ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: அபகரிக்கப்படும் தமிழர் வளங்கள் – மட்டு.நகரான்

448 Views

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்: வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் என்பது மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கின்றன. வடகிழக்கு மாகாணமானது ஆக்கிரமிப்பு இயந்திரத்தின் பிடியில் சிக்கி மிகமோசமான நிலையினை அடைந்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில், ஆக்கிரமிப்புகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த காலத்தில் நாங்கள் பல தடவைகள் கட்டுரைகள் ஊடாக சுட்டிக் காட்டியிருந்தோம்.

சில விடயங்களை நாங்கள் பொது வெளியில் பேசுவதற்கு முன்வராத காரணத்தினால், இந்த ஆக்கிரமிப்புகள் என்பது தீவிரம் பெறும் நிலையினைக் காண முடிகின்றது. கடந்த காலத்தில் கிழக்கில் முன்னெடுக்கப் படும் ஆக்கிரமிப்புகள் குறித்தும், அந்த ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டுமானால், புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இங்கு முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ஆனால் அவை தொடர்பில் புலம் பெயர் மக்கள் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. ஆக்கிரமிப்புகள் நடைபெறும் போது அதற்காக பலமாக குரல் எழுப்பும் அவர்கள், அந்த ஆக்கிரமிப்புகளை தடுக்கும் போது அதனைப் பாதுகாப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றார்கள் என்பது இதுவரையில் கேள்வியாகவே இருந்து வருகின்றது.

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத் தினைப் பொறுத்த வரையில், இன்று கிழக்கு மாகாணம் பாதுகாக்கப்பட வேண்டிய மாவட்டமாக இருந்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே திருகோண மலையும், அம்பாறையும் பாரியளவில் அபகரிக்கப் பட்டுள்ள நிலையில், கிழக்கினை நோக்கி இன்று பேரினவாதிகளின் செயற்பாடுகள் திரும்பியுள்ளதைக் காண முடிகின்றது. இந்த நிலையில் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரையில், இன்று பேசுபொருளாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவு காணப்படுகின்றது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவானது, ஒரு பகுதி எழுவான்கரையாகவும் மறுபகுதி படுவான் கரையாகவும் காணப்படுகின்றது. இரண்டு பகுதிகளும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதிகளாகவும், அதிகளவு அரச காணிகளைக் கொண்ட பகுதியாகவும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகர் பிரிவினைப் பொறுத்த வரையில், 580சதுர கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட பகுதியாகும். இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் அம்பாறை மாவட்டம் எல்லையாகவும் கிழக்கில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, இந்தியப் பெருங்கடல் என்பனவும், வடக்கில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.

இங்கு எழுவான்கரையை எடுத்துக் கொண்டாலும், படுவான்கரையை எடுத்துக் கொண்டாலும் இரு பகுதிகளும் வளங்கள் நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன. எழுவான்கரையினைப் பொறுத்த வரையில், கடல் மற்றும் அதனை அண்டிய பாரியளவிலான அரச காணிகளைக் கொண்டுள்ளது. இயற்கை வளங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த காணிகளாக இருந்து வந்த நிலையில் அண்மைக் காலமாக அவற்றின் நிலைமை கேள்விக் குறியாக உள்ளது.

ஏறாவூர்ப்பற்றின் மறு பகுதியான படுவான்கரையினைப் பொறுத்த வரையில், அதிகளவான நீர்வளமும், செழிப்பான நிலவளம் உட்பட பல்வேறு வளங்கள் நிறைந்த இடமாக காணப்படுகின்றன. அதன் காரணமாக இன்று தெற்கிலிருந்து பலர் இப்பகுதிகளுக்கு படையெடுக்கும் நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக ஏறாவூர்ப்பற்று பகுதியானது 39கிராம சேவையாளர் பிரிவுகளையும், 204 கிராமங்களையும் கொண்ட பிரதேச செயலகர் பிரிவாக காணப்படுகின்றது. இங்கு சுமார் 77ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 73ஆயிரம் பேர் தமிழர்களாகவும் 02ஆயிரம் பேர் முஸ்லிம்களாகவும் சுமார் 1700பேர் சிங்களவர் களாகவும் காணப்படுகின்றனர். யுத்தம் முடிந்த காலப் பகுதியில் இப்பகுதியில் 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும் சுமார் 300க்கும் குறைந்த ளவிலான முஸ்லிம்களும் சிங்களவர்களுமே வாழ்ந்து வந்த நிலையில், இன்று அந்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விபரங்கள் 2018ஆம் ஆண்டு பெறப்பட்டதாகும். இந்த தொகையானது இன்று பெருமளவில் அதிகரித்ததாகவே இருக்கும்.

ஏறாவூர்ப்பற்றின் பல பகுதிகள் இன்று சத்தமில்லாமல் அபகரிக்கப்படுகின்றன. ஏறாவூர்ப்பற்றின் படுவான்கரையின் எல்லைப் பகுதியான மயிலத்தமடு – மாதவனை பகுதியில் காணிகள் அபகரிக்கப்படும் அதே வேளையில், ஏறாவூர்ப்பற்றின் மறு பகுதியான எழுவான் கரை பகுதியிலும் திட்டமிட்ட வகையில் காணிகள் அபகரிக்கப் படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பணத்திற்கும் பதவிக்கும் தீரா ஆசைகொண்ட சிலர் தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளினதும், பணம் படைத்த பெரும்பான்மை இனத்தவர்களினதும் கைப்பொம்மைகளாக இருந்து இவ்வாறான காணி அபகரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்கள் மூலம் பெருமளவான காணிகளை கொள்வனவு செய்து அவற்றினை புனரமைக்கும் பணிகளை முன்னெடுத்துள்ள அதேநேரம், சிலர் தொழிற் சாலைகளை அமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகின்றனர். ஏறாவூர்ப்பற்று பகுதியின் கடற் கரையினை அண்டியதாகவே பெருமளவு அரச காணிகள் உள்ள நிலையில் அவை திட்டமிட்ட வகையில் அபகரிக்கப் படுகின்றன. குறிப்பாக ஏறாவூர்ப் பற்றில் ஒரு புறம் சிங்களவர்களும் காணியை அபகரிக்கும் நிலையில் மறு பகுதியில் முஸ்லிம்களும் திட்டமிட்ட வகையில் காணிகளை அபகரிக்கும் நிலை காணப்படுகின்றது.

தமிழ் மக்கள் மத்தியிலிருந்த அதிகாரிகளின் பணப் பேராசையும் தமிழர்கள் மத்தியிலிருந்து விழிப்புணர் வின்மையும் இன்று ஏறாவூர்ப் பற்றினை சிங்களவர்களும் -முஸ்லிம்களும் ஆக்கிரமிப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை நாங்கள் சிறிய விடயங்களாக கொண்டு கடந்துவிட முடியாத நிலையே இருக்கின்றது. 2010ஆம் ஆண்டு வெறும் 303 முஸ்லிம்கள் வசித்த ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் 10வருடத்தில் 2500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கும் நிலையுள்ளது என்றால், இப்பகுதியில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தினை அனைவரும் உணர வேண்டியுள்ளது. இதேபோன்று 2010ஆம் ஆண்டு 300க்கும் குறைவான சிங்களவர்கள் இருந்த பகுதியில் இன்று 1600க்கும் அதிகமான சிங்களவர்கள் வசிக்கும் நிலையினை காண முடிகின்றது. இவற்றினை யாரும் கடந்துவிட முடியாது.

ஏறாவூர்ப்பற்றின் எழுவான்கரையும் படுவான்கரையும் பாரிய ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்றின் எழுவான்கரையும் படுவான்கரையும் பாரிய ஆபத்தினை எதிர் கொண்டுள்ளது. காணி மாபியாக்களின் ஊடாக சிங்களவர்களும் முஸ்லிம்களும் பாரிய காணி அபகரிப்பினை செய்துவரும் அதேவேளை ஏறாவூர்ப்பற்றின் படுவான்கரை பகுதியில் தொல்பொருள் செயலணி, முந்திரிகை வளர்த்தல், சேனைப் பயிர்ச் செய்கை என்ற போர்வையில் தமிழர்களின் வளமான காணிகளை அபகரிக்கும் நிலை காணப்படுகின்றது.

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்மயிலத்தமடு-மாதவனை பகுதியான சேனைப்பயிர் என்ற போர்வையில் அபகரிக்கப் படுவது குறித்து நாங்கள் பல தடவைகள் எழுதியுள்ளோம். இதே போன்று இதற்கு அருகில் உள்ள பகுதியான கார்மலை பகுதியானது தமிழர்கள் பூர்வீக வரலாறுகள் அடங்கிய பகுதியாகவுள்ள நிலையில் அவற்றினை அபகரித்து அவற்றில் பௌத்த மத்தியஸ்தானம் அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவை இன்று மௌனிக்கப் பட்டுள்ளன.

இதேபோன்று செங்கலடி-பதுளை வீதியின் எல்லைப்பகுதியில் காடுகள் வளர்த்தல், முந்திரிகை செய்கை என்ற ரீதியில் காடுகளை பிரித்து வேறு மாவட்டங்களை சேர்ந்த சிங்கள மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள் மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப் படுகின்றன.

அத்துடன் மிக முக்கியமாக இப்பகுதியிலேயே அதிகளவான மண் அகழ்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பகுதியில் அதிகளவான நீர்நிலைகள் உள்ளதன் காரணமாக இவ்வாறு அதிகளவில் மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இப்பகுதியில் மண் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு தெற்கிலிருந்து பெருமளவான சிங்களவர்கள் இப்பகுதியில் வந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களின் கைக்கூலிகளாக தெற்கில் செயற்படும் பலர் இப்பகுதியில் முகாமிட்டுள்ளதுடன் மண் அகழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக சிங்களவர்களுக்குள்ளேயே பல்வேறு பிரச்சினைகள் எழுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவங்களும் இதன் எதிரொலியாகவே நடைபெற்றதாக கூறப்படுகின்றது.

ஆபத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசம்ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் முற்று முழுதாக நூறு வீதம் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் தென்னிலங்கை யிலிருந்து வந்தவர்கள் முகாமிட்டு மண் கொள்ளையை மேற்கொண்டு வரும் நிலையில் அவற்றினை தட்டிக் கேட்க முடியாதவர்களாக மட்டக்களப்பில் உள்ள ஆளும் கட்சி அரசியல்வாதிகள் உள்ளனர்.

இன்று ஏறாவூர்ப்பற்று முழுவதும் உள்ள காணிகள் அபகரிக்கப்படுவதற்கான மிகவும் திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்ற நிலையில் அவற்றினை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் நிலங்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேசம் கொண்டுள்ள ஆபத்து மட்டக்களப்பு மாவட்டம் முழுமைக்குமான ஆபத்து மட்டுமன்றி வடகிழக்கு தமிழ் தேசியத்திற்கும் ஆபத்தான தாகவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாகும்.

Leave a Reply