பொருளாதார, அரசியல் நெருக்கடிகளின் அடுத்த கட்ட நிலைமை என்ன……? | பி.மாணிக்கவாசகம்

அரசியல் நெருக்கடிபி.மாணிக்கவாசகம்

அரசியல் நெருக்கடி அடுத்த கட்ட நிலைமை என்ன….?

நிதி அமைச்சரும் நீதி அமைச்சருமாகிய அலி சப்றி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நாட்டின் நிதி நிலைமைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கின்றது. அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் நடப்பு நிலை மட்டுமல்லாமல் அடுத்த கட்ட நிலைமைகள் குறித்த எச்சரிக்கையாகவும் அமைந்திருப்பது கவனத்துக்குரியது. ஆழ்ந்த கரிசனைக்கும் உரியது.

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாகவே உள்ளது என்பது அவருடைய கூற்று. இதன் மூலம்  நாடு நிதிப் பற்றாக்குறை காரணமாக நிலையற்ற (வங்குரோத்து நிலை) நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஒரு நாளுக்குரிய நாட்டின் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்குக் கூட இந்தத் திரவ நிலையிலான 50 மில்லியன் டொலர்களும் போதாது. மூன்று மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவைப்படுகின்ற திரவ நிலையிலான டொலர்களை மத்தியவங்கி தனது கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்பது நாட்டின் கட்டாய நிதிக் கொள்கையாகும். இது நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குரிய அடிப்படையிலான அவசியத் தேவையாகும்.

நாட்டின் நிதிநிலைமையைக் கண்ணும் கருத்துமாகப் பேண வேண்டிய பொறுப்புடைய ஆட்சியாளர்கள் இந்த விடயத்தில் மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும். செயற்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியாளர்கள் அத்தகைய பொறுபு;புணர்வுடன் செயற்படவில்லை. அதன் விளைவை இப்போது நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள். சாதாரணமாக அல்ல. வீதிகளில் வரிசைகளில் நிற்பதன் மூலமும், வீதிகளிலும் காலிமுகத் திடலிலும் போராடுகின்ற நிலையிலுமாக அனுபவிக்கின்றார்கள்.

ஆனால், நாட்டின் நிதி வளத்தை வறிதாக்கியவர்கள் அதற்கான பொறுப்பு கூறத் தவறியிருக்கின்றார்கள். பொறுப்பு கூறாதது மட்டுமல்ல. நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத பேரவலத்துக்கு ஆளாகியுள்ள மக்களின் மன நிலைகளைப் புரிந்து கொள்ளவும் மறுத்திருக்கின்றார்கள். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். முழு அரசம் பதவியைக் கைவிட்டுச் செல்ல வேண்டும் என்ற அந்த மக்களின் கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களும், பொறுப்பானவர்களும் செவி சாய்க்காத நிலைமையே நிலவுகின்றது.

நிதி அமைச்சர் அலி சப்றி ஆட்சியாளர்களின் பிழையான கொள்கைகள் செயற்பாடுகள் காரணமாகவே நாடு இத்தகைய வறிய நிலைமைக்கு ஆளாகியது என்பதையும் தனது உரையில் தெளிவாகப் போட்டு உடைத்திருக்கின்றார்.

தேர்தலில் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக இனவாத, மதவாதப் பிரசாரங்களை வலிமையாக முன்னெடுத்த ராஜபக்சக்கள், மக்களைப் பிழையாக வழிநடத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள். ஆனால் இரண்டரை மூன்று வருட காலப்பகுதியிலேயே மிகுந்த நம்பிக்கையோடு வாக்களித்த மக்களின் வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாகிவிட்டார்கள்.

அவர்களை அரியணையில் ஏற்றிய மக்களே இப்போது பதவி விலக வேண்டும் என்று கோருகின்றார்கள். ஆனால் அரசியல் யதார்த்த நிலையிலான அந்த நியாயமான கோரிக்கையை ஏற்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தயாரில்லை. தாங்கள் ஜனநாயக வழியிலான தேர்தல்களின் மூலமே ஆட்சிக்கு வந்ததாகவும், எனவே அந்த மக்களின் வாக்களிப்புக்கு விரோதமாகப் பதவி விலகப் போவதில்லை என்றும் அடித்துக் கூறி வருகின்றார்கள்.

அதேவேளை அல்லல்பட்டு ஆற்றாமல் கொதித்து எழுந்துள்ள மக்களின் சாத்வீகப் போராட்டங்களை முறியடிப்பதற்கான மறைகரச் செயற்பாடுகளையும் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். தேர்தலில் அமோகமாக யாரும் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வாக்களித்த மக்களே வேண்டாம் என்று கூறும்போது பிடிவாதமாகப் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது நியாயமான செயற்பாடல்ல.

வாக்களித்த மக்களுடன் இந்த அரசாங்கத்தை வலிமையாகக் கொண்டு நடத்துவதற்கு பங்காளிகளாகப் பொறுப்பேற்று ஒத்துழைத்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அரச கூட்டணியில் இருந்து விலகி அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்கள். இதனால் முழு நாடுமே ராஜபக்சக்களுக்கும், இந்த அரசாங்கத்திற்கும் எதிராக சீறி எழுந்துள்ளது.

இந்த நிலையில் பதவிகளில் இருந்து விலக மாட்டோம் என்று ஜனநாயக உரிமை கோரி, ராஜபக்சக்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலைமை ராஜபக்சக்களுக்கு வாக்களித்த மக்களை வளர்த்த கடாக்களே மார்பில் பாய்கின்ற நிலைமைக்கு ஆளாக்கியிருக்கின்றது. இது அடவாடி அரசியலின் அடையாளம். சர்வாதிகாரப் போக்கின் தெளிவான வெளிப்பாடாகும்.

பொருளாதார நெருக்கடி நாட்டு மக்களின் நாளாந்த வாழ்க்கையை பேரிடருக்குள் ஆழ்த்தி இருக்கின்றது. அரிசி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் என எரிபொருட்களுக்கும், வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக மாறிப் போயுள்ள சமையல் எரிவாயு என்பவற்றுக்கும் பெருந் தட்டுப்பாடு நிலவுகின்றது. டொலர்களின் கையிருப்பு தேய்ந்துள்ளதனால், இவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலைமைக்கு அரசு ஆளாகியிருக்கின்றது. மொத்தத்தில் ஒரு நாளைக்கு நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கின்றது.

ஆட்சி அதிகாரம் கையில் வந்துவிட்டால் விரும்பியவாறு செயற்பட முடியும் என்ற வெற்றி அரசியல் மமதையோடு முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இப்போது ராஜபக்சக்களுக்குக் கசப்பான அரசியல் பாடத்தைப் போதிப்பதாக அமைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி நாட்டின் ஆட்சியில் சிக்கல்களையும், அரசியல் நெருக்கடிகளையும் உருவாக்கி இருக்கின்றது. இந்த நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டு எழுவது எவ்வாறு என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாகும்.

அரசியல் நெருக்கடிஇந்தக் கேள்விக்கு நிதி அமைச்சர் அலி சப்றி தனது உரையில் பதிலளிக்க முற்பட்டிருக் கின்றார் என்றே கூற வேண்டும். பிழையான தீர்மானங்கள் பொருத்தமற்ற நடவடிக்கைகளே நாட்டின் இந்த நிலைமைக்குக் காரணம் என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். ராஜபக்சக்களின் சமயோசிதமற்ற, இராஜதந்திர அணுகுமுறையற்ற ஆட்சிப் போக்கே நாட்டை இந்த நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கின்றது என்பதையும் அவர் ஒப்புதல் வாக்குமூலமாகத் தனது உரையில் வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அரசியல் நெருக்கடி ஒருபுறமிருக்க, மிக மோசமான வறுமையில் உழலுகின்ற குடும்பம் ஒன்று அடுத்த நேர சோற்றுக்கு வழியென்ன என்று தெரியாமல் விழிப்பதற்கு ஒப்பான நிலையில் ராஜபக்ச அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இறக்குமதி பொருளாதாரத்தில் நாட்டை ஆழ்த்தியுள்ள ராஜபக்சக்கள், நாட்டை மீள முடியாத கடன் சுமைக்குள்ளேயும் ஆழ்த்தி இருக்கின்றார்கள்.

கடன் தொல்லையைச் சமாளித்து நாட்டின் பொருளாதார நிலைமையை பத்து வருடங்களிலாவது சீர் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்பதை அவர் கூறியுள்ளார். இரண்டு வருடங்களில் நிலைமையை சீர் செய்வதாக இருந்தால் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டி உள்ளது என்பது அவருடைய உரையின் முக்கியமான உட்கிடக்கையாகும். இரண்டு வருடங்களிலா அல்லது பத்து வருடங்களிலா நிலைமைகளைச் சீர் செய்வது என்பது அனைவருடைய கைகளிலுமே தங்கியிருக்கின்றது என்று அவர் தெளிவாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

வருவாயிலும் பார்க்க அதிக செலவினங்களைக் கொண்ட அரசாங்கமாக இலங்கை அரசாங்கம் திகழ்கின்றது. இந்த நிலையில் அரச வருவாய்களை அதிகரிக்க வேண்டிய அவசியம், கட்டாய நிலைமை உருவாகி இருக்கின்றது. அதிகாரத்துக்கு வந்தால் வரிகளைக் குறைத்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க முடியும் என வாக்குறுதி அளித்தவாறு கோத்தாபாய ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்ததும் நாட்டின் வருமானத்துக்கு மூலோபாய வழியாகத் திகழ்ந்த வரிகளைக் குறைத்து நாட்டின் வருவாயைக் குறைத்தார்.

அந்த வகையிலான அவருடைய வரவு செலவுத் திட்டம் இப்போதைய நிலையில் பொருத்தமற்றது. அது மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதையும் அமைச்சர் அலி சப்றி சுட்டிக்காட்டி இருக்கின்றார். வரிகளை 14 வீதம் அதிகரிக்க வேண்டிய அவசர நிலை உருவாகியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். அவருடைய இந்தக் கூற்று அடுத்தடுத்த மாதங்களில் நாட்டு மக்கள் அதிக அளவிலான வரிச்சுமைகளைத் தாங்க வேண்டி இருக்கும் என்பதை கோடி காட்டி இருக்கின்றது.

டொலர் பற்றாக்குறை காரணமாக நாட்டில் பணவீக்கம் அதிகமாகி, டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது. இந்த வீழ்ச்சியானது வளர்ச்சிப் போக்கிலான அறிகுறிகளையே காட்டுகின்றது. தேய்வடைவதற்கான அல்லது குறைவடைவதற்கான அறிகுறிகளைக் காண முடியவில்லை. நாளுக்கு நாள் மோசமடைகின்ற இந்த நிலைமை பொருட்களின் விலைகளை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும். அரச சேவைகளின் பெறுமதியையும் அதிகரிக்கவே செய்யும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தற்போது அரசாங்கத்தினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அரசியின் விலை 220 ரூபாவில் இருந்து இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதேபோன்று ஏனைய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கவே செய்யும். ஒருபோதும் குறைவடைய மாட்டாது. போக்குவரத்துக் கட்டணங்கள், மின்சாரம், நீர் என்பவற்றின் கட்டணங்களும் அதிகரித்து மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

எனவே, இப்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து அதிருப்தியும் கண்டனமும் தெரிவிப்பவர்கள் இன்னும் மோசமான வாழ்க்கை நிலைமைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது என்ற பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலைமைகளை முன்கூட்டியே உணர்ந்து அதற்குத் தாயராக வேண்டியது அவசியம். இதுவே இன்றைய இலங்கையின் யதார்த்த நிலையாகும்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது | இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்

Tamil News