்பதை சந்தேகநபரே நிரூபிக்கவேண்டும் என்ற நிபந்தனையும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
இது சித்திரவதைகள் மற்றும் கட்டாய வாக்குமூலங்களைப் பெறுவதற்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இச்சட்டமூலத்தின் கீழ்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி செய்தி வெளியிடும் ஊடகவியலாளர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கும் சரத்துகள் ஊடகச் சுதந்திரத்தைப் கடுமையாகப் பாதிக்கும்.
காவல்துறையினர் நீதிமன்ற அனுமதியின்றி தொலைத்தொடர்புப் பதிவுகளை அணுகவும், தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்கவும் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கான வரைவிலக்கணம் மிகவும் பரந்ததாக உள்ளதால், எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோரும் இச்சட்டத்தின் கீழ் இலக்குவைக்கப்படலாம் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த சட்டமூலத்தைத் திரும்பப் பெறுமாறு பரிந்துரைத்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்கள் கூறியுள்ளனர்.



