முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது | இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்

66 Views

இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 181 ஆசிரியர் தலையங்கம்

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது ஆண்டில் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு உணரப்படுகிறது

2009ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்கள் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன. சனநாயக வழிகளூடாக எங்களின் உரிமைகளுக்காகப் போராடுவோம் எனத் தெளிவாகப் பிரகடனப்படுத்தியமையை உலகறியும். இந்நிலையில் பாதுகாப்பு வலயங்களுக்குச் செல்லுமாறு பணித்து சிறிலங்காவே முள்ளிவாய்க்காலில் அந்த பாதுகாப்பு வலயங்கள் மேல் தொடர்ச்சியாக எறிகணைகளையும், விமானக் குண்டுகளையும், இரசாயன ஆயுதங்களையும், தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் பயன்படுத்தி  ஈழத்தமிழ் மக்களை இலட்சக்கணக்கில் இனஅழிப்பு செய்தனர் என்பது 21ம் நூற்றாண்டின் உலக வரலாறாக உள்ளது.

இந்நூற்றாண்டின் மிகக் கொரூரமான இந்த மனித இனப்படுகொலைகள் ஈழத்தில் நடைபெற்ற காலத்தில் நவீன தொலைத் தொடர்புக் கருவிகள் வழி உலகநாடுகளும், உலகநாடுகளின் அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையும் இதனை உடனுக்குடனேயே அறிந்தன என்பதும் உலக வரலாறு. ஆயினும் நியாயமான காரணங்கள் ஏதுமற்ற மௌனமொன்றின் வழி 20ம் நூற்றாண்டின் கிட்லரின் யூத இனஅழிப்பை விட பலவழிகளில் மிக கொடூரமான சிறிலங்காவின் 21ம் நூற்றாண்டின் மிகக்கொடிய இனஅழிப்பு உத்திகளை  உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் அனுமதித்தன என்பதும் வரலாற்று உண்மை.

உண்மையில் ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள இறைமையுள்ள இலங்கையின் தேசமக்கள். இந்த வகையில் இந்த மண் எங்களின் சொந்த மண் என்ற இயற்கை உண்மையின் அடிப்படையில்  தங்கள் தாயகத்தில் தங்கள் தேசியத் தன்மையுடனும் தங்களின் பிரிக்கப்பட இயலாத தன்னாட்சி உரிமையுடனும் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயித்தல் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினையாக உள்ளது.

பிரித்தானிய காலனித்துவ அரசால் ஈழத்தமிழ் மக்களின் விருப்புப் பெறப்படாது உருவாக்கப்பட்ட பெரும்பான்மையினச் சிங்கள பௌத்த பேரினவாத ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிமுறையில் 1948 முதல் 1972 வரை கால்நூற்றாண்டு காலம் பாராளுமன்றக் கொடுங்கோன்மையினை ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்தனர். இதன் உச்சமாக 22.05.1972 இல் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிங்கள அரசாங்கம் ஈழத்தமிழர்களின் விருப்புப் பெறப்படாத சிங்கள பௌத்த குடியரசுப் பிரகடனத்தின் மூலம் காலனித்துவ பிரித்தானிய அரசாங்கம் ஈழத்தமிழர்களின் இறைமையைச் சிங்களவர்களின் இறைமையுடன் ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் இணைப்பதற்கு வழங்கிய சோல்பரி அரசியலமைப்புப் பாதுகாப்பையும் வன்முறைப்படுத்தியது. இதனால் 22.05.1972 முதல் இன்று வரை அரை நூற்றாண்டாக தங்களை ஆள்வதற்கான அரசியலமைப்பு உரிமையை இழந்த சட்டவிரோத சிறிலங்கா அரசின் இனஅழிப்பு நோக்கிலான அரசாட்சியின் படைபல ஆக்கிரமிப்பில் நாடற்ற தேசஇனமாக ஈழத்தமிழ் மக்கள் வாழ்ந்து வருவது இன்றைய சமகால உலக வரலாறாக உள்ளது.

‘சிவில் ரைட்ஸ்’ என ஆங்கிலத்திலும் ‘குடிமுறை உரிமை’ எனத் தமிழிலும் வழங்கப்படும் சொல்லாட்சி ஒருநாட்டைத் தாயகமாகக் கொண்டு வாழும் மனிதர் எவரையும் இன மத மொழி பிரதேச சாதிய வேறுபாடுகளின் வழி அடையாளப்படுத்தாது அந்நாட்டில் வாழும் குடி  என்ற அடிப்படையில் மனித உரிமைகளுடனும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் சுதந்திரமாக வாழ அனுமதித்தல் வேண்டும் என்பதைக் குறிக்கும் சொல். கடந்த அரை நூற்றாண்டாக ஈழத்தமிழ் மக்களின் இந்தக் குடிமுறை உரிமைகள் பாதுகாப்பு முயற்சியைத்தான் முன்னெடுத்து வருகின்றனர்.

அதனைப் பிரிவினை எனவும் பாதுகாப்பான அமைதி வாழ்வை நிலை நாட்டுவதற்கான செயல்முறைகளைப் பயங்கரவாதம் எனவும் சிறிலங்கா அரசியல் திரிபுவாதம் செய்து ஈழத்தமிழின அழிப்பையும் படைபல ஆக்கிரமிப்பு மூலம் இனங்காணக் கூடிய அச்சத்தை ஈழத்தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வாக்கி அவர்களின் அரசியல் பணிவை ஆயுதமுனையில் பெறுவதும் தொடர்கிறது. அனைத்துலக சட்டங்கள் முறைமைகள் ஒழுங்குகளை மீறிச் சிறிலங்காவுடன் சேர்ந்து உலகநாடுகளும் அமைப்புக்களும் ஈழத்தமிழின அழிப்பை அனுமதித்து வருவதன் விளைவாக, இலங்கையில் குடிமுறை உரிமைகளை தாங்கள் நினைத்தவாறெல்லாம் வன்முறைப்படுத்தலாம் என்னும் சனநாயக மறுப்புடனான அனைத்துலகச் சட்ட ஒழுங்கு மறுப்பு அரசியல் கொள்கைகளைச் சிங்கள அரசாங்கங்கள் சிங்கள அரசாங்கங்களின் கோட்பாடாகவே அமைத்து வருகின்றன.

இதனால் உள்நாட்டு சட்டங்களுக்கோ அனைத்துலகச் சட்டங்களுக்கோ அச்சப்படாத மனோநிலையைச் சிறிலங்கா அரசாங்கங்கள் வளர்த்துக் கொண்டதன் விளைவே இலங்கையின் தேச இனங்களான சிங்கள தமிழ் தேசஇனங்களுடைய குடிமுறை உரிமைகளின் பாதுகாப்பை மட்டுமல்ல, இலங்கையின் இனத்துவச் சிறுபான்மையினங்களான முஸ்லீம் மற்றும் மலையகத் தமிழ் இனங்களின் குடிமுறை உரிமைகளது பாதுகாப்பையும் படிப்படியாக ஒடுக்கி,  இன்றைய சிறிலங்காச் சிங்கள தேச இனத்தின் காலிமுகத்திடல் குடிமுறை உரிமைக்கான தொடர் போராட்டங்கள் தோற்றம் பெறச் செய்துள்ளன என்பதை இலக்கு இவ்விடத்தில் தெளிவாக உலகுக்கு எடுத்துரைக்க விரும்புகிறது.

இதனைப் பொருளாதார நெருக்கடி என்னும் வெளிப்பாட்டு நிலையிலோ அல்லது சிங்கள ஆட்சி மாற்றம் ஒன்றின் வழி தீர்க்கக் கூடிய ஒன்று என எழுந்தமானதாகவோ எடுத்து நோக்காது,  குடிமுறை உரிமைகளைப் பாதுகாக்கும் ஆற்றலை இலங்கைக் குடிகள் அனைவரும் மொழி மத பிரதேச சமூக வேறுபாடுகளின்றி இழந்துள்ளமையே இன்றைய பிரச்சினையின் உண்மை வடிவம் என்பதன் அடிப்படையில்,  சிறிலங்காவுக்கு நிதிஉதவி அல்லது நிதிகடன் அளிக்க முயலும் அனைத்துலக நாணய நிதியமும், உலகவங்கியும், ஆசிய வங்கியும், உலக நாடுகளும், உலக அமைப்புக்களும் உணர வைப்பது புலம்பதிந்து வாழும் தமிழர்களின் கடமையாக உள்ளது. அத்துடன் இலங்கைத்தீவின் எல்லா மக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு குடிமுறை உரிமைகளைப் பாதுகாக்கும் பொது அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு,  குடிமுறை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்ட மாற்றத்தைக் கொண்டுவரச் செய்தால் மட்டுமே இலங்கைத் தீவில் எல்லாக் குடிகளும் தங்களது உயிர் உடைமைகள் நாளாந்த வாழ்வு என்பனவற்றைப் பாதுகாக்க இயலும். இதற்காக உழைக்க வேண்டும் என்பதையும் இலக்கு இவ்விடத்தில் வற்புறுத்திக் கூற விரும்புகிறது.

Tamil News

Leave a Reply