கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்
கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…?நாடு முழுவதையும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு தனிமைப்படுத்தியிருக்கின்றது. மருத்துவத் துறையினர் மற்றும் எதிரணியினர் மட்டுமல்லாமல், பொது மக்களும்கூட இதனை ஒரு காலம் கடந்த நடவடிக்கையாகவே நோக்கியுள்ளனர்.
இதேபோன்று அதே தினம் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கையும் 3500 ஐக் கடந்திருந்தது. சிறிய நாடாகிய இலங்கையைப் பொறுத்தளவில் கொரோனா கொள்ளை நோயின் இந்தத் தொற்று நிலைமை மோசமானது. இது அபாயகரமான நிலைமையைக் கொண்டுள்ள முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இலங்கை இடம்பெற்றுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் சிவப்பு அடையாளம் கொண்ட நாடாக மாறியிருக்கின்றது.
சுகாதார நிலைமைகளின் தீவிரத் தன்மையையும், மக்களுக்கு நேர்ந்துள்ள உயிராபத்தான நிலைமைகளையும் புறந்தள்ளி, நாட்டின் பொருளாதார நிலைமைகளுக்கு கூடிய அளவில் முக்கியமளித்து கோவிட் தொற்று பேரிடர் நிலைமையைத் தடுப்பதற்குரிய அவசரமான அவசிய நடவடிக்கைகளை அரசு புறக்கணித்திருந்தது. அதன் விளைவாகவே சிவப்புப் பட்டியலுக்கு உட்பட்ட நாடாக இலங்கை மாறியுள்ளது.
கோவிட் தொற்று கட்டுக்கடங்காமல் தொற்றிப்பரவி பேரிடர் சூழ்ந்துள்ள போதிலும், மருத்துவத்துறை, சுகாதாரத்துறையினருடைய கோரிக்கைகளையும் அதேபோன்று மக்கள் பிரதிநிதிகளாகிய எதிரணியினருடைய வேண்டுதல்களையும் அரசாங்கம் புறந்தள்ளிச் செயற்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் துறைசார்ந்த நிலையில் அணிதிரண்டு, சுய முடக்க நடவடிக்கைக்கு ஆயத்தமாகின.
அதேவேளை மகாசங்கத்தினரும் குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முடக்கி கோவிட் தொற்றுப் பேரிடரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அவசரக கடிதம் எழுதியதைத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நாட்டைத் தனிமைப்படுத்தும் உத்தரவை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச விடுத்துள்ளார்.
நாட்டை சுயமுடக்கத்திற்கு உள்ளாக்கப் போவதாக எச்சரிக்கை செய்த தொழிற் சங்கங்களின் எச்சரிக்கைக்கு அரசாங்கம் பணிந்துதான் தனிமைப்படுத்தல் முறையின் கீழ் நாட்டை முடக்கியதா, அல்லது சாமான்யர்கள் சொன்னால் காதில் ஏறாது மணி கட்டியவர்கள் சொன்னால்தான் ஏறும் என்றதற்கொப்ப, பௌத்த பீடத்தினர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, அவர்களுடைய கோரிக்கைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விகள் பலருடைய மனங்களிலும் எழுந்துள்ளன.
இராணுவ நிர்வாகத்தின் கீழ் கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியும் என்ற போக்கிலேயே ஜனாதிபதி கோத்தாபாயா ராஜபக்ச கோவிட் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான செயலணியை உருவாக்கி அதன் கீழ் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்தார்.
கோவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கை
கோவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் யாவும் இந்த தேசிய செயற்பாட்டு மையத்தின் பொறுப்பிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போதாக்குறைக்கு கோவிட் தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கைகளிலும் முக்கிய பொறுப்பினை இராணுவத்தினரே முன்னெடுத்து வருகின்றனர்.
கோவிட் பேரிடர் என்பது அடிப்படையில் மருத்துவத்துடனும், சுகாதாரத்துடனும் தொடர்புடையது. இதனைக் கையாள்வதற்கு மருத்துவம், சுகாதாரம், தொற்று நோய்த்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட துறைசார்ந்த நிபுணர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு செயலணியையே உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மறுதலையாக இராணுவ பின்னணியைக் கொண்டவர்களையும் வேறு துறைசார்ந்தவர்களையுமே அந்த செயலணியின் உறுப்பினர்களாக நியமித்துள்ளார். அத்துடன் கோவிட் தொற்று தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் இராணுவ மயமாக்கப் பட்டிருக்கின்றன.
சிவில் நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், தேசிய நெருக்கடியாக உருவெடுத்துள்ள கோவிட் பெருந்தொற்றினைக் கையாள்வதற்கும் இராணுவ மயப்படுத்தப்பட்ட கொள்கைகளின் அடிப்படையிலான செயற்பாடுகளையே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முன்னெடுத்து வருகின்றார்.
நாட்டின் 69 லட்சம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து தெரிவு செய்த ஜனாதிபதி என்ற வகையிலும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைத் தமது வாக்குகளின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற வகையிலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச கூறியுள்ளார். அந்த ஆணையின் அடிப்படையிலேயே அவர் செயற்பட்டு வருகின்றார்.
ஆனால் எதிர்க்கட்சியினராகிய ஏனைய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாட்டு மக்களே தெரிவு செய்தார்கள் என்பதை அவர் மறந்து செயற்படுவதையே காண முடிகின்றது. ஜனாதிபதிக்கும் அரசாங்க கட்சிகளுக்கும் வாக்களிக்காத நாட்டின் ஒரு பகுதி மக்களே எதிரணியினரைத் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் துறைசார்ந்த நிபுணர்களினதும், அதிகாரிகளினதும் ஆலோசனைகள் கருத்துக்கள் என்பவற்றை உள்ளடக்குவது மட்டுமல்லாமல், அவர்களுடைய பங்களிப்பை முதன்மைப்படுத்திய நிலையிலேயே கோவிட் பெருந்தொற்று நோய் நிலைமையை அரசு எதிர்கொண்டிருக்க வேண்டும்.
எதிலும் அரசியல் எங்கும் அரசியல் என்று ஆணவ அதிகார மோகத்திலும், அரசியல் இலாபப் போக்கிலும் செயற்படுவதன் மூலம் தேசிய பிரச்சினைகளுக்கும், தேசிய இடர்களுக்கும் தீர்வு காண முடியாது. அவற்றுக்கு அரசாங்கம் என்ற ரீதியிலும், நிறைவேற்று அதிகாரம் கொண்டிருக்கின்றோம் என்ற அதிகார மமதையிலும் முகம் கொடுப்பது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவும் அவரது தலைமையிலான அரசாங்கமும் கோவிட் பெருந்தொற்று நிலைமையை எதிர்கொண்ட விதமும், அதனைக் கையாண்ட விதமும், எதிரணியினரையும் மருத்துவ, சுகாதாரத் துறையினரையும் மட்டுமல்ல. நாட்டு மக்களையும் ஏமாற்றத்திற்கே உள்ளாக்கி இருக்கின்றது. நாட்டு மக்கள் இதனால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளார்கள்.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பின் அடையாளமாகவே, ஜனாதிபதியின் நாடளாவிய தனிமைப்படுத்தலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே நாட்டின் பல நகரங்களில் சுயமுடக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிளாகிய பத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, குறைந்தது இரண்டு வாரங்களுக்காவது நாட்டை முடக்க வேண்டும் என்று கடிதம் மூலமாக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
நாட்டை முடக்க வேண்டும், நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமுனைகளில் இருந்தும் பல தரப்பினரிடத்தில் இருந்தும் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததையடுத்தே, பொது மக்கள் தரப்பில் சுய முடக்கத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த நிலைமை அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ‘கைமீறிய ஒரு நிலைமையாகவே’ அமைந்துவிட்டது.
இந்த கைமீறிய நிலைமையைக் கையாள்வதற்காகவே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முழு நாட்டையும் தனிமைப்படுத்தும் உத்தரவை அவசர அவசரமாக பிறப்பித்துள்ளதாகத் தெரிகின்றது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் எத்தகைய அவசர நிலைமை வந்தாலும்கூட, நாடு முடக்கப்படமாட்டாது என்று அரச தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அத்துடன் வார இறுதிநாட்களில் முழு நாடும் முடக்கப் பட்டிருக்கும் என்ற அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் முழு நாட்டையும் பத்து நாட்களுக்குத் தனிமைப்படுத்தி உள்ளார்.
இந்தத் தனிமைப்படுத்தலுக்கும் முடக்கத்திற்கும் இடையில் பெரிய வித்தியாசம் காணப்படுகின்றது. நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படுகின்ற பொருளாதார அபிவிருத்திப் பணிகள், உட்கட்டமைப்புச் செயற்பாடுகள், ஆடைத் தொழிற்சாலைகள், அரச அலுவலகங்கள் யாவும் செயற்படும், செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அதேவேளை பத்து நாட்கள் மட்டுமல்ல. நீண்ட நாட்களுக்கு நாட்டை இவ்வாறு தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையையும் தனது உரையில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய நிலையில் அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராகுகங்கள் என்றும் அவர் மக்களிடம் கோரியிருக்கின்றார்.
நாட்டு மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்து, சுய முடக்கத்திற்கு மக்களே முற்பட்டுள்ள ஒரு ‘கைமீறிய நிலையில்’ கோவிட் பேரிடரின் தாக்கத்தைத் தணிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ள நடவடிக்கை எந்த அளவுக்கு வெற்றியளிக்கப் போகின்றது என்பது தெரியவில்லை. அதேவேளை கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் மேலும் மோசமடைவதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
இந்தப் பின்னணியில் அரசாங்கம் நிலைமைகளை அரசு எவ்வாறு கையாளப் போகின்றது, அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து ஆதங்கமான கேள்விகளே முனைப்பு பெற்றிருக்கின்றன.
- இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டிய தருணத்துக்கு இந்தியா வந்து விட்டது – மேஜர் மதன் குமார்
- தமிழையும் தமிழீழ விடுதலையையும் நேசித்து செயலாற்றி வரும் கந்தசாமி பிரேம்குமார் செவ்வி | ILC | Ilakku
- தற்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களே ஆயுதமேந்திய தமிழ் இளைஞர்கள் – க.வி.விக்னேஸ்வரன்