அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆப்கான் மீதான தலிபான்களின் படை நடவடிக்கைவேல்ஸ் இல் இருந்து அருஸ்

ஆப்கான் மீதான தலிபான்களின் படை நடவடிக்கை: இருபது ஆண்டு கால கெரில்லா போர் முறை, அதனுடன் கூடிய இராஜதந்திர அணுகுமுறை, புதிய உலக ஒழுங்கில் ஏற்பட்ட காலமாற்றம் மற்றும் கோவிட் நெருக்கடி என்பன ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

 

ஆப்கான் படையினர்

ஆனால் செலுத்தப்பட்ட விலைகள் அதிகம், 2001 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய போரில் இதுவரை 241,000 இற்கு மேற்பட்டடோர் ஆப்கானிலும், பாகிஸ்தானிலும் கொல்லப் பட்டுள்ளனர். அதில் 71 ஆயிரம் பொது மக்கள், ஆப்கான் படையினர் 66 ஆயிரம் பேர், தலிபான்கள் மற்றும் எதிர் கூட்டணிப் படையினர் 52 ஆயிரம் பேர், 3500 இற்கு மேற்பட்ட மேற்குலகப் படையினர், அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டு மக்கள் பல ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், அவர்களில் 3800 இற்கு மேற்பட்டவர்கள் தொழில் நிமித்தம் சென்ற ஒப்பந்தக்காரர்கள்.

அது மட்டுமல்லாது, 144 தொண்டு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் 72 ஊடகவியலாளர்களும் கொல்லப் பட்டுள்ளனர். இந்த மனித இழப்புக்களுக்கு அப்பால் அமெரிக்கா 2.26 றில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட நிதியை செலவிட்டுள்ளது. அதில் ஒரு றில்லியன் படை நடவடிக்கைக்காகவும், ஆப்கான் படையினரை பலப் படுத்தவும் செலவிடப்பட்டவை.

படை நடவடிக்கை1 அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்350,000 படையினர் 246 இற்கு மேற்பட்ட விமானங்களைக் கொண்ட விமானப்படை, அமெரிக்காவின் வான்படை ஆதரவு, பெருமளவான கவச வாகனங்கள், அமெரிக்காவின் சிறப்பு படை அணியினால் பயிற்றுவிக்கப்பட்ட 10,000 சிறப்பு படை கொமோண்டோக்களைக் கொண்ட ஆப்கான் படை அணி 11 நாட்களுக்குள் 30 இற்கு மேற்பட்ட மாநிலங்கைள இழந்து தரைமட்டமாகிப் போனது குறித்து அமெரிக்க ஜெனரல்களே குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்தளவு பெரிய படை ஒன்று 11 நாட்களுக்குள் வீழ்ச்சி கண்டதை நான் எங்கும் காணவில்லை என கூறுகின்றார் பென்ரகனின் படை அதிகாரி ஜெனரல் மார்க் மில்லே. ஆப்கான் அரசு 6 மாதங்கள் தாக்குப்பிடிக்கும் என அமெரிக்கப் புலனாய்வுத்துறை தெரிவித்த தகவல்களும் பொய்யாகி விட்டது. 85 பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கப்பட்ட ஆப்கான் படையினரை யாரும் எளிதில் தோற்கடிக்க முடியாது என அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஜெனரல்கள் தொடர்ந்து தெரிவித்து வந்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக இயங்திரத் துப்பாக்கிகள் மற்றும் உந்துகணை செலுத்திகளை கொண்ட ஏறத்தாழ 55,000 தொடக்கம் 80,000 படையினரைக் கொண்ட தலிபான்கள் எவ்வாறு ஆப்கானை 11 நாட்களுக்குள் வென்றனர் என்பதற்கான விடையை தேடுகின்றனர் படைத்துறை ஆய்வாளர்கள்.

ஒரு படைத்துறை ஆய்வாளராக நான் கண்டுகொண்டது என்னவெனில், தமது இலட்சியத்தில் கொண்ட பற்று, அதனை செயல்படுத்துவதற்கு உபயோகிக்கப்பட்ட கெரில்லா மற்றும் மரபுவழி தாக்குதல்கள் இணைந்த போர்முறை, தற்கொலைத் தாக்குதல் மூலம் எதிரியின் மனோபலத்தை உடைத்தது, எதிரிக்குள் ஊடுருவி பின்னால் இருந்து தாக்கியது போன்ற உத்திகள் ஆப்கான் படையினரை திகிலடைய வைத்திருந்தது.

ஆப்கானின் இரண்டாவது நகரமான ஜவ்ஷான் நகரத்திற்குள் தலிபான்கள் பிரவேசிக்கும் போது தலைநகர் காபூலில் மேற்கொண்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் வான்படை விமானி கொல்லப்பட்டிருந்தார். அதாவது மாநிலங்கள் விழும்போது தலைநகரிலும் திகிலை ஏற்படுத்தியிருந்தனர்.

படை நடவடிக்கை2 அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்அதேபோலவே லஸ்ஹார் ஹா மாநிலத்தின் மீதான தாக்குதலில் ஆப்கான் படையினர் கடும் எதிர்ப்பை காண்பித்திருந்தனர். அங்கு நூற்றுக்கணக்கான சிறப்பு படையினரும் அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால் மீண்டும் மீண்டும் தாக்குதலை நடத்திய தலிபான்கள் இறுதியில் ஆகஸ்ட் 11 ஆம் நாள் காவல்துறை தலைமையகம் மீது பாரிய வாகனக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். அதனுடன் சமர் நிறைவுக்கு வந்தது.

அதாவது, கடுமையான எதிர்ப்புக்களைச் சந்தித்த மாநிலங்களின் தலைநகரின் படை நிலைகளை வாகனக் குண்டுகளைக் கொண்டு தகர்த்திருந்தனர்.

அது மட்டுமல்லாது, 2013 ஆம் ஆண்டு டோகாவில் திறக்கப்பட்ட அனைத்துலக தொடர்பகம் அதன் ஊடாக ரஸ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர அணுகுமுறைகள் என்பன அவர்களின் படைத்துறை நகர்வுகளை இலகுவாக்கியிருந்தது.

சோவியத்தின் படைகளை எதிர்த்து போரிட்டபோது உருவாகிய முஜாகுதீன்கள் 1994 ஆம் ஆண்டு தலிபான்களாக மாற்றம் பெற்றபோதும், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராட்சியம் ஆகியவற்றின் துணையுடன் 1996 ஆம் ஆண்டு ஆப்கானைக் கைப்பற்றினர். அன்றைய கால கட்டத்தில் இந்த 3 நாடுகள் தான் ஆப்கான் அரசை அங்கீகரித்த நாடுகள்.

எனினும் 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் படை நடவடிக்கைக்கு பின்னர் அவர்கள் மீண்டும் கெரில்லா போர் முறைக்கு மாறினர். உலகில் மிகச்சிறந்த பயிற்சி பெற்ற அமெரிக்க மற்றும் நேட்டோ படை, ஐந்தாம் தலைமுறை தாக்குதல் விமானங்கள், அதிநவீன தொழில்நுட்பம், ஆளில்லா உளவு மற்றும் தாக்குதல் விமானங்கள் என மிகப்பெரும் படைத்தறை நெருக்கடிக்கு முகம் கொடுத்தனர்.

இந்த போரில் மக்கள் செலுத்திய விலைகள் அதிகம் என்பதுடன், தலிபான்களும் பேரிழப்புக்களை சந்தித்தனர். கடந்த 20 வருட கால போரில் இரண்டு தலைவர்களை அது இழந்தது. முல்லா முகமது ஓமார் 2013 ஆம் ஆண்டு தொற்றுநோய் காரணமாக பாகிஸ்தானில் இறந்தார். அவரின் இடத்திற்கு அக்தார் மன்சூர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் – ஆப்கான் எல்லையில் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர் மூன்றாவது தலைவராக நியமிக்கப்பட்டார் தற்போதைய தலைவர் ஹிபத்துல்லா அக்குன்சாடா. ஒவ்வொரு தடவைகள் அந்த அமைப்பு தனது தலைவர்களை இழந்தபோதெல்லாம் ஒய்ந்துவிடவில்லை. மாறாக புதிய தலைவர்களை நியமித்தது.

தலைவர்களுக்கும் மேலாக 26 அங்கத்துவர்களைக் கொண்ட குழுவே அரசியல், இராஜதந்திரம், படைத்துறை மற்றும் பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதால், தலைவர்களின் இழப்பு என்பது தலிபான்களை அதிகம் பாதிக்கவில்லை.

படை நடவடிக்கை3 அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை - வேல்ஸ் இல் இருந்து அருஸ்
முல்லா முகமது யாகூப்

அது மட்டுமல்லாது, அந்த அமைப்பின் கட்டளைத் தளபதிகளாகவும், உப தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டவர்கள் அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதும் அதன் பலம். உதாரணமாக உலக நாடுகள் அதிசயமாக பார்க்கும் தலிபான்களின் 11 நாள் படை நடவடிக்கையை வழிநடத்தியவர் தலிபானின் முன்னாள் தலைவர் முல்லா முகமது ஓமாரின் புதல்வர் முல்லா முகமது யாகூப் ஆவார்.

2016 ஆம் ஆண்டு தலிபானின் தலைவர் கொல்லப்பட்டபோது, அந்த அமைப்பின் தலைவராக பெறுப்பேற்றுமாறு யாகூப் அவர்கள் கேட்கப்பட்டபோதும், தனக்கு களமுனை அனுபவம் போதாது என்று மறுத்து தற்போதைய தலைவர் அக்குன்சாடாவை நியமித்ததும் அவர் தான்.

40 வயதே உடைய சிரயூடீன் ஹக்கானி தலிபானின் ஆயுத மற்றும் நிதி பிரிவுக்கும், தொடர்பாடல் வலையமைப்புக்கும் பொறுப்பானவர். அவரும் காலம்சென்ற முஜாகுதீன் தளபதியான ஜலலுடீன் ஹக்கானியின் புதல்வராவார்.

அதாவது அடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்ட போராட்டம், தகைமை அறிந்து விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்பவை தான் உலகின் வல்லரசை எதிர்த்து அவர்களால் நிமிர முடிந்துள்ளது.

பாகிஸ்தானின் உதவிகள் தலிபான்களுக்கு இருந்தபோதும், அவர்களின் தொடர்ச்சியான போராட்டம் என்பது தான் தற்போதைய வெற்றிக்கான மூலதனம். நாம் தனியாக செல்லவில்லை 38 நாடுகள் எம்முடன் இணைந்து போரிட்டனர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். அதாவது 38 நாடுகளை தோற்கடித்துள்ளனர் தலிபான்கள்.

அவர்கள் தமது படை நடவடிக்கையை மிகவும் காத்திரமாக திட்டமிட்டு நடைமுறைப் படுத்தியுள்ளனர். உதாரணமாக ஆப்கான் வான் படையினரை 246 விமானங் களுடனும், பிரேசிலில் தயாரிக்கப்பட்ட தாக்குதல் விமானங்கள் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் உலங்கு வானூர்திகளுடனும் அமெரிக்கா பலப்படுத்திய போது, தலிபான்கள் அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட விமானிகளைக் குறிவைத்து தாக்கி அழித்து வந்தனர்.

ஆப்கானின் கனிமவளங்களைக் குறிவைத்து அமெரிக்க முதலாளிகள் சென்றபோது அவர்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டனர் தலிபான்கள். கடந்த 20 வருடங்களில் 3800 ஒப்பந்தக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதாவது இலாபமற்ற மற்றும் முடிவற்ற ஒரு போரில் சிக்கிவிட்டோம் என அமெரிக்காவை உணரவைத்திருந்தனர். அமெரிக்கா அதனை உணர்ந்த போது கோவிட்-19 நோயும் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பாரிய அடியை கொடுத்திருந்தது. இவை அனைத்தும் அமெரிக்காவின் வெளியேற்றத்திற்கு வழி ஏற்படுத்தியதுடன், ஆசிய பிராந்தியத்தின் பூகோள அரசியலையும் மாற்றி அமைத்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியாவையும், 20 ஆம் நூற்றாண்டில் சோவித்தையும், 21 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவையும் தோற்கடித்த வரலாற்றைக் கொண்டதாக ஆப்கான் மக்கள் தமது இறைமையை தக்கவைத்துள்ளனர்.