அண்மையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து வெளியிட்ட கருத்து நீதிச்செயன்முறையில் மேற்கொள்ளப்படும் தலையீட்டினை வெளிப்படுத்துவதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் சாத்தியப்பாட்டினையும் கொண்டிருக்கிறது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கரிசனை வெளியிட்டுள்ளது.
சுயாதீன நீதித்துறையானது துடிப்பானதும் நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஜனநாயகத்தின் அடித்தளமாகத் திகழ்வதுடன், சட்டவாட்சியைப் பாதுகாத்து, எவ்வித அச்சமும் பாரபட்சமுமின்றி நீதி நிலைநாட்டப்படுவதனை உறுதிசெய்கிறது.
இலங்கை மக்களின் கண்ணியத்தையும், நல்வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்கான அடிப்படையாக சுயாதீன நீதித்துறை விளங்குவதாக அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் உறுப்புரை 111(இ)(1) இன் பிரகாரம், ‘சட்டத்தின் மூலம் நீதித்துறைத் தத்துவங்கள் அல்லது நீதித்துறைப் பணிகள் பொறுப்பிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நீதிபதியும், தலைமைதாங்கும் அலுவலரும் அல்லது வேறு நபரும் அவர்களைப் பணிப்பதற்கு அல்லது மேற்பார்வை செய்வதற்கு சட்டப்படி உரித்துடையவராக இருக்கின்ற மேல்நீதிமன்றம், நியாயசபை, நிறுவனம் அல்லது வேறு நபர் தவிர்ந்த வேறு எந்த நபரிடமிருந்தும் கிடைக்கப்பெறும் ஏதேனும் பணிப்புக்கு அல்லது தலையீட்டுக்கு உட்படாமல், உரிய தத்துவங்களையும் பணிகளையும் நிறைவேற்றவேண்டும்’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதித்துறை சுதந்திரம் என்பது நிறுவனமயப்பட்ட பாதுகாப்பு மாத்திரமன்றி, அது தனிநபரின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும், சட்டவாட்சியைப் பேணுவதற்கும், ஜனநாயக சமூகத்தின் நெறிமுறைசார் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் அடிப்படையானதாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்வரும் 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், அத்தீர்ப்பினை அனைவரும் கரகோசம் எழுப்பி வரவேற்பார்கள் எனவும் கூறியிருந்தமை தொடர்பில் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகிறோம்.
ஜனாதிபதியின் இக்கருத்து நீதிச்செயன்முறையில் மேற்கொள்ளப்படும் தலையீட்டினை வெளிப்படுத்துவதுடன், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் சாத்தியப்பாட்டினையும் கொண்டிருக்கிறது என நாம் கருதுகிறோம். கடந்த காலங்களில் நிறைவேற்றுத்துறையின் ஊடாகவோ அல்லது வேறு கட்டமைப்புக்களின் மூலமோ நீதித்துறை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சகல சந்தர்ப்பங்களிலும் அதனை சட்டத்தரணிகள் சங்கம் எவ்வித அச்சமுமின்றி எதிர்த்தது.
அதன்படி நீதித்துறையின் சுயாதீனத்துவம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், ஜனநாயகம், சட்டவாட்சி நலன்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றைப் பாதுகாப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



