பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டம்

பழுதடைந்த அரிசியை நுகர்வோருக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன வர்த்தக அமைச்சராக இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மியான்மரில் இருந்து அரிசி இறக்குமதி செய்திருந்தார்.

வர்த்தக அமைச்சகத்தினால் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட 11 ஆயிரம் டன் அரிசி வெயன்கொட பிரதேசத்தில் தனியார் களஞ்சியசாலை ஒண்றில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அரிசி நுகர்வோருக்கு பாவனைக்கு எடுக்க முடியாதளவுக்கு பழுதடைந்துள்ளது.

என்றாலும் குறித்த அரிசி தொகையை தற்போது வெளியில் கொண்டு வந்து அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாகவும் அதனை நுகர்வோருக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது. அதனால் இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்று தெரிவித்துள்ளார்.

Tamil News