இளைஞர்களின் போராட்டத்தில் மகாசங்கத்தினர் வகுத்த வியூகம்! அகிலன்

54 Views

மகா சங்கத்தினர்

அகிலன்

மகா சங்கத்தினர் வகுத்த வியூகம்

இளைஞர்களால் சுயாதீனமாக ஆரம்பிக்கப்பட்ட ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தை பௌத்த மகா சங்கங்கள் தமது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான வியூகம் ஒன்றை வகுத்துக்கொண்டு களத்தில் இறங்கியுள்ள போதிலும், அது பெருமளவுக்கு வெற்றியளிக்கவில்லை.

எரிபொருட்கள், பால்மா உட்பட அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்வும், அவற்றுக்கு ஏற்பட்ட பாரிய தட்டுப்பாடும்தான் மார்ச் மாத இறுதிப்பகுதியில் நுகேகொட பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை சுற்றிவளைத்து ‘கோட்டா கோ ஹோம்’ என இளைஞர்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டத்துக்கு காரணமாக அமைந்திருந்தது.

அன்றிரவே பொலிஸார், அதிரடிப்படையினர் தமது பலத்தைப் பாவித்து அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்கள். 50 க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அந்தப் போராட்டம் படைபலத்தைக் கொண்டு முறியடிக்கப்பட்டாலும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகம் முன்பாக ஆரம்பமான போராட்டம் இன்று சுமார் 30 நாட்களைத்தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. காலிமுகத்திடலில் ‘கோட்டா கோ ஹோம் கிராமம்’ ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகை முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவை வெளியேறக்கோரி – ‘மைனா கோ ஹோம் கிராமம்’ ஒன்றையும் அமைத்து விட்டார்கள். இரண்டு இடங்களிலும் தொடரும் போராட்டங்கள் நாடு முழுவதிலும் அரச எதிர்ப்பு அலையாக தீவிரமடைந்து வருகின்றது. மக்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் போராட்டம் தொடர்கின்றது.

இந்த நிலையில்தான் இந்தப் போராட்டங்களை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்த மகாசங்கங்கள் இந்தப் போராட்டத்துக்குள் திடீரென தம்மையும் நுழைத்துக் கொண்டுள்ளன. இரண்டு வகையில் அந்தத் தலையீடு அமைந்திருந்தது.

முதலாவது – மகா சங்கப் பிரகடனம் ஒன்றை வெளியிடப்போவதாக மூன்று மகாசங்கங்களின் சார்பிலும் எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இரண்டாவது – பௌத்த மகா சங்கங்களின் சார்பில் பெருந்தொகையான பிக்குகள் காலிமுகத் திடலில் இடம்பெறும் போராட்டத்துக்கு ஆதரவாக களமிறங்கினார்கள்.

மகா சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை முழுமையாக பதவி விலக வேண்டும். இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு பாராளுமன்ற மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும்.

இடைக்கால அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் இணங்காவிட்டால், அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து மகாநாயக்க தேரர்களையும் மகாசங்கங்களையும் ஒன்றிணைத்து சங்க மஹா பிரகடனம் அறிவிக்கப்படும் என்பதுதான் மஹா சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்ட எச்சரிக்கை.

இலங்கையின் நவீன வரலாற்றில் இவ்வாறு சங்கப் பிரகடனம் வெளியிடப்படும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருப்பது இதுதான் முதன்முறை. ஆனால், மன்னர் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு சங்கப்பிரகடனம் வெளிளிடப்படும் நடைமுறை ஒன்று இருந்துள்ளது. மன்னர் ஒருவர் ஆட்சியைத் தவறாகக் கொண்டு செல்கின்றார் என்றால், மகா சங்கங்கள் இவ்வாறான பிரகடனத்தை வெளியிடுவதை வழமையாகக் கொண்டிருந்தன என அறியக்கூடியதாக உள்ளது.

மன்னர் ஒருவருக்கு எதிராக இவ்வாறு சங்கப் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டால், குறிப்பிட்ட மன்னர் மகா சங்கத்தினரை சந்திக்க முடியாது. பௌத்த வழிபாட்டுத் தலங்களுக்கு அவர்கள் செல்ல முடியாது. அவர்களுடைய இல்லங்களில் நடைபெறும் நிகழ்வுகள் எதற்கும் பௌத்த பிக்குகள் யாரும் செல்ல மாட்டார்கள்.

இவ்வாறு – பௌத்த பிக்குகளால் அவர்கள் புறக்கணிக்கப்பட – இறுதியில் சமூகத்தினாலும் அவர்கள் ஒதுக்கப்படுவார்கள். அதனால்தான் இலங்கையின் ஆட்சியாளர்கள் எவருமே மகாசங்கத்தினரின் சீற்றத்துக்கு உள்ளாகக் கூடாது என்பதில் மிகவும் அவதானமாக இருப்பார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கையின் அரசியலில் மகாசங்கத்தினருக்கு முன்னுரிமை கொடுக்கும் வழமை உருவானது.

ராஜபக்சக்களை பொறுத்தவரையில், முன்னைய ஆட்சியாளர்களைவிட அதிகளவுக்கு பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். பௌத்த சாசன அமைச்சை மஹிந்த ராஜபக்ச எப்போதும் தன்வசம் வைத்திருந்தார். பதவிப் பிரமாணங்களைச் செய்வதற்கு முன்னர் கண்டிக்குச் சென்று அவர்களுடைய கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதை வழமையாகக் கொண்டிருந்தார்.

மகா சங்கத்தினர்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் பதவியேற்ற காலத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பௌத்த மகாசங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் சமகால நிலைமைகள் குறித்து ஆராய்வதையும், அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்பதையும் வழமையாகக் கொண்டிருந்தார்.

ராஜபக்சக்கள் மீது மகாசங்கங்களும் அதிகளவுக்கு அக்கறையாக இருந்தமைக்கும் காரணம் இருந்தது. ஜனாதிபதி தான் தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்பதை எப்போதும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனைவிட போரை வெற்றி கொண்டவர்கள் என்ற முறையில் ராஜபக்சக்கள் மீது அவர்கள் அதிகளவு கரிசனையை வெளிப்படுத்தி வந்திருந்தார்கள்.

ராஜபக்சக்களுக்கும் மகாசங்கங்களுக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் நெருக்கமான ஒன்றாகத்தான் இருந்துள்ளன. மகாசங்கத்தினரால் பெரிதும் விரும்பப்படும் ஒரு அரசாங்கமாகத்தான் ராஜபக்ச அரசு இருந்தது. பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து – மக்கள் வீதிகளில் இறங்கிய நிலையில் கூட, மகா சங்கத்தினர் ராஜபக்சக்களுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை.

ராஜபக்சக்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து – ராஜபக்சக்களைப் பற்றிய மேலும் பல இரகசிய ஆவணங்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில் – மக்களுடைய உணர்வுகளும் ராஜபக்சக்களுக்கு எதிராக தீவிரமடையத் தொடங்கிய நிலையில்தான் மகாசங்கத்தினர் இதில் தலையிட்டார்கள். சங்கப் பிரகடனத்தை வெளியிடப் போவதாக எச்சரித்தார்கள். ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளை முன்னெடுத்தார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

ஒன்று – காலிமுகத்திடல் போராட்டத்தின் மூலமாக உருவாகக்கூடிய மாற்றங்கள் – குறிப்பாக அரசியலமைப்புத் திருத்தம் பௌத்தத்துக்குரிய முன்னுரிமையை பாதித்துவிடும் என்ற அச்சம்.

இரண்டு – தங்களுடைய சம்பந்தம் எதுவும் இல்லாமல் இளைஞர்களின் முயற்சியால் அரசியலில் முக்கியமான மாற்றம் ஒன்று இடம்பெறுவதன்பது தங்களுடைய முதன்மை ஸ்தானத்தை பாதித்துவிடும் என்ற அச்சம்.

இந்த இரண்டு காரணங்களாலும்தான் பௌத்த மகாசங்கம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு சங்க மகா பிரகடனத்தை வெளியிடப்போவதான அறிவித்தலை வெளியிட்டது. இதற்கு அஞ்சி அவர்கள் கேட்டவாறு செய்வதாக எழுத்துமூலமாக உறுதியளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமரான தனது தமையனார் பதவியைத் துறப்பார் என எதிர்பார்த்தார். ஆனால், மஹிந்தரோ தானாக பதவியைத் துறக்கப்போவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளார்.

ஒவ்வொரு போயா தினத்துக்கும் தனது இல்லத்துக்கு மகாசங்கத்தினரை அழைத்து நாள் முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்துகொள்ளும் மஹிந்தர் இந்த சங்கப் பிரகடனத்தையிட்டு அஞ்சும் ஒருவராகத் தெரியவில்லை. அதிகாரம் போய்விட்டால் தன்மீதும் குடும்பத்தினர் மீதும் வரக்கூடிய வழக்குகளுக்கு அஞ்சிய ஒருவராகவே அவர் காணப்படுகின்றார்.

காலிமுகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இளைஞர்களின் பிரதிநிதிகள் கண்டி சென்று மகாசங்கத்தினரை சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றிருக்கின்றார்கள். ஆலோசனைகளையும் கேட்டிருக்கின்றார்கள். சங்க மஹா பிரகடனத்தை விரைவாக வெளியிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆக, இந்தப் போராட்டம் கூட மகாசங்கத்தினரின் கைகளுக்குள் செல்லப்போகின்றது.

இறுதியாக தான் தப்பிப்பதற்காக தன்னுடைய மூத்த சகோதரராகிய மகிந்த ராஜபக்சவின் பதவியை பலியிடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாராகி விட்டார் என்பதை வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் உறுதிப்படுத்தியிருக்கின்றது.

காலிமுகத்திடல் போராட்டம் என்னதான் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், பௌத்தத்துக்கான முன்னுரிமை, சிங்களத்துக்கான மேலாண்மை என்பவற்றை பாதுகாத்துக்கொண்டுதான் முன்செல்லும் என்பதுதான் மகாசங்கங்களின் வருகை சொல்லும் செய்தியாகவுள்ளது.

Tamil News

Leave a Reply