சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும் வழிபாட்டு முறைகளும் | முனைவர் கு. சிதம்பரம்

தமிழர் சிந்தனை மரபு

சீனர் – தமிழர் சிந்தனை மரபுகளும்..

ஆய்வுச் சுருக்கம்

உலகெங்கும் இயற்கை வழிபாடுகளும், கடவுள் கோட்பாட்டுச் சிந்தனைகளும், பூமி மற்றும் மனிதன் தோற்றச் சிந்தனைகளும் நாட்டுப்புற இலக்கியங்களிலும், செவ்வியல் இலக்கியங்களிலும், புராணங்களிலும், மதம் சார்ந்த நூல்களிலும் பதிவாகியுள்ளதை அறிகின்றோம். உலகில் மிகவும் தொன்மைக் குடிகளாக விளங்கும் தமிழ் மற்றும் சீனக் குடிகளின் பண்பாட்டு மரபுகளிலும் இத்தகைய சிந்தனைகள் பதிவாகியுள்ளதைக் காணமுடிகின்றது. அந்தவகையில் சீனர் – தமிழர்  இயற்கை வழிபாட்டு மரபுகள், வழிபாடு சார்ந்தச் சிந்தனைகள், பிரபஞ்சத்தின் தோற்றம், மனிதத் தோற்றம் குறித்த சிந்தனைகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அறிவதை நோக்கமாகக் கொண்டு அமைகின்றது இந்த ஆய்வுக் கட்டுரை.

முன்னுரை

சீனர்களின் வழிபாட்டு மரபில் சொர்க்கம், மன்னன், குரு, மாதா, பிதா என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சொர்க்கத்திற்கு முதலிடமும் மன்னனுக்கு இரண்டாமிடமும் முறையே கொடுக்கப்பட்டுள்ளது. குரு, மாதா, பிதா ஆகியோர் அதற்கடுத்த நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றனர். மன்னன் என்பவன் சொர்க்கத்தின் புதல்வன் (Son of Heaven). மட்டற்ற அதிகாரத்தைப் பெற்றவன். விண்ணையும் மண்ணையும் மக்களையும்,  சிறு தெய்வங்களையும் கட்டுப்படுத்தி ஆளக்கூடிய அதிகாரத்தைச் சொர்க்கம் மன்னனுக்கு வழங்கியுள்ளதைச் சீன செவ்விலக்கியங்களும் நாட்டுப்புற கதைகளும் கூறுகின்றன. சிறு தெய்வங்கள் அனைத்தும்  மன்னனின் கட்டுப்பாட்டில் மன்னனின் ஆணைப்படி இயங்கக் கூடியவை. அப்படி இயங்க மறுக்கும் சிறுதெய்வங்களுக்கு மன்னனின் ஆணைப்படி தண்டனையும் தரப்பட்டுள்ளதைப் பல்வேறு நாட்டுப்புறக் கதைகள் மூலம் காணமுடிகிறது. சீனர்கள் வழிபாட்டு முறைகளில் 1.  பிரபஞ்சத்தைப் படைத்தக் கடவுள், 2. சொர்க்கத்தின் கடவுள் , 3. மனிதர்களைப் படைத்த தேவதை, 4. சூரியக் கடவுள், 5. நிலா தேவதை 6. அடுக்களைத் தேவதை ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. இத்தகைய வழிபாடுகள் தமிழ் மரபோடும் இயைந்து போவதை அறியமுடிகின்றது.

1.பிரபஞ்சத்தைப் படைத்தத் தெய்வம் (God of Universe Creator)  

தமிழர் சிந்தனை மரபுபிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து பல்வேறுபட்ட தொன்மக் கதைகள் காணக் கிடக்கின்றன. எனினும் இப்பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன் என்ற தொன்மம் அனைத்துச் சமூகத்திலும் பரவிக் கிடக்கின்றது. சீன வழிபாட்டு மரபின் படி இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர் பாங்கு (PANGU) என்ற கடவுள்1.

ஆரம்ப காலத்தில் பிரபஞ்சத்தில் எதுவும் சீராக வடிவம் பெறாமல் சிதறுண்டு கிடந்ததாம். நாளடைவில் 18 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இச்சிதறுண்ட பொருட்கள் எல்லாம் உருண்டையாகி முட்டைப் போன்ற கோளமாக உருவாகியதாம். இந்த முட்டையிலிருந்து தோன்றியவர்தான் பாங்கு. தலையில் கொம்புகளுடனும் குரங்கு மனிதன் போன்றும் உடல் முழுவதும் ரோமங்களுடனும் அவதரித்தவர்.

தமிழர் சிந்தனை மரபுபிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் படைத்தவர். பூமியை ஆகாயத்தில் இருந்து தனது அசூரக் கோடாரியால் வெட்டி பிரித்தவர். இரண்டையும் தனித் தனியாகப் பிரிப்பதற்கு இரண்டிற்கும் இடையே நின்று வானத்தை தனது கைகளால் உயரே தள்ளியவர். வானத்தை உயரே தள்ளுவதற்கு மேலும் 18 ஆயிரம் ஆண்டுகள் ஆனதாம். ஒவ்வொரு நாளும் பத்து அடி வானத்தை உயரமாக உயர்த்தியும் பத்தடி பூமியே அகலமாக விரித்தும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியவர்.

பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் சோர்வடைந்து உறங்கிவிடுகிறார். அவரது மூச்சு காற்றாகவும், குரல் இடியாகவும், இடது கண் சூரியனாகவும், வலது கண் நிலவாகவும், உடம்பு மலைகளாகவும் உருமாறி விடுகிறதாம். மேலும் அவரது இரத்தம் ஆறுகளாகவும், சதைகள் புன்செய் நிலங்களாகவும், அவரது முகம் பால்வளித்திரளாகவும், முகத்திலுள்ள முடிகள் நட்சத்திரமாகவும் அவரது உடலிலுள்ள ரோமங்கள் புதற்களாகவும், வனங்களாகவும், எலும்புகள் தாதுப் பொருட்களாகவும், எலும்புமஞ்சை வைரமாகவும், அவரது உடலில் இருந்து வரும் வியர்வை மழையாகவும், அவரது உடலில் உள்ள பேன் போன்ற ஒட்டுண்ணிகள் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மீன்களாகவும், விலங்குகளாகவும் நாளடைவில் உருமாற்றம் அடைந்ததாகச் சீனத் தொன்மக் கதைகள் மூலம் காணமுடிகிறது2. பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளான பாங்குவிற்குச் சீனாவில் ஒருசில இடங்களில் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் இன்றும் நடைபெற்று வருகின்றன.

தமிழர் சிந்தனை மரபில் பிரபஞ்சத் தோற்றம்:  நிலம், தீ. நீர், வளி என்னும் காற்று, விசும்பு என்னும் ஆகாயம் ஆகிய ஐந்தும்  ஒன்றோடு ஒன்று கலந்து, புரண்டு, மயங்கிச் செய்ததே இந்த உலகம் என்று உலகத்தின் தோற்றம் குறித்து தொல்காப்பியர் கூறுகிறார்.

நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்   (தொல். மர. பா. 91)

மேற்கண்ட ஐந்து ஆற்றல்களின் அடைப்படையில் இந்த பிரபஞ்சம் சுயம்புவாக உருவானது எனும் கருத்தினைத் தொல்காப்பியரின் வழி அறியமுடிகின்றது.

மேலும், சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் பூமியின் தோற்றம் குறித்து பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

தொன்முறை இயற்கையின் மதியோ மரபிற்றாகப்

பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,

விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,

கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;

செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு

தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10                         (பரி.2)

பல ஊழிக் காலங்கள் தோன்றி மறைந்த பிறகு, இயற்கை விதியின்படி, எதுவுமே இல்லாத பெருவெளியில் அண்டத் தோற்றத்திற்குக் காரணமான கரு மீளவும் தோன்றியது. அஃது உருவென அறிவதற்கு இயலாத நிலையில் ஒலி ஒன்றை மட்டுமே கொண்டதாக இருந்தது. அதனை அடுத்து அசையும் காற்று பிறந்தது. அந்த அணுக்களின் ஆற்றல் கிளர்ந்து பருப்பொருள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் தோன்றின. பிறகு, நீரின் ஊழிக்காலங்கள் தோன்றின. பின்னர் பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது,  பெருவெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த  பூமியினை உயரே எடுத்து வெளிக்கொணர்ந்து நிலைப்பெறச் செய்தவர் திருமாலே என்கிறார் சங்கப் புலவர் கீரந்தையார். மேலும், ஊழி முதல்வனும் அனைத்துக்கும் ஆதியும் திருமாலே என்கிறார்.

பிரம்ம தேவன் திருமாலின் தொப்புள் கொடியில் இருந்து உருவான தாமரை மலரிலிருந்து பிறந்தவர் என்றும் நீரில் இருந்து பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றது. இன்னும் சில புராணக் கதைகள் ஒரு விதை நாளடைவில் தங்க முட்டையாக மாற்றம் பெற்று அந்த தங்க முட்டையிலிருந்து பிறந்தவர் என்றும் கூறுகிறது. முட்டையிலிருந்து எஞ்சிய பகுதியிலிருந்து இப்பிரபஞ்சம் உருவானதாகக் கூறப்படுகின்றது. இந்தியப் புராணங்கள் படியும், வேத மரபின் படியும் உலகம்   பிரமத்தினின்று   உண்டானது எனும் கோட்பாட்டை முன்வைக்கின்றது.

 1. மனிதர்களைப் படைத்த தேவதை (Goddess of Human Being Creator)

 தமிழர் சிந்தனை மரபுநூவா (Nuwa)   மனித தலையையும் கைகளையும் இடுப்புக்குகீழ் மீன் அல்லது பாம்பு அல்லது டிராகான் உடலையும் கொண்ட பெண் தெய்வம். மனித இனத்தைப் படைத்தவர். இவர் மரமாகவும், பறவையாகவும், விலங்காகவும் தனது உருவத்தை மாற்றிக்கொள்ளும் சக்தி பெற்றவர். ஆண்- பெண் பாலியல் ஒழுக்கம், திருமணப் பந்தம் தொடர்பான விதிகளை வகுத்துத் தந்தவர். சொர்க்கத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புபவர். பூமியில் ஏற்படும் பழுதைச் சரி செய்பவர்.

பாங்கு சொர்க்கத்தையும் பூமியையும் படைத்தப்பிறகு, நூவா தேவதை பூமியைப் பார்வையிட வருகிறாள். பூமியின் இயற்கை எழில் நூவா தேவதைக்கு மிகவும் பிடித்துப் போகின்றது. பூமியில் தனது தனிமையினைப் போக்குவதற்காக மனிதர்களைப் படைக்கத் தொடங்குகிறாள்

 1. படைத்தல் தொழிலை செய்யும் நூவா தெய்வம் குறித்து பல்வேறு வடிவங்களில் தொன்மக் கதைகள் சீனாவில் வழங்கி வருகின்றன.

தமிழர் சிந்தனை மரபுநூவா தெய்வம் ஆரம்ப காலத்தில் ஆற்றுப் படுக்கைகளிலுள்ள மண்ணை பயன்படுத்தி உருவ பொம்மைகளை உருவாக்கி மனிதர்களைப் படைத்தவர். தனித்தனியாக அவருடைய கையால் மனிதர்களைப் படைத்தார் எனவும் பிறகு மனிதர்களைத் தானே படைப்பதில் ஆர்வம் குறைந்து கையிற்றை மண்ணில் புரட்டி அதை வீசியதால் அதிலிருந்து விழுந்த மண் கட்டிகள்  மனிதர்களாக மாறியதாகவும் நம்பப்படுகிறது. மேலும் நூவா தெய்வம் தொடக்கத்தில் தன் கைகொண்டு படைத்த மனிதர்கள் மிகவும் புத்திக்கூர்மை உடையவர்களாகவும், அழகாகவும் இருந்ததாகவும், கையிறு கொண்டு படைத்த மனிதர்கள் தொடக்கத்தில் கையால் உருவாக்கிய மனிதர்கள் போல புத்திக்கூர்மை இல்லாமல் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

‘தமிழர் சிந்தனை மரபின்படி’ உயிர் உடலைத் தத்தம் ஊழ்வினைகளுக்கு ஏற்ப, உடல் நிலைகளைப் பெற்று நிலையாக வாழ்வதாக சங்க இலக்கியங்கள்  கூறுகின்றன. உயிர் பற்றிய இலக்கணங்களாகச் சைவச் சமயம் கூறுவது. 1. உயிர் தானே தோன்றியது, 2. என்றும் அழிவில்லாதது, 3. தனித்து நிற்காதது, 4. தான் எதனைச் சார்ந்து இருக்கின்றதோ அதனை சார்ந்து இயங்கும் குணத்தை உடையது, 5. உயிர் வினைகளை அனுபவிப்பது என்று குறிப்பிடுகின்றன.’ (முத்தப்பன்)

            அண்டத்தில் உள்ளதே பிண்டம்

            பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டம் என்பது பிரபஞ்சம். இப்பிரபஞ்சம் நீர், அக்கினி, வாயு, ஆகாயம், பூமி எனும் பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்டது.  மனித உடம்பு பிண்டம் எனப்படும். பிண்டமும் பஞ்ச பூதங்களால் அடங்கியதுதான் என்கிறார் திருமூலர்.

              ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

              இரண்டு அறிவதுவே அதனோடு நாவே

              மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே

              நான்கு அறிவதுவே அவற்றோடு செவியே

              ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே

              நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே.

                                         (தொல்- மரபியல் 27)

உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள், உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள், உடம்பு, நா, மூக்கு ஆகிய மூன்றாலும் அறிவன மூவறிவு உயிர்கள், உடம்பு, நா, மூக்கு, கண் ஆகிய நான்காலும் அறிவன நாலறிவுயிர்கள், உடம்பு, நா, மூக்கு, கண், காது ஆகிய ஐந்தால் அறிவன ஐயறிவு உயிர்கள்; உடம்பு, நா, மூக்கு, கண், காது, மனம் ஆகிய ஆறினால் அறிவன ஆறறிவுயிர்கள் எனத் தொல்காப்பியர் உயிர்களை பாகுபடுத்தியுள்ளார்.

தமிழர் சிந்தனை மரபுபத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த சார்லஸ் டார்வின் என்ற விஞ்ஞானி இயற்கையின் தேர்வு என்ற நியதிப்படி  முந்திய இனங்களில் இருந்து படிப்படியாக மாறுதல் பெற்று, அதாவது பரிணாம வளர்ச்சியால் ஜீவராசிகள் தோன்றின என்று அவர் வலியுறுத்தினார். அதாவது ஓரறிவு உயிரியிலிருந்து படிப்படியாக ஆறறிவு உயிரிகள் தோன்றியிருக்க வேண்டும் என்பது டார்வின் கூற்று.

இந்திய மரபில் படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரமதேவன். ஆகையால் பிரமாவே மனிதர்களையும், பிற உயிர்களையும் படைத்தவர் என இந்திய வேத மரபு கூறுகின்றது. மேற்கத்திய அறிஞர் ஷ்ரோடிங்கர் என்பவர் தெய்வம் உயிர்களைத் தோற்றுவிக்க எண்ணியதால்தான் உயிர் தோன்றியது என்கிறார். பைபிள் போன்ற மதம் சார்ந்த நூல்களும் கடவுள்தான் மனிதனைப் படைத்தான் எனும் கோட்பாட்டை முன்வைக்கின்றன.

உயிர்கள் தோற்றம் குறித்து தமிழர் கோட்பாடு நம்பிக்கை சார்ந்ததாக இல்லாமல், அறிவியல் பூர்வமான சிந்தனைகளைக் கொண்டதாக அமைகின்றது என்பதை இதன்வழி அறிய முடிகின்றது.

3.சொர்க்கத்தின் கடவுள் (God of Heaven)

தமிழர் சிந்தனை மரபுசொர்க்கத்தின் கடவுள் ‘ஸாங்டி’. கடவுளுக் கெல்லாம் கடவுள். அனைத்து சிறு தெய்வங்கள், இயற்கை, போரின் வெற்றி, மன்னனின் ஆட்சி, விதி, நோய்களை ஏற்படுத்தக்கூடிய கெட்ட ஆவிகள், அறுவடை, ஆகிய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமைப் பெற்றவர்.

சொர்க்கத்தின் கோவில் (Temple of heaven) வட்டவடிவில் அமைந்த ஒரு திறந்த கட்டடம் நடுவில் வட்ட வடிவிலான மூன்றடுக்குக் கோபுரம் அமைந்துள்ளது. மூன்று சுற்றுவட்ட அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் அடுக்கில் சொர்க்கக் கடவுளின் சிம்மாசனமும், சொர்க்கத்தின் புதல்வனின் சிம்மாசனமும் இடம்பெற்றிருக்கும். இரண்டாவது அடுக்கில் சூரியன் மற்றும் நிலா தெய்வங்களுக்கான சிம்மாசனங்களும் இடம் பெற்றிருக்கும், மூன்றாவது அடுக்கில் இயற்கைத் தெய்வங்களான நட்சத்திரங்கள், மேகங்கள், மழை, காற்று, இடி, மின்னல் ஆகிய சிறுதெய்வங்களுக்கான சிம்மாசனங்களும் இடம்பெற்றிருக்கும்.

 தமிழர் சிந்தனை மரபு‘சொர்க்கத்தின் கட்டளைப்படி மன்னன் ஆட்சி செய்யக் கடமைப்பட்டவனாக உள்ளான். சொர்க்கத்திற்கு ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தி சொர்க்கத்திட மிருந்து உத்தரவுப் பெற்று ஆட்சி நடத்துவது மன்னர்களின் மரபாக இருந்து வந்துள்ளதைச் சீன செவ்விலக்கியங்கள் கூறுகின்றன. சொர்க்கத்தை வழிபடும் முறைகளில் பல படிநிலைகள் உள்ளன. அவை:

 1. சிறுதெய்வங்களை அழைத்தல்,
 2. மரகதகற்கள் (ம)பட்டுத்துணிகளைச் சிறுதெய்வங்களுக்குப்  படைத்தல்,
 3. தெய்வத்திற்கு உணவு படைத்தல்,
 4. முதலில் பழரசம்(wine) அளித்தல்,
 5. இரண்டாம் முறை பழரசம் அளித்தல்,
 6. இறுதியாக பழரசம் அளித்தல்,
 7. நாட்டுப்புற நடனம் (ம) இராணுவ அணிவகுப்பு,
 8. சிறுதெய்வங்களை வழியனுப்புதல்,
 9. வழிபாட்டுப் பொருட்களை எரித்தல்’

சிறுதெய்வங்களின் முன்னிலையில் சொர்க்கத்தின் கடவுள் ஸாங்டிக்கு நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது. காளை மாட்டை பலிகொடுத்து அதுனுடைய தோள்பட்டை எலும்பை எடுத்து தீயில் வெப்பப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கடவுளுக்கு வினாக்களும் கோரிக்கைகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன. வெப்பப்படுத்துவதன் மூலம் எலும்பில் கீறல்/விரிசல் ஏற்படுகிறது. இந்த கீறல்கள் கடவுளிடமிருந்து வந்த உத்தரவாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசவை தெய்வப் புலவர்களால் விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஸாங்டியின் வழி வந்தோர்கள் மட்டுமே அதாவது மன்னர் வம்சத்தினர் மட்டுமே சொர்க்கத்தின் கடவுளை நேரடியாக வழிபடக்கூடிய அனுமதிப்பெற்றவர்கள். சாதாரண குடிமக்கள் தமது முதாதையர்களை வழிபடுவதன் மூலம் சொர்க்கத்தின் கடவுளை அணுகலாம்.

ஜோயு (Zhou Dynasty) மன்னர்கள் ஆட்சிகாலத்தில் இப்பெருந்தெய்வம் சொர்க்கத்தோடு தொடர்புப்படுத்தப்பட்டு ஸாங்டி என்பது சொர்க்கத்திற்கு இணையான சொல்லாக ஆக்கப்பட்டு, ஸாங்டி என்ற பெயர் நீக்கப்பட்டு சொர்க்கம் (heaven) என்றே குறிப்பிட்டு வணங்கப்படுகிறது. சீனர்களின் இறையியல் வழிபாட்டில் சொர்க்கம் இவ்வாறாக முதலிடத்தைப் பெறுகிறது.

ஜோயு மன்னர்களால் ஸாங்டி என்ற தெய்வத்தின் சக்தி சற்று குறைக்கப்பட்டு சீனர்களின் நற்குணங்கள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் தெய்வமாக்கப்பட்டதாகச் சீனச் செவ்விலக்கியப் பதிவுகள் இயம்புகின்றன.

இந்துப் புராணங்களில் பூமி, சொர்க்கம், நரகம் என மூன்று லோகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளன. இதில் சொர்க்கம் என்பது கடவுளர்கள் வசிக்கும் இடமாகப் பார்க்கப்படுகின்றது. உயிர்கள் ஒவ்வொன்றின் வினைப் பயனுக்கு ஏற்ப வசிப்பிடம் நிர்ணயிக்கப்படுவதாக நம்பம்படுகின்றது. சொர்க்கத்தின் தலைவன் இந்திரன். இந்திரனே சொர்க்கத்தை ஆட்சி செய்பவர் என இந்துப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

 1. சூரியக் கடவுள் (Sun God)

தமிழர் சிந்தனை மரபு‘சீன மன்னர்கள் ஆட்சிகாலத்தில் வருடந்தோறும் சூரிய வழிபாடு மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளது. சூரிய வழிபாடு விடியற்காலை மூன்று மணிக்குத் தொடங்கி சூரிய உதயத்துடன் முடிவடைகிறது. சூரியக் கோவிலைச் சுற்றி சிவப்புக் கம்பளம் மற்றும் சிவப்புத் துணிகளால் அலங்கரிக்கபடுகிறது.

விடியற்காலையில் சூரிய வழிபாடு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

முதலில் மன்னரைப் படைவீரர்கள் அணிவகுப்புடன் பீடத்திற்கு அழைத்துச் செல்வர். மன்னர் பாரம்பரிய சிவப்பு நிற உடை அணிந்திருப்பார். இரண்டாவது கட்டமாகப் பாரம்பரிய நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறும். இவ்விசை நிகழ்ச்சிக்குப் பதினாறு வகையான இசைக்கருவிகளும் எட்டு வகையான இசைகளும் வாசிக்கப்படுவன மரபாக இருந்துவந்துள்ளது. இசைக்கருவிகள் தங்கம், கல், மூங்கில், களிமண், தோல், மரம், புருடை, நார். ஆகிய எட்டுவகை பொருட்களால் செய்யப்பட்டவையாகும். இறுதியாகச் சூரிய உதயத்தின்போது அரசவைப் புலவரின் வழிகாட்டுதலின் பேரில் சூரிய வழிபாடு தொடங்குகிறது. முதலில் சூரியக் கடவுளுக்குப் பட்டுதுணிகள், மரகதம் ஆகியவை படைக்கப்பட்டு ஊதுபத்தி கொளுத்தப்படுகிறது.

தயாராக இரு, நெற்றி பூமியில் படும்படி மண்டியிடு, எழுந்திரு என அரசவைப் புலவர் அறிவிப்பார். அவ்வறிவிப்பிற்கிணங்க மன்னர் முதலில் சூரிய வழிபாடு செய்வார். பிறகு அதனைத் தொடர்ந்து அரசவை உறுப்பினர்களும் படைவீரர்களும், அதிகாரிகளும் வழிபடுவர். இவ்வாறு மூன்று முறை செய்யப்படுகிறது. சூரிய ஒளி பூமியில் பட்டவுடன் முடிமக்களின் சூரிய நமஸ்காரம் முடிவடைகிறது.

பொதுமக்களும் புத்தாண்டின் தொடக்கத்தில் சூரிய வழிபாட்டை காலங்காலமாக செய்து வருகின்றனர். விடியற்காலையில் தட்டில் கேக் மற்றும் ஊதுபத்தி வைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வயதிற்கேற்றவாறு வரிசையாகச்  சூரியனைப் பார்த்தவாறு நின்று, பிறகு நெற்றி பூமியில் படும்படி மண்டியிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது சீன மக்களிடம் மரபாக இருந்து வருகின்றது.

சூரியக் கடவுளுக்கான கோவில் பெய்ஜிங்கில் உள்ளது இது கி.பி 1530ஆம் ஆண்டு மிங் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 தமிழரின் பொங்கல் திருவிழாவில் சூரிய வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சூரியனுக்குத் தனிக்கோவில் எழுப்பிய மரபும் தமிழருக்கு உண்டு. நவக்கிரகங்களில் ஒன்றாகவும் சூரியன் இடம் பெறுவர்’

தொன்மம் :

சூரியக் கடவுள் டி ஜுன் அவருடைய மனைவி சூரிய தேவதை, சிஹோவும் சொர்க்கத்தில் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்குப் பத்து பிள்ளைகள் (சூரியன்கள்) பிறந்தனர். இவர்கள் மிகவும் குறுப்புத்தனம் மிக்கவர்களாக இருந்து வந்துள்ளனர். அப்பா, சூரியக் கடவுளின் ஆணைப்படி ஆளுக்கொருநாள் வானத்தில் வலம் வரவேண்டும். சூரிய தேவதை ஆறு டிராகான்களால் பூட்டப்பட்ட முத்துக்கற்களாலான இரதத்தில் நாளுக்கு ஒரு பிள்ளை(சூரியன்) வீதம் எடுத்துக்கொண்டு வானத்தில் வலம் வந்து இவ்வுலகிற்கு வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தருவது மற்றும் சேவல்களை விடியற்காலையில் எழுப்பி விடுவது இவரது கடமையாக இருந்து வந்துள்ளது. ஒருவன் பணியில் இருக்கும் போது மற்ற பிள்ளைகள் சொர்க்கத்தின் பூங்காவில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மரங்களின் கிளைகளில் அங்குமிங்குமாக விளையாடிவிட்டு மாலையில் கடலில் மூழ்கி தங்களைக் குளுமைப் படுத்திக்கொள்வர். மாலையில் அம்மாவின் வருகைக்காக ஆவலோடு காத்திருப்பார்கள்.

பிள்ளைகளுக்கு ஒரேமாதிரியான வாழ்க்கையில் சோர்வு தட்டிப்போகவே, இனி நாம் தினந்தோறும் ஆள் மாற்றி ஆள் போவதற்குப் பதிலாக அனைவரும்  ஒன்றுகூடி ஒரே நேரத்தில் வானத்தில் வலம் வந்துவிட்டால் அந்த ஒளியும் வெப்பமும் சில நாட்களுக்கும் நீடிக்கும். நாமும் சிலநாட்கள் வேலைசெய்ய வேண்டி வராது என நினைத்து காலையில் அம்மா வருவதற்கு முன் அனைவரும் ஒன்றுகூடி வானத்தில் விளையாடத் தீர்மானித்தனர்.

அடுத்தநாள் பத்து சூரியன்களும் ஒன்றுகூடி ஒருவரை ஒருவர் ஓடிப்பிடித்து மிகவும் மகிழ்ச்சியாக வானத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டனர். பத்து சூரியன்களும் ஒன்றாக ஒரே நேரத்தில்  கூடியதால் அளவுக்கு அதிகமான வெப்பம் பூமியைச் சுட்டு எரித்தது. ஆறுகள் வறண்டன. பயிர்கள் கருகின. மக்கள் தாகத்தால் மடிந்து கொண்டிருந்தனர். கடுமையான வெப்பத்திலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி மக்கள் இரவும் பகலும் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்தனர். மக்களின் பிரார்த்தனைச் சூரியக் கடவுளின் காதுகளுக்கு எட்டியது. அவரது பிள்ளைகளின் இத்தகைய செயல்களினால் மிகவும் கோபம் கொள்கிறார்.

சூரிய தேவன் மிகச் சிறந்த வில்லாளன். ஹோயியை அழைத்து அவரிடம் பத்து மாய வில்லம்பைக் கொடுத்து அவர்களின் குறும்புகார பத்து பிள்ளைகளுக்குத் தகுந்த பாடம் புகட்டும்படி கட்டளை இடுகிறார். ஹோயி பூமியில் செத்து மடிந்து கொண்டிருக்கும் உயிரினங்களைக் கண்டு மிகவும் வேதனை அடைகிறார். ஹோயி சூரியன்களை அழைத்து அவர்களின் முட்டாள்தனமான செயல்பாட்டை நிறுத்தும்படி ஆணையிடுகிறார். ஆனால் அவரை அலட்சியப்படுத்திவிட்டு அவர்கள் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.

சூரியன்களை மாய வில்லம்பால் சுட்டு வீழ்த்தப் போவதாக ஹோயி மிரட்டியப்போது, அவர்கள் கேலியாக சிரித்தனர். அவர்களுக்குத் தெரியும் அவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றும், மேலும் வில்லாளன் ஹோயி சொர்க்க நீதிமன்றத்தின் சாதரண பணியாள் என்றும். ஆனால் குழந்தைகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒன்பது சூரியன்களைச் சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் இன்று ஒரு சூரியன் மட்டுமே வானத்தில் இருப்பதாகச் சீனப் புராணங்கள் கூறுகின்றன.

5.நிலா தேவதை (Moon Goddess)  

பூமியில் வசிக்கும் காதலர்களின் வாழ்க்கையையே வளமாக்கும் சக்தி படைத்த தேவதை நிலா தேவதை (சாங் யே). நிலா தேவதைக்கான விழா (Moon cake festival)  அறுவடைத் திருவிழாவாக வருடந்தோறும் சீனர்களின் நாட்காட்டிப்படி எட்டாவது மாதம் 15 ஆம் நாள் (செம்டம்பர்  இறுதியில் அல்லது அக்டோபர் முதலில்) கொண்டாடப்பட்டு வருகிறது.

சாங் யே மற்றும் அவரது கணவர் ஹோயி (Hou Yi ) ஆகிய இருவரும் சொர்க்கத்தில் வசிக்கும் தெய்வப் பிறவிகள். ஒருநாள் சொர்க்கத்தில் மன்னனின் பத்து பிள்ளைகளும் பத்து சூரியன்களாக மாற்றம் பெற்று பூமியே சுட்டு எரித்துக்கொண்டிருந்தனர். மன்னனால் அவரின் பிள்ளைகளைக்  கட்டுப்படுத்த முடியவில்லை. மன்னர் ஹோயியை உதவிக்கு அழைத்தார். ஹொயி வில்வித்தையில் வல்லமைப் பெற்றவர். ஒன்பது பிள்ளைகளை சுட்டு வீழ்த்தி ஒருவனை மட்டும் சூரியனாக இருக்க விட்டுவிட்டார். ஹோயின் அம்புக்கு தமது ஒன்பது பிள்ளைகள் இறந்துவிட்டதை எண்ணி மன்னன் மிகவும் வேதனை அடைந்தார். இதனால் கோபமடைந்த மன்னன் சாங் யே மற்றும் அவரது கணவர் ஹோயி ஆகிய இருவரையும் பூமியில் மானுடப் பிறவியாக வாழும்படி தண்டணை அளித்துவிட்டார்.

மானுடப்பிறவியாகத் தண்டனைப் பெற்றதை எண்ணி எண்ணி சாங் யே மிகவும் வேதனை அடைந்தார். இதனை அறிந்த அவரது கணவர் ஹோயி மீண்டும் தெய்வப் பிறவியாக மாற்றம் பெறுவதற்கான மருந்தைத் தேடி வடக்கு நோக்கி மிக நீண்ட பயணத்தை மேற்கொண்டார். அவரது பயணத்தின் இறுதியில் மேற்குத்திசை மகாராணியைச் சந்தித்து தனது கதையைக் கூறுகிறார். இதனை அறிந்த மகாராணி அவரிடம் தெய்வப்பிறவியாக மாற்றமடைவதற்கான மருந்தைக் கொடுத்து இதை ஆளுக்குப் பாதியாக உண்ண வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார்.

இம்மருந்தை எடுத்துச் சென்று வீட்டு அலமாரியில் வைத்துவிட்டு மனைவியிடம் இதை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு சற்று நேரம் வெளியில் சென்றுவிடுகிறார். ஆர்வம் மிகுதியால் அதை எடுத்து முழுவதையும் விழுங்கி விடுகிறார் சாங் யே. கணவர் சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்க்கையில் முழு மருந்தையும் ஒருவரே சாப்பிட்டுவிட்டதால் வானத்தில் மிதக்க ஆரம்பித்துவிட்ட தனது மனைவியைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைகிறார். தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காகத் தனது வில்லில் அம்பை எய்து சுட நினைக்கின்றார். அனால் அவரது மனைவியை வில்லால் எய்ய மனம் வரவில்லை. சில தினங்கள் வானத்தில் மிதந்தவாறே இருந்து இறுதியாக நிலாவைச் சென்றடைவதாக நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன.

சாங் யேயிக்குத் துணையாக முயலும், விறகுவெட்டியும் இருப்பதாக நம்பப்படுகிறது. விறகு வெட்டியான் முன்னொரு காலத்தில் தெய்வப்பிறவியாக ஆவதற்கு முயற்சி செய்கிறான். இதனை அறிந்த சொர்க்கத்தின் கடவுள் அவனுக்கு நிலவில் வளரும் மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தினால் நீ தெய்வநிலையை அடையாலாம் என்று கூறி தண்டனை அளிக்கின்றார். ஒவ்வொரு முறையும் அவன் மரத்தை வெட்டும்போதும் மரம் பின்னோக்கி வளர்ந்துகொண்டே செல்கிறது. இவ்வாறாக அவன் நிரந்தரமாக நிலவில் தங்கிவிட்டதாக நம்பப்படுகிறது. மேலும் முயல் நிலவில் சாவா மருந்து தயாரித்துக் கொண்டிருப்பதாகச் சீன நாட்டுப்புறக் கதைகள்  கூறுகின்றன.

சந்திரன்/நிலா வழிபாடு தமிழர் மரபிலும் கடைபிடிக்கப்பட்டு வரப்படுகின்றது. சந்திரனின் பரிமாணங்களான வளர்பிறை, தேய்பிறை, அமாவாசை, முழுநிலவு, மேல்நோக்குநாள், கீழ்நோக்கு நாள், திதிகள் ஆகியவற்றின்மூலம் இந்த உலகில் நிகழும் மாற்றங்களையும் தனது உடலில் நிகழும் மாற்றங்களையும் கணித்து அதற்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்து வாழ்தல்தான் சந்திர வழிபாடு. அதாவது சந்திரன் வழியே பயணப்படுதல் என்பது தமிழ் வாழ்வியலில் முக்கிய கூறாகப் பார்க்கப்படுகின்றது.

அதேபோல கிரகணம் பற்றி நாடு முழுவதும் ஒரே நம்பிக்கை நிலவி வருகின்றது. “தமிழர்களுக்கு ஜாதகத்திலும் சோதிடத்திலும் அபார நம்பிக்கை இருந்ததை அகநானுற்றின் பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் காணலாம். தீய கோள்கள்(பார்வை) இல்லாத நாளில் பவுர்ணமி – ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளில் தமிழர்கள் விளக்கு ஏற்றி சைவ சாப்பாட்டோடு மணல் தரையில் திருமணம் செய்ததை அப்பாடல்கள் விளக்குகின்றன.

சந்திரனைப் பற்றிய பல நம்பிக்கைகளில் ஒன்று சந்திரனை தெய்வமாக வழிபடுவதாகும். பெரிய கோவில்களில் சுற்றுப் பிரகாரத்தில் சந்திரன் சூரியனுக்கு சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். உலகில் இப்படி இன்றுவரை  சந்திர வழிபாடு எங்கும் இல்லை. குறுந்தொகையில் மூன்றாம் நாள் பிறை வழிபாடு (பாட்ல் 170) போற்றப்படுகின்றது”. (ச.சுவாமிநாதன்)

மேலும், தமிழ் நாட்டுப்புறக் கதைகளின்படி முன்னொரு காலத்தில் நிலா பூமிக்கு அருகிலேயே இருந்ததாகவும், ஒருபெண் நெல்லை குத்தும் போது நிலவிற்கு உலக்கை பட்டு உயரே சென்று விட்டதாகவும், நிலவில் ஔவையார்  வடை சுட்டுக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகின்றது. குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டும் பழக்கம் தமிழ்ப் பெண்களிடம் இன்றும் காணப்படுகின்றது.

6.அடுக்களைக் கடவுள் (Kitchen God)

தமிழர் சிந்தனை மரபுசீனர்களின் புத்தாண்டு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தொடங்கி, தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடைபெறுகிறது. புத்தாண்டு  விழா தொடங்குவதற்கு முதல் நாள் அதாவது சீனர்களின் லூனார் நாட்காட்டிப்படி ஆண்டின் கடைசி மாதத்தின்  23 ஆம் நாள். அடுக்களைக் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, விழா தொடங்கப் படுகிறது. சென்ற ஆண்டு முழுவதும் ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்ததா என்பதை அறிந்து சொர்க்கத்திற்குத் தகவல் அளிக்கும்படி சொர்க்கத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் தெய்வமாகும் அடுக்களைத் தெய்வம்.

இத் தெய்வம் மீண்டும் சொர்க்கத்திற்குத் திரும்பிவிட்டதைத் தெரியப்படுத்தும் பொருட்டு இத்தெய்வத்தின் உருவத்தை தீயிலிட்டு எரிக்கின்றனர். இத்துடன் கடவுளின் பயணத்திற்கு உதவும் வகையில் காசு மற்றும் வெள்ளி போன்ற பொருட்களையும் இட்டு எரிக்கின்றனர். மேலும் எங்கள் குடும்பம் இன்புற்று வாழ்கிறது என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் எரிப்பதற்கு முன்பு இத்தெய்வத்தின் உதடுகளில் இனிப்புத் தடவப் படுகிறது.

இவ்வடுக்களைக் தெய்வத்தைப் பற்றி பலவிதமான நாட்டுப்புறக் கதைகள் காணப்படுகின்றன.

 1. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஜாங் லாங் என்ற இயற்பெயர் கொண்ட ஜோ ஜூன் கற்புக்கரசி ஒருவளைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இவருக்கு இன்னொரு இளம் மங்கையோடு தொடர்பு ஏற்படவே, மனைவியைக் கைவிட்டுவிட்டு இளம் மங்கையோடு சென்றுவிடுகிறார். இதனால் சொர்க்கத்தால் சபிக்கப்பட்டு தனது இரு கண்களை இழக்கின்றார். தனது இளம் காதலியால் கைவிடப்பட்டு பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். ஒரு நாள் எதிர்பாரத விதமாக அவரது முதல் மனைவியின் வீட்டில் பிச்சை கேட்கிறார். கண் தெரியாதக் காரணத்தால் அவரது மனைவியை அவரால் அடையாளம் காண முடியவில்லை. அவர் செய்த பாவத்தைப் பொருட்படுத்தாமல் அவர் மீது அவர் மனைவி கருணைக் கொண்டு வீட்டிற்கு அழைத்து அன்போடு அறுசுவை உணவைப் பரிமாறுகின்றாள்.
 2. அப்பெண்மணி செலுத்திய அன்பால் தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார். தனது கற்புகரசியான மனைவிக்கு செய்த துரோகத்தை எண்ணி அழுகிறார். மனம் திருந்திய தனது கணவரைப் பார்த்து அவரது கண்களைத் திறக்கச் சொல்கிறார். அவரது பார்வைத் திரும்பக் கிடைக்கின்றது. தான் கைவிட்டுச் சென்ற தனது மனைவியைப் பார்த்து அவமானப்பட்டு பக்கத்திலிருந்த அடுப்பில் விழுந்துவிடுகிறார். அவர் மனைவி அவரைக் காப்பாற்ற முயற்சித்தும் உடல் முழுவதும் எரிந்து விடுகிறது. அவரது ஒரு காலை மட்டுமே தீயிலிருந்து அவரது மனைவியால் மீட்க முடிகிறது. அவரின் நினைவாக தனது வீட்டின் அடுகளையில் ஒரு நினைவிடத்தை எற்படுத்துகிறாள் மனைவி. அன்றிலிருந்து ஜோ ஜூண் சீனர்களின் அடுக்களையோடு தொடர்புப்படுத்தப்பட்டு அடுகளைக் கடவுளாக வணங்கப்படுகிறது.
 3. அடுக்களைக் கடவுள் ஜோ ஜூன் பற்றிய இன்னொரு கதையில் ஜோ ஜூன் மிகவும் ஏழ்மையானவர். அவரது மனைவியை விற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக அவர் மனைவியின் புதிய கணவர் வீட்டில் வேலைக்காரனாக அமர்த்தப்படுகிறார். அவர் மீது அவரது மனைவி இரக்கம் கொண்டு ரொட்டித் துண்டுகளில் கொஞ்சம் பணத்தை வைத்து பொதிந்து தனது கணவருக்கு மறைமுகமாகக் கொடுத்துவிடுகிறார். இதை அறியாமல் அவர் அந்த ரொட்டித் துண்டுகளைச் சொற்ப விலைக்கு விற்று விடுகிறார். இதை அறிந்த அவர் தமது உயிரை மாய்த்துக் கொள்கிறார். சொர்க்கம் அவர்மீது இரக்கம் கொண்டு அவரை அடுக்களையின் கடவுளாக மாற்றுகிறது.
 4. மற்றொரு கதையில் செங்கல் அடுப்பு கண்டுபிடித்ததிலிருந்து செங்கல் அடுப்பில் அடுக்களைக் கடவுள் குடியிருப்பதாக நம்பப்பட்டு வந்தது. ஆன் மன்னர்கள் ஆட்சி காலத்தில் ஏழை விவசாயி ஒருவன் புத்தாண்டு தினத்தன்று சமைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தனது அடுப்பிலிருந்து அடுக்களைக் கடவுள் தோன்றியதைக் கண்டு வியப்படைகிறான். பிறகு அடுக்களைக் கடவுளுக்கு ஒரு ஆடுவெட்டி வழிபடுகிறான். அன்றிலிருந்து அவன் செல்வந்தனாகிறான். அதன் பிறகு ஒவ்வொரு புத்தாண்டிலும் அடுக்களைக் கடவுளுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு ஒரு ஆடு வெட்டி வழிபட்டு வருவதாக நம்பப்படுகிறது.

இந்திய வழிபாட்டு மரபின் படி அக்கினி பகவான் நெருப்பின் அதிபதியாக திகழ்பவர். இவர் நெருப்பில் இடப்படும் நிவேதனங்களை ஏற்றுக்கொள்பவராக உள்ளார். வேள்வியில் இடப்படும் நிவேதனங்களை மற்ற தெய்வங்களுக்கு அக்னிதேவனே எடுத்துச் செல்கிறார். அக்கினி தேவனின் வாகனம் ஆடு. அக்னி மற்ற தேவர்களைப் போல  என்றும் இளமை உடையவராகக் கருதப்படுகிறார். பதினெண் புராணங்களில் ஒன்றான அக்கினி புராணம் அக்கினி தெய்வத்திற்கு முதன்மை அளிக்கின்றது.

தொகுப்புரை

சீனர் – தமிழர் ஆகிய இரண்டு இனங்களும் உலகில் மூத்த இனங்களாக திகழ்கின்றன. இரண்டு இன மக்கள் பேசும் மொழிகளும் செம்மொழிகளாகவும், இம்மொழிகள் தம்முள்ளில் உயரிய சிந்தனைகளையும் கொண்டுள்ளது. அவ்வகையில் பிரபஞ்சம் உருவாக்க சிந்தனைகள், மனிதத் தோற்றம் குறித்த சிந்தனைகள், இயற்கை வழிபாட்டுச் சிந்தனைகளில் சூரியன் வழிபாடு, நிலா வழிபாடு, நெருப்பு வழிபாடு, சொர்க்கம் நரகம் குறித்தான நம்பிக்கைகள் ஆகியவை இவ்விரு வழிபாட்டு மரபிலும் தொன்று தொட்டு இருந்து வருவதை இந்த ஆய்வின் வழியாக அறிய முடிகின்றது. மேலும், சீனர் வழிபாட்டில் இந்திய புராணங்களின் தாக்கமும் வழிபாட்டுத் தாக்கமும் காணப்படுவதையும் இந்த ஆய்வின் வழி அறிய முடிகின்றது.

துணைநின்ற நூல்கள்

 1. The Rhinoceros Totem and Pangu Myth : An Exploration of the Archytype of Pangu,

Journal of Oral Tradtion, Harward University Press, 2001, P. 364-380,

 1. Pangu, en.wikipedia.org
 2. Elain Dunn, What is the Story? Nuwa, Chinainsight.ifo.
 3. The Temple of Heaven, State Bureau of Cultural Relics, China.
 4. Monica Esposito, Sun-worship in China, Roots of Shangqing Taoist Practices of Light,

Annee, 2004 P.345-402.

 1. Chinese miths and Fantasies, compiled and Translated my Ding Wanglao,Hong Kong

Comercial Press, 1980.

 1. Dragan Tales ,Foreign languages Press, 2005.
 2. Ling Li, Song of Heaven,Panda Books 1995.
 3. Stories of Old China, Echo of Classics, Foreign language press, 2003.
 4. யாங் மோ, இளமையின் கீதம், தமிழில் மயிலை பாலு, அலைகள்

அச்சகம், சென்னை, 2007

 1. ஓபரின் ஏ, ஐ, உயிரின் தோற்ம் ( தமிழாக்கம் நா. வானமாமலை), நியூ

செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னன, 2008

 1. சுவாமிநாதன்.ச., நிலவு பற்றி தமிழரின் அபார அறிவு, www.

Tamilandvedas.com.

 1. முத்தப்பன், உயிர்த் தோற்றம். சிறகு, நவம்பர் 2019 www. siragu.com)

14.சோ.நா. கந்தசாமி, சீன இலக்கியம், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு,

தஞ்சாவூர், 2003.

(நன்றி: நவீனத் தமிழாய்வு( பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டு

ஆய்விதழ், சனவரி – மார்ச்சு 2021.)

Tamil News