உள்ளே – வெளியே ஆடுகளமாக மாறிய இலங்கை பிரதமர் பதவி -இரா.ம.அனுதரன்

ஆடுகளமாக மாறிய இலங்கை பிரதமர் பதவி

கோ கோம் கோட்டா என்ற முழக்தோடு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் ஒரு மாதத்தை கடந்து இன்றைய (09) தினமும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை பிரதமர் பதவி ஊசலாட்டமானதொன்றாக மாறியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் மற்றும் பௌத்த பீடங்கள் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளின் காரணமாக மகிந்த ராஜபக்சவின் பதவி ஊசலாட்டமானதாக மாறி கடந்த நாட்களின் பரபரப்பு செய்திகளாக மாறியுள்ளது.

சர்வ கட்சி இடைக்கால அரசு இப்போது தேசிய ஒருமித்த அரசு என்பதாக பெயர் மாற்றத்தோடு பேசுபொருளாகியுள்ளது. இந்தப் பின்னணியில் பிரதமர் மகிந்தவின் பதவி குறிவைக்கப்பட்டது.

பிரதமர் பதவியை எதிர்த்தரப்பில் ஒருவருக்கு வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை மகிந்தவின் பதவி விலகல் அறிவிப்பிற்குள் மறக்கடித்து விடுவதுடன் புதிய அரசு என்ற பெயரில் தற்போதைய மிக மோசமான பின்னடைவு நிலைக்கான பொறுப்புக்கூறலில் இருந்து ராஜபக்ச தரப்பினர் தப்பிப்பதற்கும் வாய்ப்பேற்பட்டுள்ளது.

பெரும்பாலும் இன்றைய (09) தினம் தனது பதவி விலகல் முடிவு குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசாயவிற்கு சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தார். இவ்வாறு வழிபாடு நடத்த சென்ற போது அனுராதபுரத்தில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் பதவி விலகுமாறு கோசங்களும் எழுப்பப்பட்டிருந்தன.

இதனையடுத்து கொழும்பு திரும்பிய பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். குறித்த கடித பரிமாற்ற தகவல் வெளியானதை அடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு பிரதமர் மகிந்த அனுப்பியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

வழமைபோன்று உடனடியாகவே பிரதமரின் ஊடகப்பிரிவு குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளது.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவின் மகனும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த காணொளி பதிவு மகிந்தவின் பதவி விலகும் முடிவை குறிப்பதாகவே அவதானிக்க முடிகிறது.

‘அவருக்குத்தான் இது பெரிது எனக்கு பெரிதல்ல… எம்பியாக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மகிந்த ராஜபக்‌ச  மகிந்த ராஜபக்‌சதான்… நான் ஜனாதிபதியாக இருந்தவன் பிரதமராக இருந்தவன் இதுவெல்லாம் எனக்கு பெரிதல்ல..’ என பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச ஆக்ரோசமாக பதிலளித்திருந்த பழைய காணொளி பதிவை தன்து ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவேற்றம் செய்திருந்தார் நாமல் ராஜபக்ச.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவிக்க உள்ளதன் சூசக அறிவிப்பாகவே நாமலிலன் ட்வீட் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்வது தொடர்பான நிலை இவ்வாறு இருக்கையில் தேசிய ஒருமித்த அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வகிப்பதற்கு முன்மொழியப் படுபவர்களது பெயர் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

தேசிய ஒருமித்த அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்குமாறு விடுத்த அழைப்பை சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்பதற்கு ஆளும் தரப்பு எதிர்த் தரப்பு என இரு பக்கத்திலும் பலரது பெயர்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த வரிசையில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பெயர்கள் தற்போது முன்வைக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் எவரும் ஏற விரும்பமாட்டார்கள். எந்த நோக்கத்திற்காக அதில் ஏறினாலும் தப்பித்து வெளியேறுவது என்பற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதாலேயே அவ்வாறான விபரீத முடிவுக்கு யாரும் முன்செல்லமாட்டார்கள். இருப்பினும் அவ்வாறு மூழ்கிக் கொண்டிருக்கம் கப்பல் நிறைய தங்க கட்டிகளே உள்ளன எனும் போது உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் செல்ல சிலர் விரும்புவார்கள்.

அவ்வாறான நிலைக்கு ஒப்பானதாக தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நிலை காணப்படுகையில், சிங்கள – பௌத்த பேரினவாத நிலைப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தரப்பினரிடையே ஏறபடுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டின் வெளிப்பாடே தேசிய ஒருமித்த அரசு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கம் ஒட்டுமொத்தமாக பதவி விலக வேண்டும் என மக்கள் போராடுகையில், பிரதமர் பதவியில் ஏற்படுத்தப்படும் மாற்றத்துடன் தேசிய ஒருமித்த அரசாங்கம் ஒன்றை நிறுவுவதில் ஆளும், எதிர்த் தரப்பு கட்சிகள் இணக்கமாகியுள்ள நிலை மக்கள் விரோத நிலைப்பாடாகவே உள்ளது.

ஒட்டுமொத்தமாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்வைத்த கோரிக்கை மிகவும் நியாயமானதென்பதை தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பெயரால் இடம்பெற்றுவரும் அரசியல் குத்துக் கரணங்கள் நிரூபித்து நிற்கின்றன.

‘விழிப்பு தான் விடுதலையின் முதற்படி’ எனும் மேதகுவின் கூற்றை சிங்கள சமூகம் உணர்ந்து செலாற்ற முன்வராவிடில் தற்போது கைகூடிவந்துள்ள வரலாற்று சந்தரப்பம் கானல் நீராகவே காணமல் போய்விடும்.

Tamil News